{jcomments on}
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (11)
ஒருநாள் என் மகன் டாக்டர் ஹாரூனை (முன்னால் முஸ்லிம் லீக் MLC வடகரை M.M.பக்கர் அவர்களின் மூத்த மகனார்) சந்தித்து வந்தபின் சந்தோஷமாக, “டாக்டர் ஹாரூன் தன்னை அவரது தம்பியின் கடைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு கிளியனூர் மதரஸாவின் முதல்வரும், ஜமாஅத்துல் உலமா தலைவருமான அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் மிஸ்பாஹி அவர்களை சந்தித்ததாகவும் கூறினார்.
டாக்டர் ஹாரூன் என் மகன் முஹம்மது அலீயை ஹஜ்ரத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். டாக்டர் ஹாரூன் ஹஜ்ரத் அவர்களிடம் அந்த காலத்தில் நீடூரில் அப்துல் வஹ்ஹாப் என்பவரை தெரியுமா?” என்று கேட்டதும் ஹஜ்ரத் மகிழ்ச்சியுடன், “தெரியுமே, மிகச்சிறந்த மனிதர். நீடூர் நெய்வாசல் பெரியபள்ளியில் நான் மக்தப் ஆசிரியராக இருந்தபோது அவரது இரண்டு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்” என்றார்கள்.
அப்போது டாக்டர் ஹாரூன், “அதில் ஒருவர் தான் இவர்” என்று என் மகன் முஹம்மது அலீயை சுட்டிக் காண்பித்ததும் ஹஜ்ரத் அவர்கள் மிகவும் மகிழ்ந்து, “உங்கள் தந்தையை எனக்கு நன்றாகத் தெரியும். நீடூரில் நம்பர் ஒன் நல்ல மனிதராக இருந்தவர்” என்றார்கள். அதைக்கேட்டு டாக்டர் ஹாரூனும், தானும் மிகவும் மகிழ்வுற்றதாக என் மகனும் கூறினார்.
அலீ என்னிடம் இச்செய்தியைக் கூறியதும் எனக்குள் எவ்வளவு மகிழ்ச்சி! என் கணவர் இறந்து எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும், என் கணவர் கண்ணியத்துடன் நினைவு கூறப்படுகிறார்கள். என் கணவரின் நற்பண்புகளும், அவர்களின் நேர்மையான, தூய்மையான வாழ்க்கை நெறிகளும் தான், இன்றும் என் கணவரை பேசப்பட வைக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
அலீ என்னிடம் அத்தாவைப்பற்றி சிலாகித்துக்கூறியது. அத்தா 54 வயதிலேயே மெளத்தாகி விட்டார்கள். அதில் 6 வருடம் உடல்நலம் குன்றி இருந்தார்கள். 40-50 வயதுக்குள் நற்பெயர் எடுத்துவிட்டார்கள் என்று.
நாங்கள் 1955 -ல் இந்தியா வந்தோம். 1970-ல் என் கணவர் மறைந்துவிட்டார். 15 வருடங்களே இந்தியா திரும்பியபின் வாழ்ந்திருக்கிறார்கள். என்னால் என்றும் அவர்களை மறக்க முடியாது. ஈமான் உறுதியுடன் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ வேண்டும். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றலாகிய, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியல் நெறியை பின்பற்றி வாழவேண்டும் என்று எனக்கும், தன் மக்களுக்கும் மார்க்க நெறிகளை போதித்த என் கணவரின் நினைவு என்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்.
பின்னோக்கிச்செல்லும் நினைவுகள்:
என் நினைவுகள் பின்னோக்கிச்செல்கின்றன. நாங்கள் Haiphong ஹைஃபோனில் இருந்தபோது வாழ்ந்த சந்தோஷ வாழ்க்கையின் சில மலரும் நினைவுகள் மனதில் எழுந்தன. 1942-1950 Haiphong ஹைஃபோனில் ஃபாத்திமா, ஆபிதா, ஜமீலா மூவரும் தினமும் ரிக்ஷா வண்டி மூலம் பள்ளிவாசல் சென்று வருவார்கள். பள்ளியில் ஓதிவந்த பிறகுதான் பள்ளிக்கூடம் செல்வார்கள். மூவரும் குர்ஆன் ஓதி முடித்து, மெளலூதும் ஓதினார்கள். ஜமீலா 7 வயதிலேயே குர்ஆன் ஓதி முடித்தது.
ரபீயுல் அவ்வல், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதம். நாங்கள் இருந்த பகுதியில் 12 முஸ்லிம்களின் கடைகள். ஒரு நாளைக்கு ஒரு கடை முதலாளி சீரனி வழங்க வேண்டும். அஸர் நேரம் நெருங்கி விட்டால் 12 கடைகளும் மூடப்பட்டு விடும். எல்லோரும் மெளலூது ஓத பள்ளிவாசல் சென்றுவிடுவார்கள். ஓதி முடித்தபின் மீண்டும் கடையைத் திறப்பார்கள். சிலர் சீரனியாக பிஸ்கட் டின் வாங்கிக் கொடுப்பார்கள். சிலர் கேக், சிலர் ஆரஞ்சுப்பழங்கள் கொடுப்பார்கள். பிஸ்கட் தான் அதிகம் கொடுப்பார்கள்.
மெளலூது ஓதுபவர்களுக்கு இரண்டு பிஸ்கட் பாக்கெட், அதை செவிமடுப்பவர்களுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வழங்கப்படும். ஃபாத்திமா, ஆபிதா, ஜமீலா மூவரும் ஓதப்போவார்கள். 6 பாக்கெட் பிஸ்கட் கிடைக்கும். எங்கள் வீட்டுப் பணிப்பெண் நான்காவது பிள்ளையான ஜுபைதாவையும் தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்வார். அவர்களுக்கும் ஆளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைக்கும். ஆரஞ்சுபழமும்; ஓதுபவருக்கு 2 பழமும், கேட்பவர்களுக்கு ஒரு பழமும் வழங்கப்படும். 12 நாள் மெளலூது முடிவதற்குள் நிறைய பிஸ்கட் பாக்கெட் சேர்ந்துவிடும். பிள்ளைகள் நல்ல முறையில் ஓதி வருவதைப் பார்த்து நானும், என் கணவரும் மகிழ்ச்சியடைவோம்.
நாம் நம் மக்களுக்கு, நம் பிள்ளைச்செல்வங்களுக்கு இஸ்லாத்தின் சீரிய நெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் பொறுப்புதாரியாவார். தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை அவர் செவ்வனே நிறைவேற்ற வேண்டும். பொறுப்புகளையும், கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்வுக்கு நாம் மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும். அல்லாஹ் எனக்கு நோயற்ற வாழ்வைக் கொடுத்து பிள்ளைகளுக்கு இஸ்லாமிய நெறிகளைக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பை நல்க வேண்டும். என் கணவர் எனக்குக் கூறிய அறிவுரைகளை நான் பிள்ளைகளுக்குக் கூற வேண்டும் என்பதே என் அவா.
அலீ, டாக்டர் ஹாரூனை சந்திப்பதற்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். டாக்டர் என் உடல்நலனில் அக்கறைக்கொண்டு நன்முறையில் கவனிக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ், ஹஸீனா அம்மா அவர்களின் சரிதை தொடரும்.
www.nidur.info