நீஸ் (பிரான்ஸ்) தாக்குதல் – ஒரு பார்வை!
கடந்த வியாழனன்று பின்னிரவில், பிரான்சின் தென்பகுதியில் இருக்கும் நீஸ் நகரில், பாஸ்டிய் தின (Bastille Day) கொண்டாட்டத்தின் சமயத்தில் ஒரு லாரி திட்டமிட்டு படுவேகமாக கூட்டத்திற்குள்ளாக புகுந்ததில், குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.
இந்த படுபயங்கரத் தாக்குதல்களில் இறந்தவர் எண்ணிக்கை நாள் முழுவதும் அதிகரித்தவண்ணம் இருந்து வருகிறது. பலியானவர்களில் சில குழந்தைகளும் இடம்பெற்றிருக்கின்றனர்.
பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் நெருக்கடி கால பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்சின் தெற்குப் பகுதியில் இருந்து பாரிஸுக்கு விரைந்த அதே நேரத்தில், நீஸ் நகர வீதிகள் கனரக ஆயுதமேந்திய போலிஸ் வெள்ளத்தால் நிரம்பியிருந்தன. இந்த அட்டூழியம் ஒரு “பயங்கரவாதத் தன்மை” உடையதாய் இருந்ததாக ஹாலண்ட் உடனடியாக உறுதி செய்தார்.
வெள்ளியன்று அதிகாலை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் அறிவித்தார்: “பிரான்ஸ் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கிறது.” தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாய் அவர் ஒரு உரையில் சுட்டிக்காட்டியிருந்தபடி ஜூலை 26 அன்று “அவசரகால நிலை”யை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வரப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். மாறாக அது மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படவிருக்கிறது.
அந்த வாகனத்தின் ஓட்டுநரை போலிஸ் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர் போலிஸ் அறிந்திருந்த ஒரு நபரே என்று அது கூறியதாகவும் iTele எனும் பிரான்சின் செய்தி நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ் மற்றும் துனிசியா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை கொண்டிருந்த 31 வயதான ஒரு நபர் என்று நீஸ் மத்தன்போன்ற உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த டிரக் வெடிமருந்துகள், வெடிகுண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் நிரம்பியதாய் இருந்தது என பிராந்தியத்தின் தலைவரான கிறிஸ்தியான் எஸ்த்ரோஸி சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குப் பின் ட்வீட் செய்திருந்தார். ஆயினும், இந்தத் தாக்குதல்களுக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்றிருக்கவில்லை.
நாட்டின் தேசிய விடுமுறைக் கொண்டாட்டத்தில் இரவு 10.30 மணியளவில் வானவேடிக்கைகளைக் காண்பதற்காக Promenade des Anglais கடற்கரைப் பகுதியில் கூடியிருந்த கூட்டத்திற்குள்ளாக ஒரு பெரிய வெள்ளை நிற டிரக் ஒன்று வேகத்துடன் நுழைந்ததைக் கண்டதாக கண்ணால் கண்ட சாட்சிகள் கூறினர். French Riviera இல் அமைந்திருக்கும் நீஸ் நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கும், பிரான்சு நாட்டினர் விடுமுறை கொண்டாடுவதற்கும் புகழ்பெற்ற ஒரு இடமாக இருந்து வருவதாகும்.
லாரி திசைமாறி பாதசாரிகளின் நடைபாதைக்குள் புகுந்ததோடு, அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதும் தான் வேகம் பிடித்ததாகத் தோன்றியதாக ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்ட விபரங்கள் தெரிவித்தன. சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு லாரி தொடர்ந்து முன்னேறிச் சென்றது. இந்த வாகனம் “வழியில் இருந்த ஒவ்வொருவரையும் நசுக்கிச் சென்றது” என கண்ணால் கண்ட சாட்சி ஒருவர் கூறினார்.
பாதையெங்கும் சடலங்கள் இறைந்து கிடந்த துயரமான காட்சிகளை மற்றவர்கள் வருணித்தனர். இந்த சம்பவத்தைக் கண்ட நீஸ் மத்தன் இன் செய்தியாளரான Damien Allemand பின்வருமாறு கூறினார்: “மக்கள் ஓடுகிறார்கள். பீதி நிலவுகிறது. நடனமாடிக்கொண்டிருந்த கூட்டத்தின் மீது அந்த நபர் லாரியை ஏற்றினார்…. மக்கள் இரத்தம் கொட்ட இருந்தார்கள். பலர் இதில் காயமடைந்திருக்க வேண்டும்.” உள்ளூர்வாசிகள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என உள்ளூர் நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.
அருகிலிருந்த Hotel Negresco காயமடைந்தோருக்கான தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டதை சமூக ஊடக படங்கள் காட்டின. உறவினர்களைக் காணாத குடும்பங்கள் சமூக ஊடகங்களில் படங்களை வெளியிட்டு, அவர்களிடம் இருந்து அழைப்பு வருவதற்காக நம்பிக்கை கொண்டு காத்திருந்தன.
லாரிக்குள் இருந்த தாக்குதல்தாரர்களின் எண்ணிக்கை குறித்து ஆரம்பத்தில் முரண்பாடான தகவல்கள் வெளியாகின. அந்த வாகனத்தில் இருந்து ஒரேயொரு ஓட்டுநர் மட்டுமே இறங்கி கூட்டத்தின் மீது சுடத் தொடங்கியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவை இரண்டு தாக்குதல்தாரர்கள் இருந்தனர் என்றும் அவர்கள் சுமார் 50 முறை சுட்டதாகவும் கூறுகின்றன. டிரக்கின் ஓட்டுநர் போலிசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலைகாரர்களின் நோக்கங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டால், நீஸ் சம்பவம் பிரான்சில் கடந்த 18 மாத காலத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது பெரும் உயிர்ச்சேதம் விளைவித்த பயங்கரவாதத் தாக்குதலாய் இருக்கும்.
முந்தைய இரண்டு தாக்குதல்களில், பயங்கரவாதிகள் பிரெஞ்சு உளவு முகமைகளுக்கு நன்கறியப்பட்டவர்களாய் இருந்தனர். லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்காவின் தலைமையிலும் பிரான்சின் ஆதரவுடனும் நடந்த ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளில் தலைமை பினாமிப் படையாக இயங்கியிருந்த இஸ்லாமியக் குழுக்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட ஒரு பரந்த ஜிகாதிய சூழலின் பாகமாக அந்த பயங்கரவாதிகள் இருந்தனர்.
2015 ஜனவரி 7 அன்று, Saஞ்d மற்றும் Chளூrif Kouachi ஆகியோர் சார்லி ஹெப்டோபத்திரிகையின் அலுவலகங்களின் மீது நடத்திய ஒரு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர், இன்னும் 11 பேர் காயமடைந்தனர். அவர்களின் கூட்டாளியான Amedy Coulibaly ஒரு யூத சூப்பர்மார்க்கெட்டில் நடந்த பணயக்கைதி சம்பவ சுற்றிவளைப்பில் கொல்லப்பட்டார்.
குவாச்சி சகோதரர்கள் அரேபிய தீபகற்பத்தில் அல் கெய்தா தலைவர்களுடன் கொண்டிருந்த நேரடித் தொடர்புகளின் காரணமாக 2010 முதல் 2015 வரையான காலத்தில் பாதுகாப்பு முகமைகளால் கண்காணிக்கப்பட்டு வந்தவர்களாய் இருந்தனர். விளக்கமில்லாத வகையில், தாக்குதலை அவர்கள் நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக பிரான்சின் உளவுத் துறை அவர்கள் மீதான கண்காணிப்பை நிறுத்தியிருந்தது. பாசிச மற்றும் முஸ்லீம்-விரோத தேசிய முன்னணியுடன் தொடர்புபட்ட ஒரு போலிஸ் உளவாளியான Claude Hermant யிடம் இருந்து Coulibaly ஆயுதங்கள் பெற்றிருந்ததும் வெளிவந்தது.
2015 நவம்பர் 13 அன்று, இஸ்லாமிய அரசுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகள் பாரிஸ் எங்கிலும் ஒருங்கிணைப்பான தாக்குதல்களை நடத்தி 130 பேரை படுகொலை செய்தனர். குவாச்சி சகோதரர்களின் விடயத்தில் போலவே, இந்த தாக்குதல்தாரர்களும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு அறியப்பட்டவர்களாகவே இருந்தனர். தப்பித்த குற்றவாளிகளில் ஒருவரான Salah Abdeslam நான்கு மாதங்களுக்குப் பின்னர், புரூசெல்ஸில் பெரும் கண்காணிப்புக்கு உட்பட்ட Molenbeek மாவட்டத்தில் அவரது பெற்றோர்களது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஒரு வீட்டின் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிரியாவில் நுழைய முயன்றதற்காக 2015 ஜனவரியில் துருக்கிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தவராக Abdeslam இருந்திருந்த போதும் கூட, அவரால் ஐரோப்பா எங்கிலும் சுதந்திரமாகப் பயணம் செய்து வர முடிந்திருந்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இஸ்லாமிய அரசின் போராளிகள் புரூசெல்ஸ் விமான நிலையத்தின் மீதும் நகரின் மற்ற இடங்களின் மீதும் தாக்குதல் நடத்தியதில் 31 பேர் கொல்லப்பட்டனர் 300 பேர் காயமடைந்தனர். இடம் மற்றும் இலக்குகள் உட்பட சதியின் விபரங்களை உளவு முகமைகள் முன்பே அறிந்திருந்ததாக தகவல்கள் கூறின, ஆனாலும் “புள்ளிகளை இணைத்துப் பார்க்க” தவறி விட்டிருந்ததாக பெல்ஜிய அதிகாரிகள் கூறினர்.
ஒவ்வொரு அட்டூழியமும் போலிஸ் மற்றும் உளவு முகமைகளது அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர், ஹாலண்ட் அரசாங்கம், முன்கண்டிராத “அவசரகாலநிலை” ஒன்றை ஸ்தாபித்து, ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வதற்கும் சந்தேகிப்பவர்களை குற்றச்சாட்டுகள் இல்லாமல் கைதுசெய்வதற்குமான அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியது. சமீப மாதங்களில், மில்லியன் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்களும் மாணவர்களும் சட்டத்தடைகளை மீறி, சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான எல் கொம்ரி தொழிலாளர் சட்டத்திருத்தத்திற்கு எதிராக பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பெருகும் சமூகப் பதட்டங்களும் மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளில் பிரான்சின் பங்கேற்பு அதிகரித்தமையும் பயங்கரவாதப் பதிலிறுப்புகளைக் கொண்டு வரலாம் என பாதுகாப்பு முகமைகள் எச்சரிக்க இட்டுச் சென்றதற்கு மத்தியில் இந்த சமீபத்திய தாக்குதல் நடந்திருக்கிறது. கடந்த வாரத்தில், உள்நாட்டுப் பாதுகாப்புக்கான பிரான்சின் பொது இயக்குநரகத்தின் (DGSI) தலைவரான Patrick Calvar மே மாதத்தில் கூறிய கருத்துகள் பொதுவில் வெளியிடப்பட்டன.
கார் குண்டுவெடிப்புகள் மற்றும் வெடிபொருட்கள் மூலமான குண்டுவெடிப்புகள் உட்பட இஸ்லாமிய அரசு மூலமாக நடக்க சாத்தியமுள்ள தாக்குதல்கள் குறித்து அவர் கூறியிருந்தார். நேற்று காலையில், ஹாலண்ட், தனது பாஸ்டிய் தின உரையில், இஸ்லாமிய அரசுக்கு எதிரான, குறிப்பாக மொசூல் நகரைக் குறிவைத்த, நடவடிக்கைகளை பிரான்ஸ் தீவிரப்படுத்தவிருப்பதாக அறிவித்தார். “சிரியா மற்றும் ஈராக்கில் நாம் எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் விடயத்தில் நாம் பெரும் உறுதியைக் காட்டியாக வேண்டும், நான் அறிவித்திருக்கிறேன், மொசூல் நகரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஈராக்கியர்களுக்கு நாம் அளித்துக் கொண்டிருக்கின்ற ஆதரவை நாம் மேலும் வலுப்படுத்தவிருக்கிறோம்” என்று அவர் அறிவித்தார்.
பிரான்ஸ் தரைப்படை தலையீட்டை செய்யவில்லை என்றாலும் “பிரான்சின் இராணுவ ஆலோசகர்கள் அங்கே இருப்பார்கள்” என்று பிரெஞ்சு ஜனாதிபதி கூறினார்.
அமெரிக்காவைப் போலவே, பிரெஞ்சு அரசாங்கமும், பஷார் அல்-ஆசாத்தின் சிரிய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் இஸ்லாமிய குழுக்களை செயலூக்கத்துடன் ஆதரித்து வந்திருக்கிறது. ஆயினும், 2014 இன் போது ஈராக்கிற்குள்ளாக இஸ்லாமிய அரசின் முன்னேற்றத்தினை அமெரிக்க-ஆதரவிலான அரசாங்கத்திற்கும் ஈராக்கின் எண்ணெய் மற்றும் வளங்களின் மீதான அதன் மேலாதிக்கத்திற்குமான ஒரு அச்சுறுத்தலாகவே அமெரிக்கா கருதியது. அமெரிக்காவும் பிரான்ஸ் உள்ளிட்ட அதன் கூட்டாளிகளும் இஸ்லாமிய அரசு மீதான ஒரு வான் போரை நடத்திய அதேவேளையில் சிரியாவிற்குள்ளாக மற்ற இஸ்லாமியப் படைகளை தொடர்ந்தும் ஆதரித்து வந்திருக்கின்றன.
ஹாலண்ட் தனது உரையில் பிரான்சுக்குள்ளாக சமூகப் பதட்டங்கள் வளர்வது குறித்தும் அரசியல் நெருக்கடி பெருகுவது குறித்தும் சுட்டிக் காட்டியிருந்தார். அவர் அறிவித்தார்: “நான் பிரான்சை பாதுகாத்தாக வேண்டும், அது நொறுங்கக் கூடியதாய் இருக்கிறது, எந்த தருணமும் அது விரிசல் காணலாம்.” அவரது அரசாங்கம் ஜூலை 26க்குப் பின்னர் “அவசரகாலநிலை”யை முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாகவும், பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் நிலைநிறுத்தப்பட்ட பெரும் போலிஸ் எண்ணிக்கையை குறைக்கவிருப்பதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.
நாம் “எப்போதைக்குமாய் அவசரகால நிலையை நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” என்றார் ஹாலண்ட். “அது அர்த்தமில்லாததாகி விடும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயல்படுத்தக் கூடிய சட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாக இனியும் நாம் இல்லை என்பதாய் அது அர்த்தமளித்து விடும்.”
அடுத்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், நீஸ் அட்டூழியத்தைக் காட்டி அசாதாரண அதிகாரங்களை இன்னுமொரு மூன்று மாதங்களுக்கு அவர் நீட்டித்து விட்டார். இராணுவ தன்னார்வலர்கள் போலிசுக்கு உதவ வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், போலிஸ் அல்லது இராணுவ எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் இருக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.
source: http://khaibarthalam.blogspot.in/2016/07/blog-post_18.html