நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்
o 1, 2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.
o சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை, ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக!
உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர். அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும்.
o ‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற காரணங்களால் இது நிகழலாம்! இதைத் தவிர்க்க வேண்டும்.
o புறம் பேசுதல், அடுத்தவர் குறை பேசுதல், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள், அடுத்தவரைக் குழப்புவதற்காகப் பொய் உரைத்தல் போன்ற தவறான நடத்தைகளை விட்டும் விலகாதிருப்பது நோன்பின் பலனை
o ‘ரமழான்’ எனும் புனித மாதத்தின் கண்ணியமான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்தல். குறிப்பாக ‘ரமழான்’ இரவுகளில் விளையாட்டுக்காக விழித்திருத்தல், பாதையோரங்களில் விளையாடுதல், இதன் மூலம் பிறருக்குத் தொல்லை கொடுத்தல் நோன்பின் கூலிகளை வீணாக்கிவிடும்.
o ‘துஆ’, ‘திக்ர்’, ‘குர்ஆன்’ ஓதுதல், ‘நபிலான, சுன்னத்’தான தொழுகைகளைக் கடைபிடித்தல் என்பவற்றில் பொடுபோக்குக் காட்டுதல் ஒரு நோன்பாளியிடம் இருக்கக் கூடாது.
o ‘கியாமுல் லைல்’ தொழுகையில் பொடு போக்குக் காடடுவது ரமழானில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்களை விட்டும் தூரமாக்கிவிடும்.
o ‘ரமழான்’ இறுதிப் பத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும் என்றிருக்க, அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து பாழாக்கிவிடல்.
o ‘ரமழான்’ மாதத்தில் ஆரம்பத்தில் அதிக தொழுகையாளிகளையும், இபாதத்தாளிகளையும் காணலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல சோம்பல் அதிகரித்து இபாதத்தாளிகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம்! எனவே, இறுதிப்பத்து கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது என்பதைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக!
o சிலர் இரவு பூராக இபாதத்தில் ஈடுபட்டுவிட்டு ‘சுபஹ்’ த்தொழுகையை தவறவிட்டு விடுகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
o ‘ரமழானி’ல் தர்மம் செய்வது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசதியுள்ள பலரும் இதில் கஞ்சத்தனம் செய்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
o ‘ஸஹரு’டைய நேரம் ‘துஆ’வுக்கும், பாவ மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது, ‘இப்தாரு’டைய நேரம் ‘துஆ’வுக்குரியதாக இருக்கும் போது, இவ்விரு நேரங்களையும் உண்பதற்கும், பருகுவதற்குமுரிய நேரமாக மட்டும் கருதி ‘துஆ’, ‘இஸ்திஃபார்’ விடயத்தில் அலட்சியமாக இருத்தல்.கூடாது.
o பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார ஆடைகளுடனும், வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மனம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவதை தடுத்துள்ளார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
o ‘ஸகாதுல் பித்ரை’ மிகவும் முற்படுத்துதல், ‘பித்ரா’வின் பெயரில் பிச்சைக்கார சமூகத்தை உருவாக்குதல், வீடுதேடி வருபவர்களுக்கு சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு ‘ஸகாத்’ கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
o எமது சமூகத்தவர்களில் பலர் புகைத்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர்.
இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். புகைத்தல் ஹராமானது என்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு என்பதைக் கவனத்தில் கொள்வோமாக!
இவ்வாறான எமது குறைபாடுகளைக்களைந்து இந்த ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க முனைவோமாக!
-Eng Sulthan