முஸ்லிம்களை ஒன்றிணைக்குமா திடல் தொழுகை?
கீழை ஜஹாங்கீர் அரூஸி
திடல் போன்ற வெளி மைதானத்தில் நடைபெறுவதுதான் சுன்னத் என்னும் நபிவழியாகும்.
தமிழகத்தில் பள்ளிவாசல்கள், மஹல்லாக்கள் அதிகமுள்ள கீழக்கரை, காயல்பட்டிணம், அதிராம்பட்டிணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பெருநாள் தொழுகை பெரும்பாலும் அந்தந்த மஹல்லா பள்ளிகளிலேயே நடைபெற்று வந்தன. இன்றும் கூட அவ்வாறு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு பள்ளிகளில் நடைபெறும் தொழுகை இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்படாது என்றோ, பள்ளிகளில் பெருநாள் தொழுகை நடத்தப்படுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது என்றோ எந்த நபிமொழியிலும் காணப்படவில்லை.
நபிகளாரின் காலத்தில் பெருநாள் அன்று திறந்தவெளி என்னும் திடலில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டுள்ளதாக பல்வேறு ஹதீஸ்கள் நமக்கு உணர்த்தியுள்ளதால், நாமும் திடலில் தொழுவதுதான் சிறப்பு என்ற உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
குலப்பெருமை கோலோச்சிய அன்றைய காலத்தில் பள்ளிக்குள்ளேயே தொழுகை நடத்தி இருந்தால், குரைஷி என்னும் உயர் வகுப்பினர் உள் பள்ளிக்குள்ளும், மற்றவர்கள் பள்ளிக்கு வெளியேயும் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு அதன் மூலம் மக்களிடம் ஏற்றத்தாழ்வு உருவாகி விடக்கூடாது என்பதற்காக, அனைவருமே ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தொழுகவேண்டுமென்ற ஓர்மையை திடல் தொழுகை மூலம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்று தந்தார்கள்.
ஒரே இடத்தில் கூடி தொழுகும் மக்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் சகோதரத்துவமும் நிலை நிறுத்தப்பட்டது.
சமீப காலமாக பல்வேறு ஊர்களில் திடல் தொழுகை வேண்டுமென்ற விருப்பத்தில் இயக்க ரீதியாக ஒரு சில அமைப்புகள் திடலில்லாத ஊர்களில் திடல் தொழுகையை உருவாக்கினார்கள். மஹல்லா ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறார்கள் என்றெல்லாம் கூட ஆரம்பத்தில் அதை எதிர்த்தவர்களும் உண்டு.
கீழக்கரை, காயல்பட்டிணம், அதிராம்பட்டிணம் போன்ற சில ஊர்களில் ஒரு பக்கம் திடலும் மறுபக்கம் மஹல்லா பள்ளிகளுமாய் பெருநாள் தொழுகையும் அதன் வெளிப்பாடான சகோதரத்துவமும் பிரித்தாளப்பட்டது.
ஒரு திடலை ஆரம்பித்தவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட இயக்க ரீதியிலான பிளவுகளால் திடலிலும் பிளவு ஏற்பட்டு திடலின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துவிட்டது.
ஒரே ஊரில் 8 திடலை எங்காவது நாம் கண்டதுண்டா? ஆம் இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பழம்பெருமையான ஒரு ஊரில் தற்போது இயக்கங்களின் பெயரில் நான்கு திடலும், மஹல்லா ஜமாத்தின் சார்பில் நான்கு திடலுமாய் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
சகோதரத்துவத்தை நிலை நிறுத்தும் அடையாளமான திடலின் பெயரால் பல்வேறு பிரிவினைகளை உண்டாக்கி, நபிகளார் வழிகாட்டிய ஒற்றுமைக்கு வேட்டு வைத்தவர்கள் சிந்திக்காதவரை தற்போதைய திடல் தொழுகை என்ற வார்த்தை கேலிக்குரியதாகவே மற்றவர்களால் பார்க்கப்படும்.
ஒரு ஊருக்கு ஒரு திடல் என்ற ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் அவசியத்தை புரிந்து கொள்ள கூடிய சூழலில் நாம் இருப்பதால், அதற்கான ஆயத்தப்பணிகளை ஒவ்வொரு ஊரிலும் சமுதாய இயக்கங்களின் ஒற்றுமையுடன்,மஹல்லா ஜமாத் முன்னெடுத்து செய்ய வேண்டுமென்பதே சமுதாய நலன் விரும்பிகளின் கவலை!