எது ஈஸால் ஸவாப்?
மரணித்தவர்களுக்காக துஆ செய்வது, பாவமன்னிப்பு தேடுவது, தர்மம் செய்வது, கூலி வாங்காமல் குர்ஆன் ஓதுவது இதைப் போன்றே நஃபிலான தொழுகை நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களின் மூலம் ஈஸால் ஸவாப் என்ற பெயரில் செய்வதானது மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
ஆனால் அதே சமயத்தில் ஈஸால் ஸவாப் என்ற பெயரில் குறிப்பிட்டு செய்வதும் வருடாவருடம் என்ற பெயரில் செய்வதும் பித்அத்தாகும். இந்த செயலிற்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ், இஜ்மா, கியாஸ் எதிலும் ஆதாரமில்லை.
இந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்களாகும் :
அதற்கு மாறாக இந்த வழிமுறையானது இந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்களாகும். ஏனெனில் அவர்களிடத்திலும் நாளை குறிப்பாக்குவது என்பது வழமையில் உள்ளது.
பிரபல்யமான வரலாற்றாசிரியர் அல்லாமா “பைரோனி” குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்துக்களிடத்தில் மரணித்தவரின் உரிமைகள் சம்மந்தப்பட்டதில் வாரிசுகளின் மீதுள்ள கடமையானது; விருந்தளிப்பது, இறந்த நாள் பதினொன்றாவது நாள் பதினைந்தாவது நாள் உணவளிப்பது, இவ்வாறே வருடத்தின் முடிவிலும் உணவளிப்பது.
மேலும் ஒன்பதாவது நாள் வரை வீட்டிற்கு முன்னால் சமைத்த உணவையும் தண்ணீர் குவளையையும் வைப்பது, அவ்வாறு செய்யவில்லையெனில் மைய்யத்தின் ரூஹானது கோபமடையும். பசித்தவாறு தாகித்தவாறு சுற்றும். குறிப்பாக பத்தாம் நாள் மரணித்தவரின் பேரில் அதிகமான உணவை தயார் செய்து ஏழைகளுக்கு கொடுக்கப்படும். (کتاب الہند)
இவ்வாறே சில காரியங்களை முஸ்லிம்களும் செய்து வருகிறார்கள். இனிப்பு, தண்ணீர் முன்னால் வைக்கப்படுகிறது. நாள்களை குறிப்பாக்குதல் அதிலும் ஏழாம் நாள் பத்தாம் நாள் வருட பாத்திஹா என்ற பெயரில் அரங்கேற்றுகின்றனர்.
நாம் ஹதீஸ் மற்றும் பிக்ஹின் கண்ணோட்டத்தில் அணுகும் போது மரணித்தவரின் குடும்பத்தினருக்கு அவரின் மரணமானது துன்பமும் பேரிழப்புமாகும். இதனால் மரணத்தவரின் குடும்பத்தினருக்கு உறவினர்கள் மஹல்லாவாசிகள்தான் உணவளிக்க வேண்டும். ஆனால் மரணித்தவரின் குடும்பத்தவர்கள் வருகிறவர்களுக்கு உணவு சமைப்பதானது பெரும் பாவமாகும். அதிகமான ஊர்களில் இவ்வாறு நடைபெறுகிறது. சில கடன் வாங்கி செய்கிறார்கள். சில சமயங்களில் வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள்.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு;
كنا نرى الاجتماع الى اهل الميت و صنعة الطعام من النياحة
மைய்யத்தின் வீட்டில் ஒன்று கூடுவதும் உணவு சமைப்பதையும் ஒப்பாரியாக கருதினோம் (منتقى الاخيار)
பெரும்பான்மையான மூத்த அறிஞர்களிடமும், பிற்கால அறிஞர்களிடத்தில் ஒப்பாரி வைப்பதானது ஹராமாகும். இவ்வாறே மைய்யத்தின் குடும்பத்தவர்களும் உணவு சமைத்து விருந்தளிப்பதுமாகும். மேற்கண்ட அறிவிப்பானது ஹதீஸ் கிரந்தங்களில் பல அறிவிப்பாளர்கள் தொடரில் வருகிறது.
அல்லாமா ஹைஸமி ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்:
புகாரியில் நிபந்தனைப்படி ஓர் அறிவிப்பு உள்ளது. மற்றொரு அறிவிப்பானது முஸ்லிமின் நிபந்தனையின் படி வந்துள்ளது. (மஜ்மஉஸ்ஸவாயித்)
ஹாபிள் இப்னு ஹுமாம் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்:
அறிவிப்பாளர் தொடரானது (பத்ஹுல் கதீர்) சரியானது.
அல்லாமா ஹல்பி குறிப்பிட்டுள்ளார்கள்;
அறிவிப்பாளர் தொடரானது ஸஹீஹானது. (கபீர்)
அல்லாமா இப்னு அமீருல் ஹாஜ் மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி
اما اصلاح اهل الميت طعاما و جمع الناس فلم ينتقل فيه شيئ وهو بدعة غير مستحب
மரணித்தவரின் குடும்பத்தவர்கள் உணவு சமைப்பதும் மக்களை ஒன்று கூட்டுவதும் எது ஒன்றும் (மார்க்கத்தில்) எடுத்து சொல்லப்படவில்லை இது பித்அத்தாகும். விரும்பத்தக்க செயல் அல்ல.
مما احدثه بعضهم من فعل الثالث للميت و عملهم الاطعمة فيه حتى صار عندهم كانه امر معمول به
சிலர் மரணித்தவருக்கு மூன்றாம் நாள் என்ற பெயரில் உணவு அளிக்கும் பித்அத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களிடத்தில் அமல்செய்யப்படும் காரியத்தை போன்று மாறிவிட்டது. (மத்கல்)
இப்னு ஹஜர் மக்கி ஷாஃபியி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் வினா தொடுக்கப்பட்டது
عما يعمل يوم ثالث من موته من تهيئة اكل و اطعامه للفقراء و غيرهم و عما يعمل يوم السابع
மரணித்தவரின் பெயரில் மூன்றாம் நாள் ஏழாம் நாள் ஏழைகளுக்கும் அவர்கள் அல்லாதவர்களுக்கும் உணவு அளிப்பதின் சட்டம் என்ன?
جميع ما يفعل مما ذكر فى السؤال من البدع المذمومة
வினா தொடுக்கப்பட்ட அனைத்தும் பழிக்கப்படும் பித்அத்தாகும். (ஃபதாவா குஃப்ரா)
அல்லாமா முஹம்மது இப்னு முஹம்மது ஹம்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி “தஸல்லியதுல் மஸாயிப்” என்ற கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் இமாம் ஷம்சுத்தீன் குதாமா ஹன்பலி ஷரஹ் முன்தகிஃ லில்கபீர் என்ற கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் முவஃப்பிக்தீன் இப்னு குதாமா ஹம்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி;
فاما صنع اهل الميت طعاما للناس فمكروه لان فيه زيادة على مصيبتهم و شغلهم الى شغالهم و تشبيها بصنع اهل الجاهلية
மரணித்தவரின் குடும்பத்தவர்கள் மக்களுக்காக உணவு சமைப்பதானது மக்ரூஹாகும். ஏனெனில் இதனால் அவர்களின் கவலைகள் மேலும் அதிகரிக்கும். அவர்களின் பல வேலைகளில் அவர்களுக்கு (மக்களுக்காக உணவு சமைப்பதும்) வேலையாக உள்ளது.மேலும் அறியாமைக்கால மக்களின் செயல்களுக்கு ஒப்பாக உள்ளது. (முஸ்னி)
அல்லாமா ஆபிதீன் ஷாமி ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்;
مذهبنا و مذهب غيرنا كاالشافعية و الحنابلة
நம்முடைய மத்ஹபின் கருத்தும் நம்முடைய மத்ஹபல்லாத ஷாஃபி மத்ஹப் மற்றும் ஹனஃபிலா மத்ஹபை போன்றுதான். மற்ற மத்ஹபு அறிஞர்கள் அதனை மறுத்ததை விட ஹனஃபி மத்ஹப் புகஹாக்கள் மறுத்துள்ளனர்.
அல்லாமா தாஹிர் இப்னு அஹ்மது ஹனஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி
و لا يباح اتخذ الضيافة عند ثلاثة ايام لان الضيافة يتخذ عند
السرور
மரணித்தவரின் குடும்பத்தவர்கள் மூன்று நாள் விருந்தளிப்பது என்பது ஆகுமானதல்ல. விருந்தளிப்பது என்பது மகிழ்ச்சியான சமயத்திலாகும். (ஹுலாஸதுல் பதாவா)
இமாம் காளிகான் ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்
يكره اتخاذ الضيافة فى ايام المصيبة لانها ايام تاسف فلا يليق بها ماكان المسرور
கவலையான சந்தர்ப்பங்களில் விருந்தளித்து உபசரிப்பது மக்ரூஹாகும். ஏனெனில் சந்தோஷமான சமயங்களில் செய்கிற செயலை சோதனையின் போது செய்வதானது பொருத்தமில்லை. (பதாவா கானிய்யா)
ஃபதாவா பஜ்ஜாஜிய்யாவில் மேற்சொன்னதிற்கு நெருக்கமான கருத்தில் உள்ளது ஹாபிள் இப்னு ஹுமாம் ரஹ்மதுல்லாஹி அலைஹி:
يكره اتخاذ الضيافة من الطعام من اهل الميت لانه شرع فى السرور ولا فى الشرور و هي بدعة مستقبحة
மரணித்தவரின் குடும்பத்தினர் விருந்து உபச்சாரம் செய்வது மக்ரூஹாகும்.ஏனெனில் (உணவளிப்பதானது) மகிழ்ச்சியின் போது ஷரீஅத்தாக்கப்பட்டுள்ளது. துன்ப சமயத்தில் அல்ல இந்த செயலானது கெட்ட பித்அத்தாகும். (ஃபத்ஹுல் கதீர்)
அல்லாமா கஹஸ்தானி ரஹ்மதுல்லாஹி அலைஹி;
يكره اتخاذ الضيافة فى هذه الايام و كذا اكلها كما فى حيرة الفتوى
இந்த நாட்களிலே உணவு சமைத்து உணவளிப்பது மக்ரூஹாகும் என ஃபதாவா ஹைரதிலே உள்ளது.
இமாம் ஹாபிள் தீன் முஹம்மது ரஹ்மதுல்லாஹி அலைஹி:
يكره اتخاذ الضيافة ثلاثة ايام و اكلها لانها مشروعة السرور و يكره اتخاذ الطعام فى اليوم الاول و الثالث بعد الاسبوع و الاعياد و نقل الطعام الى القبور فى المواسم و اتخاذ الدعوة لقرآة القرآن و جمع الصلحاء و القراء للختم او لقراءة سورة الانعام او الا خلاص فا لحاصل ان اتخاذ الطعام عند الطعام؛ عند قرآة القرآن لاجل الاكل
மூன்று நாள்வரை விருந்தளித்து உண்பது என்பதானது மக்ரூஹாகும். ஏனெனில் விருந்தளிப்பதானது மகிழ்ச்சியின் போது ஷரீஅத்தாக்கப்பட்டுள்ளது. முதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் ஏழாம் நாளுக்கு பிறகும் பெருநாள் சமயத்திலும் உணவு தயாரித்து விருந்தளிப்பது மக்ரூஹாகும்.
இவ்விதமாக பருவ காலங்களில் உணவை கப்ருக்கு எடுத்து செல்வதும் மக்ரூஹாகும். கதமுல் குர்ஆன் என்ற பெயரில் குர்ஆன் ஓதுவதற்காக நல்லோர்களையும் காரிகளையும் ஒன்று கூட்டி உணவளிப்பதும் மக்ரூஹாகும். அன்ஆம் அல்லது இக்லாஸ் ஓதுதல் என்ற பெயரில் உணவு தயாரிப்பதானது மக்ரூஹாகும். குர்ஆன் ஓதும் சமயத்தில் சாப்பிடுவதற்காக உணவு சமைப்பதானது மக்ரூஹாகும்.(ஃபதாவா பஜ்ஜாஜிய்யா)
இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்;
الاجتماع على مقبرة فى اليوم الثالث و تقسيم الورد و العود و الطعام فى الايام الخصوصية كالثالث و الخامس و التاسع و العاشر و العشرين و الاربعين و الشهر السادس و السنة بدعة ممنوعة
மூன்றாம் நாள் கப்ரில் ஒன்றுகூடுவது. மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ஒன்பதாம் நாள், பத்தாம் நாள், இருபதாம் நாள், நாற்பதாம் நாள், ஆறு மாதம், வருடம் என்பதை போன்று குறிப்பிட்ட நாள்களில் உணவளிப்பதும் நறுமணம் மற்றும் ரோஜாப்பூ போன்றவை பங்கிடுவது இந்த அனைத்து வழிமுறையும் தடுக்கப்பட்ட பித்அத்தாகும். (ஷரஹ் மின்ஹாஜ்)
ஹள்ரத் முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி ;
قرر اصحاب مذهبنا من انه يكره اتخاذ الطعام فى اليوم الاول و الثالث بعد الاسبوع
மைய்யத்தின் பேரில் முதல்நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள் உணவு தயாரிப்பதானது மக்ரூஹாகும் என நம்முடைய ஹனஃபி மத்ஹப் புகஹாக்கள் உறுதி செய்துள்ளனர். (மிர்காத்)
அல்லாமா முஹையத்தீன் பர்கலி நக்ஷபந்தி ஹனபி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுவதாவது; இந்த பித்அத்துகளில் உள்ளதானது, மரணித்த அன்று அதன் பிறகு நாள் குறிப்பிட்டு விருந்தளிக்கும்படி வஸிய்யத் செய்வதும், குர்ஆன், கலிமா படிப்பவர்களுக்கு பணம் கொடுப்பதும், கப்ரில் நாற்பது நாள் வரை அல்லது அதற்கு குறைவாகவோ நபரை அமர்த்துவதும், கப்ரின் மீது குப்பா கட்டும்படி வஸிய்யத் செய்வதும் இந்த அனைத்து காரியங்களும் வெறுக்கப்பட்ட காரியங்களாகும். (தரீகா முஹம்மதி)
மெளலானா முஹம்மது யூசுப் ஸாஹிப் முரீத் கவாஜா நஸுருத்தீன் மஹ்மூது திஹ்லவி சிஷ்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி கப்ருகளை நாள் குறிப்பிட்டு ஜியாரத் செய்வதானது பித்அத் என்பதாக குறிப்பிடுவதுடன் மூன்றாம் நாள் ஏழாம் நாள் என்ற பெயரில் நாள் குறிப்பிட்டு ஈஸால் ஸவாப் செய்வதும் பித்அத் என்கிறார்கள். (துஹ்பா நஸாயிஹ்)
இனி அடுத்து பித்அத்வாதிகள் நாள் குறிப்பிட்டு ஈஸால் ஸவாப் செய்வதற்கு வைக்கும் ஆதாரங்களும் அதற்கான மறுப்புகளும் மைய்யித்தின் வீட்டில் உணவு உண்பது மக்ரூஹ் அல்ல தடையுமில்லை என்கின்றனர்.
ஏனெனில் மிஷ்காதில் வந்துள்ள ஹதீஸின் சுருக்கம்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மைய்யித்தை அடக்கம் செய்தார்கள் அதனை முடித்து செல்லும் போது استقبله داعى امراته மரணித்தவரின் மனைவி ஒரு தூதரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உணவு உண்ண வரும்படி அழைப்பு கொடுக்கும்படி கூறினார்கள்.
அல்லாமா கல்பி ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி மிஷ்காதின் இந்த ஹதீஸின் ஆதாரத்தின் மூலம் மைய்யத் வீட்டில் சாப்பிடுவது ஆகுமானது. இந்த விஷயம் தடையாக இருந்திருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்டு இருக்கமாட்டார்கள். (அன்வார் ஸாதிஆ)
நமது பதில்:
இதனை ஆதாரம் எடுப்பதானது ஆதாரமாகாது. ஏனெனில் امراته என்று பிரதியில் இருப்பதானது மிஷ்காத் ஆசிரியருக்கோ அல்லது எழுத்தாளருக்கோ ஏற்பட்ட தடுமாற்றமாகும். அசல் வார்த்தையானது داعى امراة ஒரு பெண்ணின் தூதுவர் விருந்து உண்ண அழைப்பு கொடுத்தார்கள். இதுதான் சரியானது என்பதின் காரணம் அபூதாவூத், முகிஷ்லுல் ஆஸார், ஷர்ஹு மஆனில் ஆஸார், தாரகுத்னி, முஸ்னத் அஹ்மத், ஸுனனுல் குப்ரா, கஸாயிஸுல் குப்ரா, ஹாகிம், மஹல்லி இப்னு ஹஸ்ம், அவ்னுல் மஃபூத் போன்ற கிரந்தங்களின் அனைத்து அறிவிப்புகளிலும் امراة என்றுதான் உள்ளது.
அடுத்து இந்த ரிவாயத்தில் உள்ள அந்த வார்த்தை சரியானது என வைத்துக்கொண்டாலும் அந்த ஹதீஸிற்கு மாற்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
சிலர் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் குறிப்பானது. பரலேவிகளின் அஃலா ஹள்ரத் குறிப்பிட்டுள்ளார்கள் அந்த பெண்மணி முதலில் அழைப்பு கொடுத்திருந்தார்கள் எதிர்பாரதவிதமாக கணவர் மரணித்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சாப்பிட்டார்கள். (அஹ்காமுஷ் ஷரீஅத்)
ரிளாகான் அவர்கள் அல்லாமா முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் அல்லாமா ஹல்பி ரஹ்மதுல்லாஹி அலைஹி இருவரின் கருத்திற்கும் தெளிவாக பதில் கொடுத்துள்ளார்கள்.
முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறுதியாக எழுதிய அவரின் நூலில் இந்த கருத்தை மாற்றிக் கொண்டார்கள். ஷரஹ் நிகாயா வில் மரணத்தின் பெயரில் உணவு அளிப்பதானது கெட்ட பித்அத்தாகும் என தெளிவாக எழுதியுள்ளார்கள்.
பித்அத்வாதிகளின் இரண்டாவது ஆதாரம்:
மெளலவி அப்துஸ்ஸமீஃ மற்றும் முஃப்தி அஹ்மதுயார் ஸாஹிப் சொல்கிறார்கள் பிக்ஹ்ஹில் ஏழாம் நாள், பத்தாம் நாள், நாற்பதாம் நாள் விருந்தாளிகளுக்கும், உறவினர்களுக்கும் விருந்தளிப்பதுதான் தடையே தவிர நாள் குறிப்பிட்டு ஈஸால் ஸவாப் செய்வதானது தடுக்கப்படவில்லை. மார்க்க அறிஞர்கள் ஏழைகளுக்கு உணவு அளிப்பதை சிறந்த செயல் என்பதாக தெளிவுப்படுத்தியுள்ளனர்.
ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி வீண்விரயத்தை தடுத்துள்ளார். இதனை நாமும் தடுக்கிறோம். காளி ஸனாவுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வார்த்தைகளின் மூலம் தடையின் காரணமானது நாள் குறிப்பிட்டு செய்வதல்ல மாறாக சடங்கு சம்பிரதாயத்தின் காரணமாகவும், பெண்கள் ஒன்று கூடுவதும் ஒப்பாரிவைப்பதினாலாகும். (ஜாஅல் ஹக், அன்வார் ஷாதிஆ)
பதில்:
எந்தவித சந்தேகமின்றி துக்கமான சமயங்களில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாள் குறிப்பிட்டு செய்வதானது தடுக்கப்பட்ட பித்அத்தாகும். வீண்விரையம், பெண்களை ஒன்று சேர்ப்பது, ஒப்பாரி வைப்பதானது பாவத்தை அதிகரிக்கும். அறிவுள்ள, பருவம் எய்திய வாரிசுதாரர்கள் தன் பொருளை ஏழைகளுக்கு தர்மம் செய்வதானது நல்ல செயல் என்றாலும் கூட இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்கள் குறிப்பிட்டு செய்வதானது பித்அத்தும் தடையும் மக்ரூஹாகும். ஏனெனில் புகஹாக்களின் கருத்துக்களில் நாள் குறிப்பிட்டு செய்வதானது தடுக்கப்பட்டது என்பதானது தெளிவாக முன்னால் விளக்கப்பட்டுள்ளது.
இமாம் நவவி ரஹ், இப்னு ஹஜர், பஜ்ஜாஜிய்யா ஆசிரியர் இவரல்லாத மற்ற அறிஞர்களின் ஃபிக்ஹ் வாசகங்கள் اليوم الثالث என்று தெளிவாக நாள் குறிப்பிட்டு செய்வதை தடுத்துள்ளது.
பித்அத்வாதிகளின் மூன்றாவது ஆதாரம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார் இப்ராஹிம் வபாத்தான போது மூன்றாம் நாளில் ஃபாத்திஹா ஓதினார்கள். இந்த ரிவாயத்தானது முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நூலான அவுஜ் ஜன்தியில் உள்ளது.
பதில்:
மெளலானா அப்துல் ஹை லக்னவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்; அவுஜ் ஜந்தி என்ற நூலானது முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நூலல்ல. மேலும் இந்த ரிவாயத்தானது இட்டுகட்டப்பட்டதாகும். இந்த ஹதீஸானது எந்த நூலிலும் இல்லை (மஜ்மூஃ பதாவா)
source: http://ummathemuhammedhiya.blogspot.in/2016/03/blog-post_22.html?m=1