சமூக எழுச்சிக்கான வழிமுறைகள்
அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மது
இஸ்லாமிய உலகத்தின் அண்மைக் கால வரலாற்றில் ஒரு மோசமான காலக்கட்டத்தை இஸ்லாமிய உலகம் கடந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஒரே சமயத்தில் பல்வேறு துறைகளிலும் ஒரு பயங்கரமான வீழ்ச்சியை நாம் காண்கிறோம். ஆன்மீகம், கல்வி, பொருளாதாரம், அரசியல், அறிவியல், பண்பாடு என பல்வேறு துறைகளிலும் ஒரு இக்கடான காலக்கட்டத்தை இஸ்லாமிய சமூகம் சந்தித்து வருகிறது.
அரபு வசந்தத்தை தொடர்ந்து ஒரு மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு கைகூடவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். இந்த வீழ்ச்சிக்கு இரண்டு விதமான காரணங்களை அடையாளம் காணலாம்.
ஒன்று, வெளியில் இருந்து வீசப்படும் சவால்கள். மத்திய கிழக்கின் நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்கான திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டப்பட்டுவிட்டது. இஸ்லாத்தின் எழுச்சியை, முஸ்லிம்களின் எழுச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சக்திகள் இந்த சதிகளை தீட்டுகின்றன.
எல்லா காலங்களிலும் முஸ்லிம் சமூகம் இந்த சதிகளை எதிர்கொண்டுள்ளது. முஸ்லிம் சமூகம் உள்ளூக்குள் பலமாக இருந்ததால் இந்த அறைகூவலை அதனால் எளிதாக எதிர் கொள்ள முடிந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக, வெளிப்புற சவால்கள் இருந்தபோதும், உள்ளுக்குள்ளேயே பல சவால்களையும் எதிர் நோக்குகிறோம். ஒரு காலத்தில் அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகம் பிளவுபட்டது. மொழி ரீதியாக, பிரதேச ரீதியாக, இன ரீதியாகவும் பிளவுகள் ஏற்பட்டன. அண்மைக்காலமாக மார்க்கத்தின் பெயராலேயே எதிரும் புதிருமான கருத்துகள் தோன்றியுள்ளன.
எந்தளவிற்கு இந்த பிளவு உள்ளதென்றால், முஸ்லிம் சமூகத்திலேயே ஒரு அணி மற்றொரு அணியை வெறுக்கும் நிலையும் கழுத்தறுக்கும் நிலையும் உள்ளது. சமுதாய பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்புகள் இடையேயான பிரச்சனைகள் பூதாகரமாக உள்ளன. மற்றொரு புறம் தரீக்கா அமைப்புகளுக்கும் சமுதாய அமைப்புகளுக்கும் இடையே பிரச்சனைகள் உள்ளன. இவை சமுதாயத்தை பலஹீனப்படுத்துகின்றன. முஸ்லிம் சமூகம் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மீண்டும் தலைதூக்க வேண்டுமென்றால் நாம் நம்முடைய முன்னுரிமைகளை தீர்மானிக்க வேண்டும்.
இதில், முஸ்லிம் சமுதாயத்தின் ஐக்கியம் முக்கிய இடத்தை வகிக்க வேண்டும். நமது கால்கள் ஒரு ஜமாத்தில் இருந்தாலும் நமது கண்கள் சமுதாயத்தின் மீது இருக்க வேண்டும். இன்று பெரும்பாலும் ஒருவரை இயக்கத்தை வைத்தே அடையாளப்படுத்துகிறோம். இயக்கத்தின் வாயிலம்கவே சிலர் இஸ்லாத்தை பார்க்கின்றனர். சமுதாயம் என்ற பார்வை குறைந்துவிட்டது. துவேஷம், பகைமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்க்க முடியாது.
‘நீங்கள் உங்களுக்கு மத்தியில் சர்ச்சை பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் பலஹீனமடைந்து தோல்வியைடவீர்கள்’ என்று குர்ஆன் தெரிவிக்கிறது. அல்லாஹ் தனது பாதையில் போராடுபவர்களை விரும்புகிறான். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையையும் அல்லாஹ் விதிக்கிறான். ஒன்றோடொன்று இணைந்திருக்கும் கட்டிடத்தைப் போன்று இணைந்து போராடுபவர்களைத்தான் நேசிப்பதாக கூறுகிறான். இன்று இஸ்லாத்திற்கான போராட்டமும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. ஆனால், நாம் பல அணிகளாக நின்று போராடுகிறோம். இந்த நிலை இருக்கும் வரை நம்மால் வெற்றிக் கம்பத்தை தொட முடியாது என்பது ஒரு யதார்த்தமான உண்மை.
அனைவரின் கவனமும் சமுதாயத்தின் ஒற்றுமையில் செலுத்தப்பட வேண்டும். இதுதான் சமுதாயத்தின் அவசிய தேவையாக உள்ளது. சர்வதேச மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் சமுதாயத்தின் ஒற்றுமையை பாதிக்கக்கூடிய ஒரு வார்த்தைக் கூட ஒரு முஸ்லிமின் நாவில் இருந்து வந்துவிடக்கூடாது. இந்த உத்தரவாதத்தை கொடுக்க வேண்டியது கலிமா சொன்ன அனைத்து முஸ்லிம்களின் கடமையாகும்.
ஆனால், இந்த கருத்தை நாம் முன்வைக்கும் போது சிலர் இதனை கொச்சையாகவும் ஒரு அரசியல் கோஷமாகவும் பார்க்கின்றனர். சத்தியத்தில்தான் (ஹக்) ஒற்றுமை, அசத்தியத்தில் (பாதில்) ஏது ஒற்றுமை என்று கேள்வி எழுப்புகின்றனர். ஹக், பாதில் விஷயங்களை இவர்கள் தவறாக புரிந்துள்ளார்கள் என்பதுதான் எனது கருத்து. இது ஹக், பாதில் இடையிலான பிரச்சனை அல்ல. இது நமக்கிடையேயான பிரச்சனை. இது வரலாற்று நெடுகிலும் இருந்து வந்ததை நாம் காண முடியும். தற்போதைய நிலையில் இருந்து விடுபட்டு நமது லட்சிய பயணத்தை வெற்றிகரமாக தொடர வேண்டுமென்றால் சமுதாயத்தின் ஒற்றுமையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாவது விஷயம், நாம் ஆன்மீக ரீதியாக புடம் போடப்பட வேண்டும். இன்று இஸ்லாத்தை நாம் கூர் கூராக பிரித்து விட்டோம். அரசியலை ஒரு சாராரிடமும் ஆன்மீகத்தை மற்றொரு சாராரிடமும் கல்வியை மூன்றாவது நபரிடமும் பொருளாதாரத்தை இன்னொருவரிடமும் கொடுத்துவிட்டோம். இதன் விளைவு, ஆன்மீகம் பேசுபவர்களுக்கு அரசியல் குறித்து தெரிவதில்லை. அரசியலில் உள்ளவர்களுக்கு கல்வி இல்லை. துறையாக்கம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இன்று ஆன்மீக ரீதியாக போதியளவு பயிற்சிகளும் பக்குவமும் கொடுக்கப்படவில்லை.
‘முஸ்லிம்கள் அரசியலில் ஈடுபாடு காட்டாத போது முஸ்லிம்களிடம் ஈடுபாடு காட்டாத அரசியல்வாதிகள் அவர்களை ஆட்சி செய்வார்கள்’ என்ற அறிஞர் ஒருவரின் கருத்து எனது நினைவிற்கு வருகிறது. பொருளாதாரத்தில் நாம் ஆர்வம் காட்டாத போது அது எதிரிகளின் கைகளுக்கு சென்று அதை வைத்து அவர்கள் நம்மை ஆள்வார்கள். கல்வியில் நாம் ஆர்வம் காட்டாத போதும் இதே நிலைதான் ஏற்படும். நாம் எந்தத் துறையில் இருந்தபோதும் சிறந்த முஸ்லிம்களாக இருக்க வேண்டும். இதற்கு நமக்கு ஆன்மீக வழிகாட்டல் மிகவும் அவசியமாகிறது. ஒரு பிரபலமான ஹதீஸை நாம் இங்கு நினைவு கூர்வோம்.
‘உணவு தட்டை நோக்கி விலங்குகள் பாய்வதை போன்று எதிரிகள் உங்களை நோக்கி பாய்வார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, ‘அப்போது நாம் எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா?’ என்று சஹாபாக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
‘இல்லை. நீங்கள் பெரிய எண்ணிக்கையில் இருப்பீர்கள். ஆனால், வெள்ள நீரினால் அடித்து செல்லப்படும் சருகுகளை போன்று இருப்பீர்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.
‘இந்த நிலைக்கு என்ன காரணம்?’ என்று மீண்டும் கேள்வியை சஹாபாக்கள் எழுப்ப, ‘வஹ்ன் உங்கள் உள்ளத்தில் வந்துவிடும்’ என்றார்கள். ‘வஹ்ன் என்றால் என்ன?’ என்று கேட்க, ‘உலக ஆசை உங்களிடம் அதிகரித்துவிடும். மரணத்தை நீங்கள் வெறுப்பீர்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.
அதாவது, ஆன்மீக ரீதியாக வீழ்ச்சி அடைவோம் என்பது இதன் கருத்து. நமது கால்கள் பூமியில் இருந்தாலும் கண்கள் வானத்தில் இருக்க வேண்டும். நமது சொந்த ஊர் சுவனம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பார்வை ஒரு முஸ்லிம் அரசியல்வாதியிடம் இருக்க வேண்டும், கல்வியாளரிடம் இருக்க வேண்டும், பொருளியல் வல்லுனரிடம் இருக்க வேண்டும், துறைசார் நிபுணர்களிடம், புத்தி ஜீவிகளிடம் இருக்க வேண்டும். நாம் சமூக சேவையையும் சமய சேவையையும் பிரித்துவிட்டோம்.
ஆன்மீக ரீதியாக நாம் முன்னேற்றம் அடைவதுடன் பண்பாட்டு ரீதியாகவும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். நாம் எழுச்சி பெறுவதற்கான மூன்றாவது அம்சமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
‘நான்தான் மிகப்பெரிய ரட்சகன்’ என்று கூறிய பிர்அவ்னிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஹாரூண் அலைஹிஸ்ஸலாம் இருவரையும் அல்லாஹ் அனுப்பும் போது, ‘பிர்அவ்னிடம் நீங்கள் உரையாடும் போது மென்மையாக, பண்பாக உரையாடுங்கள்’ என்று கூறினான். ‘அன ரப்புகுமுல் அஃலா’ என்று கூறிய பிர்அவ்னிடமே மென்மையாகவும் நளினமாகவும் பேசுமாறு அல்லாஹ் கூறியுள்ள நிலையில் ‘சுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று தினமும் சுஜூதில் கூறும் முஸ்லிம்களிடம் நாம் எவ்வாறு பேசுகின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய முன்மாதிரி இதிலும் நமக்கு இருக்கிறது. ‘இந்த மனிதர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?’ என்றுதான் கூறுவார்களே அல்லாமல் ‘நீ ஏன் இப்படி நடந்தாய்?’ என்று சபையில் வைத்து ஒரு போதும் கேட்க மாட்டார்கள். ஆனால், இன்று சமூக வலைதளங்களிலும் மேடைகளிலும் பத்திரிகைகளிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
ஒரு மனிதனின் பெயரை சொல்லி அவனை சீரழிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு குர்ஆன், ஹதீஸின் பெயரிலேயே ஒரு பண்பாடற்ற காரியம் நடைபெறும் போது பொதுமக்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான கேள்வி எழுகிறது.
மார்க்கம் தெரியாதவர்கள் பண்பாடுடன் இருக்கும் போது மார்க்கம் தெரிந்த இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
‘ஒரு சமுதாயத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பண்பாட்டில்தான் தங்கியுள்ளது. ஒரு சமுதாயத்தின் பண்பாடு வீழ்ந்துவிட்டால் அந்த சமூகமும் வீழ்ந்துவிடும்’ என்ற அரபு கவிதைதான் இங்கு நினைவுக்கு வருகிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பண்பாடுகள் சொல்லும் தரத்தில் இல்லை. எதிலும் ஒரு குறுக்கு புத்தியும் சிந்தனையும் நம்மிடம் இருப்பதை காண முடிகிறது.
அரபு நாடுகளில் நாம் பயணிக்கும் போது பண்பாட்டு ரீதியாக ஒரு வீழ்ச்சி இருப்பதை நம்மால் தெளிவாக காண முடிகிறது. ஒரு மிகப்பெரிய மாற்றம் அவசியப்படுகிறது. நமது மோசமான நடைமுறைகளால் இஸ்லாத்தின் அடையாளங்களையும் மற்றவர்கள் தவறாக நோக்கும் போக்கு உள்ளது. ஒரு காலத்தில் முஸ்லிம்களின் உடையை நாகரிக உடையாக மற்றவர்கள் பார்த்தார்கள். ஸ்பெயினின் கார்டோபா நகரில் முஸ்லிம்கள் எந்த உடையை அணிந்தார்களோ அதைதான் மேற்குலகம் அணிந்தது. இஸ்லாமிய உலகம் அந்தளவிற்கு உச்சத்தில் இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழம்க மாறியுள்ளது.
நாம் எழுச்சி பெற வேண்டுமென்றால் இந்த அடிப்படை விஷயங்களில் நம்மிடையே நேர்மறை மாற்ங்கள் இருக்க வேண்டும். இத்தனை இடர்ப்பாடுகள் இருந்தபோதும் எதிர்காலம் இஸ்லாத்திற்கே, அண்மையில் உள்ள எதிர்காலமும் இஸ்லாத்திற்கே என்பதை நம்மால் உறுதியாக கூற முடியும். குர்ஆன், ஹதீஸ் ஒளியிலும் வரலாற்று ரீதியாகவும் சமகால நிகழ்வுகள் ரீதியாகவும் இதனை நம்மால் நிரூபிக்க முடியும்.
அமைப்புகள் தங்களுக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகளை காணாமல் ஒற்றுமைகளை காண வேண்டும். நமக்கு மத்தியில் 95 சதவிகிதம் ஒற்றுமை இருக்கிறது. ஐந்து சதவிகிதம்தான் வேற்றுமை இருக்கும். நம்மிடையே பல்வேறு அமைப்புகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் ஒற்றுமையான விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் பாதைகளை சரியாக கண்டறிந்து பயணத்தையும் முறையாக அமைத்தால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
(அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மது தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த சிந்தனையாளர், பேச்சாளர். இலங்கை ஜமாதுல் உலமாவின் துணை தலைவரும், புகழ்பெற்ற ஜாமிஆ நளீமிய்யாவின் துணை இயக்குநரும் ஆவார். புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அஹமது, அகார் முஹம்மது அவர்களை நேரடியாக சந்தித்து உரையாடிய போது, அவர் கூறிய கருத்துகள் வாசகர்களுக்கு கட்டுரை வடிவில் வழங்கப்பபட்டுள்ளது.)
source: http://sheikhagar.org/articles/2-allarticles/456-ways-of-community-upliftment