{jcomments on}
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (3)
என் அன்புக் கணவருடன் இனிதே இல்லறம் துவங்கினேன். என் கணவரின் நண்பர்கள், புதுமணத் தம்பதியர்களான எங்களைக் காண வீட்டிற்கு வருபவர்கள், “புதுப்பெண் அழகாகவும், அடக்கமாகவும் இருக்கிறார்” எனக் கூறியதைக் கேட்டு என் கணவர் மகிழ்ச்சியடைந்தார்.
வீட்டுபணிகளில் எனக்கு உதவ ஒரு பெண் பணியாளரை என் கணவர் நியமித்திருந்தார். அவர் எனக்கு வியட்நாமிய உணவுகளை சமைத்துக் கொடுப்பார். அப்பணிப்பெண்ணுக்கு என்னை பிடித்து விட்டது. ஏனெனில் நான் அவரை ஒன்றும் (குறை) சொல்ல மாட்டேன். அவர் சமையல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவேன்.
என் கணவர் சொந்த ஜவுளிக்கடை வைத்திருந்தார்கள். காலையில் கடைக்குச் சென்றால் மதியம் வீடு திரும்புவார்கள். வரும்போது எனக்கு பழங்கள், பலகாரங்கள் வாங்கி வருவார்கள். நான் மிக ஒல்லியாக இருப்பேன். என்னை கண்ணுங்கருத்துமாக கவனித்துக்கொண்டார்கள். இருந்தாலும் எனக்கு என் அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி, எனது தோழிகள், எனது ஊர் பெந்த்ரே (Ben tre) ஐத் தேடி வந்தது. அவர்களை நினைத்து அழுவேன்.
மறுவாரம் ஒருநாள் கடையிலிருந்து என் கணவர் வந்ததும் இரு கடிதங்களை என்னிடம் கொடுத்தார்கள்.
நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவ்விரு மடல்களைப் படித்தேன்.
நான் படித்து முடித்ததும் மேலும் இரு மடல்களைக் கொடுத்தார்கள்.
இப்படியே இடைவெளி விட்டு விட்டு 10 கடிதங்கள்.
எனது தாத்தா, பாட்டி, அம்மா, மாமா, மாமி நான்கு கடிதங்கள். தோழிகள் 6 கடிதங்கள் அனுப்பியிருந்தார்கள். எல்லாத் தோழிகளும் “நீ இன்றி பெந்த்ரே (Ben tre) சோகமாக இருக்கிறது” என எழுதி இருந்தார்கள். நான் உடனே உட்கார்ந்து அனைவருக்கும் பதில் எழுதிவிட்டேன். எல்லா மடல்களையும் பத்திரமாக எடுத்து வைத்தேன். அன்று நான் சந்தோஷமாக இருந்தேன். அல்ஹம்துலில்லாஹ்.
புகைப்படத்தில் அமர்ந்திருப்பவர்: என் ஆருயிர் கணவர் M.அப்துல் வஹ்ஹாப் சாகிப் அவர்கள்
என் கணவர் எனக்கு அரபி ஓதவும், தமிழ் எழுதப் படிக்கவும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அரபி கற்பது எனக்கு மிகவும் சுலபமாக இருந்தது. என் கணவர் மிகவும் மகிழ்வுற்றார்.
தமிழ் படிப்பது கடினமாக இருந்தது.
வீட்டிற்கு வரும் என் கணவரின் நண்பர்கள் “மனைவியை எங்காவது ஜாலியாக வெளியே அழைத்துச் செல்ல வேண்டியது தானே!” என்பார்கள்.
“எனது மனைவி வீட்டில் இருந்து படிக்கத்தான் விரும்புகிறாள்” என என் கணவர் பதில் கூறுவார்கள்.
எங்கள் இல்லறம் நல்லறமாக விளங்கியது.
முதல் குழந்தை :
1943 ஆம் வருடம் நான் கருவுற்றேன். என் கணவரின் மகிழ்ச்சிக்கு அளவேது? எட்டு மாதம் ஆனதும் எனது தாத்தா, பாட்டி, அம்மா ஹைஃபோங் (Haiphong) வந்து என்னை பிரசவத்திற்காக பெந்த்ரே (Ben tre) வுக்கு அழைத்துச் சென்றார்கள்.
என் கணவர் பிரசவத்துக்கு பத்து நாட்கள் முன்பாகவே பெந்த்ரே Bentre வந்து விட்டார்கள். 05-01-1944 காலை முதல் எனக்கு இடுப்பு வலி ஆரம்பித்தது. என் கணவர் என் அருகிலேயே அமர்ந்து எனக்கு தாமரைப் பூவிலுள்ள பருப்பை உரித்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கவலையுடன் என் அருகிலேயே அமர்ந்து எனக்கு தைரியமூட்டிக் கொண்டிருந்தார்கள்.
அன்று மாலை 5 மணிக்கு எங்கள் இனிய மணவாழ்வின் பரிசாக முதல் குழந்தை ஃபாத்திமத்துஜ் ஜொஹரா பிறந்தது. அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்.
குழந்தையை குளிப்பாட்டியதும் புத்தாடை அணிவித்து என் அம்மா குழந்தையை தூக்கி வந்தார்கள். என் கணவர் குழந்தையின் காதுகளில் பாங்கு சொல்லி ஓதினார்கள். மகிழ்வுடன் சிரித்தார்கள். செய்தியறிந்து இப்ராஹீம் வந்து குழந்தையைப் பார்த்து என் கணவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மறுநாள் இம்மகிழ்வான செய்தியறிந்து மீதோ (my tho), சைகோனில் இருந்து என் கணவரின் நண்பர்கள் வந்து எங்கள் அருமைக் கண்மணியைப் பார்த்து மகிழ்ந்தனர்.
என் கணவர் மேலும் பத்து நாட்கள் தங்கிவிட்டு ஹைஃபோன் (Haiphong) புறப்பட்டார்கள். 40 ஆம் நாள் என் கணவர் ஹைஃபோங் (Haiphong) நண்பர்கள் சிலருடன் பெந்த்ரே (Ben tre) வந்தார்கள். சைகோன், மீதோ (my tho), பெந்த்ரே (Ben tre) வில் உள்ளவர்களும் வருகைத் தந்தார்கள். என் கணவர் தன் கரத்தால் ஆட்டை அறுத்து அகீகா கொடுத்தார்கள். அனைவருக்கும் பிரியாணி சமைத்து பரிமாறப்பட்டது.
எங்கள் செல்லக்கண்மணிக்கு ஃபாத்திமத்துஜ் ஜொஹ்ரா எனப் பெயர் சூட்டப்பட்டது. பத்து தினங்கள் கழித்துப் புறப்பட்ட என் கணவர் மீண்டும் மூன்று மாதம் கழித்து பெந்த்ரே வந்து தனது மனைவியையும், அருமை மகளையும் ஹைஃபோனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
பாட்டியும் எங்களுடன் வந்தார்கள். குழந்தைக்கு விளையாட்டுப் பொருள்கள் பரிசளித்தார்கள். என் கணவரின் நண்பர்கள் அப்துல் அஜீஸ், யாகூப் இருவரின் துணைவியரும் வந்து குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்கள். இருவருக்கும் எங்களுக்கு முன்பே திருமணம் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. என் அன்பு மகள் ஃபாத்திமா மீது மிகப் பாசமாக இருப்பார்கள்.
நான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சிறப்பாகக் குழந்தையை வளர்த்தேன். என் உதவிக்காக மேலும் ஒரு பெண் பணியாளரை என் கணவர் ஏற்பாடு செய்தார்கள். என் கணவர் என்னையும், செல்லக்கண்மணியையும் கண்ணை இமை காப்பது போன்று காத்தார்கள். அதைக் கண்ட என் பாட்டி பெருமிதமுற்று, “இவரைப் போன்ற நல்லவரைக் காண்பது அரிது” என்பார்கள்.
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்
என் ஆருயிர் கணவரின் நட்பு வட்டங்கள்
www.nidur.info