{jcomments on}
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (12)
என் கணவர் ஸலவாத் ஓதுவதில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்கள். ஸலவாத் பற்றிய நூல்கள் பலவற்றை வாங்கி பிள்ளகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்து ஸலவாத் ஓதுவதை மிகவும் ஊக்குவிப்பவர்களாக இருந்தார்கள்.
புதிகாக சீவப்பட்ட தென்னங்குச்சிகளை தீப்பெட்டி குச்சிகளைவிட சற்று நீளமான அளவில் ஒரு கோப்பை முழுக்க வைத்திருப்பார்கள். ஆயிரம் ஓதியதும் ஒரு குச்சியை வேறு கோப்பையில் போடுவார்கள்.
இதுபோன்று ஓதி ஓதி கோப்பை நிறைந்ததும் திரும்பவும் ஓதுவார்கள். லட்சக்கணக்கில் ஓதினார்களா, கோடிக்கணக்கில் ஓதினார்களா என்பது அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்.
பிள்ளைகள் அனைவரும் குல்ஹுவல்லாஹு சூராவை அதிகமதிகம் ஓத ஊக்குவிப்பார்கள். வாகனத்தில் செல்லும்போது ஓதுவது எளிது என்பார்கள். அதனால் பிள்ளைகள் மாயூரத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்க மாட்டுவண்டியில் செல்லும்போது 200 முறை குல்ஹுவல்லாஹு சூராவை எளிதாக ஓதிவிடும்.
இப்பொழுதும் வெளியில் செல்லும்போதெல்லாம் ஓதிக்கொண்டே செல்லும் பழக்கம் என் பிள்ளைகளுக்கு உண்டு. இதனால் எவ்வளவு தூரம் சென்றாலும் களைப்பே தெரியாது. எல்லாம் என் கணவரின் வழிகாட்டுதல் தான். அல்ஹம்துலில்லாஹ்.
நூல் படிக்கும் பழக்கம் :
அப்பொழுது வெளியான இஸ்லாமிய மாத இதழ்களான பிறை, முஸ்லிம் முரசு, குர்ஆனின் குரல், ரஹ்மத், ஜமாஅத்துல் உலமா, மதினா, சிராஜ், நர்கிஸ், அல்-இஸ்லாம், அல்ஹிதாயா,ஃபத்ஹுல் இஸ்லாம், ஜன்னத் மற்றும் மறுமலர்ச்சி, அறமுரசு போன்ற அத்தனையும் வீட்டுக்கு வந்துவிடும். எனது பிள்ளைகள் அதனை படித்துவிட்டு, ரஹ்மத், குர்ஆனின் குரல் போன்றவற்றின் ஒருவருடத்திற்கானதை பைண்ட் செய்து பீரோவில் அடுக்கி வைத்திருப்பார்கள். மதரஸா மாணவர்கள் ஆர்வமாக அதனை வாங்கிச்சென்று படித்ததும் உண்டு. புதிகாக வெளியாகும் மார்க்க நூல்கள் எங்கள் வீட்டிற்கு வராமல் இருக்காது. இப்போதும் எங்கள் வீட்டில் உள்ள இஸ்லாமிய மார்க்க நூல்களைக்கொண்டு ஒரு நூலகமே திறக்கலாம்.
அதுபோன்று எனக்காக வியட்நாமிலிருந்து வியட்நாமிய இதழ்களையும் வரவழைத்துக் கொடுப்பார்கள். வியட்நாம் மொழியை மறக்கக்கூடாது என்று பிள்ளைகளிடம் வீட்டில் அம்மா, அத்தாவிடம் வியட்நாம் மொழியிலேயே பேசச்சொல்வார்கள். அதே சமயம் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதற்காக தினசரி பத்திரிகைகளையும் வாங்குவார்கள். பெண் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமாக எங்கள் தெருவில் வசித்த மெஹர் வாத்தியாரம்மா-வை வீட்டிற்கு வரவழைத்து தமிழ் மொழியையும், அரபுத் தமிழையும் கற்றுக்கொள்ளச் செய்தார்கள்.
அதனால் என் பிள்ளைகள் அத்தனைப் பேருக்கும் வியட்நாம் மொழி நன்றாகப் பெசத்தெரியும், மூத்த பிள்ளைகள் வியட்நாமில் கவிதை எழுதக்கூடிய அளவுக்கும், அதையே தமிழில் மொழிபெயர்க்கத் தெரிந்தவர்களாகவும் உயர்ந்தார்கள்.
என் கணவர் மறைந்த மறுவருடம், 1971. என் மகன் முஹம்மது அலீ திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் P.U.C. புதுமுக வகுப்பு படித்தார். 1972 ஆம் வருடம் சென்னை புதுக்கல்லூரியில் B.A. படிக்க ஆரம்பித்தார். அதே வருடம் இளைய மகன் ஸலாஹுத்தீன் அதே கல்லூரியில் P.U.C. படித்தார். அதே கல்லூரியில் P.U.C. படித்த டாக்டர் ஹாரூன் ஸலாஹுத்தீனுக்கு நண்பராக இருந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த காரணத்தால் முஹம்மது அலீ-யும் ஹாரூனும் அறிமுகமானவர்களாக இருந்தனர். அலீ, ஸலாஹுத்தீன் இருவருக்கும் ஹாரூன் நல்ல நண்பராகத் திகழ்ந்தார்.
முஹம்மது அலீ B.A. படித்து முடித்த பின் கொக்கூரில் (குத்தாலத்திற்கு, தேரிழந்தூருக்கு அருகில் உள்ளது) பெரிய மருமகனுடன் இணைந்து விவசாயம் பார்த்தார். ஸலாஹுத்தீன் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மூலம் B.Com. பயின்றார்.
ஸலாஹுத்தீனுக்கு எங்களூர் மதரஸாவின் தொடர்பு அதிகம். அவர் வீட்டில் தங்குவதை விட மதரஸாவில் தங்குவதுதான் அதிகம். ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களுக்கு சிஷ்யப்பிள்ளை போலவே இருப்பார். B.Com.டிகிரி முடித்தவுடன் மதரஸாவில் ஓத எண்ணியபோது ஹஜ்ரத் அவர்கள், “இது உங்கள் சொந்த ஊர், நீங்கள் உள்ளூர் மதரஸாவில் ஓதினால் உங்களுக்கு சலுகைகள் கிடைக்கும், ஆனால் கல்வி வளராது, அதனால் பெங்களூர் ஸபீலுர்ரஷாத் மதரஸாவில் போய் சேருங்கள், அங்கு அரபியுடன், உருதும், வெளிநாட்டு மாணவர்கள் அங்கு பயில்வதால் ஆங்கிலமும் கற்றுக்கொள்ளலாம்” என்று ஆலோசனை சொன்னார்கள்.
திருக்குர்ஆன் ஓதும்போட்டி விழா
அதன்படி பெங்களூர் ஷபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியில் 4 வருடம் மார்க்கக்கல்வி கற்றார். அந்த காலகட்டத்தில் ஸலாஹுத்தீன் “இஸ்லாமிய கலாச்சார மன்றம்” அமைத்து அதன்மூலமாக ஜின்னாத் தெரு பள்ளிவாசலில் வருடா வருடம் திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடத்தும். இதற்கு ஹாங்காங், சிங்கப்பூரிலிருந்த பல சகோதரர்கள் பொருளாதார உதவியும் செய்தனர்.
பெங்களூர் ஸபீலுர்ரஷாத் மதரஸாவில் ஓதிக்கொண்டிருக்கும்போது ஒரு வருடம் இவ்விழாவிற்கு அம்-மதரஸாவின் நாஜிர், அபுஸ்ஸஊத் ஹஜ்ரத், உதவி நாஜிர் நைய்யர் ரப்பானி ஹஜ்ரத், அஷ்ரஃப் அலீ ஹஜ்ரத், இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஷைஃபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் போன்ற 10 க்கும் மேற்பட்ட ஆலிம்களை அழைத்து வந்து விழாவை சிறப்பாக நடத்தினார். ஹஜ்ரத்மார்கள் அனைவரும் பகலும், இரவும் எங்கள் இல்லத்தில்தான் தங்கினார்கள், உணவருந்தினார்கள். அவர்கள் மிக அமைதியாக ஒவ்வொரு சுன்னத்தையும் பேணி உணவுண்டது மறக்க முடியாதது. என் கணவர் இருக்கும்போது பல பெரும் ஆலிம்கள் வருகைப்புரிந்த இல்லம் இப்பொழுது என் மகனின் மூலமாகவும் தொடர்வது சந்தோஷமே. அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ், ஹஸீனா அம்மா அவர்களின் சரிதை தொடரும்.
இஸ்லாமிய மாத இதழான பிறை மாத இதழின் பன்னூலாசிரியர் மவ்லானா, M.அப்துல் வஹ்ஹாப் M.A.,B.Th. அவர்கள் 1976 ஆம் ஆண்டு திருக்குர்ஆன் போட்டி விழாவில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டார்கள். அப்பொழுது இவ்விழாவைப்பற்றி பிறை இதழில் வெளியான செய்தியே இன்றைய இளம் தலைமுறையினருக்கு நினைவூட்டும் விதமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (adm. nidur.info)