உங்க ஆளு பேசறதை கவனிங்க. சிம்பிளா கேட்டுட்டு போயிடாதீங்க!
“டைவர்ஸ் தான் ஒரே வழி” என முண்டியடிக்கும் மக்களில் முக்கால் வாசி பேர் புதுமணத் தம்பதியர்!
“டைவர்ஸ் தான் ஒரே வழி” என முண்டியடிக்கும் மக்களில் முக்கால் வாசி பேர் புதுமணத் தம்பதியர். ஆண்டு தோறும் டைவர்ஸ் கணக்கு எகிறிக் கொண்டிருப்பதாய் சொல்கின்றன புள்ளி விவரங்கள். “ஒத்து வரலேன்னா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா” என்பது தான் லேட்டஸ்ட் அறிவுரை. என்னவாயிற்று இந்தியாவின் குடும்ப வாழ்க்கைக் கலாச்சாரத்துக்கு ?
காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும் மனைவியும் வேலைக்கு ஓடும் யுகம் இது. நின்று பிரேக் பாஸ்ட் சாப்பிடக் கூட நேரமில்லை. இரவு உணவு பதினொரு மணிக்கோ பன்னிரண்டு மணிக்கோ ! ஒரு வகையில் இந்த பரபரப்பு தான் குடும்ப உறவுகளுக்கு எமனாய் வந்து முடிந்திருக்கிறது. முக்கால் வாசி நேரம் வீட்டுக்கு வெளியே வேலை. அப்பாடா என எப்போதாச்சும் நேரம் கிடைத்தால் டிவியில் உப்பு சப்பில்லாத ஏதோ ஒரு ஷோ. ஒரே வீட்டில் இருந்தாலும் மனம் விட்டுப் பேசி எவ்வளவு நாளாச்சு என கணக்குப் போட்டுப் பாருங்கள். அங்கே தான் இருக்கிறது குடும்ப வாழ்வின் சிக்கல்.
கணவன் மனைவி உரையாடல் சிம்பிள் சமாச்சாரம் கிடையாது. அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தம்பதியர் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து அதன் அடிப்படையில் உரையாடல் இருக்க வேண்டும் என்கிறார் ஒரு குடும்ப ஆலோசகர்.
முதல் வகை தம்பதியினர் “அமைதி தம்பதியர்”. அமைதி என்றதும் உம்மணாமூச்சியாய் இருப்பார்கள் என நினைத்து விடாதீர்கள். நிறைய பேசுவார்கள். “கந்தசாமில விக்ரம் பிச்சு உதறிட்டாரு இல்ல ? நாலு நாளா வெயில் மண்டையைப் பொளக்குதுப்பா., அமெரிக்காவில இந்த நேரம் ஸ்னோ. என்னவோ தெரியல ஈரான் வேற அணுகுண்டு தயாரிக்கப் போவுதாம்.”
இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு பேசிக் கொள்வார்கள். ஆனால் தங்களைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள். சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். “என்ன சோகமா இருக்கே ஏதாவது பிரச்சினையா” என அக்கறையாய் விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும் “ஒண்ணுமில்லையே”ன்னு சொல்லி விட்டால் ஓகே என விட்டு விடுவார்கள். ஒரு வீட்டில் இருக்கிறார்களே தவிர இவர்கள் இரண்டு வாழ்க்கை வாழ்பவர்கள். இரயில் தண்டவாளங்கள் போல. வாழ்க்கை சந்தோசமாகத் தான் போகும். பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால் என்ன ? ஆத்மார்த்த புரிதலோ அன்போ இருக்காது. வீட்டுக்கு போனா ஒரு துணை உண்டு என சந்தோசப் பட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான்.
“சண்டையைத் தவிர்க்கும்” தம்பதியர் இரண்டாவது வகை. “சரி விடும்மா.. நீ சொல்றது தான் சரி” என்பது இந்த வகை தம்பதியினரின் உரையாடல். நம்ம ஊர் கிராமத்து பெண்களை இந்த கூட்டத்தில் கன கட்சிதமாய் பொருத்தலாம். “தேவையில்லாம எதுக்கு சண்டை” என அடுத்தவர் சொல்வதை ஒத்துக் கொள்வது. இல்லாவிட்டால் ஒன்றுமே பேசாமல் சைலண்டாகி விடுவது. இது தான் இவர்களுடைய வழக்கம். அன்னியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள் திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலண்டாகிவிடுவார்.
“எப்போதும் சண்டை” மூன்றாவது வகை தம்பதியர். “ சாப்பாட்டுல ஏதோ குறையுதே ..” என்று எதார்த்தமாய்ச் சொன்னாலே “ ஆமா உங்க அம்மா சமைச்சா மட்டும் தான் உங்களுக்குப் புடிக்கும்” என்பது இந்த ரகம். அடுத்தவர் செய்வதிலுள்ள குற்றத்தை பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பது இங்கே சகஜம். இது கொஞ்சம் சீரியஸ் கேஸ். பெரும்பாலும் உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். இந்த தம்பதியரிர் நிம்மதியின்றி பெரும்பாலும் மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
“நட்புத் தம்பதியர்” நான்காவது வகையினர். நல்ல நட்புடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷுவல் கப்பிள் என்று சொல்லலாம். தாம்பத்ய நெருக்கம் இருக்காது. வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது. இவர்கள் பேச்சில் குறை வைக்க மாட்டார்கள். ஒபாமாவின் ஹெல்த் பிளான் முதல் ஒசாமாவின் அட்டாக் பிளான் வரை பேசுவார்கள். அலுவலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் எல்லாம் பேசுவார்கள். ஆனால் ஒரு அழுத்தமான குடும்ப உறவு அவர்களுக்கிடையே இருக்காது.
“நெருக்கமான தம்பதியர்” ஐந்தாவது வகை. “இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்” என்பது வரை வெளிப்படையாய் பேசுவார்கள். எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டார்கள். ஆனாலும் ஆழமான குடும்ப உறவும் புரிதலும் இருக்கும். இப்படி வாழ்வது வெகு கடினம். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும் தான் இதில் ஹைலைட். ரொம்ப ரொம்ப கொஞ்சம் தம்பதியர் தான் இந்த நிலையில் வருவார்கள். உண்மையில் பல தம்பதியர் இதை விரும்புவதே இல்லை.
கணவன் மனைவியரிடையே மனம் விட்டு பேசிக்கிற பழக்கம் இருந்தா போதும், மத்ததெல்லாம் தானா அமைந்து விடும். உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம் மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்பது. தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நினைச்சீங்கன்னா, நோ யூஸ்.
அதேமாதிரி கொஞ்சம் பொறுமை வேணும். பேசறவங்களைப் பேச விடணும். முழுதாகப் பேசி முடிக்கும் முன் “முடிவு சொல்கிறேன் பேர்வழி” என குதிக்கக் கூடாது. கிளைமேக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா. உரையாடலை முழுமையாய் கேளுங்கள், பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
நிறைய தடவை கேட்டிருப்பீர்கள். இன்னொரு தடவை கேக்கிறதிலும் தப்பில்லை. ஈகோவை தூக்கி தூர எறியுங்கள். கோஸகோ.. ஈகோ ன்னு சொல்லுங்க. தோல்விகள் கூட காதலில் வெற்றிகளே என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்.
அடிக்கடி பேசுங்கள். சும்மா ஹாய், பை பேச்சுகளெல்லாம் குடும்ப வாழ்க்கைல உதவாது. தினமும் பேசுங்கள். மனம் விட்டு பேசும் தம்பதிகள் டைவர்ஸ் கேட்டு ஓட மாட்டாங்க.
ஒரு முக்கியமான விஷயம். பேசறதுக்கு முன்னாடி நிலைமையை கொஞ்சம் பாத்துக்கோங்க. பார்ட்டி டென்ஷனாய் இருந்தால் கொஞ்சம் அமைதியா போறது உசிதம். எதேச்சையா சொல்ற சமாச்சாரம் கூட குத்தலா தோணும். மௌனம் கூட உணர்வுகளின் உரையாடல் தான்.
“கல்யாணம் ஆன புதுசில அடிக்கடி வெளியே போவோம்.. இப்பல்லாம் எங்க… “ ங்கற நிலமை வரக் கூடாதுங்க! அப்பப்போ வெளியே போயிட்டு வாங்க. பழைய சமாச்சாரங்களை சுவாரஸ்யமா பேசுங்க. காதல் வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கும்.
இன்னொரு விஷயம். உங்களுக்குள்ளே பேசிட்டிருக்கும்போ தேவையில்லாம மூன்றாவது நபரை குத்தம் சொல்லாதீங்க. அது சுத்திச் சுத்தி பிரச்சினையில கொண்டு விடும். வேலில போறதை எதுக்குஸ வேணாம் விட்டுடுங்க.
கணவன் மனைவிக்கு கொஞ்சம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கலாம் தப்பில்லை. குறிப்பா சில நம்பிக்கைகள் உங்க துணைக்கு இருக்கலாம். சாமி போட்டோல முழிக்கிறது மாதிரி. அதை சகட்டு மேனிக்கு விமர்சனம் பண்ணாதீங்க.
உரையாடல் எப்பவும் ஸ்மூத்தா இருக்காது. ஏதாச்சும் பிராப்ளம் இருந்தா திறந்த மனதோட யோசிங்க. “நீ சொல்றது தான் தப்புன்னு” சட்டுன்னு குற்றம் சுமத்தாதீங்க. குற்றங்கறது அனுமர் வால் போல நீண்டுகிட்டே இருக்கும் !
பேசும்போ மனசார உண்மையைப் பேசுங்க. நீங்க பேசறது பொய்யின்னு தெரிஞ்சு போச்சுன்னு வெச்சுக்கோங்க, அப்புறம் எப்பவுமே உரையாடல் ஹெல்தியா இருக்காது.
திடீர் திடீர்ன்னு கொஞ்சம் சர்ப்ரைஸ் குடுங்க. சின்னச் சின்ன பரிசுகள், சின்னச் சின்ன வாழ்த்துகள், சின்னச் சின்ன பாராட்டுகள் இவையெல்லாம் ரொம்ப முக்கியம். அதேமாதிரி என்ன முடிவு எடுத்தாலும் இரண்டு பேருமாப் பேசி முடிவெடுங்க.
உங்க ஆளு பேசறதை கவனிங்க. சிம்பிளா கேட்டுட்டு போயிடாதீங்க. நிறைய பேரு பேசறதைக் கேட்பாங்க. ஆனா கவனிக்க மாட்டாங்க. அதென்ன வித்தியாசம்?
வீட்டுக்குள்ள கிரைண்டர் ஓடுது. அந்த சத்தத்தை நாம கேட்கிறோம் ஆனா, கவனிக்கிறதில்லை. ஆனா நம்ம பார்ட்னர் பேசறதை நாம கவனிக்கணும். என்ன சொல்கிறார்? என்ன மனநிலையில் சொல்கிறார் ? என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார்? என்பதெல்லாம் கவனிச்சா தான் புரியும். உங்க வாழ்க்கைத் துணையை எந்த அளவுக்கு நேசிக்கிறீங்க என்பதை இந்த கவனிப்பு காட்டிக் கொடுக்கும்! அதிகம் கவனித்தால், அதிகம் நெருக்கமாயிடுவீங்க. குடும்ப வாழ்க்கை வலுவடையும். அடுத்தவரைப் பாராட்டும் மனநிலை உருவாகும்.
நன்றி : அவள் விகடன்