“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (5)
என் கணவர் என்னிடம், “நமக்கு அல்லாஹ், பெண் குழந்தைகளை அதிகமாகக் கொடுத்திருக்கிறான். அவர்களுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும். இந்தியக் கலாச்சாரம் தெரிய வேண்டும், அதனால் நாம் இந்தியா செல்வது நல்லது” என்றார்கள். நானும் சம்மதித்தேன். அப்போது ஃபாத்திமா, ஆபிதா, ஜமீலா மூவரும் குர்ஆனும், மெளலூதும் ஓதியிருந்தார்கள்.
எங்களுடைய பணிப்பெண் CHI LAN எங்களுடன் இந்திய வர விரும்பினார். அவருக்கு மும்தாஜ், முஹம்மது அலீ இருவரின் மீதும் பிரியம் அதிகம். ஆனால், வெளிநாட்டு உறவினர் தொடர்பு இல்லாத வியட்நாமியர்கள் இந்தியா செல்லக்கூடாது என்று அனுமதி தர மறுத்துவிட்டனர், அதிகாரிகள். பணிப்பென் அழுவதைத்தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.
18-5-1955 -ல் நானும், என் கணவரும், எங்கள் அன்புச் செல்வங்களும், என் அருமை அம்மா, பாட்டி, தாத்தா, மாமி, தம்பி, தங்கை, மாமியின் மகள்களிடம் பிரியாவிடை பெற்றோம். மாமா இறந்து ஒருவருடம் ஆகியிருந்தது. பிரிவுத்துயரைத் தாளாமல் அழுதோம்.
என் தாத்தா, பாட்டி, அம்மாவின் அழுகையைப் பார்த்து என் கணவர் அவர்கள் அருகே வந்து “அழாதீர்கள்” என்று ஆறுதல் கூறினார்கள். அத்துடன் “சில வருடங்கள் கழித்து மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்த பிறகு நாங்கள் இருவரும் கைக்குழந்தையுடன் வியட்நாம் வந்து உங்களை சந்திக்கிறோம்” என்று என் கணவர் கூறியதைக்கேட்டு மூவரும் சற்று ஆறுதல் அடைந்தார்கள்.
அனைவரும் அழுதுகொண்டே பிரியாவிடை தர, நானும், பிள்ளைகளும் அழுதுகொண்டே கனத்த இதயத்துடன் விமானம் ஏறினோம். எங்கள் பணிப்பெண்ணும் அதிகமாக அழுதார். எங்களுடன் என் கணவரின் மைத்துனர் (சின்ன மாமியின் மகன்) வாஹிதும், இந்தியா வந்தார். அவர் என் மகன் முஹம்மது அலீயை தூக்கிக்கொண்டார்.
இந்தியா வந்தடைதல் :
19-5-1955 அன்று இரவு கல்கத்தா (இந்தியா) வந்து சேர்ந்தோம். மறுநாள் 20-5-1955 அன்று கல்கத்தாவில் ரயில் ஏறி அடுத்த நாள் 21-5-1955 அன்று மதராஸ் வந்து சேர்ந்தோம்.
நானும், என் கணவரும் ஹோட்டல் அறையில் வாஹித் பொறுப்பில் பிள்ளைகளை விட்டு விட்டு தையல் மெஷின் வாங்கி வந்தோம். வியட்நாமில் இருந்தபோது எனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையான உடைகளை நானே தைப்பேன்.
22-5-1955 அன்று இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று ரயில் ஏறி, 23-5-1955 காலை ஃபஜர் நேரம் (பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது) நீடூர் ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஜின்னாத்தெருவில் இருக்கும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீட்டில் உறவினர்களின் கூட்டம். அவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள், ஒன்றுமே புரியவில்லை. அழுகை வருகிறது.
என் கணவர் எனக்கு ஆறுதல் கூறி என்னையும், பிள்ளைகளையும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது (என் கணவரின் முதல் மனைவியின்) அன்புக் குழந்தை ஜலாலுத்தீன் என்னருகே வந்ததும் நான் ஜலாலை அணைத்துக் கொண்டேன். உடனே என் அழுகை நின்றுவிட்டது. தாயை இழந்த இந்த குழந்தைக்கு தாயாக இருந்து நம் கடமையைச் செய்ய வேண்டும் என உறுதி கொண்டேன்.
ஜலாலுத்தீனிடம் நான் மிகவும் பாசமாக இருப்பேன். ஜலாலும் அம்மா, அம்மா என்று என்னை சுற்றிச் சுற்றி வரும். நான் ஜலாலை அணைத்துக் கொண்டதைப் பார்த்த அப்பாஸ் அப்பா (எனது கணவரின் முதல் மனைவியின் தந்தை) மிக்க மகிழ்வுற்றார்கள். அப்பாவும், என் கணவரும் “இவர் தான் உன் அம்மா, உன்னை நல்லபடி கவனிப்பார்கள்” எனக் கூறியதைக் கேட்டு ஜலாலுத்தீன் மகிழ்ச்சியாக சிரித்தது. பிள்ளைகளும் ஜலாலிடம் மிக பாசமாக இருந்தார்கள். ஜலாலும் அப்படியே.
அப்பாஸ் அப்பா பிள்ளைகளிடம் மிகப் பாசமாக இருப்பார்கள். தினமும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் தோட்டத்திற்குச் செல்வார்கள். முஹம்மது அலீயைத் துக்கிக்கொள்வார்கள். தோட்டத்தில் 12 தென்னை மரங்களும், 4 மாமரங்களும் இருந்தன. அந்த மரங்கள் அனைத்தும் அப்பா நட்டவை.
அத்தா, அம்மா எங்கே உட்கார்ந்தாலும் ஜலாலும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். நான் மெஷினில் துணி தைக்கும்போது ஜலாலும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து வானொலி கேட்டுக் கொண்டிருக்கும். உடல் நலக் குறைவால் ஜலால் பள்ளி செல்லவில்லை.
ஜலாலுத்தீனுக்கு 9 வயது ஆனதும் ஜலால் என்னிடம் “பள்ளி சென்றால் தானே அறிவு வளரும்” எனக் கூறியதைக் கேட்டு மனம் நெகிழ்ந்தேன். “யா அல்லாஹ், என் அருமை மகன் பூரண நலமடைந்து பள்ளிக்குச் செல்ல அருள் புரிவாயாக” என மனமுருகி “துஆ” செய்தேன்.
ஆனால், இறைவன் நாட்டம் வேறுவிதமாக இருந்தது. நாளுக்கு நாள் ஜலாலின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. என் கணவர் மாயூரம் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் 3 நாட்களுக்கு மருந்து கொடுத்தார். எக்ஸ்ரே எடுத்தார். மீண்டும் அவரிடம் சென்றதற்கு அவர் ஜலாலை மதராஸுக்கு அழைத்துச் சென்று பெரிய டாக்டரிடம் காட்டி சிகிச்சை பெறச் சொன்னார்.
ஜலாலின் இதயம் பலகீனமாக இருப்பதாகவும், நுரையீரல் கெட்டு விட்டதாகவும் கூறியதைக் கேட்டு எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வேதனையிலும், அளவிளாத் துயரிலும் ஆழ்ந்தோம்.
அப்பொழுது நான் 7 மாத கர்ப்பினியாக இருந்தேன். ஜலாலுத்தீன் என்னருகே வந்தமர்ந்து, “அம்மா உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு ஸலாஹுத்தீன் எனப் பெயர் வையுங்கள், என் பெயரைப்போல்” எனக் கூறியதைக் கேட்டு மனம் நெகிழ்ந்தேன்.
இரவு அருமை மகன் ஜலாலுத்தீனை என் கணவர் சென்னை டாக்டரிடம் அழைத்துப் போக, நான் என் கணவரின் உடைகளையும், ஜலாலின் உடைகளையும் சூட்கேஸில் வைத்துக் கொண்டிருந்தேன். ஜலால் என்னருகே வந்து “அம்மா! நீங்களும் என்னுடன் வாங்கம்மா” எனக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது. என் கணவர் அன்பு மகனிடம், “நாம் முதலில் சென்னை செல்வோம். சில நாட்கள் கழித்து அம்மா, அப்பாவுடன் வருவார்கள்” என சமாதானப் படுத்தினார்கள்.
ஜலாலுத்தீனின் மரணம்
அன்று ஞாயிறு இரவு 9 மணிக்கு என் கணவரும், அன்பு மகன் ஜலாலுத்தீனும் நீடூர் ஸ்டேஷனில் மதராஸ் புறப்பட ரயில் ஏறினார்கள். அப்பாஸ் அப்பா ஸ்டேஷன் வரை சென்று வழியனுப்பி வைத்தார்கள். மறுநாள் திங்கள் மாலை மதராஸில் இருந்து அன்பு மகன் ஜலாலுத்தீன் இறந்து விட்டதாக தந்தி வந்தது. காலை 8 மணிக்கே ஜலால் இறந்துவிட்டது. (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
அளவிலாத் துயரமடைந்தேன். அனைவருக்கும் அதிர்ச்சி, துக்கம். குடும்பத்தினர் அனைவரும் அழுதோம். அப்பாஸ் அப்பா முஹம்மது அலீயை அனைத்துக் கொண்டு அண்ணன் இறந்து விட்டதாகக் கதறினார்கள். ஜனாஸா அன்றிரவே நல்லடக்கம் செய்யப்பட்டது. என்னைச் சுறிச் சுற்றி வந்து “அம்மா. அம்மா” என வாய் நிறைய அழைத்து “எனக்கு வியட்நாமிய மொழி கற்றுத் தாருங்கள்” எனக் கூறும் ஜலால், நான் தைக்கும்போது என் பக்கத்தில் உட்கார்ந்து ரேடியோ கேட்கும் ஜலால், மீளாத் துயரில் எங்களை ஆழ்த்திவிட்டு மறைந்து விட்டதே என்று நான் வருத்தமடைந்தேன்.
அன்றிரவு எனக்கு பயங்கர வயிற்று வலி, பெண் மருத்துவர் வீட்டுக்கு வந்து என்னைப் பரிசோதித்து, பிள்ளை மறைந்த அதிர்ச்சி, துக்கத்தினால் வயிற்றுவலி. அதிகமாக அழுததினால் வயிற்றுவலி, என்று கூறினார். என் கணவர் மிகக் கவலையுற்றார். அழவேண்டாம் என்று ஆறுதல் கூறினார்கள்.
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்
ஹஸீனா மாய் அவர்கள் ஃப்ரென்ச் (ஃபிரான்ஸ்) மொழியில் எழுதி வைத்த கவிதைகள் ஏராளம்.