{jcomments on}
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (8)
1968-ல் என் கணவருக்கு மீண்டும் உடல் சுகவீனம் ஏற்பட்டது. தஞ்சை மருத்துவமனை டாக்டர் U. முஹம்மது சென்னைக்கு மாற்றலாகி சென்றுவிட்டதால் என் கணவர் சென்னைக்குச் சென்று டாக்டர் U. முஹம்மதிடம் சிகைச்சை பெற விரும்பினார்கள். என் கணவருடன், நான், ஹலீல் (Khaleel) முஹம்மது அலீ, ஸலாஹுத்தீன் ஐவரும் காரில் சென்னை சென்று சைதாப்பேட்டையில் உள்ள ஹனீஃபா வீட்டில் தங்கினோம்.
ஹனீஃபா தம்பதியர் வியட்நாமில் இருந்தார்கள். அவர்களுடைய புதல்வர்கள் யாஸீன், அலீ, அவர்களுடைய தங்கை இருவர் என நால்வரும் சென்னையில் படித்துக்கொண்டிருந்தார்கள். நீடூரில் எங்கள் வீட்டில், முன்பு பணியாற்றிய வியட்நாம் பெண்மணி சைதாப்பேட்டையில் ஹனீஃபா வீட்டில் இருந்தார்.
என்னிடம் இருந்த டாக்டர் U. முஹம்மதின் முகவரியை எடுத்துக்கொண்டு சைதாப்பேட்டை அலீ எங்களை டாக்டரிடம் அழைத்துச்சென்றார். என் கண்வரை பரிசோதித்த டாக்டர் ‘நாளை காலை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆகிவிடுங்கள்’ என்றார். மறுநாள் காலை பத்து மணியளவில் ஹலீல் (Khaleel) எங்களை காரில் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
யாஸீன், அலீயும் எங்களுடன் வந்தார்கள். 11 மணிக்கு டாக்டர் வந்து பரிசோதித்தார். ஒரு மாதம் அங்கு தங்கியிருந்தோம். என் கணவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மிகவும் களைப்புற்று இருந்தார்கள்.
நானும், என் கடைசி மகள் ஷர்ஃபுன்னிஸாவும் மருத்துவமனையிலேயே என் கணவர் அருகில் இருந்தோம். ஷர்ஃபுன்னிஸாவுக்கு அப்போது 6 வயது. கையில் தஸ்பீஹ் மணி வைத்துக்கொண்டு இருக்கும். அத்தா குணமடைய துஆ செய்யும்.
பெரிய மருமகன் எங்களை காண மருத்துவமனைக்கு வந்தார்கள். டாக்டர் மருமகனையும், அலீயையும் அவர் இல்லத்திற்கு வரச்சொல்லி அவர்களிடம் எனது கணவரின் உடல்நிலையை எடுத்துக்கூறி, இந்த நிலையில் இவரை குணப்படுத்த முடியாது, வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுங்கள், பிள்ளைகளைப்பார்த்து உடல்நலனில் முன்னேற்றம் தெரியலாம் என்று கூறினார்.
பெரிய மருமகன் உடனே ஊர் திரும்பி ஆபிதா, அஹமதுஷாவை எங்களை அழைத்துவர அனுப்பி வைத்தார்கள். ஆனால், என் கணவர் ஊர் திரும்ப மறுத்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
என் கணவர் கருவியின் துணையுடன் சுவாசித்துக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவதும் என் கணவரின் அருகே அமர்ந்து மிக்க கவலையுடன் அவர் சுவாசத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், என் கணவரின் இதயத்துடிப்பு மிக லேசாக இருந்தது. சற்று நேரத்தில் 1964-ல் முதன் முறை ஏற்பட்ட மயக்க நிலைக்கு வந்துவிட்டார்கள்.
அப்போது வேலூர் C.M.C. டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்தின் பெயர் எனக்கு நினைவிருந்தது. ஆனால், மருந்துசீட்டு இல்லை. சற்று நேரத்தில் சைதாப்பேட்டை அலீ வந்தார். அவரிடம் அந்த மருந்தின் பெயரை எழுதி, வாங்கி வரச் சொன்னேன்.
டாக்டரின் prescription (மருந்து சீட்டு) இல்லாமல் மருந்தகத்தில் அந்த மருந்தை கொடுக்க மறுத்தார்கள். குடும்ப கார்டை காட்டி மருந்து வாங்கியதாக அலீ சொன்னார். இரவு 11 மணிக்கு அலீ மருந்து வாங்கி வந்ததும், நானும் அலீயும் என் கணவரை தூக்கி உட்கார வைத்து மருந்து கொடுத்தோம்.
மறுநாள் காலை 10 மணிக்கு வந்து என் கணவரை பரிசோதித்த டாக்டர் இவர் உடல்நிலையில் மாற்றம் தெரிகிறது. இதயத்துடிப்பு சீராக இருக்கிறது. மேலும் ஒரு நாள் இருந்து சிகிச்சை பெறலாம். இப்பொழுது வீடு திரும்ப வேண்டாம் என்று கூறினார். என் கணவருக்கு நான் கொடுத்த மருந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொடுத்தது எனக்கு சற்று நம்பிக்கையூட்டியது. அல்ஹம்துலில்லாஹ்.
அன்று மதியம் மருமகன் ஃபாரூக்கும், மகள் ஜுபைதாவும் என் கணவரைப் பார்க்க தஞ்சாவூரிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் என் கணவர் நான் தஞ்சாவூருக்கு வருகிறேன், நீடூர் போகவில்லை என்று கூறிவிட்டார்கள்.
மருமகன் ஃபாரூக்கும், சைதாப்பேட்டை அலீயும் டாக்டரிடம் சென்று என் கணவர் தஞ்சை செல்ல விரும்புவதாக கூறவும், அவர் மருந்து எழுதிக்கொடுத்து, நோயாளியின் இதயம் பல்கீனமாக இருப்பதால் காரில் பயணம் செய்யாதீர்கள், ரயிலில் முதல் வகுப்பில் செல்லுங்கள் எனக் கூறினார்.
ஃபாரூக், ஜுபைதா, ஷர்ஃபுன்னிஸா மூவரும், ஹலீலுடன் காரில் ஊர் திரும்பினார்கள். என் கணவர் பிள்ளைகள் அனைவரையும் தஞ்சைக்கு அழைத்து வந்து விடுங்கள் என்று கூறியிருந்தார்கள்.
நானும் என் கணவரும் ரயிலில் முதல் வகுப்பில் தஞ்சைக்குப் புறப்பட்டோம். ரயில் 10 மணிக்குப் புறப்பட்டது. என் கணவர் சற்று நேரம் பேசாமல் படுத்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் பிழிந்து கொடுத்தேன். சாத்துக்குடி ஜூஸ் மட்டும் தான் அப்போது குடித்துக் கொண்டிருந்தார்கள்.
ரயில் நீண்ட தூரம் சென்றதும், என் கணவர் கண் திறந்து என்னை அன்போடும், கனிவோடும் பார்த்தார்கள். நான் என் கணவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, “நமக்கு திருமணம் ஆன புதிதில் நபிமார்களின் வரலாறை எனக்குக்கூறினீர்கள். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது ஆயுளில் 40 வயதை நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அளித்துவிட்டதாக முன்பு கூறினீர்கள். அதுபோல் என் ஆயுளைக் குறைத்து, நான் உங்களுக்கு அளித்து நீங்கள் எங்களுடன் அதிக நாட்கள் உயிர்வாழ முடியுமா?” என வினவினேன். என் கணவர் “முடியும்” என பதிலளித்தார்கள்.
நான் உடனே, “யா அல்லாஹ், என் ஆயுளில் மூன்று வயதை குறைத்து என் கணவருக்கு அளித்து, அவர்கள் மனைவி மக்களோடு வாழ நல்லருள் புரிவாயாக” என மனமுருகத் ‘துஆ’ கேட்டேன். மாஷா அல்லாஹ். அல்லாஹ் என் ‘துஆ’வை எற்றுக்கொண்டான் போலும். என் கணவரின் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது.
நாங்கள் ரயிலில் வர, காரில் பயணம் செய்து எங்களுக்கு முன்னமேயே தஞ்சை வந்து சேர்ந்த மருமகன் ஃபாரூக் எங்களை காரில் அழைத்துச்செல்ல தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தார்.
நாங்கள் சம்பந்தி வீட்டிற்கு வந்து, மறுநாள் டாக்டர் மாலிக்கிடம் சென்றோம். அவரிடம் டாக்டர் U. முஹம்மதின் prescription (மருந்து சீட்டு)களை காட்டினோம். அவர் என் கணவரை பரிசோதித்து மருந்து கொடுத்தார். நீடூரில் இருந்து பிள்ளைகள் வந்திருந்தார்கள். அவர்களைக்கண்டு என் கணவர் மகிழ்வுற்றார்கள்.
15 தினங்கள் அங்கு தங்கியிருந்தோம். தினமும் டாக்டர் வந்து பரிசோதிப்பார். என் கணவர் அல்லாஹ்வின் அருளால் உடல்நலம் தேறியிருந்தார்கள். நானும், எங்கள் செல்வங்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். நாங்கள் நீடூர் திரும்பினோம். நான் அதிகம் நஃபீல் தொழுகை தொழுது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். ஒவ்வொரு மாதமும், மருத்துவ பரிசோதனைக்காக என் கணவரும், நானும் தஞ்சை சென்று வந்தோம்.
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்
.