Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அலைக்கழிப்பு! (சிறுகதை)

Posted on September 3, 2016 by admin

அலைக்கழிப்பு! (சிறுகதை)

    நூ. அப்துல் ஹாதி பாகவி     

அது ஒரு கட்டுப்பாடான ஊர்.

ஓர் அரபுக்கல்லூரியும் அவ்வூரில் உள்ளது.

அங்குள்ள ஆலிம்கள் அவ்வூரை இஸ்லாமியக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள்.

பெண்கள் பகல் வேளைகளில் வெளியே புறப்பட மாட்டார்கள்.

புர்கா அணிந்துகொண்டுதான் வெளியே செல்வார்கள்.

அந்நிய ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

வீட்டில் ஆண்கள் ஒன்றுகூடிப் பேசும்போது பெண்கள் குறுக்கிட மாட்டார்கள்.

குடும்பப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஏதேனும் முடிவெடுத்துவிட்டால் அதை எதிர்த்து, கருத்து ஏதேனும் தெரிவிக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட கட்டுப்பாடான ஊரில் பிறந்தவள்தான் ஷமீமா.

ஷமீமாவுக்குப் பதினைந்து வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அவர்களை வளர்த்து ஆளாக்குவதிலேயே தன் இளமைப் பருவம் முழுவதையும் செலவிட்டாள். அவளுக்குத் தன் கணவன்மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. கணவனுக்குத் தன்மீது ஈர்ப்பு இல்லை என்பதே அதற்கான காரணம். இந்த முடிவுக்கு அவள் எப்போது வந்தாள்?

திருமணத்திற்குப்பின் அவளுடைய கணவன் அப்துல் காலிக் கூட்டுக் குடும்பமாக இருந்த தன்னுடைய வீட்டில் ஷமீமாவைக் குடிவைத்தான். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் தம்பதியர் தாம் விரும்பு நேரத்தில் எதையும் செய்துவிட முடியாது. இருந்தாலும் தன் அறைக்குள் தன்னோடு சேர்ந்து துயில்வதற்குக்கூட அம்மாவின் அனுமதியை வேண்டி நின்ற தன் கணவனின் கையாலாகாத்தனத்தைக் கண்டபோதுதான் அவளுக்கு அவன்மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் கணவன்மீது இருந்த சிறிதளவு ஈர்ப்பும் கரைந்துபோனது. ச்சீ… என்று வெறுத்துவிட்டாள்.

அது மட்டுமல்ல, எப்போது பார்த்தாலும் பொய்பேசுவது, கேலி, கிண்டல் செய்வது-இவையே அவனது வாடிக்கை. எதையுமே முக்கியமாகக் கருதுவதில்லை. இதுவே காலப்போக்கில் அவள் அவனை வெறுத்தொதுக்குவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

அவள் ஈன்றெடுத்த மூன்று பெண்பிள்ளைகள்தாம் அவளுடைய உலகம். அவர்களையே எப்போதும் அவள் சுற்றிச் சுற்றி வந்தாள். ஆண்பிள்ளை இல்லாதது அவளுக்கு ஒரு குறைதான். இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.

ஆதி மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார் என்பதற்கேற்பத் தன் கணவனும் களிமண்ணால்தான் படைக்கப்பட்டானோ எனக் கருதிக்கொள்வாள். அவனுக்குத் தன் குடும்பம், தன் பிள்ளைகள், தன் மனைவி என்ற எண்ணமே கிடையாது. தன் அண்ணன் எதைச் சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு. தன் பிள்ளைகளின் படிப்பு குறித்தோ, மகிழ்ச்சி குறித்தோ எந்தக் கவலையும் கொண்டதில்லை. அவர்கள் மீது எந்த அக்கறையும் செலுத்தியதில்லை. எனவே ஷமீமாதான் எதற்கெடுத்தாலும் ஆம்பளையைப்போல் ஓட வேண்டும்.

பிள்ளைகளின் படிப்பிற்காகப் பள்ளிக்கூடம் அழைத்துக்கொண்டு செல்வது, மறுமையின் படிப்பிற்காக மத்ரசா அழைத்துக்கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் இவள்தான் கவனித்தாக வேண்டும். நாளடைவில் அந்த ஊரிலிருந்து தன் தாய்வீடு அமைந்துள்ள ஊருக்கே வந்து, தன் கணவனோடும் பிள்ளைகளோடும் தாய் வீட்டில் ஐக்கியமானாள். அங்கு அவளது மூன்று அண்ணன்களும் தாய்-தந்தையும் வாழ்ந்துவந்தனர். அவர்களோடு சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தாள். தன் அண்ணன்கள் கவனித்து வந்த அரிசிக் கடையைக் கவனித்து வந்தான் அவளது கணவன் காலிக். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் அவளுடைய குடும்பச் செலவுகளையும் அவளுடைய அண்ணன்களே கவனித்துக்கொண்டார்கள்.

ஒரு நாள் தன்னுடைய மூத்த பெண்ணின் திருமணப் பேச்சு வந்தது. அவளுடைய தந்தையின் முடிவின்படி அவள் தன் மூத்த பெண்ணைத் தன் சின்னம்மா மகன் தாரிக்கிற்குத் திருமணம் செய்துவைக்க ஒத்துக்கொண்டாள். “தாரிக் இன்ஜினீயரிங் படிப்பதால் பெண்ணும் இன்ஜினீயரிங் படித்தால்தான் மதிப்பாக இருக்கும்” என்று அவளுடைய சின்னம்மா கூற, தன் அண்ணன்களிடம் உதவி கேட்டு அவளை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துப் படிக்க வைத்தாள். மகளின் படிப்பு முடிந்ததும் இனிதே திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு அனைத்தையும் அவளுடைய அண்ணன்களே ஏற்றுச் செய்து முடித்தார்கள்.

இதை நன்றாக நோட்டமிட்டுக்கொண்டே இருந்த அவளுடைய அண்ணிகள், தக்க தருணம் பார்த்து, அவளைக் குத்திப் பேசத் தொடங்கினார்கள். அவளை ஏளனமாகப் பார்ப்பதும் கீழ்த்தரமாக மதிப்பதும் தொடர்ந்துகொண்டே வந்தது. வெடுக்கென ஏற்படுகின்ற சினமும் சுயமரியாதையை விரும்புகின்ற எண்ணமும் அவளுடைய அணிகலன்கள். ஆகவே சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அவளுடைய சொந்த ஊரான வேலப்பன்கோட்டையிலிருந்து சிங்காரச் சென்னையை நோக்கி வந்தாள்.

தன் கணவனுக்குச் சென்னையிலேயே அரிசிக் கடை வைத்துத் தருமாறு தன் அண்ணன்களிடம் கோரிக்கை வைத்தாள். தன் தங்கையின் கணவரை பார்ட்னராக இணைத்துக்கொண்டு ஒரு முக்கிய வீதியில் அரிசிக் கடையை வைத்துக்கொடுத்தார்கள் அவளுடைய அண்ணன்கள். உழைப்பிற்கும் அவளது கணவன் காலிக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கேலி கிண்டல் பேசுவது, அரசியல் குறித்து அலசுவது, நையாண்டி செய்வது – இவற்றிற்கே நேரம் போதாது. எப்படியோ குடும்பச் சுமையைச் சமாளித்துக்கொண்டே வந்தாள் ஷமீமா.

இரண்டாவது மகள் ஆஷிகாவை ஒரு மகளிர் அரபுக் கல்லூரியில் சேர்த்து ஆலிமா ஆக்கினாள். அவளது படிப்பு முடிந்ததும் அவளுக்குத் தகுந்த ஜோடியைத் தானே முன்னின்று தேடிப் பிடித்துத் திருமணம் செய்துவைத்தாள். மூன்றாவது பெண் ஆயிஷாவிற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியபோதுதான் அவளுடைய வாழ்க்கையில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. அது அவளுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிப் போட்டது.

மூன்றாவது பெண் ஆயிஷாவிற்கும் அவளே முன்னின்று மாப்பிள்ளை தேடத் தொடங்கினாள். கடைக்குட்டிக்கு ஏற்ற ஜோடி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தபோதுதான் அந்தக் கடிதத்தை அவளுடைய கணவன் காலிக் அவளிடம் கொடுத்தான். “நீ என்னை மதிக்காமல் எல்லாவற்றையும் உன் விருப்பம்போல் செய்வதால் நான் உன்னைத் தலாக் விட்டுவிட்டேன்” என்று எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள் ஷமீமா.

உடனே அவள் தனக்குத் தெரிந்த ஆலிம் ஒருவரிடம், “எழுத்து மூலம் எழுதிக்கொடுத்தால் தலாக் செல்லுமா?” எனச் சட்ட விளக்கம் கேட்டாள். தலாக் செல்லும் என்று சொன்னதும் உரிய முறையில் இத்தா இருந்துவிட்டு, “அப்பாடா சனியன் தொலைந்தது” எனப் பெருமூச்சுவிட்டாள். பிரியத்திற்குரிய கணவனாக இருந்திருந்தால் பிரிவு தாங்காமல் அழுகலாம். ஊரார் பார்வைக்குத் தம்பதிகளாக இருப்பவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டால் அழுகை வருமா? கவலைதான் ஏற்படுமா? அவளுக்கு அந்தப் பிரிவு, நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை பெற்றதைப் போன்ற மகிழ்ச்சியைத்தான் தந்ததே தவிர சிறிதளவும் கவலையைத் தரவில்லை.

அதன்பிறகு மூன்றாவது மகளின் திருமணத்தைத் தன் விருப்பம்போல் நடத்தி முடித்தாள். அதற்கிடையே தன் மனைவியின் பிரிவால், கவனிப்பார் யாருமின்றி வாடிப்போன காலிக் தன்னோடு மீண்டும் சேர்ந்து வாழ அவளை அழைத்தான். ஆனால் அவளோ “தொலைந்தது சனியன்” என்ற எண்ணத்தில் இருந்ததால் அவனோடு மீண்டும் வாழ்க்கையைத் தொடர விரும்பவில்லை.

ஷமீமா-காலிக் தம்பதியர் பிரிந்து, இதோ ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. அவளுடைய மூத்த மகள் கத்தாரில் இருக்கிறாள். இளைய மகள் மதீனாவில் இருக்கிறாள். நடு மகளான ஆஷிகா மட்டும் உள்ளூரில் இருக்கிறாள். யாருக்கு அம்மாவின் உதவி தேவைப்படுகிறதோ அவர் சும்மா இருக்கின்ற தம் அம்மாவை அழைத்துக்கொள்வார். “அம்மா, எனக்குப் பிரசவம் பார்க்க வாம்மா” என்று இளைய மகள் அழைத்தால் அங்கு செல்வாள்.

“அம்மா, நான் டூர் புறப்படறேன். நீ வந்து, இங்கு இருந்துகொண்டு ரெண்டு மாசத்துக்குச் சமைத்துக்கொடும்மா” என்று இன்னொரு மகள் அழைத்தால் அங்கு செல்வாள். அவளும் சளைக்காமல் இங்கும் அங்கும் சென்றுகொண்டே தன் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். மற்ற நாள்களில் உள்ளூரில் உள்ள தன் மகள் ஆஷிகாவின் வீட்டிலேயே தங்கியிருப்பது வழக்கம். ஆனால் ஆஷிகா ஒரு முன்கோபி. தன் அம்மாவின் நிலைமையைப் புரிந்துகொள்ளாமலே சுடு வார்த்தைகளை அவ்வவ்போது அள்ளிவீசுவாள்.

உள்ளே அடுப்படியில் புழுக்கமாக இருக்கிறதென்று வெளியே காற்று வாங்கச் சென்றால் அங்கு கதிரவன் தன் கதிர்களால் சுட்டெரிப்பதைப் போன்ற நிலைதான் ஷமீமாவுக்கு. வாழ்க்கையை வெறுமையாய்க் கழிக்கும் அவளுக்கு இனிய பொழுதுகளும் இல்லை. ஆறுதலான வார்த்தைகள் பேச ஆளும் இல்லை. இருப்பினும் தன் விரலே தன் கண்ணைக் குத்திவிட்டால் தண்டிக்க முடியுமா? மன்னிக்கத்தானே செய்வோம். அதே போன்று தன் மகளை மன்னிப்பதையே அவள் தன் பழக்கமாக்கிக்கொண்டாள்.

பெண் ஒரு கொடியைப் போன்றவள். ஒரு கொடி படர ஒரு தாங்குகோல் தேவை. அந்தத் தாங்குகோல்தான் கணவன். உபயோகமற்ற கணவனாக இருந்தாலும், பற்றிப் படர ஒரு தாங்குகோலாக இருந்தான் அல்லவா? இப்போது பற்றிக்கொண்டு படரவும் வாழ்க்கையைத் தொடரவும் தனக்கொரு தாங்குகோல் இல்லையே என்ற எண்ணம் அவ்வப்போது அவளுடைய மனதில் தோன்றாமல் இருப்பதில்லை.

அப்படித் தோன்றும்போதெல்லாம் அது அவளை நெருஞ்சி முள்ளாய்க் குத்தும். இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையின் அலைக்கழிப்புகளோடு, “இழந்த வாழ்க்கையை எண்ணியெண்ணி, தான் கவலைப்படுவதாகத் தன் பிள்ளைகள் நினைத்துவிடக் கூடாது” என்பதற்காகத் தன் பிள்ளைகளுக்கு முன்னால், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டும் வெற்றுப் புன்னகையை உதிர்த்துக்கொண்டும் வெறுமனே வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கிறாள் எதையும் தாங்கும் இதயம்கொண்ட ஷமீமா.

source: http://hadi-baquavi.blogspot.in/2016/05/blog-post_81.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb