{jcomments on}
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (7)
1962 ஆம் ஆண்டு வந்த ரமளான் மாதத்தில் பிறை 14 -ல் மூத்த மகள் ஃபாத்திமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஷம்சுன்னிஸா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அதே ரமளான் பிறை 29 (6-3-1962) அன்று எனக்கும் பெண் குழந்தை பிறந்தது.
தாய்க்கும், மகளுக்கும் ஒரே ரமளானில் பெண் குழந்தையைக் கொடுத்து அல்லாஹ் பரக்கத் செய்தான். எனது கடைக்குட்டிக்கு ஷர்ஃபுன்னிஸா என்று பெயர்சூட்டி அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னோம். அல்ஹம்துலில்லாஹ்.
1962 -ல் எனது இரண்டாவது மகள் ஆபிதாவுக்கும், மருமகன் ஷர்ஃபுத்தீன் அவர்களின் இளைய சகோதரர் அஹமதுஷா-வுக்கும் லால்பேட்டையில் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. அஹ்மதுஷா லால்பேட்டையில் மளிகைக்கடை வைத்திருந்தார். புதுமணத் தம்பதியர் லால்பேட்டையில் இனிதே தங்கள் இல்லற வாழ்வை நடத்தினார்கள்.
1964 -ல் மூன்றாவது மகள் ஜமீலாவுக்கும், கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூரைச் சேர்ந்த ஜியாவுத்தீன் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை மலேஷியா பயணம் செல்பவர்.
கணவரின் சுகவீனம் :
18-8-1964 பகல் ஒரு மணிக்கு மாயூரத்தில் கடையில் இருக்கும் என் கணவருக்கு கேரியரில் சாப்பாடு அனுப்பிவிட்டு நானும், பிள்ளைகளும் சாப்பிட்டுவிட்டு தொழுதோம். தொழுதுவிட்டு நான் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போது காலிங்பெல் சத்தத்தைக்கேட்டு கதவைத் திறந்தேன். வாஹித் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மயக்கமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்ததைக்கேட்டு நான் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தேன்.
உடனே உள்ளே சென்று ஹால் ரூமில் பாயை விரித்தேன். வாஹிதும், கடையில் அப்போது வேலை பார்த்துக்கொண்டிருந்த ஃபாரூக்கும் காரில் இருந்து என் கணவரைத் தூக்கி வந்து பாயில் இருக்க வைத்தார்கள்.
நான் அருகே வந்ததும் என் கணவர் டாக்டர் ராஜுலுவை கூப்பிடச் சொன்னார்கள். இரவு முழுவதும் பெரிய மருமகனும், ஹிதாயத்துல்லாஹ் (என் கணவரின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன்)வும் என் கணவரின் அருகே இருந்து கவனித்துக் கொண்டார்கள். மறுநாள் காலையில் டாக்டர் ராஜுலு வந்து என் கணவரை பரிசோதித்து உடனே வேலூர் C.M.C. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
அன்றே என் கணவரின் நண்பர் அரபித்தெரு M.R.பக்கீர் முஹம்மது, மருமகன் அஹமதுஷா, மகள் ஆபிதா இவர்களுடன் நானும் என் கணவரும் வேலூர் புறப்பட்டோம். வேலூர் C.M.C. மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றதில் முன்னேற்றம் தெரிந்தது. என் கணவர் சென்னை மருத்துவமனைக்கு செல்ல விரும்பினார்கள்.
மருமகன் அஹமதுஷாவும், ஆபிதாவும் இல்லம் திரும்பினர். மருமகன் அஹமதுஷா, எனது நான்காவது மகள் ஜுபைதாவுடன் திரும்ப வேலூர் வந்தவுடன் நாங்கள் அனைவரும் புறப்பட்டு சென்னை ஸ்டேன்லி மருத்துவமனை வந்தோம். அங்கு 15 நாட்கள் என் கணவர் சிகிச்சை பெற்றார்கள். டாக்டர் வீடு திரும்பலாம் என்று கூறினார்.
வசதி இருந்தும் அதுவரை கார் (வாகனம்) வாங்காமல் இருந்த நாங்கள் கணவரின் உபயோகத்திற்காக கார் வாங்கினோம். ஒவ்வொரு நாள் மாலையும் என் கணவர் கடைக்குச் செல்லும்போது நானும் உடன் செல்வேன். என் கணவருக்கு உடல் நலமில்லாததால் என் மருமகன் அஹமதுஷா கடை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கீழே கடை, மாடியில் வீடு. தனது மனைவி மக்களுடன் மாயூரம் ஜங்ஷனில் உள்ள கடையிலேயே மனைவி மக்களுடன் வசித்து வந்தார். தினமும் மாலை வேளையில்தான் என் கணவர் கடைக்குச் செல்வார்கள். நான் மாடிக்குச்சென்று என் மகள் ஆபிதாவையும், பிள்ளைகளையும் பார்த்து வருவேன். ம்ஃரிபுக்கு முன் இல்லம் திரும்புவோம்.
என் கணவர் தஞ்சை டாக்டரிடம் சிகிச்சை பெற விரும்பியதால் நானும், என் கணவரும் தஞ்சை சென்றோம். டாக்டர் U.முஹம்மது என் கணவருக்கு சிகிச்சையளித்தார். ஒரு மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறச் சொன்னார்.
என் தோழி ஃபரீதாவின் கணவர் ஸாலிஹ், தஞ்சை காந்திஜி ரோட்டில் “தஞ்சாவூர் சைக்கிள் ஸ்டோர்” கடை உரிமையாளராக இருந்தார். முன்புறம் கடை, பின்புறம் வீடு. ஸாலிஹ் அவர்களின் மறைவுக்குப் பின் அவர் மகன் முஹம்மது ஃபாரூக் கடை நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் கடைக்கு எதிர்புறம் இருந்த மருத்துவமனையில்தான் நாங்கள் தங்கியிருந்தோம்.
என் தோழி இல்லத்தில் நாங்கள் சாப்பிடுவோம். நான் உணவருந்த தோழி வீட்டிற்கு வரும்பொது என் கணவரை எங்கள் புதல்விகள் ஃபரீதாவும், மும்தாஜும் கவனித்துக் கொள்வார்கள். எங்களின் கடைசி இரண்டு பிள்ளைகளான பத்ருன்னிஸாவும், ஷர்ஃபுன்னிஸாவும் எங்களுடன் வந்து தங்கியிருந்தார்கள். பிள்ளைகள் தன்னுடன் இருப்பதை என் கணவர் விரும்பினார்கள்.
[ புகைப்படம்: என் கணவரின் நட்பு வட்டத்துடன் எங்களது மூத்த மகள் ]
மூன்று மாத சிகிச்சைக்குப்பின் நாங்கள் இல்லம் திரும்பினோம். என் கணவர் பிறர் உதவியின்றி கைத்தடியுடன் வீட்டில் நடக்க ஆரம்பித்தார்கள். உடல்நலத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
என் தோழி என் மகள் ஜுபைதாவை தன் மகன் ஃபாரூக்கிற்குப் பெண் கேட்டார். என் தோழியின் கணவருக்கு சொந்த ஊர் லால்பேட்டை. லால்பேட்டையில் “ஜுபைதா – ஃபாரூக்” திருமணம் சிறப்பாக நடைபெற்றது. என் கணவருக்கு மீண்டும் சுகவீனம் ஏற்பட்டதால் திருமணத்தில் அவர்களால் கலந்துகொள்ள இயலவில்லை. மருமகன்கள் ஷர்ஃபுத்தீன், அஹமதுஷா இருவரும் திருமணத்தை முன்னின்று சிறப்பாக நடத்த உதவினார்கள். (அஹமதுஷாவும் ஃபாரூக்கும் பள்ளித்தோழர்கள்.)
இரு வாரங்களுக்குப்பின் நானும், என் கணவரும் கார் டிரைவர் ஹலீலுர்ரஹ்மானுடன் தஞ்சை சென்றோம். நாங்கள் இருந்த மருத்துவமனை என் தோழி இல்லத்திற்கு தொலைவில் இருந்ததால், நான் மருத்துவமனையிலேயே இருந்தேன்.
ஹலீலுர் ரஹ்மான் (Khaleelur Rahman) என் தோழி ஃபரீதா வீட்டில் தங்கியிருந்தார். தினமும் எனக்கு அங்கிருந்து உணவு எடுத்து வருவார். நான் என் கணவருக்குப் பணிவிடை செய்வதைப் பார்த்து ஹலீல் (Khaleel) இரக்கம் கொள்வார். இப்பொழுது ஹலீல் (Khaleel) ஊரில் பெரியவர். நெய்வாசல் முத்தவல்லி.
ஒரு மாதத்திற்குப்பின் இல்லம் திரும்பினோம். உடல்நலக் குறைவினால் என் கணவர் கடைக்குப் போக முடியவில்லை. ஹலீல் (Khaleel) கடைக்குச் சென்றார். பெரிய மருமகன் கொக்கூர் (விவசாய வேலைகளை) பண்ணையை திறம்பட நிர்வகித்தார்.
இரவு உணவருந்தியதும் என் கணவர் கூடத்தில் மருமகப்பிள்ளைகளுடன் அமர்ந்து அளவளாவுவார்கள். மார்க்க விஷயங்களைக் கூறுவார்கள். 11 அல்லது 12 மணி வரை நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
என் கணவர் ஹைபோன் Haiphong -ல் ஜவுளிக்கடை வைத்திருந்த அந்த அனுபவங்களை மருமகப்பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைவார்கள். அதிகம் பேசினால் களைப்படைந்து விடுவார்கள் என நான் அஞ்சுவேன். அவர்களோ உற்சாகமாக பேசிக்கொண்டிருப்பார்கள்.
1967 -ல் ஐந்தாம் மகள் ஃபரீதாவை கொடிக்கால் பாளையத்தைச் சேர்ந்த இத்ரீஸ் அவர்களுக்கு மணம் முடித்தோம்.
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்