Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

‘அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடும் அன்றா?

Posted on September 10, 2016 by admin

‘அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடும் அன்றா?

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் ‘அரஃபா நோன்பு’ என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.

இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2151)

இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1722)

‘அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா?

உலகம் முழுதும் அனைவரும் ஒரே நாள் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற தேவையற்ற சிந்தனைகளும் அறிவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கும் போக்கும் சமீப காலமாக‌ சிலரிடம் உருவாகி, அதனால் அவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களின் காரணத்தால் எழும் கேள்வியே இது!

நாம் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வின் கட்டளையிலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையிலோ எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் கவனமாக பார்ப்போமானால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய்விடும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்காலமும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்!

எனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:

“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1906)

அதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)

மேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

“நீங்கள் ‘நோன்பு’ என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். ‘நோன்புப் பெருநாள்’ என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாளாகும். ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

துல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 – ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் ‘ஒன்பதாவது நாள்’ என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்” என்று ஹுனைதா இப்னு காலித் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்கள்: அபூதாவூத், நஸாயி, அஹ்மத்)

“துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என்று அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 2151)

அதேசமயம் ‘ஒன்பதாம் நாள்’ என்று குறிப்பிட்டு சொல்லாமல் ‘அரஃபா நாள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்(1977)

துல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு ‘அரஃபா நாள்’ என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அரஃபா நாள்’ என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு ‘அரஃபா நாள்’ என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்? என்பதைதான் நாம் கவனிக்கவேண்டும்.

‘டெலிஃபோன் வசதிகளோ, லைவில் பார்ப்பது போன்ற வசதிகளோ, ஈ-மெயில்/எஸ்.எம்.எஸ் வசதிகளோ இல்லாத காலமாக இருந்ததால் அவர்களால் தகவல் அறிந்துக் கொள்ளமுடியவில்லை’ என்றும், ‘நமக்கு இன்றைய காலகட்டத்தில் உடனுக்குடன் அறியக்கூடிய எல்லா வசதிகளும் இருப்பதால் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளைக் கணக்கிடுவதற்காக நாம் சவூதியின் முதல் பிறையை அறிந்துக் கொண்டு, சவூதியின் 9 வது பிறையில் அரபா நோன்பை நோற்றுக் கொள்ள வேண்டியதுதான்’ என்றும் தங்களின் இஷ்டத்துக்கு மார்க்கத்தில் விளையாடுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை இறையச்சமுள்ள‌ ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்படுவதால் மார்க்கத்தின் சட்டங்கள் கியாம (இறுதி)நாள் வரையிலும் மாறப்போவதில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் விஞ்ஞான வசதிகள் இல்லாவிட்டாலும், மக்காவில் முதல் பிறைக் காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்துவர‌ வசதிகள் இருந்தன. அப்படியிருந்தும் கூட‌ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை. அதாவது அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை/மக்காவில் எப்போது முதல் பிறை என்பதை விசாரித்து வருவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஹாஜிகள் எப்போது அரஃபாவில் தங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான், மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்.

எனவே அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்பது சவூதியில் பிறைப் பார்த்த கணக்குப்படி நமக்கு எட்டாம் நாளாகக்கூட‌ இருக்கலாம். நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை. ‘அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடியதை உறுதி செய்துக்கொண்டு நோன்பு வையுங்கள்’ என்று எங்குமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிடவுமில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆக, மதீனாவில் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரஃபாவில் உள்ள நிலையைப் பின்பற்றத் தேவையில்லை என்று எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ, அவ்வாறுதான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நாம் நம் பகுதியில் பிறைப் பார்த்த கணக்குப்படிதான் ஒன்பதாம் நாளில் அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.

ஆக‌வே, நபிவழியின் அடிப்படையில் இந்த அர‌ஃபா நோன்பை நோற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!

source: https://www.facebook.com/abdul.malik.98284566/posts/1262513597105684

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

39 + = 47

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb