{jcomments on}
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (10)
30-12-1970 மாலை பிள்ளைகள் மேல் மாடிக்கு வழக்கம்போல் காற்று வாங்க சென்றுவிட்டார்கள். நானும், என் கணவரும் அறையில் அமர்ந்திருந்தோம். என் கணவர் எனக்கு இறுதி அறிவுறை பகர்ந்தார்கள்.
மருமகன் அஹமதுஷாவிடம் சொல்லி நோன்புக்கு முன்பே சில்லறை மாற்றி, வீட்டிற்கு வரும் முஸாஃபிர்களிடம், வயதானவர்களிடம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு கைலியும், பெண்கள், இளம் சிறார்களுக்கு பணமும் கொடுக்க வேண்டும் என்றார்கள். இதுதான் கடைசி அறிவுரை என்பது எனக்குத் தெரியாது.
“நான் அல்லாஹ்வின்பால் சென்றுவிட்டால் நீ அழக்கூடாது. எனக்கு குர்ஆன். யாஸீன் அதிகம் ஓதி ஹதியா செய்” என்றார்கள். அந்த வார்த்தைகளைக்கேட்ட நான் அதிர்ச்சிக்குள்ளாகி என்னவரின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு “நீங்கள் இல்லாமல் என்னால் உயிர்வாழ்வது முடியாது” என்று அழுதேன்.
என் கணவர் சுவரில் மாட்டியிருந்த காலண்டரைப்பார்த்து, “நமக்குத் திருமணமாகி 28 வருடம் ஆகிவிட்டது. நான் உனக்கும், பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை இறையருளால் ஒழுங்காக நிறைவேற்றி, சந்தோஷமாக வைத்திருந்தேன். எனக்கு உடல்நலம் குன்றியதிலிருந்து இந்த ஆறு வருடமாக நீயும், பிள்ளைகளும் என்னால் கஷ்டப்பட்டீர்கள் என்பதை உணர்கிறேன்” என்றார்கள்.
நான் துடித்துப்போய் உடனே, “நீங்கள் அப்படி எல்லாம் நினைக்காதீர்கள். எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. நீங்கள் என்னுடன் உயிர்வாழ்ந்தால் போதும், அல்லாஹ் இந்த சொத்து சுகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு உங்களை என்னருகே உயிர்வாழவிட்டால் அதுவே எனக்கு போதும்” என்றேன்.
என் கணவர் பதில் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். எனக்கு மிகவும் துயரமாக இருந்தது. என் கணவர் உடல்நலம் குன்றியிருந்தபோது மும்தாஜ் (ஆறாவது மகள்) அத்தாவின் மனம் கோணாமல் பணிவிடை செய்து அத்தாவுக்குத் தேவையான உணவு தயாரித்து மகிழ்விக்கும்.
மும்தாஜ் திருமணத்தில் தான் இருக்க மாட்டோம் என்பது என் கணவருக்குத் தெரியும் போலும்! “மும்தாஜ் திருமணத்தின்போது தஞ்சாவூரில் உள்ள மனையை விற்று திருமண ஏற்பாடுகளை செய்யுங்கள்” என்றார்கள். நான், “பிள்ளைகள் திருமண ஏற்பாடுகளை நீங்கள் தானே கவனிப்பீர்கள். இப்போது ஏன் இப்படி சொல்கிறீர்கள்?” என்றேன். என் கணவர் மெளனமாக இருந்தார்கள். அவர்களின் முகம் மிகவும் சோகமாக இருந்தது.
அன்று இரவு என் கணவர் வழமைப்போல் தூங்கும் முன் பால் அருந்தினார்கள். ஆனால், உறங்க முடியவில்லை. இரவு 12 மணியளவில் அதிகமாக இரும ஆரம்பித்தார்கள். நான் என் கணவரின் இருமலைக் கட்டுப்படுத்த இஞ்செக்ஷன் போட்டேன். (டாக்டர் எனக்கு இஞ்செக்ஷன் போட, சில டெஸ்ட்டுகளைச்செய்ய கற்றுக்கொடுத்திருந்தார்.) முந்தைய இரவுகளில் நான் ஊசி போட்டால் என் கணவர் இருமல் நின்று தூங்குவார்கள். ஆனால், அன்றிரவு ஊசி போட்டும் இருமிக்கொண்டே இருந்தார்கள். படுக்க முடியவில்லை. நான் என் கணவரின் அருகே, மிகவும் கவலையுடன் அமர்ந்து எப்போது விடியும் எனக் காத்திருந்தேன்.
கணவர் வாழ்நாளின் கடைசி நாள் :
ஃபஜர் பாங்கு சொல்லும் வேளையில் என் கணவர் டாய்லெட் போக வேண்டும் என்றார்கள். வழக்கம் போல் என் கணவருக்கு காபியும், 2 முட்டைகள் அரை வேக்காட்டில் தயாரித்தேன். டாய்லெட் சென்று வந்ததும் என் கணவர் ரொம்பவும் களைப்பாக இருக்கிறது, அப்புறமாக சாப்பிடுகிறேன்” என்றார்கள்.
நான் என் கணவரை அறைக்கு அழைத்து வந்து படுக்க வைத்தேன். அவர்கள் அருகிலேயே மிகக் கவலையுடனும், வருத்தத்துடனும் அமர்ந்திருந்தேன். என் கணவர் மயக்க நிலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். காலை 6 மணியளவில் என் கணவர், இரவு அருந்திய பாலை எல்லாம் வாந்தி எடுத்தார்கள்.
இதனைப்பார்த்து மூத்த மருமகன் ஃஷர்ஃபுத்தீன் கவலையடைந்தார்கள். மருமகன் மாமாவை கைத்தாங்கலாக படுக்க வைத்து டாக்டர் ராஜுலுவை அழைத்து வந்தார்கள். காலை 8 மணிக்கு வந்து என் கணவரை பரிசோதித்த டாக்டர் மருமகனிடம், “நீங்களும் என்னோடு வாருங்கள்” என்று கூறி அவரை காரில் திரும்ப அழைத்துச்சென்றார். டாக்டர் வந்து பார்த்தபோதே என் கணவரின் இதயத் துடிப்பு லேசாக இருந்தது. இரத்த ஓட்டம் குறைந்திருந்ததால் மருந்து உள்ளே செல்லவில்லை.
10 மணிக்கு திரும்பிய மருமகன் 12-க்குள் மாமாவின் மூச்சு நின்றுவிடும். 12 மணிக்கு மேல் மாமா உயிரோடு இருந்தால் பிழைத்துக்கொள்வார், உடனே என்னைக்கூப்பிடுங்கள் என டாக்டர் கூறியதாக சொன்னார்கள்.
உடனே ஆபிதா-அஹமதுஷா, ஜமீலா-ஜியாவுத்தீன், ஜுபைதா-ஃபாரூக், ஃபரீதா-இத்ரீஸ் அனைவருக்கும் ஃபோன் மூலம் செய்தி தெரிவிக்கப்பட்டது. அஹமதுஷா, ஆபிதா மாயூரம் ஜங்ஷனில் இருந்ததால் உடனே வந்துவிட்டார்கள்.
11.15 மணியளவில் என் கணவர் உளூச் செய்யவேண்டும் என்றார்கள். நான் “நீங்கள் இங்கேயே கட்டிலிலேயே உளூச் செய்யுங்கள்” என்றேன். நானும், ஃபாத்திமாவும், என் கணவரின் காலடியிலும், ஷர்ஃபுன்னிஸா பக்கத்திலும் அமர்ந்திருந்தோம்.
என் கணவரின் கால்கள் சில்லிட ஆரம்பித்தது. என் கணவரின் மரண வேதனையை நாங்கள் மனவருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டிருந்தோம். வீட்டின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சிறுவர், சிறுமியர் அனைவரும் கட்டிலை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
என் கணவர் படுப்பதும், (ஒன்றும் புரியாத நிலையில்) உட்காருவதும், திடீரென எழுந்து அரைகுறை மொழியில் உளூச் செய்ய வேண்டும், தொழனும் என்று எழ முயற்சித்தார்கள். நான் தேறுதல் கூறி தேற்றி அமர்த்தி வைக்கச் செய்தேன்.
என் கணவரின் நிலை கண்டு பயந்த நான் உடனே என் மருமகனிடம் டாக்டரை அழைத்து வரச் சொன்னேன். அந்த சுயநினைவு இல்லாத இறுதி நேரத்தில் என் கணவர் ஓதிக்கொண்டே இருந்தார்கள். கார் வந்து நிற்கும் ஓசையும் கேட்டது.
சூரத்துல் இக்லாஸும், தக்பீரும் :
படுத்திருந்த என் கணவர் எழுந்து உட்கார்ந்து அனைவரையும் “குல்ஹுவல்லாஹு ஓதுங்கள், யாஸீன் ஓதுங்கள்” என்றார்கள். நான் என் கணவரின் கரங்களைப் பற்றிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் விழும் அளவுக்கு “குல்ஹுவல்லாஹு” சூராவை மூன்று முறை தெளிவாக ஓதினார்கள். அதற்குப்பின் மூன்று முறை “அல்லாஹு அக்பர்” என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்தார்கள். தன் அருகில் உள்ள டியூப் லைட்டின் சுவிட்ச்சை அவர்களின் கை ஆஃப் செய்தது, கண்கள் மேல் நோக்க, என் ஆருயிர்க் கணவரின் உயிர் பிரிந்தது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
”இறைவன் கொடுத்த உயிர்”, அவன் எண்ணிய நேரத்தில் மீண்டும் பெற்றுக்கொண்டான். அனைவரும் அழுதோம். சிறு பிள்ளையாக இருந்த என் பேரன் ஷம்சுத்தீன் “குல்ஹுவல்லாஹு…” சூராவை சப்தமிட்டு ஓதிக்கொண்டே அழுதது. அப்பொழுது மணி 11.30 இருக்கும். டாக்டர் ராஜுலு வந்து பார்த்துவிட்டு (முடிந்துவிட்டது என்று) தலையசைத்தார்.
தன் மனைவி, மக்களை உயிருக்குயிராய் நேசித்து, தன் கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய ஆருயிர்க் கணவர் எங்களை வீட்டும் நிரந்தரமாகப் பிரிந்து அல்லாஹ்விடம் சென்றுவிட்டார்கள். ஒரு பெண்ணுக்கு இதைவிட துயரம், துக்கம் வேறென்ன இருக்க முடியும்?
மறுநாள் 01-01-1971, காலை 10 மணிக்கு என் கணவர் குளிப்பாட்டப்பட்டு, கஃபன் இடப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
எனக்கு துக்கம் தாளவில்லை. என் கணவர் அல்லாஹ்வின்பால் சென்றுவிட்டதைப் போல் நானும் செல்ல விரும்பினேன். என் மகள் மும்தாஜ் “அத்தா இல்லாமல் நாம் எப்படி வாழ முடியும்? நாமும் இறந்து விடலாமா?” என்று கேட்டது. (அந்த அளவுக்கு என் மகளுக்கு தன் அத்தாவின் மீது பாசம்). எனினும், என் கணவரின் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்து, என் கணவருக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்ய வேண்டிய பொறுப்பு, பிள்ளைகளின்பால் எனக்குள்ள கடமைகள் முதலியவற்றை உணர்ந்து கொண்டேன்.
என் இரு மகன்களான அலீ, ஸலாஹுத்தீன் என் அருகே அமர்ந்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருப்பார்கள். பிள்ளைகள் அனைவரும் என்னைத் தனியே விடாமல் நல்ல முறையில் என்னை கவனித்துக் கொண்டார்கள்.
என் உயிருக்குயிரான கணவரின் பிரிவு என்னை துயரக்கடலில் ஆழ்த்தியது. என் துக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என் இதயம் முழுவதும் என் கணவரின் நினைவலைகள் தான் இருந்தது.
நான் என் கணவருக்காக திருக்குர்ஆன் ஓதினேன். மற்ற நேரங்களில் என் துயரத்தை கவிதையாக வடித்து என் பாட்டி, அம்மா, பிள்ளைகளுக்குச் சமர்ப்பித்தேன்.
இரவு உறங்கும்போது அடிக்கடி என் கணவர் கனவில் வந்து எனக்கு ஆறுதல் கூறுவார்கள். என் கணவரின் ஆறுதல் மொழிகள், பிள்ளைகளின் தேறுதல் வார்த்தைகளினால் என் துக்கத்தை குறைக்க முயற்சித்தேன்.
என் கணவர் எங்களைப் பிரிந்து 32 வருடங்கள் (இந்த சுயசரிதை எழுதப்பட்டது 2003-ல்) உருண்டோடிவிட்டன. நானும், என் கணவரும் எவ்வளவு ஆழமாக ஒருவருக்கொருவர் நேசித்தோம். எப்படிப்பட்ட ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்ந்தோம். மனமொத்த தம்பதிகளாக ஒற்றுமையாக விளங்கினோம். அல்ஹம்துலில்லாஹ்.
என் செல்வங்கள் எங்களின் இனிய வாழ்வினை புரிந்துகொள்ள வேண்டும், அறிந்துகொள்ள வேண்டும், படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த சுயசரிதையை எழுதினேன்.
ஒற்றுமையான தம்பதிகளான எங்களை மரணம் பிரித்துவிட்டது. என் கணவர் என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்து விட்டார்கள். என் கணவரின் பசுமையான நினைவுகள் என் நெஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளது. அந்த இனிய நினைவுகள் என்றும் மறையாது.
அருளாலன் அல்லாஹ் மறுமையில் எங்களை ஒன்றுசேர்த்து வைப்பானாக, ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.
-தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்