”விவசாயிகள் மட்டுமல்ல விவசாயமும் வெளியேறப் போகிறது!”
தமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2001 தொடங்கி 2011-ம் ஆண்டுவரையிலான 10 ஆண்டு காலத்தில் வேளாண் தொழிலை விட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.
”விவசாயிகள் மட்டுமல்ல… விவசாயமும் சேர்ந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம், அதை அழித்துவருகிறது” என்று ஆதங்கப்பட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.
”ஒரு காலத்தில் விவசாயம் மரியாதைக்குரியதாக இருந்தது. ஆனால்,உணவுப் பயிர் விவசாயத்தை அழித்துப் பணப் பயிர் விவசாயத்தைக் கொண்டுவந்து விவசாயிகளிடம் திணித்ததன் விளைவு, அவர்களைக் கிராமங்களைவிட்டே ஓடவைத்துவிட்டது. அரசாங்கம் விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. விளைபொருளுக்கான விலையை வழங்காமல், அதை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது.
செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவந்த நம் விவசாயிகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் பணப் பயிர் சாகுபடிக்கு விரைவாகத் தாவவைத்து வீரிய விதைகளை அவன் தலையில் கட்டியது. உரம், பூச்சிமருந்து என்று ரசாயனங்களைக் கொடுத்துக் கடனாளி ஆக்கியது.
ராகி, சோளம், கம்பு, தினை, கொள்ளு, பாசிப் பயறு, தட்டை என்று உணவுப் பயிர்கள் செய்து ‘வரவு’ விவசாயியாக இருந்தவனுக்கு, பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள் செலவை அதிகரித்ததுதான் மிச்சம்.
1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை ‘டவுன் பஸ்’ ஏறவைத்தது” என்றார் நம்மாழ்வார்.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வேளாண் பொருளாதார வல்லுனரும் அமெரிக்காவின் கார்வெல் விவசாயப் பல்கலைக்கழகத்தின் இப்போதைய ஆலோசகருமான முனைவர் சி.ராமசாமியிடம் கேட்டபோது, ’40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் யாரும் விவசாயத்தில் இப்போது இல்லை.
அடுத்த தலைமுறை விவசாயக் குழந்தைகள் படித்து நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்குச் சென்றுவிட்டனர். குறைவாகப் படித்தவர்கள் பஞ்சாலை, பனியன் கம்பெனி, பட்டாசுத் தொழிற்சாலை போன்ற சிறுதொழில் கூடங்களின் தினக்கூலியாகிவிட்டனர். சிறு விவசாயிகள் பலரும் விவசாயக் கூலிகளாகவும் கட்டட வேலையாளாகவும் மாறிவிட்டனர்.
பல்லாயிரக்கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவிட்டன. முப்போகம் விளைந்த பூமியில் ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறக்கின்றன. வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்துவந்த கால்நடைகள் மேய்வதற்கு இடமின்றிப் போய்விட்டன. விவசாயம் செய்வதைவிட விவசாயக் கூலியாக இருப்பது நிரந்தர வருமானத்தைக் கொடுக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஆட்கள் பற்றாக்குறைகளைப் போக்கிட சிறுசிறு வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். துண்டுதுண்டாக இருக்கும் விவசாய நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் கிராமங்கள்தோறும் அமைக்க வேண்டும். பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார் ராமசாமி.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி, ”கஷ்டப்பட்டு நஷ்டப்படுகிற தொழிலாக விவசாயம் மாறிவருகிறது. கட்டுப்படியாகாத விலை, கடுமையான வறட்சி, பயிர்களைத் தாக்கும் மர்ம நோய்கள் போன்ற இடர்பாடுகள் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது.
சொகுசு கார் வாங்க உடனே கடன் கொடுக்கிற பல வங்கிகள், விவசாயி ஒரு கறவைமாடு வாங்க கடன் தரத் தயங்குகிறது. பல கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் பெரும் தொழிலதிபர்களின் கடன்தொகை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்கிறது. 1,000 ரூபாய் கடன் வைத்திருக்கும் விவசாயி வீட்டுக் கதவில் ‘ஜப்தி’ நோட்டீஸ் ஒட்டுகிறது” என்றார் சின்னசாமி.
ஏர் நடந்தால் பார் நடக்கும் என்றாள் ஒளவை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் ‘பார்’ மட்டும்தான் நடக்கும்போலும்!