“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (9)
1969-ல் என் கணவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. நான் என் கணவரின் அருகே அமர்ந்து கவலையுடன் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் ஒருமுறை சுவாசிப்பதற்குள் நான் ஏழு முறை சுவாசித்தேன். அவர்களால் சரியாக சுவாசிக்க முடியவில்லை. எனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது.
அப்பொழுது என் பெரிய சம்பந்தி (மருமகன் ஷர்ஃபுத்தீனுடைய தாயார்) செங்கிப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்கள். வாராவாரம் மருமகன் ஷர்ஃபுத்தீன் தன் அம்மாவைப் பார்த்து வருவார். என் கணவரின் உடல்நிலையைப் பார்த்த மருமகன், மாமாவை செங்கிப்பேட்டை அழைத்துச் செல்லலாம், அங்கு திறமையான டாக்டர்கள் உள்ளனர் என்றார்.
என் கணவர் அதிக இருமலால் இரவு தூங்க முடியாமல் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் நிலையைக் காண வேதனையால் துடித்தேன், மிகவும் வருந்தினேன். என் கணவருடன் செங்கிப்பேட்டை சென்றேன். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் என் கணவரின் ஒரு பக்க நுரையீரல் முழுவதும் கெட்டுவிட்டது. நுரையீரல் சரியாக இயங்க முடியாததால் நன்றாக சுவாசிக்க முடியவில்லை. அதனால் நெஞ்சுவலி ஏற்படுகிறது என்று டாக்டர் கூறினார்.
எங்கள் வருகையினால் மகிழ்ச்சியடைந்திருந்த சம்பந்தி மரியம், டாக்டரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வருந்தினார். வேதனையோடு நாங்கள் இல்லம் திரும்பினோம். அங்குள்ள டாகடர் எழுதிக்கொடுத்த மருந்தை சாப்பிட்டும் என் கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. எனவே மாயூரம் பாலக்கரையிலுள்ள எங்கள் குடும்ப டாக்டரான ராஜுலுவை வீட்டிற்கு அழைத்தோம்.
டாக்டர் ராஜுலு, ‘நீங்கள் உடனே பான்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள்’ என்றார். பக்கத்து வீட்டு உம்முல் ஹுதா அவர்களின் தம்பி ஜலால் (நஜீமின் மாமா) தனது மனைவி பில்கீஸுசுடன் என் கணவரைப் பார்க்க வந்தார். அவர், “சின்னத்தாவை பாண்டிச்சேரி ஜிப்மருக்கு அழைத்துப் போகலாம்” என்றார்.
என் கணவரும் சம்மதித்தார்கள். ஹலீல் (khaleel) அப்போது பணியாற்றவில்லை. நான் என்னவர், ஜலால் மூவரும் காரில் நேராக ஜிப்மர் சென்றோம்.
என் கணவரைப் பரிசோதித்த டாக்டர் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகச்சொன்னார். என் கணவர் மிகவும் களைப்பாக இருந்தார்கள். அந்த மருத்துவமனையில் நோயாளிக்குத் துணையாக பெண் தங்க அனுமதியில்லை. ஆண்தான் தங்க முடியும் என்பது விதி. நான் பில்கீஸின் அம்மா வீட்டில் இருந்தேன். இரவில் என் கணவருக்குத் துணையாக ஜலாலும், டிரைவரும் இருந்தனர்.
நான் ஒருபோதும் மருத்துவமனையில் என் கணவரை இரவில் தனியாகப் பிரிந்து இருந்ததில்லை. எல்லா மருத்துவமனைகளிலும் நானும், என் கணவருடனேயே இருப்பேன். என் கணவர் தனிமையில் எப்படி இருக்கிறார்களோ என்று எண்ணி கலங்குவேன். கவலையினால் அழுதுகொண்டே இருப்பேன்.
ஒருவாரம் கழிந்தது. ஜலால் என்னிடம் “சின்னம்மா எனக்கு பயமாக இருக்கிறது, இன்று இரவு சின்னத்தா மயக்க நிலையில் இருந்தார்கள். என்னை வீட்டிற்கு அழைத்துப் போங்கள், நான் என்னை குளிப்பாட்ட வேண்டும் என்றார்கள். அன்று இரவு முழுவதும் பயத்தில் நான் தூங்கவே இல்லை” என்றார். டாக்டர் என் கணவர் வீடு திரும்ப அனுமதித்தார்.
காரில் ஏறும்போது என் கணவர் மிகவும் களைப்புடன் காணப்பட்டார்கள். அந்த நிலையிலும், “ஜலால், சின்னம்மாவுக்கு “பண்” வாங்கவேண்டும்” என்றார்கள். எனக்கு அழுகை வந்து விட்டது. இந்த நிலையிலும் தன் மனைவிக்கு பாண்டிச்சேரி “பண்” பிடிக்கும் என்பதை நினைவில் வைத்து வாங்கச் சொல்கிறார்களே! அவர்கள் என்னிடம் வைத்திருந்த மட்டற்ற அன்பை என்னவென்பது?
நேரமாகிவிட்டதால் அந்த இரவில் சில பேக்கரிகள் மூடப்பட்டு விட்டதால் நாலைந்து தெருக்கள் அலைந்து திரிந்த பிறகுதான் “பண்” வாங்க முடிந்தது.
வீட்டிற்கு வந்தபின், தான் அல்லாஹ்வின் பால் விரைவில் மீள்வோம் என்பதை உணர்ந்தவர்கள் போல் என் கணவர், தினமும் காலை எங்கள் வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி வசித்த லால்பேட்டை லெப்பை ஹஜ்ரத் அவர்களை வீட்டிற்கு வரச்சொல்லி யாஸீன் ஓதக் கூறி செவிமடுப்பார்கள். இரவு மஃரிபுக்குப்பின் பிள்ளைகளை யாஸீன் ஒத்தச்சொல்லி செவிமடுப்பார்கள். ஒரு நாளைக்கு ஃபாத்திமா, ஒரு நாளைக்கு முஹம்மது அலீ என்று ஒவ்வொரு நாளும் ஒரு பிள்ளை அருமை அத்தா அருகே அமர்ந்து யாஸீன் ஓதுவார்கள்.
ஒருநாள் மாலை என் கணவர் இருக்கும் அறைக்கு தனியே சென்று சந்திதித்து விட்டு அறையை விட்டு வெளிவந்த ஹலாலுத்தீன் சிலோன் ஹஜ்ரத் (அப்போது தஹஸ்ஸில் மாணவர்) அவர்கள், “ஒரு இறைநேசரிடம் பேசிவிட்டு வந்த உணர்வே எனக்கு ஏற்படுகிறது” என்றார்கள். இவர்கள் அப்போது ஜின்னாத்தெரு பள்ளியில் இமாமாக இருந்தார்கள்.
என் கணவருக்கு மார்க்க நூல் படிக்கும் பழக்கம் அதிகமுண்டு. இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ”இஹ்யா உலூமித்தீன்” எப்போது அவர்கள் கட்டிலில் காணமுடியும். சில சமயம் அதை படித்து குலுங்கிக்குலுங்கி அழுவார்கள்.
என் கணவர் உடல்நலமில்லாமல் இருந்த ஆறு வருட காலமும் மிக அதிகமாக தஸ்பீஹ், திக்ர் ஓதிக்கொண்டிருப்பார்கள். தனது இறுதி நாட்களில் மிக மிக அதிகமாக ஓதிக்கொண்டே இருந்தார்கள். நோய்வாய்பட்ட காலங்களில் “குல்ஹுவல்லாஹு” சூராவை லட்சக்கணக்கில் ஓதியிருப்பார்கள். பிள்ளைகளையும் அந்த சூராவை அதிகமாக ஓதச்சொல்வார்கள். 29-12-1970 இரவு என் கணவர் விழித்திருந்து ஓதிக்கொண்டே இருந்தார்கள். தூங்கவே இல்லை, படுக்கவே இல்லை.
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்
www.nidur.info