ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே!
நிரந்தரமில்லாத, அற்பமான, சொற்ப கால வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கிவிடுகிறோம்.
50 ஆண்டு அல்லது 60 ஆண்டு வாழ்வுப் பயணத்தை 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம்.
இறைவன் மீது ”தவக்கல்’ (நம்பிக்கை) இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம்.
அற்பகான ஆரம்ப நிலையையும், இறுதியான மரணத் தருவாயையும் மறந்து விட்டு, மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம்.
பொய், புரட்டு பித்தலாட்டம், குடி, சூது, விபச்சாரம், போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான். உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி பாவத்தில் மூழ்கும்போது வாழ்க்கையே நரகமாகி விடுகிறது.
ஏன் இந்த இழிநிலை?!
நாம் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டோம்?
இந்த உலகம் யாருக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது?
இங்குக் காணும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் யாருக்காகச் சுழல்கின்றன?
கடல் யாருக்காக விரிந்து கிடக்கிறது?
கணக்கற்ற ஜீவராசிகளையும் உயிரினங்களையும், விலை மதிக்க முடியாத முத்து பவளம் போன்ற இரத்தினங்களையும் நீரால் யாருக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது?
இந்தப் பூமி யாருக்காகப் பறந்து கிடக்கிறது?
நவதானிய மணிகள், பலவிதமான கனிகள் யாருக்காகக் கொடுக்கப்பட்டது?
சுருக்கமாக சொல்வதானால், இந்த உலகம் யாருக்காக? மனிதனுக்காக தானே படைக்கப்பட்டுள்ளது.
மனிதன் மறு உலக வாழ்க்கையைத் தேவையான நல்ல அமல்களை செய்து கொள்ளப் படைக்கப்பட்டிருக்கிறான்.
இவற்றையெல்லாம் மறந்து விட்டு மருட்சியில் வாழ்வதால் இந்த வையகத்திற்கு என்ன பயன்? நம்மால் நமக்கே என்ன பயன்?
நேயர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!
எவ்வளவு நாள் வாழ்ந்தாலும், ஒரு நாள் மரணம் வந்தே தீரும். அப்போது பொறியில் மாட்டிய எலிக் கதைதான். சாக்கைக் கடித்து சட்டியைச் சுரண்டி, நிலத்தில் துவாரமிட்டு, பயிர்களை நாசமாக்கி தானிய மணிகளை வீணாக்கி ஆடி ஓடித் திரிந்தாலும், ஒரு நாள் பொறியில் சிக்கித்தானே ஆகவேண்டும். அதுபோல், இப்புவியில் எங்கும் எப்படியும் மனம் போன போக்கில் நடக்க வாய்ப்புண்டு. ஆனால் கடைசியில் மரணம் என்ற இடுக்கியில் சிக்கி, மலக்குகள் உயிரை வாங்குவார்கள் என்பதை மட்டும் மறக்கவோ மறுக்கவோ யாராலும் முடியாது. இறைவனுக்கு கட்டுப்பட்டு ஒரு ஸாலிஹான நல்லடியார்களாக நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டும்! எந்த நிலையில் நாம் வாழ்கிறோமோ அதே நிலையில் தான் நமக்கு மரணம் வரும்!
இயக்க சண்டை, பிறை சண்டை, கருத்து மோதல் , தர்க்கம் , ஜமாத் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு. நாம் ஒவ்வொருவரும் நம் நப்ஸுடன் சண்டை போடவேண்டும். போராடவேண்டும்! நீங்கள் எந்த இயக்கத்தினால் அல்லது எந்த ஜமாத்தினாலும் இருங்கள்! ஆனால், ஒரு நல்ல முஸ்லிமாக இருங்கள்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
-சத்திய பாதை இஸ்லாம்
http://islam-bdmhaja.blogspot.com/2016/07/one-day-death.html