இஸ்லாமும் தமிழும்: நிறைவான கொடுக்கல் வாங்கல்
நாகூர் ரூமி
இந்த கட்டுரை தி இந்து தமிழ் இதழின் சித்திரைச் சிறப்பிதழில் (ஜய வருட மலர் 2014) வெளியாகியுள்ளது. கட்டுரையின் நீளம் கருதி (என்று நினைக்கிறேன்). சில மாற்றங்கள் / நீக்கங்களுடன். இங்கே!
இஸ்லாம் என்பது கிபி ஏழாம் நூற்றாண்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல. அது ஒரு மார்க்கம், வாழ்முறை.
அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிமுகப்படுத்தவில்லை. உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதாம் ஒரு முஸ்லிமாகவே தோற்றுவிக்கப்பட்டார். எனவே உலகில் தோன்றிய முதல் மார்க்கம் இஸ்லாம்.
இறுதித்தூதரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அது பரிபூரணப்படுத்தப்பட்டது. இது இஸ்லாத்தின் பார்வை.
இந்தப் பார்வைக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலேயே ஆதாரக் குறிப்புகளைக் காணமுடியும். உதாரணமாக ’அல்லாஹ்’ என்ற சொல். முஸ்லிம்களுக்கான இறைவன் மட்டுமல்ல அல்லாஹ். அல்லாஹ் என்பது அரபி மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல். அதனால்தான் முஹம்மது நபியின் தந்தையாருக்கு ’அப்துல்லாஹ்’ (அல்லாஹ்வின் அடிமை) என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?
இருக்கிறது. தமிழ் தொன்மையான மொழி, அதன் இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது என்றெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் இருபது ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு ஒருவர் ஒரு புரட்சிகரமான கருத்தை முன்வைக்கிறார். தமிழ் தொன்மையான மொழி மட்டுமல்ல, அதுதான் உலகத் தாய்மொழி என்கிறார். அதுமட்டுமல்ல. முதல் மனிதர் ஆதாம் பேசிய மொழி தமிழ்தான் என்று அவரது 700 பக்க நூலில் விரிவாக சான்றுகளை வைக்கிறார். ’சொற்பிறப்பியல்’ என்ற நூல் இப்படிக் கூறுகிறது.
ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக இதை நாம் அலட்சியப்படுத்த முடியாது. அக்கருத்து தவறு என்று நாம் சொல்வதாக இருந்தால் குறைந்தது 21 ஆண்டுகளாகவது அதே திசையில் ஆராய்ச்சி செய்துவிட்டு முடிவுகளை முன்வைக்கவேண்டும். அதுதானே நியாயம்?
இஸ்லாத்தின் பார்வையில் முதலில் தோன்றிய மார்க்கம் இஸ்லாம். ஓர் ஆராய்ச்சியின் பார்வையில் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ். இந்தக் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட வரலாற்றின் கதியில் நமக்குப் புலப்படாத ஏதோ ஒரு புள்ளியில் இஸ்லாமும் தமிழும் இணைவதை நாம் இங்கே பார்க்க முடிகிறது. அந்த இணைப்பு இன்றுவரை பல பரிமாணங்களில் தொடர்ந்துகொண்டிருப்பது கண்கூடு.
மொழி என்பது சொற்களின் கூட்டுத்தொகை அல்ல. அதன் பின்னால் இருக்கும் சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு, சமுதாயம் எல்லாமே அந்த மொழிதான். அதேபோல ஒரு மதம் அல்லது மார்க்கம் என்பதும் குறிப்பிட்ட கோட்பாடுகள், நம்பிக்கைகளின் மொத்த உருவம் அல்ல. அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களுக்கு ஒரு மொழியும், ஒரு பண்பாடும், அவர்களுக்கான பிரச்சனைகளும் இருக்கின்றன.
எல்லாமாகச் சேர்ந்ததுதான் அந்த மார்க்கம். ஒரு ஹிந்து திருமணம் என்றால் தாலி கட்டுவதிலிருந்து அதைப் பிரிக்கமுடியாது. ஒரு முஸ்லிம் திருமணம் என்றால் மாப்பிள்ளை பெண்ணுக்கு ’மஹர்’ கொடுப்பதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. பிரியாணி சாப்பிடுவது வேண்டுமானால் இரண்டு பேருக்கும் பொதுவாக இருக்கலாம். ஆனால் மேலே சொன்னது போன்ற பிரத்தியேகமான விஷயங்களை பொதுவில் வைக்கவே முடியாது.
மதம் சார்ந்த கலாச்சாரமும், வாழ்முறையும், அந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளும், உணர்ச்சிகளும் அந்த மதம் சார்ந்தவர் பேசும் மொழியில் பிரதிபலிக்கும். அது மொழியை, இலக்கியத்தை வலுப்படுத்தும், அதற்கு அழகு சேர்க்கும். இது தவிர்க்க முடியாததும்கூட. தமிழுக்கும் அதுதான் நடந்துள்ளது. சமயமும் இலக்கியமும் பிரிக்க முடியாததாகவே இருந்துள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் காண முடிகிற பொதுத்தன்மையாகும்.
மத உணர்வும், மொழி உணர்வும் பிரிக்க முடியாதபடி இயற்கையாகவே கலந்திருக்கிறது. அதனால்தான் முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் எங்கு சென்றாலும் திருக்குறளையும் கனியன் பூங்குன்றனாரையும் பற்றி மேற்கத்திய உலகுக்கு மேற்கோள் காட்டுகிறார். அதனால்தான் புகழின் உச்சியிலும் ஏ ஆர் ரஹ்மான், ’எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்று ஆஸ்கார் விருது வாங்கிய மேடையில் ’அல்ஹம்துலில்லாஹ்’ என்ற அரபி வாக்கியத்தின் தமிழாக்கத்தைச் கூறினார்.
இலக்கியம் படைக்கும் திறன் கொண்டவர்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களாக இருந்தபோதும் இதுதான் நடந்தது. நடக்கிறது. தமிழிலக்கியம் தொப்பி போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தது. அழகான தாடியும் வைத்துக்கொண்டது! அது தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தை, புதிய அழகைக் கொடுத்தது. தமிழ் புதிய கோணத்தில் செழித்தது. தமிழுக்கு இஸ்லாத்தின் கொடை அது. பகரமாக அரேபியாவிலிருந்து வந்த இஸ்லாம் தமிழ் பேசியது.
தமிழில் இஸ்லாமிய இலக்கியம் வளர்த்தது. எப்படியெல்லாம் அது நடந்தது என்று காலக்கிரம வரிசைப்படி பார்ப்பதோ, பங்களிப்புச் செய்த அனவரையும் பற்றிப் பேசுவதோ சாத்தியமில்லை. நிலவைச் சுட்டும் விரல் போல, ஊர் காட்டும் ஒரு பலகைபோல இருப்பது மட்டுமே இங்கே சாத்தியம். ஒரு சில முக்கிய உதாரணங்கள் மூலம்.
முஸ்லிம்கள் தூய தமிழ் பேசுபவர்களாகவும் அரபி, உர்து, பாரசீகம் ஆகிய மொழிகள் கலந்த தமிழ் பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். உதாரணமாக கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் பேசும் தமிழில் இந்த இரண்டையும் காணலாம். புலவர் ஆபிதீனின் ’நாகூர்த் தமிழ்’ என்ற பாடல் அப்படித்தான் கூறுகிறது:
‘பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழிக் குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே.
1966 வரை வாழ்ந்த புலவர் ஆபிதீன் காலத்து தமிழ் மட்டுமல்ல இது. இன்றும்கூட நாகூர், நாகை, காரைக்கால் பக்கம் வாழும் தமிழ் முஸ்லிம்கள் சோறு, நீ(ர்)ச்சோறு, ஆணம் ஆகிய தூய தமிழ்ச்சொற்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
நமக்குத் தெரிந்த சில சொற்கள் நமக்குத் தெரியாத பல பரிமாணங்களை எடுக்கவல்லவை. இதுவும் சமயத்தின் கொடை என்றுதான் சொல்லவேண்டும். ’செப்புத் தூக்கி’ – இது ஒரு சிறுகதையின் பெயர். எழுதியவர் பேரா. நத்தர்சா. ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவர் உடலை அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது எல்லோருக்கும் முன்னால் ஒரு பெரிய மூடப்பட்ட வட்டத்தட்டில் சில உணவுப்பண்டங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.
இறுதிச்சடங்குகள், பிரார்த்தனைகள் முடிந்தபிறகு ஏழைகளுக்குக் கொடுக்க அப்பண்டங்கள். அந்த வட்டத் தட்டுதான் செப்பு. அதைத் தூக்கிச் செல்லும் ஒரு பெயரற்ற அனாதை கதாபாத்திரம்தான் செப்புத்தூக்கி. கதையில் அந்த செப்புத்தூக்கி இறந்துவிடுகிறார். அவருக்காக செப்புத்தூக்குவது யார்? இதைப் பற்றியதுதான் கதை. ‘செப்பு’ என்ற சொல் தமிழ்ச்சொல்லாக இருந்தாலும் ’செப்புத் தூக்கி’ என்பது இஸ்லாமியப் பண்பாட்டின் கூறொன்றைக் குறிக்கும் சொல்லாக மாறிவிடுகிறது.
வட்டார வழக்கு என்று ஒன்றிருக்கிறது. ஒவ்வொரு மொழியும் பல வட்டார வழக்குகளைக் கொண்டிருக்கிறது. ‘படிய உளுந்துடுவான்’ என்று நாகூர், நாகப்பட்டினம், காரைக்கால் பக்கம் சொல்வார்கள். சிறுவர்களை பெரியவர்கள் திட்டும் முறை அது. அதற்கு என்ன பொருள் என்று அப்பெரியவர்களுக்கும் தெரியாது! ‘தடவிக்கிட்டிருந்தேன்’ என்ற சொல்லுக்கு வட ஆற்காடு மாவட்டம் பக்கம் ‘தேடிக்கொண்டிருந்தேன்’ என்று பொருள். ‘ரெண்டு மணி நேரமா நாய்க்குட்டியைத் தடவிக்கிட்டிருந்தேன்’ என்று சொன்னாலும் அதே அர்த்தம்தான்! (இங்கே ஒரு அருமையான மாற்றத்தை தி இந்து செய்திருக்கிறது! நான் ‘நாய்க்குட்டியை’ என்று எழுதவில்லை, ‘வேலைக்காரியை’ என்று எழுதியிருந்தேன்)!
இவ்வித வட்டார வழக்குகள் இலக்கியத்தில் வருவது இலக்கியத்தின் அந்தஸ்தைக் குறைக்கும் என்பது தவறான கருத்து. உலகெங்கிலும் வட்டார வழக்கில் எழுதுபவர்களும் பேசுபவர்களும் கொண்டாடப்படுகிறார்கள். குறிப்பாக அமெரிக்க ஆங்கில இலக்கியம் படைப்பவர்கள். மார்க் ட்வைனில் தொடங்கி கவிஞர் மாயா ஆஞ்சலூ, நாடக ஆசிரியர் லாங்ஸ்டன் ஹ்யூஸ் போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் தமிழில் எழுதுபவர்களுக்கு ஏன் அந்த மரியாதையை நாம் கொடுக்கத் தவறுகிறோம்?
வயதுக்கு வந்த இரண்டு மகள்களைத் திருமணம் செய்துகொடுக்க முடியாமல் வீட்டிலேயே வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் காய்கறி வியாபாரி ஹஜ்ஜுக்குப் போக விரும்புகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரின் விருப்பத்துக்கும் மாறாக. மகள்களின் திருமணம் பற்றிக் கேட்கும் மனைவியிடம், வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகை முடிந்துவருபவர்களிடம் யாசகம் கேட்டுச் செய்வேன் என்று கூறுகிறார் கணவர். மிகையான சமய உணர்வு எப்படி உடனடிக் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறது என்பதைச் சொல்லும் அழகான கதை களந்தை பீர்முகம்மது எழுதிய ’யாசகம்’.
“வெள்ளிக்கிழமை ஜும்மாவுல ஒவ்வொரு பள்ளிவாசலா யாசகம் கேட்பேன். ஒவ்வொரு நல்லடியார்கிட்டேயும் கேப்பேன். வீட்டுல ரெண்டு குமருங்க கரையேத்தனும் பாவா” என்று கேட்பேன் என்று சொல்வதாகக் கதை முடிகிறது. இதில் வரும் ’குமர்’, ’பாவா’, ‘ஜும்மா’ போன்ற சொற்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டும் புழக்கத்தில் இருக்கும் அரபி கலந்த தமிழ்ச்சொற்கள். ’குமர்’ என்பது திருமணமாகாத வயதுக்கு வந்த இளம் பெண்ணையும், ’பாவா’ என்பது உதவி செய்யும் பெரியவர்களையும் குறிக்கும் சொற்களாகும்.
’சஜ்தா’ என்ற ஃபிர்தௌஸ் ராஜகுமாரனின் சிறுகதை இப்படித் தொடங்குகிறது: “பள்ளியில் மறுபடியும் ஒரு பித்னா இன்னிக்கு எங்க செட்டியார் சின்னாப்பாவால் உண்டாச்சு”.
சஜ்தா (தொழுகையில் தலையை தரையைத் தொடும்படி வைத்து வணங்குதல்), பித்னா (குழப்பம்), சின்னாப்பா (சித்தப்பா), பள்ளி(வாசல்) ஆகிய சொற்களைக் கவனிக்கும்போது ஒரு உண்மை புரியும். சித்தப்பா, பள்ளிவாசல் போன்ற தமிழ்ச்சொற்கள் புதிய வடிவம் பெறுகின்றன.
“நானும் நேத்திகடன் பாத்தியாவா இருக்கேன். அவன அல்லாதான் கண் பாக்கணும். நம்ம கையில என்ன இருக்கு! எப்பவும் பாரு இவன நினப்பாதான் இருக்கு! கபுருல கொண்டு போயி கட்டை வச்சாகூட தறிக்காது போலிருக்கு” என்று எழுதுகிறார் சீர்காழி தாஜ் தன் ’பெருநாள் காலை’ என்ற கதையில்.
’நேத்திகடன்’ (நேர்ச்சை), ’பாத்தியா’ (அரபியில் சொல்லப்படும் பிரார்த்தனை) ’கபுரு’ (மண்ணறை). இவற்றில் ’பாத்தியா’ என்பதும் ’கப்ரு’ என்பது அன்றாடம் தமிழ் முஸ்லிம்கள் பயன்படுத்துகின்ற அரபிச் சொற்கள். ஆனால் அவை அரபிச் சொற்கள் என்ற தகவல்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அந்த அளவுக்கு அச்சொற்கள் அவர்கள் உணர்வோடும், உயிரோடும் கலந்துவிட்டன. அவர்களுக்கு மொழி முக்கியமில்லை. ஒரேயொரு சொல் போதும். அது ஒரு காவியமே பாடிவிடும்.
”ம்மா ஒத்தத் துப்பட்டியுடன் ஓடி சந்துவீட்டில் புகுந்துகொண்டார்கள்ஸ.அந்த ஹயாத்தலிவானெ நாலு தட்டு தட்டிட்டு வந்தாத்தான் நீ ஆம்புளை” – ஆபிதீனின் ’குழந்தை’ என்ற சிறுகதையில் வரும் சொற்கள் இவை.
’துப்பட்டி’ என்பது நாகூர், நாகை, காரைக்கால், மாயவரம், திருமுல்லைவாசல் பக்க முஸ்லிம் பெண்கள் அணியும் வெள்ளை நிற, தையலில்லாத 12 முழ புர்கா மாதிரியான காட்டன் மேலாடை. ’ஒத்தத் துப்பட்டி’ என்பது மேலாடையை மட்டும் குறிக்கவில்லை. அதைத்தாண்டி, ஒரு பெண் இன்னொரு பெண்ணின் துணையில்லாமல் வெளியில் செல்வதையும், அப்படிச் செல்பவர் மீதான சமூக விமர்சனத்தையும் ஏளனப் பார்வையையும் குறிக்கிறது. ’ஹயாத் அலிவான்’ என்றால் ஆயுள் அழிவான் என்ற சாபம். வாழ்முறை சார்ந்து சொற்கள் இங்கே அர்த்த விரிவு பெறுகின்றன.
அடிப்படையான உறவுமுறைப் பெயர்கள்கூட புதிய வடிவம் பெற்று பொலிவுடன் உலாவருகின்றன தமிழ் முஸ்லிம் உலகில். ம்மா (அம்மா), வாப்பா (அப்பா), லாத்தா (அக்கா), காக்கா, நானா (அண்ணன்) என. தமிழல்லாத அரபி, உர்து, பாரசீகச் சொற்கள் தமிழோடு கலந்து உருமாற்றம் அடைகின்றன.
மஹாவித்வான் குலாம் காதிர் நாவலரின் (1833-1908) படைப்புகளை அரசு நாட்டுடமையாக்கியுள்ளது. அவர் நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரையில் அமைத்தவர். அவர் எழுதிய 11 உரைநடைப் படைப்புகளில் எட்டும், 14 கவிதைப் படைப்புகளில் பத்தும் சமயம் சார்ந்தவை. நாகூர் ஆண்டகை மற்றும் இஸ்லாமிய மகான்கள், அவர்களது ஊர்களின் சிறப்பு பற்றியவை. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர் மூன்று காப்பியங்கள் படைத்தவர். அவை மூன்றுமே இஸ்லாமிய மகான்களைப் பற்றியவை.
ஆனால் முஸ்லிம்கள் படைக்கும் எல்லா இலக்கிய வகைகளுமே சமயம் சார்ந்தவையாக இருக்கும் என்று சொல்லமுடியாது. சமயம் சாராத, சமயம் தாண்டிய பொதுவான விஷயங்களும் அவர்களால் முழுவீச்சில் எழுதப்படுகின்றன.
நாடு மறக்கக்கூடாத ஒரு தமிழறிஞரைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர்தான் நூறு காரியங்களை ஒரே நேரத்தில் செய்து சரித்திரம் படைத்த அசாதாரண ஆளுமையான சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர். அவருடைய சதாவதானம் எவ்வளவு வியப்புக்குரியதோ அதே அளவு வியப்புக்குரியதுதான் அவரது தமிழறிவும் புலமையும். மத்திய அரசு அவரது உருவம் பொதித்த தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவித்தது.
தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடமையாக்கி கௌரவித்தது. தமிழர்களாகிய நாம் அவரைப் பற்றி இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அவரது புகழையும் பரப்புதல் வேண்டும். வள்ளலாரின் பாடல்களை மருட்பா அல்ல, அருட்பாதான் என்று வாதிட்டு வென்ற மேதை அவர்.
சித்தி ஜுனைதா பேகம். முதன் முதலில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி அவர்தான். (நான் தமிழின் முதல் நாவலைச் சொல்லவில்லை). உவேசா முன்னுரையுடன் 1938ம் ஆண்டு வெளிவந்த ’காதலா கடமையா’ என்ற அந்த நாவல் முழுக்க முழுக்க தமிழ்ப் பெயர்களையும், தமிழ்ச் சூழலையும், தமிழ் இளவரசனின் காதலையும் சமூகக்கடமையையும் கதைக்களமாகக் கொண்ட கலப்படமற்ற தூய தமிழில் எழுதப்பட்ட புதினம். எம்ஜியாரின் ’நாடோடி மன்னன்’ திரைப்படக் கதைக்கு அது வித்தாக இருந்தது என்பது சுவாரஸ்யமான வரலாறு. சித்தி ஜுனைதா பேகம் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பனின் பெருமைகளை தமிழ்நாடு பரவலாக அறிந்த கொள்ள வழிவகுத்தவர் ஒரு முஸ்லிம் அறிஞர். அவர் வேறு யாருமல்ல. மறைந்த சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த மு மு இஸ்மாயீல்தான். கம்பனைப் பற்றிய அவரது சொற்பொழிவுகளும் நூல்களும் காலம் கடந்து வாழ்பவை. கம்பராமாயணத்தை முதன் முதலில் மெல்லிய உறுதியான தாளில் ஒரே நூலாக வெளியிட்டவரும் அவரே.
இயக்குனராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஏ கே வேலன் ஒரு கவிஞரைக் கூப்பிட்டு ஒரு சூழலைச் சொல்லி பாடல் எழுதிக்கேட்கிறார். காவிரியில் குளிக்கும் இரண்டு பெண்கள் புரண்டு வரும் நீரைப்பற்றிப் பாடுகின்றனர். கம்பனின் ஈரடிகளைச் சொல்லி அதைப்போல இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார். கவிஞர் உடனே, ஆமாம், உடனே எழுதிக்கொடுக்கிறார் இந்த வரிகளை:
பெண் 1: வெண் முத்து மாலைகள் வெள்ளி நுரையினில் சூடி வருகின்றாள்
இவள் வேண்டிய பேருக்கு வாரிக்கொடுத்திட ஓடி வருகின்றாள்
பெண் 2; கண்ணியர் கண்ணென மாவடுப் பிஞ்சுகள் நீரில் மிதக்குதடி
அது கண்ணல்ல, பிஞ்சல்ல, கெண்டைகள் அம்மாடி, கும்மியடிங்கடி
இப்படி எழுதிக்கொடுத்தவர் கலைமாமணி கவிஞர் சலீம்.
அதுமட்டுமா? “காய்ந்து சிவந்தது சூரிய காந்தி” என்று தொடங்கி “எங்கள் வீட்டுப் பிள்ளை / ஏழைகளின் தோழன் / தங்க குணமுள்ள கலை மன்னன் / மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன்” என்ற பாடல், “சிரித்துச் செழித்த உன் முகமெங்கே / சிந்திய செந்தமிழ் மொழி எங்கே / சிரித்தது போதுமென்று நிறுத்திக்கொண்டாயோ / சிந்திக்கும் இடம் தேடித் தனித்துச் சென்றாயோ” என்று அறிஞர் அண்ணாவின் இறப்பு பற்றியும் நிறைய கட்சிப் பாடல்களை எழுதியவரும் இவரே.
1964-ல் ஆனந்த விகடனில் தூயவன் ’பூஜைக்கு வந்த மலர்’ என்ற தலைப்பில் ஒரு முத்திரைக்கதை எழுதினார். அதில் சாரு என்பவளை கிருஷ்ணன் நம்பூதிரி என்ற செண்டைக்கலைஞன் காதலிக்கிறான். ஆனால் சாரு ஒரு நடனக்கலைஞி என்பது அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் அதை அவன் தெரிந்துகொள்கிறான். அவன் செண்டை வாசிக்க அவள் ஆடுகிறாள். அந்த நிகழ்ச்சியை தூயவன் இப்படி வர்ணிக்கிறார்:
”அர்த்தபதாக, காத்தரீமுக முத்திரைகளை வலது இடது கைகளால் அலட்சியமாகப் பிடித்து ஒன்றையொன்று நீட்டிய விரல்களால் தொட்டுத் தொட்டு, மேலும் கீழுமாய்க் கொண்டு போய் தைஸதை என்று விளம்பத்திலும், திமிதைஸதிமிதை.. என்று திருதத்திலும் பிடித்து, மண்டியிட்ட கால்களுடன் வலக்கையை அலபத்ம முத்திரையாய் மார்பிலிருந்து முன்னே கொடுத்து, பின் வாங்கி த்ரிபதாக முத்திரையுடன் தை.. தை.. என்று அழகாகப் பின்னடி போட்டுப் போய், அஞ்சலி ஹஸ்தங்களைச் செய்து, அடி அட்டிமை போட்டு அந்தக் கஷ்டமான அலாரிப்பைச் சற்றும் சிரமமின்றி அவள் செய்து முடித்தபோது, பார்த்தவர் முகத்தில் ஒரு மிரட்சி விரவியது. இத்தனை பெரிய கலைச் செல்வியா சாரு? இப்படியொரு தெய்வீகக் கலையம்சமா அவளிடம் தேங்கி நிற்கிறது?”
கேரளப் பின்புலத்தில் நடக்கிறது இந்தக்கதை. ஒரு செண்டை மற்றும் நடனக்கலைஞரே சிறுகதை எழுதியதைப் போல இவ்வளவு விலாவாரியாக எழுதியிருக்கும் தூயவன் ஒரு தமிழ் முஸ்லிம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
நான் குறிப்பிட்ட,
மஹாவித்வான் குலாம் காதிர் நாவலர்,
வண்ணக்களஞ்சியப் புலவர்,
புலவர் ஆபிதீன்,
நீதிபதி மு மு இஸ்மாயீல்,
சித்தி ஜுனைதா பேகம்,
கவிஞர் கலைமாமணி சலீம்,
தூயவன்,
ஆபிதீன் ஆகிய அத்தனை பேரும் நாகூர்க்காரர்கள் என்பது ஆச்சரியமான உண்மை.
இக்கட்டுரையில் நான் உமருப் புலவர் போன்ற வெகுவாகவும், பரவலாகவும் அறியப்பட மகா ஆளுமைகளைப் பற்றி வேண்டுமென்றே பேசவில்லை. தமிழால் இஸ்லாம் செழித்திருக்கிறது. இஸ்லாத்தின் மூலம் தமிழ் வளர்ந்திருக்கிறது. இன்பத் தமிழ் எங்கள் மொழியாகும், இஸ்லாம் எங்களின் வழியாகும் என்ற பாடல்தான் எவ்வளவு உண்மையானது!
source: https://nagoorumi.wordpress.com/