“கதீஜாவின் குரல் கேட்கிறதே…?!”
M.அப்துல் வஹ்ஹாப் M.A.BTh., ரஹ்மதுல்லாஹி அலைஹி
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வாழ்ந்திருந்த காலமெல்லாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேறு திருமணமே செய்து கொள்ளவில்லை. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியராக வந்த எவரும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சிலிருந்து நீக்கவும் முடியவில்லை.
பத்ருப்போர் ஓய்ந்துவிட்ட நேரம். 314 பேரே கொண்ட இஸ்லாமியப் படையினர், தங்களைவிட மும்மடங்கு அதிகமாக வந்த குறைஷிப் பகைவர்கள் பலரை ஓடோட விரட்டி, எஞ்சியவர்களைக் கைது செய்து மதீனாவுக்குக் கொண்டு வந்தனர்.
கைதிகள் மீட்புப்பணம் கொடுத்துத் தங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு பணம் செலுத்த இயலாதவர்கள், முஸ்லிம் இளைஞர்கள், சிறுவர்கள் பத்துப்பத்துப் பேருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கல்விப் பயிற்சி கொடுத்து விட்டு விடுதலைப் பெற்றுச் செல்லலாம் என்றும் செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்.
கைதியாக்கப்பட்ட குறைஷியரில் ஒருவர் அபுல் ஆஸ் என்பவர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர். தம் கணவர் சிறைப்பட்ட செய்தியைக்கேட்ட ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவரை விடுவிக்க விலையுயர்ந்த தம் காசு மாலையை அனுப்பி வைத்தார்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் இக்காசுமாலை சமர்ப்பிக்கப்பட்டதும், அவர்கள் அதைச் சிறிது நேரம் உற்று நோக்கினார்கள். அவர்கள் கண்களில் கண்ணீர். நினைவுகள் மக்காவில் தாம் கழித்த இளமை நாட்களில் நிலைத்தன. நீங்காத நிழல்போல் தம் இன்பத்திலும், துன்பத்திலும், துயரத்திலும் பங்கு கொண்ட தம் துணைவியார் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைவுகள் எண்ணத்தில் எழ, “இந்தப் பொன்மாலை கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) அணிந்திருந்தது அல்லவா?” என்று கேட்டார்கள்.
பொன்னை, பொருளை ஒரு பொருட்டாக எண்ணாத நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும் கூட தனது மனைவியாரின் ஒரு நகையை அடையாளம் கண்டுகொண்டது, அங்கிருந்தோருக்கு வியப்பைத் தருகிறது.
பழைய காலத்தை எண்ணீர் மல்க நிற்கும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டு, தோழர்கள் வேதனையும் கொள்கிறார்கள்.
“காசுமாலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அபுல் ஆஸை விடுதலை செய்ய இசையுமாறு உங்களிடம் கேட்கிறேன்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதுதான் தாமதம், தோழர்கள் ஓடோடிச்சென்று ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவரை விடுவிக்கிறார்கள்.
ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுந்நபவியை ஒட்டியிருந்த தங்கள் சிறு வீட்டில் அமர்ந்திருந்தார்கள். வெளியே முற்றத்தில் ஒரு குரல் கேட்கிரது.
“கதீஜாவின் குரல் கேட்கிறதே…?” என்று பரபாரப்போடு வெளியே பார்த்தார்கள்.
“ஹூம்… ஹாலா தான் வந்திருக்கிறார்,” என்று உணர்வோடு கூறிக்கொண்டார்கள்.
ஹாலா, கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரியாவார். இருவர் குரலும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே ஹாலா அவர்களின் குரைக்கேட்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் குரலைக் கேட்டது போலிருந்தது.
இந்த நிகழ்ச்சியை ஊன்றி கவனித்துக் கொண்டிருந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளம் மனையாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
“எதற்காக எப்பொழுது பார்த்தாலும், அந்த வயதான குறைஷிப் பெண்ணைப் பற்றியே நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்? அவர் இறந்தும் எதனையோ ஆண்டுகள் ஆகிவிட்டதே!” என்று சினந்து கொண்டார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் சிறிது கடுமை தோன்றியது.
“இறைவன் மீது ஆணையாக இதைச் சொல்கிறேன் ஆயிஷா! அல்லாஹுத் தஆலா கதீஜாவை விட எனக்குச் சிறந்த ஒரு பெண்மணியைத் தரவில்லை. என் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இல்லாத காலத்தில், கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) என் மீது பூரண நம்பிக்கை கொண்டிருந்தார்.
என்னை பிறர் பொய்யனாக்க முயன்று கொண்டிருந்த நேரத்தில், நான் சொல்வது அனைத்தும் உண்மை என்று உளமாற நம்பினார். பிறர் எனக்கு எந்த உதவியும் செய்ய முன்வராத கடின காலத்தில், கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) தம் செல்வம் அனைத்தையும் எனக்காக அர்ப்பணித்தார். என் குழந்தைகளைப் பெற்றெடுத்துத் தந்த சீமாட்டியாவார் அவர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆம் ”உலகத்திலேயே இனி கிடைக்காத அற்புதப் பெண்மணி கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா); அன்றும், இன்றும் அப்படித்தான்!” என்பார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மேற்சொன்ன சமபவத்துக்குப் பின்னர் ஹளரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப்பற்றி பேசுவதை விட்டுவிட்டார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
– ”திருவுடைய நாயகி” கட்டுரையிலிருந்து, “பிறை” மாத இதழ், ஜூன் 1975