எனக்கு ஒரு நண்பன் இருந்தான்
”சுவனவாசிகளில் ஒருவர்; ”எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான்” எனக் கூறுவார்.
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
”நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
(அவ்வாறு கூறியவனை) ”நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
(அவனிடம்) ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
”என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
”(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?
”(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.”
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும். (அல்குர்ஆன் 37:51-61)
”அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ”அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.
”எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
”நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான!” (என்று புலம்புவான்.) (அல்குர்ஆன்: 25:27-29)
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். (அல்குர்ஆன்:43:67)
”எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
எதுவரை யென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); ”ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.
(அப்போது) ”நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).(அல்குர்ஆன்:43:36-39)
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர – நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன்:44:41-42)
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்). (அல்குர்ஆன்:70:10-11)
நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். (அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். (ஆதாரம் : அபூதாவூது).
மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். (முஸ்லிம்)
-சத்திய பாதை இஸ்லாம்
source: http://islam-bdmhaja.blogspot.com/2016/05/good-friend-bad-friend.html