சுகமும் துக்கமும்
வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாகக் கழிக்கிறாள் 18 வயது நிரம்பிய அந்த இளம் பெண். நல்ல மார்க்க சூழ்நிலையில் அவளின் பெற்றோர்கள் அவளை வளர்த்தெடுத்தனர். அருமையான அண்டை அயலாருடன் அவளது வாழ்க்கை அமைதியாகக் கழிகிறது. கவலை என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு அவளை அவளின் பெற்றோர்கள் கண்ணேஸ பொன்னேஸ என்று கவனித்துக்கொண்டனர்.
அவளுக்கு 18 வயது நிரம்பிய பொழுது அவளின் பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் முடித்து வைக்கும் முயற்சியில் இறங்கினர். இத்தனை வருடம் தன் பெற்றோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த அந்த இளம் பெண்ணுக்கு திருமணத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
முதலில் அவள் திருமணப் பேச்சை எடுக்கும் பொழுதெல்லாம் தட்டிக் கழித்து வந்தாள். பெற்றோரும், உற்றாரும் தொடர்ந்து திருமணம் முடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி வலியுறுத்த, இறுதியில் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தாள்.
நல்ல மாப்பிள்ளை அமைந்தது. திருமணம் வெக சிறப்பாக நடந்தேறியது. சில நாட்களிலேயே அவளது வாழ்க்கையின் மகிழ்ச்சியின் அடையாளமாக அவள் கர்ப்பமானாள். இதற்கிடையில் அவளின் மாப்பிள்ளைக்கு கத்தரில் வேலை கிடைத்தது. விசா வந்ததும் மாப்பிள்ளை கத்தாருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சென்ற ஒரு சில நாட்களிலேயே கத்தரிலிருந்து அந்த அதிர்ச்சி செய்தி வந்தது. மாப்பிள்ளை ஒரு வாகன விபத்தில் இறந்து விட்டார்! அதிர்ச்சியில் ஆடிப் போனாள் அந்த அபலைப் பெண்.
கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தாலும் ஈமானிய அடிப்படையில் வளர்ந்ததனால் இது அல்லாஹ்வின் கட்டளை என்று அழகிய பொறுமையை மேற்கொண்டாள். அடுத்த ஒரு சில மாதங்களில் அவள் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள்.
இன்னும் சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் வலி வந்தது. மருத்துவரிடம் பரிசோதித்தபொழுது அடுத்த அதிர்ச்சி. அவளுக்குப் புற்று நோய் வந்து, முற்றிப் போயுள்ளது தெரிந்தது.
இதனால் ஏற்பட்ட இன்னல்கள் அனைத்தையும் இதவும் இறைவனின் நாட்டமே என்று அவள் அவள் சகித்துக்கொண்டாள். அடுத்த ஒரு சில நாட்களில் அந்த அபலைப்பெண் மரணமடைந்தாள். தான் ஈன்றெடுத்த சிசுவை இருபது நாட்கள்தான் அவள் காண முடிந்தது. ஆம்! அவள் தன் குழந்தையை ஈன்றெடுத்த இருபதாவது தினத்தில் உயிரிழந்தாள்.
இதுதான் இந்த உலக வாழ்க்கை. கவலையே அறியாமல் வளர்ந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை சிறு வயதிலேயே, அதுவும் குறுகிய காலத்திலேயே பல மேடு பள்ளங்களைக் கண்டு அடங்கிப் போய் விட்டது. இப்படித்தான் பலரது வாழ்க்கையும் ஆடி அடங்குகிறது.
இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். (திருக்குர்ஆன் 3:140)
நிச்சயமாக கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. (திருக்குர்ஆன் 94:5-6)
சுகமும், துக்கமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்துதான் வருகின்றன, அவை அவனது நாட்டப்படியே நடக்கின்றன என்ற உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு வரும் அனைத்து இன்னல்களையும், நோய்களையும் சகித்துக்கொள்வார்கள். அந்தப் பக்குவம் அவர்களுக்கு வந்து விடும்.
ஆனால் நம்மில் பலரும் வாழ்க்கை என்றால் வாழ்வதற்கே, எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும், ஆதலால் அனுபவிக்க வேண்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது இறைவன் மனிதனைப் படைத்த தத்துவத்திற்கே எதிரானது.
அதே சமயம் நம்மில் சிலருக்கு ஏதாவது துக்கம் ஏற்பட்டு விட்டாலோ அதிலேயே மூழ்கி தங்களை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குச் செல்கிறார்கள். இதுவும் கூடாது.
இரண்டையும் எதிர்பார்த்து இருக்க வேண்டும். கஷ்டத்திலும், கவலையிலும் இறைவனை நினைவு கூர வேண்டும். மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும் இறைவனை நினைவு கூர வேண்டும். அதே வேளையில் கவலையை விட்டும், துக்கத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு அடிக்கடி துஆ கேட்பார்கள்:
“இறைவா!
துக்கத்திலிருந்தும்,
கவலையிலிருந்தும்,
இயலாமையிலிருந்தும்,
சோம்பலிலிருந்தும்,
கஞ்சத்தனத்திலிருந்தும்,
கோழைத்தனத்திலிருந்தும்,
கடன் சுமையிலிருந்தும்,
பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும்,
நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.”( புகாரீ 2893)
MSAH
source: http://www.thoothuonline.com/archives/52009