“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (1)
[ 23 08 2016 (துல்கஃதா, பிறை 20, ஹிஜ்ரி 1437) அன்று இரவு 9 மணியளவில், தனது 91 ஆவது வயதில் அல்லாஹ்வின் நாட்டப்படி மறுமைப்பயணத்தை துவங்கிய எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் 01-01-2003 இல் எழுதிய சுயசரிதையை இங்கு சமர்ப்பிக்கின்றோம்.
இதன் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு சில படிப்பினை கிடைக்கலாம் எனும் நம்பிக்கையே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.
தனது தாய்மொழியான வியட்நாம் மொழியில் அவர்கள் எழுதியதை எனது சகோதரிகள் மூலம் அப்பொழுதே தமிழில் மொழிபெயர்க்கச்செய்து குடும்பத்திலுள்ளவர்களுக்கு சமர்ப்பிக்கும்படி செய்திருந்தார்கள் எமது தாயார் அவர்கள். – adm. nidur.info – M.A.Mohamed Ali ]
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (1)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி நான் இவ்வுலகைக் காண கண்களைத் திறந்தேன்.
எனது பாட்டி (அம்மாவின் தாயார்) பணக்கார வீட்டுப்பெண்.
நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள்.
பாட்டி தான் மூத்த பெண்.
தாத்தா சுமாரான குடும்பம். பெற்றோருக்கு ஒரே மகன் அவர்.
பாட்டியின் தந்தையும், தாத்தாவின் தந்தையும் பள்ளித் தோழர்கள். ஆத்ம நண்பர்கள்.
இருவருக்கும் திருமணம் ஆகி, தாத்தாவின் தந்தைக்கு (அதாவது அவரது மனைவிக்கு) முதலில் ஆண் குழந்தையும், 2 வருடம் கழித்து பாட்டியின் தந்தைக்கு (அதாவது அவரது மனைவிக்கு) பெண் குழந்தையும் பிறந்தது. இரு நண்பர்களும் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும், இருவருக்கும் திருமணம் செய்து, தாங்கள் சம்பந்தி ஆக வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
அதன்படியே என் தாத்தா, பாட்டி வாலிப வயதை எட்டியதும் அவர்களுக்கு திருமணம் நடந்தது. இருவரின் மகிழ்ச்சியான மணவாழ்விற்கு சான்றாக 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன.
பாட்டியின் ஒரு தங்கைக்கு மட்டும் குழந்தை இல்லை. சைகோனில் (அப்போதைய தென் வியட்நாமின் தலைநகர் Saigon) வசதியாக இருந்தார். எனது தாயாரை, அதாவது அவரது அக்கா மகளை வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொண்டார்.
எனது தாய் சைகோனில் இருந்ததால் சில வருடம் பள்ளிப்படிப்பு படிக்க முடிந்தது. அந்தக் காலத்தில் பெண்கள் படிப்பது என்பது மிகவும் குறைவு.
1923 ஆம் ஆண்டு என் தாயாருக்கும், சிலோனில் (ஸ்ரீலங்கா) இருந்து சைகோன் வந்த என் தந்தைக்கும் திருமணம் நடந்தது. 1925 ஆம் வருடம் எனது தாயார் கர்ப்பமானார்கள். பிரசவத்திற்காக எனது பாட்டி, அம்மாவை சைகோனில் இருந்து Ben Tre – பெந்த்ரே வுக்கு அழைத்துச் சென்றார்கள். Bentre – பெந்த்ரே என்பது கிராமம். 18.8.1925 இல் நான் பிறந்தேன்.
மகள் பிறந்த செய்தி கேட்டு சைகோனில் இருந்து என் தந்தை என்னைப் பார்க்க பெந்த்ரே வந்தார்கள். மனைவி மக்களைப்பார்த்து பரவசப்பட்டார்கள். நான், என் தந்தையைப் போலவே இருப்பதாக அனைவரும் கூறினர்.
எங்களைப் பார்க்க வந்த என் தாயாரின் சின்னம்மாவும், என் தந்தையும், 3 நாட்கள் பெந்த்ரே யில் தங்கிவிட்டு சைகோனுக்குப் புறப்பட்டார்கள். செப்டம்பரில் திரும்ப வந்து மனைவியையும், மகளான என்னையும் சைகோனுக்கு அழைத்துப் போவதாகக் கூறிவிட்டுச் சென்ற என் தந்தையவர்களை, 31-8-1925 இல் விதி எங்களை விட்டும் நிரந்தரமாகப் பிரித்து விட்டது.
பிறந்த 13 நாட்களிலேயே எனது தந்தையை இழந்தேன் :
என் தந்தை காலமாகி விட்டதாக என் அம்மாவின் சின்னம்மா தந்தி அனுப்பி இருந்தார்கள். நான் பிறந்த 13 நாட்களிலேயே எனது தந்தையை இழந்தேன். தாள முடியாத துக்கத்தில் என் தாயார் தவித்தார்கள். பெந்த்ரே யிலிருந்து பஸ்ஸிலும், ரெயிலிலும் மாறி மாறி பயணம் செய்த என் தாயார் சைகோனை சென்றடைவதற்கு முன் என் தந்தையார் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டார்கள்.
அதன்பின் குடும்பத்தினர் அனைவரும் சொந்த ஊரான பெந்த்ரே வுக்கு என் அம்மாவையும், என்னையும் அழைத்துக்கொண்டு திரும்பி விட்டார்கள். என் தந்தையாரின் சிலோன் முகவரி என் தாயாரிடம் இல்லாததால் என் தந்தையின் உறவினர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்க இயலாமல் போய்விட்டது.
நானும், என் அம்மாவும் பாட்டி வீட்டிலேயே வாழ்ந்தோம். நான், தாத்தா, பாட்டி, மாமா, அம்மா இவர்களின் அரவணைப்பில் நான் வளர்ந்தேன். தந்தை முகம் அறியாத என்மேல் அனைவரும் பாசமழைப் பொழிந்து எந்தக் குறையும் இல்லாது என்னை வளர்த்து, ஆளாக்கினார்கள்.
ஐந்து வருடங்க ளுக்குப்பிறகு :
1930 ஆம் வருடம் மனைவியை இழந்த ஒரு இளைஞர் என் தாயாரைப் பெண் கேட்டு வந்தார். அவர் மனைவி இழந்து 3 வருடம் ஆகிவிட்டது. என்னைவிட 2 வயது மூத்த பெண் குழந்தைக்குத் தந்தை! நல்லவர், நல்ல குடும்பம் என்பதால் என் வீட்டினர் சம்மதித்து, என் அம்மாவை அவருக்கு மணமுடித்து வைத்தனர்.
எங்கள் வீடு இருந்த அதே தெருவில் தான் அவர்கள் வீடும் இருந்தது. என் சிறிய தந்தை என்மேல் மிகவும் பாசமாக இருந்தார்கள். எனினும், நான் தாத்தா, பாட்டி இருவரின் அரவணைப்பிலும், அன்பு மாமாவின் அன்பான அறிவுரைகளினாலும் சிறப்பாக வளர்ந்தேன்.
என் சிறிய தந்தையின் மகள்களும், நானும் மிகவும் பாசத்துடன் இருந்தோம். எனக்கு ஏழு வயதானதும் நான் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எனது மாமா என்னை பள்ளிக்கு அழைத்துப் போகவும், வீடு திரும்பவும் துணையாக வருவார்கள்.
1935 ஆம் வருடம் என் மாமாவுக்கு திருமணம் நடைபெற்றது. எனது மாமாவின் மனைவி என்னிடம் மிக்க பிரியமாக இருந்தார்கள். மாமாவும், மாமியும் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார்கள்.
1937 ஆம் ஆண்டு Di hai இரு புதல்விகளும் கிராமத்தில் இருந்து எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அங்கேயே பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். நாங்கள் மூவருமாக இணைந்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தோம். மாமா, மாமி இருவரும் கடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
1938 ஆம் ஆண்டு மாமிக்கு பெண் குழந்தையும் (Di hai), 1940 ஆம் ஆண்டு மற்றொரு பெண் குழந்தையும் (Di ba) பிறந்தது.
1940 ஆம் ஆண்டு எனது பள்ளிப்படிப்பு முடிவுற்றது. சைகோன் சென்று மேற்படிப்பு (College) படிக்க விரும்பினேன். நான் பலகீனமாக இருந்ததால் அவ்வப்பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டதால் கல்லூரிப்படிப்பு கனவானது. பலகீனமான என்னை தொலை தூரத்தில் இருக்கும் சைகோனுக்கு கல்லூரிப் படிப்பிற்காக அனுப்ப என் பாட்டி சம்மதிக்கவில்லை.
நான் வீட்டில் இருந்ததால் Di hai என்னிடம் பிரியமாக இருக்கும். நான் தான் அக்குழந்தையை குளிப்பாட்டி விடுவேன். உணவும் ஊட்டி விடுவேன்.
நான் படிப்பை நிறுத்தினாலும் எனது படிப்பார்வம் குறையவில்லை. மாமாவின் கடையில் மாணவ, மாணவியருக்குத் தேவையான புத்தகங்கள், ஏடுகள் அனைத்தும் விற்பனைக்கு இருக்கும். தினமும் மதியம் நான் கடைக்கு வருவேன். மாமா, மாமி உணவருந்த வீட்டுக்குச் செல்வார்கள். மாமி சாப்பிட்டதும் கடைக்கு வந்து விடுவார்கள். இருவருமாக கடையை கவனிப்போம். நானும், மாமியும் உடன்பிரவா சகோதரிகளாக பாசத்துடனிருந்தோம். அனைவரும் அவ்வாறே உறைத்தார்கள்.
அடுத்து என் திருமணம்….
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்
www.nidur.info
அழகு கொட்டிக்கிடக்கும் Ben Tre – பெந்த்ரே யின் மேலதிக புகைப்படங்களுக்கு Google மூலம் தேடிப்பாருங்கள்