வெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்
[ ஒரு நாட்டில் வறுமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளபோதிலும், ஒரு குடும்பத்தில் வறுமை ஏற்படுவதற்கு குடும்பத்தலைவன் தொழில் புரியாமையினால் அல்லது குறைந்த ஊதியத்திற்கு தொழில் புரிவதனால் போதிய வருமானம் கிடைக்காமை, தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் எதிர்நோக்கும் நோய்கள், அதேபோல, சகோதரர் அல்லது சகோதரி எதிர்நோக்கும் உடற்குறைபாடு, போதிய கல்வியறிவு இன்மை, அதிக குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கணவன் உயிரிழப்பு அல்லது விவாகரத்தால் விதவையாதல் போன்ற பல காரணங்கள் குடும்ப வறுமையை ஏற்படுத்துகின்றன.
இலங்கையில் வடக்கு கிழக்கில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளதாக சில புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்களில் பலர் ஒரு வேளை சப்பாட்டுக்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலையும் காணப்படுகிறது.
இவ்வாறான வறுமை நிலை பல குடும்பத் தலைவிகளை வீட்டுப் பணிப்பெண்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாற்றியுள்ளது.
எவ்வித தொழில் முன் அனுபவமுமின்றி பணத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு செல்கின்ற அல்லது முகவர்களினால் அனுப்பி வைக்கப்படுகின்ற அநேக பெண்கள்; அங்கும் இங்குமாக பிரச்சினைகள் பலவற்றிற்கு முகங்கொடுக்கின்றனர்.
அந்நாடுகளிலுள்ள வீடுகளில் பணிக்காக அமர்த்தப்படுகின்றபோது அவ்வீடுகளின் நவீனத்திற்கு ஏற்ப தமது பணியினை நிறைவு செய்ய முடியாமை, அவர்களது மொழியில் உரிய முறையில் தொடர்பாடலை ஏற்படுத்த முடியாமை, அந்நாடுகளின் கலாசார பண்பாடுச் சூழலுக்கு ஏற்ப சுயமாக இயங்க இயலாமை, அந்நாடுகளின் தொழில் உறவு, சட்டம் ஒழுங்கு என்பவை தொடர்பான போதிய அறிவு காணப்படாமை போன்ற பலவீனங்களுடன் பணி புரிகின்ற இவர்களினால், புரிகின்ற தொழிலுக்குக் கிடைக்கும் பணத்தைக் கூட முறையாக முகாமைத்துவம் செய்ய முடியதாவர்களாக உள்ளனர்.]
வெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்
சகல வளங்களும் பெற்றவர்களாக உலகில் எவரும் வாழவில்லை. ஒன்றில் திருப்தி கண்டால் மற்றொன்றில் திருப்பதி காணாத நிலையிலே மனித வாழ்வு உள்ளது. இவற்றினால் போதும் என்ற மனப்பாங்கில் வாழும் மக்களை விடவும் போதாது என்ற மனப்பாங்கில் வாழும் மக்களே அதிகம்.
அவ்வாறான மன நிலையில் வாழ்வோரில் பலர் பெருளாதார வளமின்றி துன்புற்றும் வாழ்கின்றனர். இத்தகையவர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் சிறிதளவில் உதவிகள் கிடைத்தாலும், அவ்வுதவிகளால் அவர்களது குடும்பத்தை நகர்த்துவது என்பது முயற்கொம்பாகவுள்ளது. இதனால் சமூக, பொருளாதார மட்டத்தில் பின்னிலையில் கணிக்கப்படுகின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்களை வர்க்கங்களாகவும் பிரித்துக் கணிக்கிறது. பொருளாதார அடிப்படையில் சமூகத்தில்; உயர்தர, மத்திய தர, வறிய மக்கள் என மக்கள் வரையறை செய்யப்படுகின்றனா.
எந்தவொரு நாட்டிலும் யுத்தமோ, இயற்கை அழிவுகளோ, விலைவாசி உயர்வோ ஏற்பட்டாலும் அவற்றினால் பாதிக்கப்படும் வர்க்கத்தினராக காணப்படுகின்றவர்கள் இந்த மத்திய தர மற்றும் வறிய மக்கள் என்பது கண்கூடு.
பொருட்கள், சேவைகள் என்பவற்றின் பெறுமான அதிகரிப்புக்கு ஏற்ப பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு ஒவ்வொரு மத்திய தர மற்றும் வறிய நிலையுள்ள குடும்பத் தலைவரும், தலைவியும் தள்ளப்பட்டுள்ளனர்.
நவீன உலகின் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தியுள்ள மாற்றமானது ஒவ்வொருவரிலும் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் இந்தக் குடும்பங்களில் சமூகச் சூழல் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.
அடுத்த வீட்டார் வாழ்வது போன்று தானும் தனது குடும்பமும் வளம் பெற்று வாழ வேண்டும். அதற்காக எந்த வழியிலேனும் உழைக்க வேண்டும். என்ற மனப்பாங்கில் பணத்தைத் தேடுவதற்காக பலர் பல வழிகளை நாடிச் செல்வதையும் அதனால் அவஸ்த்தைகளுக்குள்ளாவதையும், சமூக அந்தஸ்தை இழப்பதையும் சமகாலத்தில் காண முடிகிறது.
மறுபுறம், தனது குடும்பம் வறுமையிலிருந்து விடுபடும்போதுதான் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளியமாக்க முடியும், குடும்பம் நிம்மதி பெறும் அதற்காக எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் பணத்தைத் தேட வேண்டும் என்ற மனநிலையில் பல குடும்பப் பெண்கள் முனைந்துள்ளனர். அதற்காக, அவர்களைக் கொண்டு பிழைப்பு நடத்தும் நபர்களை நாடிச் செல்கின்றனர்.
இவற்றின் விளைவு அவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பின்பால் கவரச் செய்கிறது.
அவர்கள் எவ்வித தொழில் முன் அனுபவம், தொழில்திறனின்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெற்று வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்கின்றனர். அல்லது விட்டுப் பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். இந்தொழிலாளிகள் ஏற்றுமதி வணிகமானது சட்டபூர்வமாகவும் சட்டபூர்வமற்ற முறையிலும் நடந்தேறுகிறது.
தமது வறுமை நிலையிலிருந்து மீட்சி வெறுவதற்காக இத்தொழில்வாய்ப்பின் மூலம் செல்கின்றவர்களில் அதிகமானோர் அவர்களின் கனவுகள் நிறைவடைவதற்கு முன்னதாகவே பல்வேறு துன்புறுத்தல்களினால், சுமைகளையும் வலிகளையும் சுமந்து கொள்கின்றனர். அந்நாடுகளைவிட்டு வேதனையோடு தாய்நாடு வந்து சேர்கின்றனர். இவை தொடர்கதையாகவே நிகழ்கிறது.
வறுமையும் பெண்களும்
சமூகத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வறுமையைப் போக்குவதற்கான முறையான திட்டம் ஏற்படாநிலையில் பலர் தொடர்ந்தும் வறுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, சமூக அந்தஸ்த்துப் பெறுதல் போன்றவை உட்பட வாழ்க்கைத்தரத்தை இழந்த நிலையே வறுமை எனப்படுகிறது. இந்த வறுமை நிலையில் வாழ்வோரின் எண்ணிக்கை நகரப் புறங்களிலும் பார்க்கக் கிராமப் புறங்களில் அதிகமாகவே உள்ளன.
இருப்பினும், நகரப் புறங்கங்களின் சேரிப்புறங்களில் வாழ்வோரில் பலர் வறுமைக்கோட்டின் கீழ் தமது வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
2013ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் தேசிய மட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் 14 சத வீதத்தினராகக் காணப்பட்டனர். மொனறாகலை, பதுளை, இரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் 10 முதல் 20 வீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோராவர்.
ஒரு நாட்டில் வறுமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளபோதிலும், ஒரு குடும்பத்தில் வறுமை ஏற்படுவதற்கு குடும்பத்தலைவன் தொழில் புரியாமையினால் அல்லது குறைந்த ஊதியத்திற்கு தொழில் புரிவதனால் போதிய வருமானம் கிடைக்காமை, தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் எதிர்நோக்கும் நோய்கள், அதேபோல, சகோதரர் அல்லது சகோதரி எதிர்நோக்கும் உடற்குறைபாடு, போதிய கல்வியறிவு இன்மை, அதிக குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கணவன் உயிரிழப்பு அல்லது விவாகரத்தால் விதவையாதல் போன்ற பல காரணங்கள் குடும்ப வறுமையை ஏற்படுத்துகின்றன.
2014ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் தினமும் 400 விவாகரத்துக்கள் நாட்டில் இடம்பெறுகிறன. அதுதவிர, கடந்த 30 வருட காலம் நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தம், சுனாமி அனர்த்தம் என்பன வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் பலரை விதவைகளாக ஆக்கியுள்ளது.
இலங்கையில்- வடக்கு கிழக்கில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளதாக சில புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்களில் பலர் ஒரு வேளை சப்பாட்டுக்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலையும் காணப்படுகிறது.
இவ்வாறான வறுமை நிலை பல குடும்பத் தலைவிகளை வீட்டுப் பணிப்பெண்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாற்றியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வறுமையை ஒழிக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்க வேண்டும், போதிய வசதிகொண்ட வீடு கட்ட வேண்டும். சமூகத்தில் அந்தஸ்தைப் பெற வேண்டும் என்ற எதிர்கால ஆசைகளோடும் கனவுகளோடும் உள்ள குடும்பத் தலைவிகளின் ஒரே தெரிவாக இருப்பது வெளிநாட்டு வேலைவாய்ப்புத்தான்.
இந்த வாய்ப்பை வழங்குவதற்கு பதிவு செய்யப்பட்ட ஏறக்குறைய 1043 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் நாடு பூராகவும் உள்ளன. இம்முகவர் நிலையங்களினால் பல பெண்கள் தொழில் வாய்ப்புப் பெற்று வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இவ்வாறு வெளிநாடு செல்கின்றவர்களில் 0.14 வீதமான பெண்கள் தொழில்வாண்மை பெற்றவர்கள். 0.65 வீதத்தினர் நடுத்தர தொழில்வாண்மைமிக்கவர்கள்.
4.9 வீதத்தினர் தொழில் திறன் மிக்கவர்கள். ஆனால், இவர்களில் 94 வீதமானோர் எவ்வித தொழில்திறனுமின்றி வீட்டுப் பணிப்பெண்களாக செல்கின்றனர்.
இவர்கள் செல்கின்ற பிரதான நாடுகளாக அல்லது இலங்கைப் பணிப்பெண்களை வரவழைக்கின்ற முக்கிய நாடுகளாக சவூதி அரேபியா, குவைத், கட்டார், ேஜாதான், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகியவை உள்ளன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2013ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் 2009ஆம் ஆண்டு 87,404 பேரும் 2010ஆம் ஆண்டில் 86,917பேரும், 2011இல் 81,442பேரும் 2012இல் 94,612 பேரும் 2013இல் 73,987 பேருமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரியச் சென்றுள்ளனர். 2014இல் சென்றுள்ள பணிப்பெண்களின் எண்ணிக்கை 88,661 ஆகும்.
எவ்வித தொழில் முன் அனுபவமுமின்றி பணத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு செல்கின்ற அல்லது முகவர்களினால் அனுப்பி வைக்கப்படுகின்ற அநேக பெண்கள்; அங்கும் இங்குமாக பிரச்சினைகள் பலவற்றிற்கு முகங்கொடுக்கின்றனர்.
அந்நாடுகளிலுள்ள வீடுகளில் பணிக்காக அமர்த்தப்படுகின்றபோது அவ்வீடுகளின் நவீனத்திற்கு ஏற்ப தமது பணியினை நிறைவு செய்ய முடியாமை, அவர்களது மொழியில் உரிய முறையில் தொடர்பாடலை ஏற்படுத்த முடியாமை, அந்நாடுகளின் கலாசார பண்பாடுச் சூழலுக்கு ஏற்ப சுயமாக இயங்க இயலாமை, அந்நாடுகளின் தொழில் உறவு, சட்டம் ஒழுங்கு என்பவை தொடர்பான போதிய அறிவு காணப்படாமை போன்ற பலவீனங்களுடன் பணி புரிகின்ற இவர்களினால், புரிகின்ற தொழிலுக்குக் கிடைக்கும் பணத்தைக் கூட முறையாக முகாமைத்துவம் செய்ய முடியதாவர்களாக உள்ளனர்.
இதனால் பல்வேறு துயரங்களை அவ்வீடுகளில் எதிர்நோக்க வேண்டி ஏற்படுவதுடன், மனிதாபிமானமற்ற உடல் உள உபாதைகளையும் ஒரு சில தொழில் வழங்குனர்கள் இலங்கைப் பணிப்பெண்களுக்கு ஏற்படுத்துகின்றனர்.
அத்தோடு கணவனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்கின்ற இப்பெண்களின் குடும்பம் ஒட்டுமொத்த சீரழிவுக்குள் தள்ளப்படுகிறது. அண்மைக்காலமாக வெளிவரும் ஊடகச் செய்திகளினூடாக அவை நிரூபிக்கப்படுகின்றன. நாட்டில் உறவுக்காரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாடுகளில் அதிகம் பாதிக்கப்படுவது தாய் வெளிநாடு சென்ற குடும்பப் பிள்ளைகளாகும்.
அத்துடன, அக்குடும்பப் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு போதைவஸ்துப் பாவனை, விரும்பத்தகாத நடத்தைக்கோலங்கள் போன்றவற்றிற்கும் பிள்ளைகள் உள்ளாகுகின்றனர்.
கணவன் மதுபோதைக்கு அடிமைப்பட்டு மாற்று வழிகளில் தகாத உறவுகளை ஏற்படுத்தி வாழும் சூழலும் ஏற்படுகிறது. இதனால் தாயும் இல்லை தந்தையும் இல்லை என்ற குழப்பகரமான நிலைக்குள்தள்ளப்படும்; பிள்ளைகள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்
இவ்வாறான நிலையில்தான் கடந்த 2013ஆம் ஆண்டு மூதுரைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய றிஸான நபீக் கொலைக்குற்றம்சாட்டப்பட்டு சவுதி அரேபியாவின் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப மரண தண்டனையை எதிர்நோக்கியதும், தற்போது மருதானையைச் சேர்ந்த 45 வயது பெண்மணி தகாத உறவில் ஈடுபட்டார் என்பதற்காக ஷரியாச் சட்டத்தின் பிரகாரம் நீதிமற்றம் வழங்கியுள்ள தண்டணையை எதிர்நோக்கியுள்ளமையும் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சவூதி அரேபியாவும் சட்டமும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் உள்ளது. ஒவ்வொரு நாடும் அந்நாட்டில் வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு ஏற்ப குற்றம் புரிவோருக்கு தண்டனை வழங்கி வருகிறது.
பெரும்குற்றம், சாதாரண குற்றம் என குற்றங்களின் தன்மையைப் பொறுத்து அக்குற்றங்களுக்கான தண்டனை விதிக்கப்படுகிறது.
இறைமையுள்ள ஓர் இஸ்லாமிய நாடு என்ற ரீதியில் சவூதி அரேபியாவில் இஸ்லாமியச் ஷரியாச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. எந்தவொரு சட்டமும் குற்றத்திற்கான தண்டனையை எழுந்தமானமாக அல்லது நீதி தவறி வழங்கச் சொல்லவுமில்லை. அவ்வாறு அச்சட்டங்கள் வகுக்கப்பட்டுமில்லை.
எந்தவொரு குற்றமாகவிருந்தாலும் அந்தக் குற்றம் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு, சாட்சிகள் நிரூபிக்கப்பட்டு அவற்றின் பின்னரே அந்நாட்டுச்சட்டங்களின் படி அக்குற்றத்திற்கான தீர்ப்பு நீதிமன்றங்களினால் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இஸ்லாமிய ஷரியாச் சட்டத்தின் உள்ளர்த்தம் தொடர்பான சரியான தெளிவுபடுத்தல் இல்லாமையும் முறையாக முன்வைக்கப்பட வேண்டிய இடங்களில் உரியவர்களினால் முன்வைக்கப்படாது இருப்பதனாலும் இச்சட்டம் தொடர்பான சந்தேகங்களும் விமர்சனங்களும் மாற்றுக் கருத்துக்களும் காலத்திற்குக் காலம் எழுகின்றன. ஷரியாச்சட்டம் தொடர்பான முறையான புரிதல் இவ்வாறு அதனை விமர்சிக்கின்றவர்களிடம் காணப்படுவதில்லை.
புங்குடுதீவு மாணவி வித்தியா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டபோதும், சிறுமி சேயா அவ்வாறே கொலை செய்யப்பட்டபோதும் சவூதி அரேபியாவில் வழங்கப்படுகின்ற தண்டனை போன்று வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
ஏனெனில், பாரிய குற்றங்களைப் புரிகின்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றபோதுதான் ஏனையவர்களும் அக்குற்றங்களைப் புரியாது தடுக்கப்படுவார்கள் என்ற உணர்வுடன் அக்குரல்கள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.
இருப்பினும், நாலுபேர் குரல் எழுப்புகிறார்கள் என்பதற்காக எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்படுவதில்லை. மரண தண்டனை எல்லா நாடுகளிலும் விதிக்கப்படுகிறது. ஆனால் அவை அந்நாடுகளில் நிறைவேற்றப்படுவதில்லை. இருந்தபோதிலும் அரபு நாடுகளில் குற்ற விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவ்வாறானதொரு தண்டனைக்கு உள்ளாகியுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், “சவூதியில் எமது பெண்ணொருவருக்கு கல்லெறிந்து கொலை செய்யுமாறு வழங்கிய தீர்ப்பு அந்த நாட்டின் சட்டமாகும். அந்த நாட்டின் சட்டங்களுக்கு எதிராக எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இலங்கையில் ஒருவர் தவறுசெய்தால் எமது நாட்டின் சட்டப்படியே அதற்குரிய தண்டணை வழங்கப்படும். அதேபோன்றுதான் வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கமையவே குற்றங்களுக்கான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. என்றாலும் எமது நாட்டுப் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்து மேன்முறையீடு செய்திருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன.
மருதானையைச் சேர்ந்த இந்தப் பெண் 2013ஆம் ஆண்டில்தான் சவூதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். 2014 ஏப்ரல் மாதத்தில்தான் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மார்ச் 9ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த பெண் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை 4 தடவைகள் ஒப்புக்கொண்டுள்ளார்.
இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாணையின்போது குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் பிறகுதான் அவருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டுவது அவசிமாகும்.
வறுமை ஒழிப்பும் உயிர்ப்பாதுகாப்பும்
வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெற்றுச் செல்கின்ற வீட்டுப் பணிப்பெண்களினால் அந்நியச் செலாவணி நாட்டுக்கு வந்து சேர்ந்தாலும், அவர்களுக்கு அந்நாடுகளில் ஏற்படுகின்ற பாதிப்புக்களும் அவர்களின் குடும்பம் அவர்களின் பிரிவால் எதிர்நோக்கும் சிக்கல்களும் ஈடு செய்யப்பட முடியாதவை.
குறிப்பாக எவ்வித முன் அனுபவமுமின்றி, எவ்வித தொழில்திறனுமில்லாமல் சாதாரண வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படுவதனால் அவர்கள் அடையும் பயனை விட அவர்களை அனுப்பி வைப்போர் அடையும் இலாபமே அதிகம் என்பதை மறுக்க முடியாது.
வறுமைக்குட்பட்டுள்ள குடும்பங்களில் பெண்களும் வருமானம் ஈட்டினால்தான் வறுமையை ஒழித்து குடும்ப வாழ்வை சிறப்பாக்க முடியும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றதொரு சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வறுமையை ஒழிப்பதற்கான மாற்று வழிகள் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமாகும்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பப் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுவதும் அச்சுய தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதும் அவசிமாகியுள்ளது.
வறுமையின் நிமித்தம் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அவ்வாறு அவர்கள் அங்கு செல்வதனால் ஏற்படுகின்ற விபரீதங்களை தடுப்பதற்கும், அதனால் நாடும் ஏனையவர்களும் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்ற அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கும் தீர்வாக அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுவது முக்கியம்.
இதற்கு அரசாங்கத்தினால் மாத்திரமின்றி சமூகத்திலுள்ள செல்வந்தர்களினதும், சமூக அமைப்புக்களினதும் பங்களிப்புக்கள் அவசியமாகவுள்ளன.
அவ்வாறு பங்களிப்புக்களை வழங்குவதற்கான மனப்பாங்குகள் சமூக மட்டத்தில் ஏற்படுத்தப்படுவதுடன், வறுமையினால் வீட்டுப்பணிப்பெண்களாகச் செல்வதை அல்லது இலாபமீட்டுவதற்காக அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதன் மூலம் அப்பாவிப் பெண்கள் உடல் உளத் துன்புறுத்தலுக்கு ஆளாகுவது தடுக்கப்படுவதுடன், அவர்களின் உயிர்களும் பாதுகாக்கப்படும். அத்தோடு குடும்பங்களும் சீர்கெட்டுப்போகாமல் காப்பாற்றப்படும்.
ஆகையால், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வறுமை ஒழிப்புக்கான முறையான திட்டங்கள் சமூகமட்டத்தில் வகுக்கப்படுவதும்; வீட்டுப்பணிப்பெண்களாக அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது தடுக்கப்படுவதும்; உள்நாட்டிலேயே அவர்களின் கனவுகள் நிறைவேறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படுவதும் காலத்தின் தேவையென சகல மட்டங்களிலும் கருதப்படுவதும் அவசியமாகும்.
source: http://vidivelli.lk/article