{jcomments on}
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (4)
12-10-1945 -ல் நான் மற்றொரு பெண் குழந்தைக்குத் தாயானேன். இரு அருமைச் செல்வங்களும் மிக செல்லமாக வளர்ந்தார்கள். 1947 -ல் என் கணவர் இந்தியா சென்றபோது நானும், இரு மகள்களும் பெந்த்ரே Bentre பாட்டி வீட்டில் இருந்தோம். அங்கிருந்த இரு குழந்தைகள் மீது பாசமழைப் பொழிந்தார்கள். இரண்டாவது மகள் ஆபிதாவை தூக்கிக்கொண்டு, முதல் மகள் ஃபாத்திமாவின் கரம் பற்றி நடை பயின்று கடைக்குச் சென்று இருவருக்கும் பிஸ்கட், சாக்லெட் வாங்கித் தருவார்கள்.
1947 ஆம் வருடம் என் உடன்பிறவா சகோதரிக்கு (இந்தியாவிலுள்ள என் கணவரின் முதல் மனைவிக்கு) ஆண் குழந்தை பிறந்தது. பெயர் ஜலாலுத்தீன். பத்து மாதங்கள் தனது தாயகத்தில் தங்கி விட்டு என் கணவர் வியட்நாம் திரும்பினார்கள். மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டார்கள். பொறுப்பும் அதிகமாகி விட்டது. என் கணவருக்கு நீரழிவு நோய் ஆரம்பித்தது. உடல்நலக் குறைவால் ஏறக்குறைய ஒரு மாதம் சைகோன் (Saigon) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.
என் கணவரின் சின்ன மாமனார் கிளியனூர் அப்பா ஷரீஃப் (கிளியனூரில் தற்போது ஹாஜியார் குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பத்தின் முன்னோடி) எனக்கும், என் கணவருக்கும் மருத்துவமனைக்கு உணவு அனுப்புவார்கள். பகலில் நான், மகள்கள் ஃபாத்திமா, ஆபிதா இருவரையும் மரியா மாமி பொறுப்பில் விட்டு, மருத்துவமனைக்கு வருவேன். பெண் பணியாளரும் பிள்ளைகளை கவனிக்க உதவுவார்.
மரியா மாமி ஹஜ்ரத் இஸ்மாயீல் அவர்களின் மனைவி. இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் என் கணவரின் உறவினர். இவர்கள் தான் எங்களுக்கு ‘நிகாஹ்’-திருமணம் செய்து வைத்தார்கள்.
ஹஜ்ரத் இஸ்மாயில் சைகோனில் வணிகம் செய்து வந்தார்கள். அவர்கள் முதல் மாடியிலும், நாங்கள் மேல் மாடியிலும் இருந்தோம். இறையருளால் என் கணவர் நலமடைந்ததும் ஹைஃபோங் (Haiphong) திரும்பினோம். மீண்டும் என் கணவர் ஜவுளித் தொழில் ஆரம்பித்தார்கள். சிறிய ஜவுளிக்கடை திறந்தார்கள். ஷரீஃப் ஹாஜியார் சைகோனில் பெரிய (Whole sale) ஜவுளிக்கடை ஒன்றின் மேலாளராக இருந்தார்கள். அங்கிருந்து என் கணவரின் கடைக்கு சரக்கு வரும். விற்றுவிட்டுப் பணம் கொடுக்க வேண்டும்.
31-8-1948 இல் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. இறையருளால் வியாபாரத்தில் பரக்கத் ஏற்பட்டது. வாழ்வில் வளம் பிறந்தது. என் கணவர், ‘ஜமீலா அதிர்ஷ்டக்காரக் குழந்தை’ என அடிக்கடி கூறுவார்கள்.
முதல் மனைவியின் மரணம் :
1949 -ல் என் கணவர் தனது தாயகம் புறப்பட்டார்கள். எங்களுக்குத் துணையாக பாட்டி இருந்தார்கள். என் கணவர் ஐந்து மாதங்களில் வியட்நாம் திரும்பினார்கள். 12-10-1950 இல் நான்காவது குழந்தையாக ஜுபைதா பிறந்தது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் 22-10-1950 -ல் என் கணவரின் முதல் மனைவிக்கு இரண்டாவது குழந்தை வயிற்றிலேயே இறந்து பிறந்தது. 15 தினங்கள் கழித்து என் கணவரின் முதல் மனைவியும் காலமானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) நானும், என் கணவரும் மிகவும் வருந்தினோம். பிள்ளை ஜலாலுத்தீனை நினைத்து கலங்கினோம்.
தாயைப் பறிகொடுத்த பிள்ளையின் அருகில் தந்தை கூட இல்லையே எனக் கலங்கினோம். ஜலாலுத்தீன், தாத்தா அப்பாஸ் மற்றும் பாட்டி ஆமினாவின் அரவணைப்பில் இருந்து வளர்ந்தது.
”ஏன் பெண் பிள்ளையாகவே பெற்றுக்கொண்டு வருகிறீர்கள்?”
17-08-1951 இல் ஐந்தாவதாக ஃபரீதாவும், 28-10-1952 இல் மும்தாஜும் பிறந்தார்கள். 6 ஆவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததும் எனது 3 ஆவது பெண் குழந்தை ஜமீலா, “ஏன் எப்போதும் பெண் பிள்ளையாகவே பெற்றுக்கொள்கிறீர்கள்?, எனக்கு ஆண் பிள்ளை தான் வேண்டும்!” என்று குய்யோ முறையோ என்று குதித்ததைப்பார்த்த அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு நர்ஸ் பக்கத்தில் ஆண் குழந்தை பெற்றுள்ள ஒரு பெண்மணியின் குழந்தையைக் காண்பித்து, “வேண்டுமானால் குழந்தையை எக்சேஞ்சு பண்ணிக்கலாமா?” என்று ஜமீலாவிடம் கேட்டபோது “அதெல்லாம்… முடியாது, பெண்ணாக இருந்தாலும் இது எங்க அம்மா பெற்ற பிள்ளையாச்சே!” என்று தங்கையின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தியது ஒரு சுவையான சம்பவமாகும்.
என் பாட்டி அடிக்கடி என்னிடம் என் கணவரைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். ஆறு பெண் குழந்தைகள் பிறந்தும் என் கணவர் என்னிடம் மாறாத அன்போடும், பரிவோடும், காதலோடும் இருப்பதைப் பாராட்டுவார்கள்.
28-10-1952 -ல் மும்தாஜ் பிறந்த பிறகு என் கணவரின் நண்பர்கள் பலர், “ஹஸீனாவுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை, எனவே இந்தியாவுக்குச் சென்று வேறு திருமணம் செய்து ஆண் குழந்தை பெற்றுக்கொள்” எனக்கூறிய ஆலோசனையை என் கணவர் ஏற்றுக்கொள்ள மறுத்து “எனக்கு (முதல் மனைவி மூலம் பிறந்த) ஜலாலுத்தீன் ஆண் குழந்தையே போதும்” என பதில் அளித்தார்கள். என் கணவர் என்னிடமும், பிள்ளைகளிடமும் மிகவும் அன்பாக இருப்பார்கள்.
6 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஏழாவதாகப் பிறந்த முதல் ஆண் குழந்தை :
7 ஆவது முறையாக கர்ப்பமுற்று பிரசவிக்கும் நாளன்று என் கணவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு என் கணவரின் கடையைத் தாண்டி உள்ள மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள பெண் டாக்டரிடம், “இதுவரை எனது எல்லா பிள்ளைகளும் மருத்துவமனையிலேயே பிறந்துள்ளார்கள், இம்முறை எனது வீட்டிலேயே குழந்தையை பெற்றுக்கொள்கிறேனே…!” என்று கனிவாக கேட்டபோது அவர்கள் மறுப்பேதும் சொல்லவில்லை.
சந்தோஷத்துடன் என் கணவரின் கடையைத்தாண்டி நான் வீட்டை அடைந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. இம்முறை ஆண் குழந்தை பிறந்ததைப் பார்த்ததும் வீட்டிலுள்ள பெண் பணியாளர்கள் துள்ளிக்குதித்தார்கள். கடையிலுள்ள முதலாளியிடம் (அதாவது என் கணவரிடம்) “நான் தான் முதலில் செய்தியைச் சொல்வேன்” என்று இருவருக்குள் ஒரு போட்டியே நடந்தது.
13-01-1954 அன்று இரவு 7 மணிக்கு, ஏழவதாக பிறந்த அந்த குழந்தை தான் முஹம்மது அலீ (-தற்போது நீடூர் இன்ஃபோவை நடத்திக் கொண்டிருப்பவர்) ஆண் குழந்தை பிறந்த செய்தியை கேட்டதும், வெகு தொலைவில் இருந்த எனது தோழியர் ஆயிஷா, ஜன்னத், ஹவ்வா மூவரும் இரவு 8 மணிக்கு எங்களைப் பார்க்க வந்தனர். மறுநாள் என் கணவரின் நண்பர்கள் அனைவரும் வந்து, குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தனர். பாட்டிக்கும், எனக்கும், என் கணவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. வீட்டில் இருந்த பணிப்பெண்கள் மகிழ்ச்சியில் நடனமே ஆடினார்கள்.
முஹம்மது அலீயின் பெயர்சூட்டு விழாவின்போது, ஹைஃபோங் பள்ளிவாசல் வளாகத்தில் …
நாற்பதாம் நாளன்று என் கணவர் எங்கள் செல்லக்குழந்தைக்கு மிகச் சிறப்பான முறையில் பெயர்சூட்டு விழா நடத்தினார்கள்.. குழந்தைக்கு முஹம்மது அலீ (புகழுக்குறிய உயர்ந்தவர்) என்று பெயர் சூட்டப்பட்டது. நிகழ்ச்சி ஹைஃபோங் (Haiphong) பள்ளிவாசலில் நிகழ்வுற்றது. எனது தாத்தா, பாட்டி, அம்மா மற்றும் ஹனோய், சைகோனில் இருந்து என் கணவரின் நண்பர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். 7 ஆடுகள் அறுத்து விருந்தளிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து சென்னை புதுக்கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் வளர்ச்சிக்காக கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முக்கியஸ்தர்களும் பெயர்சூட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். (பிற்காலத்தில் இந்த இரு கல்லூரிகளிலும் எனது மகன் முஹம்மது அலீ படிப்பார் என்று அப்பொழுது யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.)
1955 ஆம் ஆண்டு ஹனோயில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது. வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி தென் வியட்நாமிலுள்ள சைகோனுக்கு வந்தனர். கம்யூனிச ஆட்சியை விரும்பாத வட வியட்நாமியர்களும், தென் வியட்நாமுக்கு வந்தனர். நாங்களும் சைகோன் வந்தோம்.
[ புகைப்படம்: முதல் வரிசையில் வலப்புறம் பாதி உருவத்தில் தென்படுபவர் ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னால் ப்ரின்சிபால் புகாரி சாகிப். முதல் வரிசையில் வலப்புறம் இரண்டாவதாக இருப்பவர் எனது கணவர் அப்துல் வஹ்ஹாப் சாகிப், நடுவில் கழுத்தில் மாலையுடன் இருப்பவர் நீடூர் அப்துல்லாஹ் சாகிப், இடப்புறம் கடைக்கோடியில் கண்ணாடி அணிந்து இருப்பவர் அப்துல் மஜீத், அன்றைய முஸ்லிம் லீக்கின் முக்கிய பிரமுகராக இருந்து காயிதே மில்லத்துடன் கருத்து வேறுபாடு கொண்டு தனிக் கட்சி ஆரம்பித்தவர். காமராஜருக்கு மிக நெறுக்கமானவர்.]
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்
www.nidur.info