தூய உள்ளம் கொண்டவர்களாக வாழ்வதே மேல்!
rasminmisc
“தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது.”
இறைவன் மனிதனை பலவிதமான குணங்களும் கொண்டவனாக படைத்திருக்கின்றான். நல்ல குணங்களுடன் சிறப்பாக வாழும் சிறந்த மனிதர்கள் இருப்பதைப் போல, பலவிதமான தீய குணங்களுடன் தீமைகளுடன் இணைந்தே வாழும் பல கெட்ட மனிதர்களும் இவ்வுலகில் வாழத்தான் செய்கின்றார்கள்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்தல், நல்ல முறையில் பேசிப் பழகுதல், பொறுமையாக நடந்து கொள்ளுதல், பெருமையடிக்காதிருத்தல் போன்ற பலவிதமான நல்ல குணங்கள் இருப்பதைப் போல அடுத்தவர்களுக்கு அநியாயம் இழைத்தல், கெட்ட வார்த்தைகள் பேசுதல், குரோதம் கொள்ளுதல், பெருமையடித்தல், பொறாமை கொள்ளுதல் போன்ற பலவிதமான தீய குணங்களும் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது.
இப்படியான பலவிதமான குணங்களின் கலவையாக இருக்கும் மனிதர்கள் தமது வாழ்நாளில் சிறப்பாக வாழ்ந்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றியடைய வேண்டுமெனில் தமது வாழ்வை இறைவனும், இறைத் தூதரும் காட்டிய வழியில் நற்குணம் கொண்டவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
உள்ளங்களில் சிறந்த உள்ளம் யாருடைய உள்ளம் என்ற கேள்விக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன பதில் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது” என்றார்கள். (அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு இப்னுமாஜா 4206)
எவருடைய உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இல்லையோ அவரே மக்களில் தூய உள்ளம் கொண்டவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் தான் நல்லவனா? கெட்டவனா? என்பதை தெளிவாக அறிந்து கொள்வதற்கு நபியவர்கள் மேற்கண்ட விளக்கமே போதுமான ஒன்றாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “அறிக; உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்”. (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் புகாரி : 52)
உள்ளம் சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று சிறப்பாகி விடும் என்றும், உள்ளம் சீர்குலைந்து விட்டால் உடல் முழுவதும் சீர்குலைந்து விடும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.
ஷைத்தான் மனிதனின் உள்ளத்தில் அடிக்கடி கெட்ட எண்ணங்களை விதைத்து, நல்லவர்களைக் கூட தீயவர்களாக மாற்றிவிடும் காரியத்தில் தினமும் முயற்சித்தவனாக இருக்கின்றான். ஆகவே நாம் நமது உள்ளத்தை தூய உள்ளமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் நபியவர்கள் சொன்ன கெட்ட பண்புகளை விட்டும் தூரமானவர்களாக நாம் மாற வேண்டும்.
மறுமை வெற்றியை இழந்தவர்களாக அறிவிக்கப்பட்ட துரதிஷ்டக்காரர்கள் :
மலக்குமார்களுடன் இருந்த ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக மாறியதற்கான காரணம் அவனுள் ஏற்பட்ட தீய எண்ணமே ஆகும். இதன் காரணத்தினால் இறைவன் அவனை சபிக்கப்பட்டவனாக்கி வெளியேற்றினான்.
“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இல்லை. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?” என்று (இறைவன்) கேட்டான். “நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!” என்று கூறினான். “இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்” என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 7 : 11,12,13)
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4 32)
உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்வது மறுமையில் தோழ்வியை பெற்றுத் தரும் செயல் என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. சுவர்க்கத்திற்குறியவர்களின் பண்பு தூய உள்ளம் என்பது சுவர்க்கத்திற்கு உரியவர்களின் நிலையாகும் என்பதை மேற்கண்ட செய்திகள் மூலமாக நாம் அறிந்து கொண்டோம் அதே தொடரில் நபியவர்களின் காலத்தில் நடைபெற்ற கீழ்க்கண்ட சம்பவத்தை பாருங்கள். ஒரு மனிதன் சுவர்க்கம் நுழைய வேண்டும் என்றால் அவனுடைய உள்ளம் எந்தளவு தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக உணர்த்துகின்றது.
“நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தபோது தற்போது சுவர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடத்தில் வருவார் என்று அவர்கள் கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் ஒழூ செய்ததால் தாடியில் தண்ணீர் வடிகின்ற நிலையில் இடது கையில் தனது செருப்புகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்.
மறு நாளும் அதுபோன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே வந்தார். மூன்றாவது நாளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.
அந்த மனிதர் மூன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மனிதரை (கண்காணிப்பதற்காக) பின்தொடர்ந்து சென்றார்.
(பிறகு கூறினார்) நான் எனது தந்தையுடன் சண்டையிட்டு மூன்று நாட்கள் அவரிடம் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டேன். ஆகவே அந்நாட்கள் கழியும் வரை உங்களிடம் தங்க எனக்கு இடமளிப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் சரி என்றார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்:
நான் மூன்று நாட்களும் அவரிடத்தில் தங்கி கழித்ததில் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பிறகு பஜ்ரு வரையும் தூங்குவார்கள். அந்த நாட்களில் பிறரைப் பற்றி தவறாக பேசி நான் அவரிடம் கேட்டதில்லை. மூன்று நாட்கள் கழிந்த பிறகு அவரின் நற்செயல்களைக் குறைவாக மதிப்பிட முற்பட்டேன்.
எனவே அந்த மனிதரிடம் இறையடியாரே (உண்மையில்) எனக்கும் என் தந்தைக்கும் இடையில் எந்த சண்டை, சச்சரவும் இல்லை, எனினும் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார் என்று மூன்று முறை கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். எனவே தான் நான் உங்களிடம் தங்கி (சொர்க்கத்தில் நுழைவிக்கும் படி) தாங்கள் செய்யும் நற்செயல் எது? என்பதைப் பார்த்து நானும் அதை செய்ய விரும்பினேன். (அதற்காகவே தங்கினேன்) ஆனால் அதிகமான நற்செயல் எதுவும் செய்தததாக தங்களைக் காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்று’ அவரிடம் கேட்டேன்.
நீங்கள் பார்த்ததைத் தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை என்று கூறினார். நான் திரும்பிச் சென்ற போது என்னை திரும்ப அழைத்து நீங்கள் பார்த்ததை தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை எனினும் “நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கும் எண்ணம் என் உள்ளத்தில் இருந்ததில்லை. மேலும் அல்லாஹ் யாருக்கு நன்மையை வழங்கியிருந்தாலும் (அதற்காக) அவர் மீது நான் பொறாமை கொள்ள மாட்டேன்.” என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுவே உங்களிடம் உள்ள(சிறந்த)து. ஆனால் இது நம்மால் இயலாது என்று கூறினார். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அஹ்மத் 12236)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினால் சுவர்க்கத்திற்குறியவர் என்று நற்செய்தி சொல்லப்பட்ட நபித் தோழரிடம் இருந்த மிகப் பெரும் நற்பண்பு யாருக்கும் தீங்கிழைக்கும் எண்ணம் இல்லாதிருந்ததும், பொறாமையற்றவராக வாழ்ந்ததும் தான். எவருடைய உள்ளம் தூய்மையற்றதாக இருக்கின்றதோ அவர்தான் அடுத்தவர்களுக்கு தீங்கிழைப்பதற்கு ஆசை கொண்டவராக இருப்பார்.
மாத்திரமன்றி, பொறாமை போன்ற தீய எண்ணங்கள் நமது உள்ளத்தின் தூய்மையை இல்லாமல் செய்து அசுத்தமாக்கி பாவத்தில் நம்மை நிலை பெறச் செய்து மறுமையில் நஷ்டடைந்தவர்களாக நம்மை மாற்றிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இறைவன் நமக்கு செய்த அருட்கொடைகளை நாம் நினைத்துப் பார்ப்பதின் மூலம் நமது உள்ளத்தை தூயதாகவே வைத்துக் கொள்வதுடன், மறுமை வாழ்வையும் வெற்றியுடையதாக மாற்றிக் கொள்ள முடியும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். அறிவிப்பவர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 5671 அல்லாஹ்வின் தூதர் அவர்கள் காட்டிய வழியில் வாழ்ந்து தூய உள்ளம் கொண்டவர்களாக மறுமை நாளை சந்திக்கும் நல்ல மனிதர்களாக அல்லாஹ் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!