கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை ‘களா’ செய்ய வேண்டுமா?
மாதவிடாய் ஏற்பட்டப் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும் என்பதற்கு நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போன்று கர்ப்பிணி – பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்யலாம் என்பதற்கு நாம் தேடி பார்த்த வரை எந்த ஒரு ஹதீஸும் கிடைக்கவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹு கர்ப்பிணித் தாய்க்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை அகற்றி விட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ் விலக்களித்துள்ளான் என்பது நிரந்தரமானதா.. தற்காலிகமானதா.. என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை பொருத்தவரை அவர்கள் சூழ்நிலையை அணுசரித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகின்றது.
அல்லாஹ் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் சலுகையளித்துள்ளான். கர்ப்பிணி பெண்களும் சலுகைப் பெருகிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கியுள்ளார்கள். நோயாளிகளிலும், பிரயாணிகளிலும் தற்காலிக சலுகையும் நிரந்தர சலுகையும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இந்த பெண்கள் யாரோடு ஒத்துப் போவர்கள் என்பதை பார்ப்போம்.
பிரயாணிகளின் நிலையும் கர்ப்பிணிப் பெண்களின் நிலையும் வெவ்வேறானவை என்று நாம் சிந்தித்தால் நோயாளிகளைப் பற்றி பேசும் வசனம் இவர்களுடன் ஒத்துத்தான் போகும்.
உங்களில் எவரேனும் பிரயாணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் அவர் வேறு நாட்களில் நோற்றுவிடவும். (அல்குர்ஆன் 2:184,185)
நோயாளிகளும் – கர்ப்பிணிகளும்.
நோயளிகளுக்கு நோன்பு தேவையில்லை என்று சொல்வதற்கு நியாயம் இருந்தும் இறைவன் அவர்களுக்கு நிரந்தர விலக்களிக்கவில்லை. நோயிலிருந்து விடுபட்டவுடன் நோற்க வேண்டும் என்று கூறி விட்டான். நோயாளிகளுக்கே இதுதான் நிலவரம் என்றால் கற்பிணிகளுக்கோ – பாலூட்டுபவர்களுக்கோ முழுவதுமாக விலக்களித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் கர்ப்பிணி – பாலூட்டுபவளை விட நோயாளிகளே அதிக சிரமத்திற்குள்ளாகுபவர்கள். நோன்பிலிருந்து முழுதும் விலக்களிக்க தகுதியுள்ளவர்கள் இவர்கள் தான். இவர்களையே இறைவன் பின் வரும் நாட்களில் நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளதால் இந்த வசனத்திற்கு முரண்படாமல் அந்த ஹதீஸை விளங்குவதுதான் பொருத்தமானதாகும்.
தொடர் நோயாளிகளும் – தொடர் கர்ப்பிணிகளும்
நோயாளிகள் பின்வரும் நாட்களில் நோன்பை நோற்கலாம் என்றால் அவர்கள் நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டும். சுகம் பெற முடியாத அளவிற்கு தொடர் நோயால் தாக்கப்பட்டவர்கள் (உதாரணமாக முதுமை – வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவற்றை சொல்லலாம்) ஒவ்வொரு நோன்புக்கு பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடவேண்டும். இதை 2:184 வசனத்திலிருந்து விளங்கலாம்.
இதே நிலை கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒத்துதான் போகும். எப்படி என்றால், கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தைப் பெற்றெடுத்து பாலூட்டி முடியும் வரை மூன்று வருடத்துடைய, குறைந்த பட்சம் இரண்டு வருடத்துடைய நோன்பு அவளுக்கு விடுபட்டுப் போய் விடும். அதன் பிறகு அவள் தொண்ணூரு நாட்கள் – குறைந்த பட்சம் அறுபது நாட்கள் நோன்பு நோற்க வேண்டி வரும். இதுவே அவளுக்கு சுமை என்றாலும் அந்த சந்தர்பத்தில் அவள் அடுத்த கர்ப்பம் தரித்து விட்டால் மீண்டும் இரண்டு மூன்று மாத நோன்புகள் கணக்கில் வந்து நின்று விடும். அவள் காலம் முழுதும் நோன்பு நோற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தில் உள்ள எந்த ஒரு வணக்கமும் மனிதர்களை இப்படி தொடர் சிரமத்திற்கு உள்ளாக்குவது போன்று கடமையாக்கப்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த வெளிப்படையான விஷயம்.
தொடர் நோயாளிகளைப் போன்று தொடர் கர்ப்பம் பாலூட்டல் போன்ற கடமைகளால் சிரமப்படும் பெண்கள் நோன்பிற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடலாம் என்பதே நமக்கு சரியாகப் படுகிறது. சிரமத்தை உணராத பெண்கள் – சிரமத்தை பொருட்படுத்தாத பெண்கள் நோன்பு நோற்பதைப் பற்றி ஆட்சேபனையில்லை.
2:185 வது வசனத்தில் வரும் ‘இறைவன் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான் அவன் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை’ என்ற சொற்சொடரை ஒன்றுக்கு பல முறை சிந்தித்தால் நம்முடைய கருத்து சரியானதுதான் என்பது தெளிவாகும்.
குழந்தைக்கு பாலூட்டக் கூடிய தாயிடம் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நீ நோன்பு நோற்கும் சக்தி இல்லாதவள்தான் அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு கொடுத்து விடு’ என்று கூறியுள்ளார்கள். (தாரகுத்னி – தப்ரி விரிவுரை)