உயிருக்கு உயிரான, உயிரினும் மேலான…
அல்லாஹ் ஒருவனென்றும், அவனையே, அவனை மட்டுமே வணங்கவேண்டுமென்ற ஏகத்துவ நிழலின் கீழ் இளைப்பார வைத்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .
நாம் அவர்களை நேசிப்பதற்கு கோடான கோடி காரணங்கள் உண்டு. ஏனென்றால், அவர்கள் ”நம் உயிருக்கு உயிரானவர்கள்! இல்லை, இல்லை நம் உயிரினும் மேலானவர்கள்”!
அவர்களின் உம்மத் எனும் பேறு பெற்ற சமுதாயத்தில் என்னையும், உங்களையும் நாம் கேட்டுப் பெறாமலே, மன்றாடிக் கேட்காமலே ஒரு அங்கமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றானே அந்த ஒன்றிற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் வள்ளல் நபி மீது நேசம் கொண்டிட கடமைப் பட்டிருக்கின்றோம்.
1. ஹிதாயத் எனும் நேர்வழிக்கு ஒளி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
ஹிஜ்ரி 8 ஷவ்வால் மாதம் நடைபெற்ற யுத்தம் தான் ஹுனைன் யுத்தமாகும். மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பார்த்திடாத வெற்றியாகும். இதை அக்கம் பக்கத்திலுள்ள அநேக கூட்டத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ளமுடியாமல் ஹவாஸின், ஸகீஃப் ஆகிய கோத்திரத்தார்களின் தலைமையில் முஸ்லிம்களை எதிர்த்திட அணி திரண்டனர்.
முஸ்லிம்களின் மக்கா வெற்றியை ஏற்றுக்கொள்வதை பெரும் தன்மானப் பிரச்சனையாகவும், கண்ணியக்குறைவாகவும் கருதிய கைஸ், ஜுஷம், நஸ்ர், ஸஅத் இப்னு பக்ர், ஆகிய கோத்திரத்தாரும் கைகோர்த்துக் கொண்டனர். இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத் பொருட்கள் கிடைத்தன.
கிட்டத்தட்ட ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகைகள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் ஊக்கியா வெள்ளிகள், கனீமத்தாக (வெற்றிப் பொருளாக) கிடைத்தன. கனீமத் பொருட்களை மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பங்கு வைத்த போது, இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, அபூ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு போன்றோருக்கும், இன்னும் சில முஹாஜிரீன்களுக்கும் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தார்கள். புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் நிறைய கொடுத்தார்கள்.
ஆனால், நீண்ட காலமாக தங்களோடு உற்ற துணையாக இருந்த அன்ஸாரிகளுக்கு அந்த அளவு வழங்கவில்லை. இதனால் மன வருத்தமடைந்த சில அன்ஸாரிகள் பலவாறாகப் பேசினர்.
அவர்களில் சிலர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது கூட்டத்தினருக்கே வாரி வாரி வழங்குகின்றார்கள்” என்று பேசினார்கள்.
சூழ்நிலை வேறு விதமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ஸஅத் இப்னு உப்பாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வேகமாக நபிகளாரிடம் வந்து “அன்ஸாரிகளில் சிலர் உங்களின் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்கு கிடைத்த கனீமத் பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும், ஏனைய கோத்திரத்தாருக்கும் வாரி வழங்குனீர்கள். ஆனால், அன்ஸாரிகளுக்கு அந்த அளவுக்கு நீங்கள் வழங்கவில்லை. இது தான் அவர்களின் மன வருத்தத்திற்கு காரணம்” என்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஸஅதே! நீங்கள் அது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.
நானும் எனது கூட்டத்தாரில் ஒருவன் தானே!” என்று ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் கூறினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சரி எனக்காக உங்கள் கூட்டத்தார்களை தடாகத்திற்கருகே ஒன்று சேர்த்துவிட்டு என்னை வந்து அழையுங்கள்” என்றார்கள்.
அங்கிருந்து வெளியேறிய ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனடியாக தமது கூட்டத்தாரிடம் வந்து குறிப்பிட்ட தடாகத்தில் ஒன்று கூடுமாறு கட்டளையிட்டார்கள். அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கும் அங்கே அமர்வதற்கு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
இது கேள்விப் பட்டு மேலும் சில முஹாஜிர்கள் அங்கு வந்தனர். ஆனால், ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்ததும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “வாருங்கள்! அல்லாஹ்வின் தூதரே! அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்” என்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்ததும் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு “ஓ! அன்ஸாரிகளே! உங்களைப் பற்றி என்னிடம் சொல்லப்பட்ட செய்தி உண்மையா? என் மீது நீங்கள் கோபம் அடைந்துள்ளீர்களாமே?…
“நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? அல்லாஹ் என்னைக் கொண்டு உங்களுக்கு நேர்வழி காட்டினான்.
நீங்கள் வறியோர்களாக, ஏழைகளாக இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களை செல்வச் சீமான்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், எதிரிகளாகவும் இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கிடையே நேசத்தை ஏற்படுத்தினான்.” என்று கூறினார்கள்.
அதற்கு அன்ஸாரிகள் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான். அல்லாஹ்வும் அவன் தூதரும் எங்கள் மீது பெருங் கருணையோடும், பேருபகாரத்தோடும் நடந்து கொண்டனர்.” என்று கூறினார்கள்.
பின்னர் மீண்டும் அன்ஸாரிகளை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஓ! அன்ஸாரிகளே! நீங்கள் எனக்கு பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அன்ஸாரிகள் “ அனைத்து கருணையும், பேருபகாரமும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது எனும் போது நாங்கள் உங்களிடம் என்ன பதில் கூறப் போகிறோம்? என்றார்கள்.
அதற்கு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பொய்ப்படுத்தப்பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் உங்களை உண்மை படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு உதவியும், உபகாரமும் செய்தோம். சொந்த மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் பெரும் சுமையுடன் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு ஆதரவளித்தோம்.” என்று ஒருவேளை நீங்கள் பதில் கூறலாம். அப்படிக் கூறினால் அதுவும் உண்மைதான். அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
அன்ஸாரிகளே! இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திற்காகவா நீங்கள் என் மீது கோபப்பட்டீர்கள்?” ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். “மக்களில் சிலரின் இஸ்லாம் பூரணமாக வேண்டும் என்பதற்காக நான் அப்படி வாரி வாரி வழங்கினேன். உங்களை உங்களது சங்கையான இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன். (உங்களது இஸ்லாம் மிகவும் வலிமை மிக்கது என்பதை நான் அறிவேன்)
அன்ஸாரிகளே! மற்ற மக்களெல்லாம் தமது இல்லங்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது, நீங்கள் உங்களது இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரையல்லவா அழைத்துச் செல்கின்றீர்கள்? உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டாமா?”
இந்த முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையாயின் நான் அன்ஸாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று, அன்ஸாரிகள் மட்டும் வேறு வழியில் செல்வார்களாயின் நான் அன்ஸாரிகளின் வழியில் தான் சென்றிருப்பேன்.
யா அல்லாஹ்! அன்ஸாரிகளுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், அவர்களின் சந்ததியினரின் சந்ததியினருக்கும் அருள் புரிவாயாக!” என்று கூறி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது உரையை முடித்தார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த அன்ஸாரிகளெல்லாம் தங்களின் தாடிகள் நனையுமளவுக்கு அழுதார்கள்.
”அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கை நாங்கள் பொருந்திக் கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைக் கொண்டு நாங்கள் திருப்தி அடைந்தோம்.” என்றார்கள்.
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். அதன் பின்னர் அன்ஸாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
(நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:244,245,246., தப்ரானீ, ஹதீஸ் எண்:3994, முஸ்னத் அப்து ஹுமைத், ஹதீஸ் எண்: 923. அஹ்மத், ஹதீஸ் எண்: 11153.)
மேற்கூறப்பட்ட வரலாற்றில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? என்னைக் கொண்டு தானே அல்லாஹ் நேர்வழி காட்டினான்.” என்று அன்ஸாரிகளைப் பார்த்து மட்டும் கேட்க வில்லை. மாறாக, நம்மிடமும் தான் அந்தக் கேள்வி கேட்கப் படுவது போல் இருக்கிறது.
ஆகவே, நேர்வழியின் பக்கம் நம்மை அழைத்துச் சென்றமைக்காக வேண்டி நாம் அல்லாஹ்வின் தூதர் உங்கள் அழுகைக்கான காரணம் என்ன வென்று அல்லாஹ் கேட்டு வரச் சொல்லி அனுப்பியுள்ளான் என்றார்களாம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்தவற்றை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறினார்களாம்.
அவர்கள் மீது நேசம் கொள்ள வேண்டாமா?
2. நிரந்தர நரகிலிருந்து காத்தவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணமாகிறது நெருப்பை மூட்டிய ஒரு மனிதனுக்கு உதாரணமாகும். அவன் நெருப்பை மூட்டினான். அதில் விட்டில் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும் பறந்து வந்து வீழ்ந்தது. அவன் அவைகளை விரட்டிய போதும், தொடர்ந்து வந்த வண்ணமும், அதில் விழுந்த வண்ணமும் இருந்தன. நானும் அப்படித்தான் உங்களை நரகில் வீழ்வதிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். நீங்களோ என்னை மிகைத்து விட்டு அதில் விழுந்து கொண்டிருக்கின்றீர்கள். (நூல்: இப்னு ஹிப்பான், ஹதீஸ் எண்: 6545, முஸ்லிம்: 4242.)
3. அல்லாஹ்வின் பாதையை காண்பித்தவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும், மார்க்கத்திற்கும் மக்கா எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இல்லை என்று நினைத்த போது, அண்ணலார் முஸ்லிம்களை ஹபஷாவிற்கு இடம் பெயர்ந்திடுமாறு அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற முஸ்லிம்கள் மிக நிம்மதியோடு இருப்பதை தெரிந்து கொண்ட மக்கா தலைவர்கள், முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு அம்ருப்னுல் ஆஸ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ ஆகிய வீரமும், தீரமும் நிறைந்த இருவரை ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷியைக் காண அனுப்பி வைக்கின்றார்கள்.
அங்கு நடை பெற்ற உரையாடல் நமக்கெல்லாம் தெரியும். என்றாலும், மக்காவில் இருந்து வந்த இருவரும் சுமத்துகின்ற குற்றச்சாட்டு குறித்து நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என்று முஸ்லிகளைப் பார்த்து மன்னர் நஜ்ஜாஷி கேட்ட போது, ஜஅஃபர் இப்னு அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன பதில் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நஜ்ஜாஷி மன்னர் கேள்வியை கேட்டதும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜஅஃபர் இப்னு அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பதில் கூறுமாறு அழைத்தனர். ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படிப் பதில் கூறினார்கள்: “அரசே! நாங்கள் மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தோம்; கற்சிலைகளை இறைவனாக நினைத்து வழிபட்டு வந்தோம்; செத்த பிராணிகளை உண்டு வந்தோம்; மானக்கேடான காரியங்களைச் செய்து வந்தோம்; உறவுகளை உதறித் தள்ளி, அண்டை வீட்டாருக்கு துன்பம் விளைவித்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர்கள் அநீதியால் ஆட்டிப் படைத்தோம்.
இப்படியே நாங்கள் சீர்கெட்டுப் போயிருந்த கால கட்டத்தில் தான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்கு தூதராக அனுப்பினான். அவரின் பாரம்பரியத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை உடையவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு விளங்கியிருந்தோம்.
“நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது முன்னோர்களும் தெய்வங்களாக கருதி வழிபட்டு வந்த கற்சிலைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும்; சத்தியத்தையே சான்று பகர வேண்டும்; அடைக்கலப் பொருட்களை உரியவர்களிடம் வழங்க வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டும்; அண்டை அயலரோடு அழகிய முறியில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடை செய்தவற்றையும், கொலை மற்றும் மாபாதகக் குற்றங்களை விட்டும் விலக வேண்டும்“ என அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்.
மேலும், மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அநாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்களின் மீது அபாண்டம் சுமத்துதல் ஆகிவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு தொழ வேண்டும்; ஏழைகளின் உரிமைகளை கொடுக்க வேண்டும்; என்றும் அத்தூதர் எங்களுக்கு ஆணையிட்டார். எனவே நாங்கள் அவரை உண்மையாளராக ஏற்றுக் கொண்டோம்; அவரை விசுவாசித்தோம்; “அவர் எங்களுக்கு அறிமுகப் படுத்திய அல்லாஹ்வின் பாதையை – மார்க்கத்தைப் பின் பற்றினோம்;” அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; இணை வைப்பதை விட்டொழித்தோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம்.
இதனால் எங்களது இனத்தவர்கள் எங்கள் மீது அத்துமீறினர்; எங்களுக்கு சொல்லெனா துன்பம் விளைவித்தனர்; எங்களை மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திருப்பிட முயற்சி மேற்கொண்டனர். எங்களின் உயிருக்கும் மார்க்கத்திற்கும் அவர்கள் தடையான போது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் புகலிடம் தேடி வந்தோம்.
அரசே! இங்கு எங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என நாங்கள் நம்புகின்றோம்” என்று கூறி ஜஅஃபர் இப்னு அபூ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் கூறிமுடித்தார்கள். (நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்: 68,69,70)
இங்கே ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் எங்களுக்கு அல்லாஹ்வின் பாதையை காட்டித்தந்தவர்கள். நாங்கள் எவைகளையெல்லாம் தீயவைகள் என விளங்கிக் கொண்டோமோ அவைகளையும், நாங்கள் எவைகளையெல்லாம் நன்மை தரும் செயல்களாக தெரிந்து கொண்டோமோ அவைகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் எங்களுக்குக் காண்பித்துத் தந்தார்கள்” என அழகாக சுட்டிக் காட்டுகின்றார்கள்.
4. ஈமானின் பூரணத்துவம் பெற்றுத்தருபவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ உங்களின் எவருடைய ஈமானும் – இறை நம்பிக்கையும் பூரணத்துவம் அடையாது. நான் ஒருவருடைய பிள்ளையை விடவும், அவரின் தாய், தந்தயரை விடவும், உலக மக்கள் அனைவரையும் விடவும் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை ” (நூல்: புகாரி, ஹதீஸ் எண்: 32, முஸ்லிம், ஹதீஸ் எண்: 33)
5. ஈமானின் சுவையை உணரச் செய்பவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ எவர் அல்லாஹ்வை தமது (ரப்) அதிபதியாகவும், இஸ்லாத்தைத் தாம் பின் பற்றும் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாகவும், வழிகாட்டும் தலைவராகவும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றாரோ அவரே ஈமானின் {இறை நம்பிக்கையின்} சுவையை இன்பத்தைச் சுவைத்தவராகிறார்.” (நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்: 34)
அல்லாஹ்வுக்கு முழுமையாக பணிந்து நடந்து, இஸ்லாமிய ஷரீஆவை பின்பற்றி வாழ்ந்து, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தமக்கு வழி காட்ட வந்த இறுதித்தூதர் என்று உளப்பூர்வமாக ஏற்று திருப்தி கொள்ளும் மனிதன் இந்த முடிவுக்கு வந்து விடுகின்றான். அதாவது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தான் பணிந்து வாழப்போவதில்லை என்றும், எந்நேரத்திலும் எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறியினையே கடைபிடிப்பதென்றும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறெந்த மனிதனின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் தான் வாழப்போவதில்லை என்றும் அவன் முடிவுக்கு வந்து விடுகின்றான். இப்படியொரு அசாத்திய நிலையை அடைந்து விட்ட மனிதன் ஈமானின் – இறை நம்பிக்கையின் சுவையைச் சுவைத்து விடுகின்றான்.
6. உலக மக்களின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: ”நபியே! நாம் உம்மை உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்”. (அல்குர்ஆன்:21:107)
இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மேற்கூறிய இறை வசனத்திற்கு விளக்கம் தருகிற போதுஸ“உலக மக்கள் அனைவருமே நபிகளாரின் தூதுத்துவத்தின் மூலம் பயனடைகின்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின் பற்றுபவர்கள் உலகிலும், மறுமையிலும் பெருமபயனை அடைகின்றனர்.
அண்ணலாரை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களை எதிர்ப்பவர்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், எதிர்த்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொரு கணமும் பாவத்தை தான் சுமக்கின்றனர். ஒரு வகையில், அவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். ஏனெனில், உலகின் அவர்களின் வாழ்நாள் மறுமையில் அவர்களின் தண்டனையை அதிகரிக்கும். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு அருட்கொடை தான்.
7. முஸ்லிம் உம்மத்தின் மீது அளவு கடந்த பாசம் உள்ளவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தித்ததாக கூறும் “ என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டில் ஆழ்த்திவிட்டன; (என்னுடைய வழித்தோன்றல்களும் இவற்றால் வழி கெடலாம்; எனவே, அவர்களில்) எவர்கள் என்னுடைய வழியின் படி நடந்தார்களோ, அவர்கள் தாம் திண்ணமாக என்னைச் சார்ந்தவர்கள். எவர்கள் எனக்கு முரணான வழியினை மேற்கொண்டார்களோ அவர்களின் விஷயத்தில் திண்ணமாக நீ பெரிதும் மன்னிப்போனாகவும், கருணையாளனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்:14:36.) எனும் வசனத்தை ஓதும் போதும்,
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிட்டதாகக் கூறும் “நீ அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடிமைகளே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன்னுடைய அடிமைகளே!) நீயே யாவற்றையும் மிகைத்தோனுமாகவும், நுண்ணறிவு படைத்தோனுமாகவும் இருக்கின்றாய்”. (அல்குர்ஆன் 5:118.) எனும் இறை வசனத்தை ஓதும் போதும்,
”கைகளை உயர்த்தி அழுதவர்களாக யா அல்லாஹ்! என் உம்மத்தின் நிலை என்ன? என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி ஏன் என்னுடைய ஹபீப் அழுகிறார்? என்ன காரணம் என்று கேட்டு வரச் சொன்னானாம். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் வந்திருக்கின்றேன், உங்கள் அழுகைக்கான காரணம் என்ன வென்று அல்லாஹ் கேட்டு வரச் சொல்லி அனுப்பியுள்ளான் என்றார்களாம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்தவற்றை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறினார்களாம்.
அதற்கு அல்லாஹ் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் “முஹம்மதே! உம் உம்மத்தார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். உமக்கு அல்லாஹ் தீங்கேதும் இழைக்க மாட்டான்” என்று நான் கூறியதாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறிவிடும் என்றான்” அப்படியே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களிடம் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்: 468)
அபூ ஹுரைரா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் உடனே பதிலளிக்கும் ஒரு துஆவை நல்கியிருக்கின்றான். அனைத்து நபிமார்களும் அதை பயன் படுத்திவிட்டனர். ஆனால், நான் நாளை மறுமை நாளில் என் உம்மத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்காத நிலையில் மரணித்து விட்டவர்களுக்கு பரிந்துரை செய்வதற்காக பிற்படுத்தி வைத்திருக்கின்றேன்” என்றார்கள். நூல்: மிர்காதுல் மஃபாதீஹ், 9/1523.
8. நம் உயிரை விட மேலானவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக, இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தான் முன்னுரிமை பெற்றவராவார்கள். மேலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பரிசுத்த மனைவியர் அவர்களுக்கு அன்னையராவார்கள்.” (அல்குர்ஆன்:33:6.)
9. நம்மை சந்திக்கத் துடிக்கும் நல் உள்ளம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் போது “ நான் என் சகோதரர்களைக் காண ஆவலாக இருக்கின்றேன் என்றார்கள். அப்போது நபித்தோழர்கள் ”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களின் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ இல்லை, நீங்கள் இல்லை. நீங்கள் என் தோழர்கள். என் சகோதரர்கள் என்று நான் சொன்னது உங்களுக்கு பின்னால் வருகின்ற என் மீது நேசம் வத்திருக்கின்ற என் உம்மத்தினர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
10. நம் மீது பொழியப்பட்ட பேருபகாரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக, அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருபகாரம் புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைபடுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில் தான் இருந்தார்கள்.” (அல்குர்ஆன்:3:164.)
11. மக்கள் ஈடேற்றம் பெற தம்மையே அர்ப்பணித்தவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: “நபியே! இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே சென்று, கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக் கொள்வீர் போல் இருக்கிறதே! (அல்குர்ஆன்:18:6)
இதற்காக மட்டுமல்ல, இன்னும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கின்றன அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாம் நேசம் வைத்திட, பிரியம் வைத்திட,
நபித்தோழர்களின் வரை முறையற்ற நேசம்
1. ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நேசம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் விலைக்கு வாங்கி உரிமை விடப்பட்ட அடிமை தான் ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணியாளராக பரிணமித்தவர்கள்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊரில் இருந்தாலும், பிரயாணத்தில் இருந்தாலும் நபிகளாருடனேயே தங்களின் பெரும் பாலான நேரங்களைச் செலவிட்டவர்கள். நபிகளாரின் மீது அளவு கடந்த நேசமும், காதலும் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தர்பாருக்கு வருகை தருகின்றார்கள். அவரின் நிலை கண்டு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலையுற்றவர்களாக, என்ன ஸவ்பான் இந்த நிலை? உடலெல்லாம் நிறம் மாறி மஞ்சனித்து இருக்கிறதே? ஏன்? என்று கேட்டார்கள்.
அதற்கு, ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நோயோ, அல்லது உடலில் ஏற்பட்ட நோவினையின் காரணமாகவோ, என் நிலை இப்படியாகவில்லை. மாறாக, உங்களைக் காணாத போது எனக்கு கடுமையான மனக்கவலையும், கஷ்டமான இந்த நிலையும் ஏற்படுகிறது.”
மீண்டும் உங்களை நான் பார்த்து விட்டேன் என்றால் நான் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றேன். இந்த உலகத்தில் இப்படி என்றால் நாளை மறுமையில், என்ன நடக்கும் என சிந்தித்தாலே நான் இந்த நிலைக்கு உள்ளாகிவிடுறேன். என்னை கவலையும் சூழ்ந்து கொள்கின்றது.
ஏனெனில், நாளை மறுமையில் ஒரு வேளை நான் சுவனவாசியாகி, உங்களைப் பார்க்க வேண்டுமென நான் ஆவல் கொண்டால் அது நடக்குமா? நீங்களோ உயர்வான இடத்தில், உயர்ந்தோர்களான நபிமார்களோடு வீற்றிருப்பீர்கள். நானோ குறைவான அந்தஸ்தோடு சுவனத்தில் எங்கோ ஓர் மூலையில் இருப்பேன். உங்களைப் பார்க்க இயலுமா? அல்லாஹ்வின் தூதரே!
ஒரு வேளை நான் சுவனவாசியாக இல்லையெனில், ஒருக்காலமும் உங்களைக் காண முடியாதே அல்லாஹ்வின் தூதரே! என்று கவலை தோய்ந்த முகத்துடன் பதில் கூறினார்கள். அப்போது அல்லாஹ் “எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறை வழியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள், நல்லோர்களான உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்! இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும், (இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அல்குர்ஆன்:4:69,70. ஆகிய இறை வசனங்களை இறக்கி வைத்தான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு இந்த இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அல் குர்துபீ. துர்ருல் மன்ஸூர், பாகம்:2, பக்கம்:182)
2. அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நேசம்.
இப்னு ஷிமாஸா மஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் அம்ருப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணத் தருவாயில் அவர்களின் அருகே அமர்ந்திருந்தோம். அவர்களோ சுவற்றின் பக்கம் தம் முகத்தைத் திருப்பியவர்களாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள்.
அவர்களின் மகனார் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “என் அருமைத் தந்தையே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடிருக்கும் காலத்தில், தங்களுக்கு இன்னின்ன நற்பேறுகளை நீங்கள் அடைவீர்கள்” என்று சோபனம் சொல்லியிருக்கின்றார்களே? தங்களுக்கு கிடைக்க விருக்கும் பாக்கியங்கள் குறித்து சுபச் செய்தி நல்கியிருக்கின்றார்களே? அப்படி இருக்க தாங்கள் ஏன் அழுகின்றீர்கள்? என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.
இதைக் கேட்டதும், எங்களின் பக்கம் முகத்தைத் திருப்பி “நான் மறுமைக்காக தயார் செய்து வைத்திருப்பதில் மிக உயர்ந்தது “வணக்கத்திற்குரிய இறைவன் ஏகனாம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற சாட்சியம்” தான்.
நான் என் வாழ்நாளில் மூன்று வகையான காலங்களைக் கடந்து வந்துள்ளேன். ஒரு காலம் இருந்தது, அந்தக் காலத்தில் என்னை விட மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது வெறுப்புக் கொண்டவன் வேறு யாரும் இருந்திருக்க மாட்டார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், அவர்களை எப்படியாவது கொலை செய்து விட வேண்டுமென்ற தீர்மானத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தேன்.
இது தான் என் வாழ்நாளில் மிகக் கெட்ட காலமாகும், (அல்லாஹ் தான் காப்பாற்றினான்) இந்நிலையிலேயே நான் இறந்து போயிருந்தால் நிச்சயம் நரகவாசியாகி இருப்பேன். பின்பு இஸ்லாம் தான் சத்திய மார்க்கம் என்பதை அல்லாஹ் என் உள்ளத்தில் உதிக்கச் செய்தான்.
நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “தங்களின் திருக்கரங்களை நீட்டுங்கள்!” தங்களிடம் உடன் படிக்கை செய்ய வேண்டும் என வேண்டினேன். நபியவர்கள் தங்களின் புனித கரங்களை நீட்டினார்கள். நான் என் கையை விலக்கிக் கொண்டேன்.
“அம்ரே! ஏன் கையை விலக்கிக் கொண்டீர்!” என என்னிடம் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ”தங்களிடம் நான் சில நிபந்தனைகளைக் கோர விரும்புகின்றேன்” என்றேன்.
”என்ன நிபந்தனை?” என்று மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் “என்னுடைய பாவங்கள் யாவும் மன்னிக்கப் பட வேண்டும்” என்று கூறினேன். அதற்கு அண்ணல் நபிகளார் “அம்ரே! இறை நிராகரிப்பின் போது நிகழ்ந்த அனைத்துப் பாவங்களையும் இஸ்லாம் தகர்த்துவிடுகின்றது, ஹிஜ்ரத் (அல்லாஹ்விற்காக இடம் பெயர்வது) அதற்கு முன் உண்டான பாவங்களை அழித்து விடுகின்றது, ஹஜ் அதற்கு முன் உண்டான பாவங்களைப் போக்கி விடுகின்றது.” என்பது உமக்குத் தெரியாதா? என்று கூறினார்கள்.
பின்னர் நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரங்களில் உடன் படிக்கை செய்தேன்.
என்னுடைய இந்த இரண்டாவது காலம் எத்துணை சிறப்பானதெனில், மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட நேசத்திற்கும், பாசத்திற்கும், கண்ணியத்திற்குரியவர் என் பார்வையில் யாருமே இல்லை.
”அன்னாரின் மீது நான் கொண்டிருந்த அளப்பெரும் மரியாதை, நேசத்தின் காரணமாக முழுமையாகக் கண் கொண்டு காண்பதற்குக் கூட எனக்கு துணிவு பிறக்கவில்லை.”
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை. அவர்களின் தோற்றத்தைப் பற்றி வருணிக்குமாறு கூறப்பட்டால் என்னால் வர்ணிக்க இயலாது. ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை.
இந்நிலையில், நான் இறந்திருப்பேனேயானால் சுவனவாசிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன் என ஆதரவு வைக்கின்றேன். பிறகு நான் சில பொருட்களுக்கு சொந்தக்காரனாக ஆனேன். இவைகளுக்கு மத்தியில் நான் எவ்வாறு வாழ்ந்தேன் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. இது என் வாழ்நாளின் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் காலமாகும்.”
”நான் மரணித்துவிட்டால், ஒப்பாரி வைத்துக் கூச்சலிடும் பெண்களை என் ஜனாஸாவைப் பின் தொடர அனுமதிக்காதீர்கள். (அறியாமைக் காலத்தில் செய்தது போன்று) என் ஜனாஸாவுடன் நெருப்பைச் சுமந்து வர வேண்டாம்.
என்னை அடக்கம் செய்ததும், கப்ரில் நன்றாக மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். (அடக்கம் செய்த பின்) உங்களைக் கொண்டு நான் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் என் மண்ணறையின் அருகே, ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் அளவிற்கான நேரம் நில்லுங்கள்!” என்று அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம், ஹதீஸ் எண்: 321. பாபு கவ்னுல் இஸ்லாமு யஹ்திமு மா கப்லஹூ)
3. அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நேசம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்குள் அடி எடுத்து வைக்கப் போகிறார்கள் என்று கேள்வி பட்டதுமே மதீனமா நகர மக்களின் மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் எல்லையே இல்லாமல் போனது.
இப்ப வருவார்களோ, எப்ப வருவார்களோ என ஏங்கி ஏங்கி மதீனாவின் எல்லையில் தவம் கிடந்தனர். ஆனால், அப்படிப் பட்ட மதீனாவும், மதீனா நகர மக்களின் இதயங்களும் இருண்டு கிடந்தது. இனி எப்போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வரப்போவதில்லை, தங்களோடு கலந்துறவாடப் போவதில்லை என்கிற தீர்மானத்திற்கு மக்களெல்லாம் வந்திருந்த தருணம் அது.
ஆம்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வுலகை விட்டுப் பிரிந்து, அவர்களின் புனித உடல் வைக்கப் பட்டிருந்த நேரம் அது, நபித்தோழர்களின் நிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒருவாராக, மாநபி ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை. அவர்களின் புனித உடலை நல்லடக்கம் செய்து விட்டு வந்து கொண்டிருந்த நபித்தோழர்களைப் பார்த்து அண்ணலாரின் அருமை மகளார் அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்களாம்.
“நபி ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை. அவர்களின் உடலை அடக்கம் செய்து அவர்களின் மீது மண்ணை அள்ளிப் போடுவதற்கு உங்களுக்கெல்லாம் எப்படித்தான் மனம் வந்ததோ? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது மண்ணை அள்ளிப் போட்டது உங்கள் மனதிற்கு திருப்தியாக இருந்ததா? என்று.. இதை அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ரியாளுஸ் ஸாலிஹீன், பாடம்:3, ஹதீஸ் எண்:28)
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ”உயிருக்கு உயிராக நேசிப்போம்”
“உயிரினும் மேலாக நேசிப்போம்”
“எல்லைகளைக் கடந்து நேசிப்போம்”
அல்லாஹ் அத்தகைய நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள் பாளிப்பானாக! ஆமீன்!
யா அல்லாஹ்! உன்னிடத்தில் உன்னை நேசிக்கும், உன் ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கும், உன்னை நேசிக்கும் நல்லோர்களை, நேசித்திடும் நற்பேற்றினை எங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்!
வஸ்ஸலாம்!
-Basheer Ahmed usmani