குத்துவிளக்கேற்றுவது தொடர்பில் இந்து, இஸ்லாமிய சமயங்களின் நிலைப்பாடு
முஹம்மது நியாஸ்
இக்கட்டுரையின் வாயிலாக பிற சமயமொன்றை, சமய அனுஷ்டானமொன்றை விமர்சிப்பதோ அல்லது பேசுபொருளாக்குவதோ இதன் நோக்கமல்ல. மாறாக இன்று இஸ்லாமிய சமூகத்தினுள்ளே சாதாரண பாமர மக்கள் தொடக்கம் படித்தவர்கள், கல்வியாளர்கள், மார்க்க அறிஞர்கள், சமுதாயத்தின் வழிகாட்டிகள் என கணிசமானோரால் சரிகாணப்படுகின்ற ஒரு பிறசமயக்கலாச்சாரம் மற்றும் கடவுட்கோட்பாடு தொடர்பிலான தெளிவான புரிதல் ஒன்றையும் அதற்கான இஸ்லாமிய மார்க்க ரீதியான வழிகாட்டல் என்னவென்பதையும் வெளிப்படுத்துவதே இக்கட்டுரை வரையப்படுவதன் ஒரேயொரு பிரதான நோக்கம் என்பதை முன்னுரையாக இங்கே பதிவிட்டுக்கொள்கிறேன்.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பாக இந்து சமய மக்கள் செறிவாக வாழக்கூடிய நாடுகளில் பொது நிகழ்வுகள் மற்றும் இந்து, பௌத்த, கிறிஸ்த்தவ சமயம் சார்ந்த நிகழ்வுகளின் போது மங்களவிளக்கு அல்லது திருவிளக்கு என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற குத்துவிளக்கை தீபமேற்றி அந்நிகழ்வுகளை துவக்குகின்ற ஓர் வழமை அல்லது நம்பிக்கை தொன்று தொட்டே இருந்துவருகின்ற ஒன்றாகும்.
இந்த மங்களவிளக்கை ஏற்றி வைபவங்கள், நிகழ்வுகளை துவக்குகின்ற வழமை இஸ்லாமிய மார்க்கத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மேலும் இஸ்லாமிய சமயம் சார்ந்த எந்தவொரு வழிபாடுகளிலும் அனுஷ்டானங்களிலும் இவ்வாறு குத்துவிளக்குகளை ஏற்றி ஆரம்பிக்கின்ற, வழிபடுகின்ற நடைமுறைகளோ வழிமுறைகளோ இருப்பதில்லை.
ஆனால் இஸ்லாம் அல்லாத பிற சமயத்தவர்கள் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கின்ற நிகழ்வுகளில், வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும் நமது நாட்டில் வாழ்கின்ற நான்கு மதங்களையும் சேர்ந்த சமய பிரதிநிதிகள் கலந்துகொள்கின்ற நிகழ்வுகளில் அந்த சமயப்பிரதிநிதிகளால் மங்களவிளக்கு தீபமேற்றிவைக்கப்படுகிறது. அதில் மங்களவிளக்கேற்றுவதை தன்னுடைய சமயரீதியான அனுஷ்டானமாகவோ, வழிபாடாகவோ கொண்டிராத ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர் அல்லது ஒரு சாதாரண இஸ்லாமியர் கூட அந்த மங்களவிளக்கை தீபமேற்றிவைக்கிறார்.
இவ்வாறு பிறசமய நிகழ்வுகளில் அல்லது பொது நிகழ்வுகளில் முஸ்லிம்கள் மங்கள விளகேற்றுவது தொடர்பாக இஸ்லாமிய சமூகத்தினுள்ளே சமகாலத்தில் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். சிலர் இதனை மத நல்லிணக்கம் என்ற பெயரிலும் இன்னும் சிலர் குறித்த இடங்களில் தங்களுக்கு ஏற்படுகின்ற ஒரு நிர்பந்த சூழல் என்ற காரணத்தையும் இன்னும் சிலரோ அது ஒரு “சாதாரண” விடயம் என்றும் நியாயப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான காரணங்களை மையமாக வைத்து “இஸ்லாமியர்கள் குத்துவிளக்கேற்ற முடியுமா?” என்று முடிவு செய்வதற்கு முன்னால் இந்த மங்களவிளக்கு அல்லது திருவிளக்கு பற்றிய இந்து மதத்தினுடைய கண்ணோட்டத்தையும் நம்பிக்கையையும் ஆய்வுக்குட்படுத்துவது அவசியமானதாகும்.
நம்மத்தியில் வாழக்கூடிய சாதாரண இந்துசமய மக்களிடம் கேட்டால் ‘குத்துவிளக்கென்பது அதனை தீபமேற்றுகின்றபோது இருள் விலகி ஒளி ஏற்படுவது போன்று நமது உள்ளங்களில் இருந்தும் அறியாமை, வஞ்சகம், பொறாமை போன்ற தீய குணங்கள் அகலவேண்டும் என்ற நல்லெண்ணத்தை மையமாகக் கொண்டே நாங்கள் ஏற்றுகிறோம். அதை விடுத்து இக்குத்துவிளக்கேற்றும் சம்பிரதாயத்தில் சமயரீதியான எந்தவொரு நம்பிக்கையும் கிடையாது’ என்று பொத்தாம் பொதுவாக கூறிவிடுகிறார்கள்.
ஆனால் சாதாரண இந்துசமய மக்கள் இவ்வாறு கூறினாலும் இந்து, சைவசமய வழிகாட்டல்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் சான்றோர்களுடைய கூற்றுக்கள் மற்றும் அவர்களுடைய நம்பிக்கைகள், ஐதீகங்களின் அடிப்படையில் நாம் பார்த்தோமானால் இக்குத்துவிளக்கிற்குப் பின்னால் இந்துசமய மக்களுடைய கடவுள் நம்பிக்கைக்கும் அவர்களுடைய கலாச்சார விழுமியங்களுக்கும் பாரியளவிலான வகிபாகம் அமையப்பெற்றிருப்பதை நாம் மிகத்தெளிவாகவே கண்டுகொள்ளலாம்.
அந்தவகையில் குத்துவிளக்கினுடைய தத்துவங்கள் தொடர்பாக இந்து சமயத்தினுடைய சைவநெறிக்கோவையின் கூற்றை இங்கு பார்ப்போம்.
மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்கிதுவ
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.
மேலும்,
திருவிளக்கின் தத்துவம்…
குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.
விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும்.
குத்து விளக்கும் பெண்மையும்:
குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களைக் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம். அவை: 1. அன்பு 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. சகிப்புத் தன்மை -பொறுமை ஆகியன. இவ்வாறு குத்துவிளக்கினுடைய தத்துவங்கள் தொடர்பாக அதனுடைய விளக்கங்கள் அமைந்துள்ளன.
மேலுள்ள இந்த விளக்கங்கள், தத்துவங்களை வைத்துப் பார்க்கின்றபோது குத்துவிளக்கு என்ற உபகரணத்தில் இந்துசமய மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்ற கடவுட்கோட்பாட்டுடன் நிச்சயமாக அவர்களுடைய கலாச்சார விழுமியங்களும் பிரதிபலிப்பதை காணலாம்.
மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவருமான திருநாவுக்கரசருடைய நமசிவாய பதிகத்திலே மங்கள விளக்கேற்றுவது தொடர்பாக அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே
இதற்கு “விளக்கு ஏற்றி வைத்தவுடன் புற இருள் அகலும். எங்கும் ஒளி பரவும். ‘நம சிவாய’ எனும் பஞ்சாட்சரத்தை ஓதினால் அக இருள் மறையும். ஞான ஒளி உண்டாகும். புற இருளைப் போக்குவதும் விளக்குதான், அஞ்ஞான இருளைப் போக்குவதும் ‘நம சிவாய’ எனும் விளக்குதான்.” என்று பொருள் கொள்ளமுடிகிறது.
மேற்படி நமசிவாய பதிகத்திலிருந்து வெறுமனே குத்துவிளக்கை மாத்திரம் ஏற்றிவைக்காமல் அதற்குண்டான “நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினாலே உள்ளத்திலுள்ள இருள் மறையும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குத்துவிளக்கேற்றுவது முழுமையாகவே இந்துசமய மக்களுடைய சமயரீதியான அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்புபட்ட ஒரு அனுஷ்டானம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
மேலும் குத்துவிளக்கு தொடர்பாக இந்துசமய மக்களிடம் காணப்படுகின்ற ஆழ்ந்த நம்பிக்கை எத்தகையதென்பதை கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா இவ்வாறு விளக்குகிறது.
குத்து விளக்கு தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இந்துக்களும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக இதனைக் கொள்வர். இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து (விந்து அல்ல), சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ – மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர். இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும்.
மேற்குறிப்பிட்ட கூற்றுக்களிலிருந்து நோக்குகின்றபோதும் குத்துவிளக்கென்பது இந்துசமய மக்களை பொறுத்தவரையில் ஒரு சாதாரண சிம்னி விளக்கைப்போன்றதல்ல. மாறாக அது தெய்வீகத்தன்மையையும் இன்னபிற சமய நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு கண்ணியத்திற்குரிய, சில பொழுதுகளில் வணக்கத்துக்குரிய பொருளாகவே மதிக்கப்படுகிறதென்பதும் புலனாகிறது.
மேலும் இந்துசமய பாரம்பரியத்தின் படி புதிதாக திருமணமான ஒரு பெண்ணை குத்துவிளக்கேற்றுவதன் மூலமே அப்பெண்ணுடைய குணாதிசயங்களை அளவிடுகின்ற வழமையும் இந்துசமய மக்களிடம் ஒரு ஐதீகமாக இருந்துவருகிறது.
விளக்கேற்றுவது புது மணப் பெண்ணின் சாமர்த்தியத்தைத் தெரிந்து கொள்ள உதவும் என்பது இந்த ஐதீகமாகும். குத்துவிளக்கின் ஐந்து முகமும் அன்பு, அமைதி, அடக்கம், ஒற்றுமை மற்றும் சிக்கனம் என்று பெண்ணுக்குத் துணையான ஐந்து பண்புகளையும் குறிக்குமென்றும் இதனாலேயே பெண்களை Lighting-a-lampவிளக்கேற்றுமாறும் கூறுகின்றார்கள். ஒரே தீக்குச்சியில் அத்தனை முகங்களையும் ஏற்றிவிட்டால் அவள் சிக்கனமான பெண் என்று மாமியார் போற்றிப்புகழ்வதற்கு அது வழிசமைக்குமென்பது ஒருவகையான நம்பிக்கையாக காணப்படுகிறது.
மாத்திரமன்றி இந்துசமய கோவில்களில் தை மாத வெள்ளிக்கிழமைகளிலும் ஆடிமாத வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷமாக 108 அல்லது 1008 திருவிளக்குப் பூஜை நடைபெறுவது உண்டு. உலகளாவிய நலன் கருதி செய்யப்படும் இப்பூஜைகளில் மங்களப்பொருள்கள் என கருதப்படுகின்ற மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு போன்றவை வழங்கப் பெறுகின்றன. நமது அண்டை நாடான இந்தியாவில் குருவாயூர் போன்ற கோவில்களில் லட்ச தீபம் என்னும் தீபம் மேற்கொள்ளப்படுகின்ற பிரார்த்தனையும் இருந்துவருகிறது. அதேபோன்று திருப்பதி தலத்தில் “ஸஹஸ்ர தீப அலங்கார சேவை” எனும் பிரார்த்தனையும் உண்டு. மகர சங்கராந்தி என்னும் தினத்தில் சபரிமலையில் ஏற்றப்படும் மகர ஜோதி விளக்கு ஒரு தெயவீகமயமான விளக்காக கருதப்படுகிறது.
இவை மாத்திரமல்லாது இக்குத்துவிளக்கின் பயன்பாடுகள், நன்மைகள் என்பவென்பது குறித்தும் இந்துசமய இதிகாசங்கள் பட்டியலிட்டு உபதேசிக்கின்றன.
குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.
மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம் பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும், செல்வம் செல்வமும் செழிக்கும்.
தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.
குத்துவிளக்கின் மகிமை.
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.
விளக்கேற்றும் முகத்தின் பலன்..
குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்.
குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை.
குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்- புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி.
குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் – பசு, பால், பூமி, சேர்க்கை.
குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் – பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.
இத்தோடு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது..
குத்து விளக்கை தானாக அணையவிடக்கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தால் அணைக்க வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
மேற்குறித்த விடயங்கள் குத்துவிளக்கேற்றுவது தொடர்பாக இந்துசமய மக்களிடம் காணப்படுகின்ற நம்பிக்கையும் அம்மதத்தினுடைய சட்ட மூலாதாரங்களின் வலியுறுத்தல்களுமாகும். இவைதவிர குத்து விளக்கேற்றுவது தொடர்பாக இன்னும் பல வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கிய தெளிவான ஆதாரங்கள் இருந்தாலும் விரிவையஞ்சியதால் அவற்றை விடுத்துள்ளேன்.
ஆகவே குத்துவிளக்கென்பது மின்சாரம் தடைப்படுகின்றபோது நாம் வெளிச்சத்திற்காக ஏற்றுகின்ற சாதாரண திரிவிளக்கை போன்றல்லாது இந்துசமயத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பல வணக்க, வழிபாடுகள், கடவுள் நம்பிக்கைகள், தெய்வீக அம்சங்கள், கலாச்சார விழுமியங்களை நோக்காகவும் நம்பிக்கையாகவும் பிரதிபலிப்பாகவும் கொண்டே தீபமேற்றப்படுகின்றன என்பதை இந்துசமய இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் வாயிலாக மிகத்தெளிவாகவே அறிந்துகொள்ளமுடிகிறது. எனவே இக்குத்துவிளக்கேற்றுகின்ற பிறசமய மக்களுடைய ஆராதனையானது அவர்களுடைய இறையியல் கோட்பாட்டினையும் கலாச்சாரத்தினையும் அத்திவாரமாகக்கொண்ட, அவற்றை பிரதிபலிக்கின்ற ஒரு நடைமுறைதான் என்பதை நாம் சந்தேகமற விளங்கிக்கொள்கிறோம்.
இவ்வாறு இஸ்லாமிய இறை நம்பிக்கைக்கு முரண்பட்ட, பிறசமயத்தை பிரதிபலிக்கின்ற, அந்த சமயத்தினுடைய கடவுட்கோட்பாட்டினை வெளிப்படுத்துகின்ற குத்துவிளக்கேற்றும் ஆராதனையில் ஒரு முஸ்லிம் பங்கேற்க முடியுமா? என்பதே நம்முன்னால் இப்போது எஞ்சி நிற்கின்ற கேள்வியாகும்.
பொதுவாக இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரைக்கும் அது மிகத்தெளிவான, நேரான கடவுள் நம்பிக்கையை இந்த உலகத்திற்கு எடுத்துரைப்பதுடன் அதற்கு முரண்பட்ட அத்தனை சித்தாந்தங்களையும் அடியோடு மறுத்துவிடுகிறது. இஸ்லாமிய இறைக்கோட்பாட்டின் தாரக மந்திரமான திருக்கலிமாவில் இருந்து நாம் இதனை விளங்கியறிய முடியும்.
“வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.” கலிமாவினுடைய பொருளாகும்.
வணங்குவதற்கு தகுதியான இறைவன் ஒருவன் மாத்திரமே என்பது இஸ்லாத்தின் அடிப்படை நிலைப்பாடு. ஆனால் திருக்கலிமாவோ அந்த இறைவனைத்தவிர வேறு எதுவுமே வணங்குவதற்கு தகுதியானது கிடையாது என்று இடித்து, மறுத்துரைக்கிறது. இதிலிருந்து ஒரு முஸ்லிம் தன்னை படைத்துப்பரிபாலிக்கின்ற இறைவனை மாத்திரம் வழங்குவதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை போலவே அந்த இறைவனைத்தவிர வேறு கடவுள்களை வழிபடுவதை விட்டும் விலகி நடகின்ற விடயத்திலும் அதேயளவு முக்கியத்துவத்தை கடைப்பிடிக்கவேண்டும். மேலும் இஸ்லாமிய இறைநம்பிக்கையில் ஒரு கீறல் விழுகின்ற அளவிலும் கூட அந்நம்பிக்கைக்கு மாற்றமான காரியங்களை மேற்கொண்டுவிடாது அவற்றை விட்டும் தவிர்ந்து நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் கலிமாவினுடைய கோட்பாட்டிலிருந்து நாம் உணர்ந்துகொள்ளலாம்.
மேலும் அல்லாஹ் அவனுடைய திருத்தூதரை விழித்து தனது திருமறையில் கூறுகின்றபோது.
நபியே! நீர் சொல்வீராக: இறை நிராகரிப்பாளர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். (அல்குர்ஆன் 109:1-6) என்று கூறுமாறு கட்டளையிடுகிறான்.
மேற்படி இறைவனுடைய கட்டளையிலிருந்து இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டிற்கு முரண்பட்ட இறைநிராகரிப்பாளர்களுடைய வணக்க வழிபாடுகள் விடயத்தில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை எள்முனையளவும் சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக்கொள்ளலாம். மேலும் அவர்களுடைய வணக்க, வழிபாடுகள் எத்தகையவையாக இருப்பினும் அவையனைத்துமே அந்த இறைநிராகரிப்பாளர்களுடன் மாத்திரம் மட்டிறுத்திகொள்ளப்பட்ட வேண்டும் என்பதையும் திரும்பத்திருப்பக் கூறப்படுகின்ற இந்த இறைவசனத்தின் துணையோடு நாம் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
மாத்திரமன்றி இஸ்லாமிய உணர்வையும் ஈமானிய உந்துதலையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் எந்தவொரு இடத்திலும் தன்னால் முடியுமானவரை இஸ்லாமிய மார்க்கத்தை நிலை நாட்டுவதை தன்னுடைய முதற்கடமையாகக் கொண்டிருக்கவேண்டுமே தவிர அதுமுடியாத பட்சத்தில் அங்கே இஸ்லாம் என்ற தனித்துவத்தையும் முஸ்லிம் என்ற உணர்வையும் கரைத்து, மறைத்து, மழுங்கடித்துவிட்டு மாற்றுமத ஆராதனைகளையோ, அனுஸ்டானங்களையோ உயிர்ப்பிக்கின்ற ஒருவனாக ஒருபோதும் இருக்கக்கூடாதென்பதே இறைவேதமான அல் குர்ஆனின் ஆணையாகும்.
கீழுள்ள இறைவசனம் அதனை விரிவாக விளக்குகிறது.
“முஃமின்களே! அழ்ழாஹ்வின் வசனங்கள் சிலரால் நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது கட்டளை இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அழ்ழாஹ் நயவஞ்சகர்களையும், நிராகரிப்பாளர்களையும் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.(அல்குர்ஆன் 04:140)
பிறசமயம் சார்ந்த நிகழ்வுகளும் அங்கே நடைபெறுகின்ற ஆராதனைகளும் மிகத்தெளிவாகவே இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டை தகர்த்தெறிகின்ற செயற்பாடுகளாகும். இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்பதைபற்றி மேலுள்ள இறைவசனத்தின் மூலம் அழ்ழாஹ் அவனுடைய தூதரை எச்சரிக்கிறான். அப்படியிருக்கின்றபோது அந்நிகழ்வுகளில் நடைபெறுகின்ற ஆராதனைகளில் பங்கெடுப்பதும் ஒரு முஸ்லிமே அவ்வாராதனைகளை முன்னின்று நடாத்திவைப்பதும் அழ்ழாஹ்வின் கட்டளைகளையும் அண்ணல் நபியுடைய வழிகாட்டல்களையும் காலில் போட்டு மிதிப்பதற்கு சமமானது. மேலும் அவ்வாறு பங்கேற்பது இரட்டை வேடம் அணிகின்ற நயவஞ்சகர்களின் செயற்பாடு என்பதையும் அவ்வாறான நயவஞ்சகர்கள் மறுமை நாளில் இறைநிராகரிப்பாளர்களுடன் எழுப்பப்படுவார்கள் என்பதையும் இவ்வசனம் எச்சரிக்கையாக விடுக்கிறது.
மேலும் நபியவர்கள் கூறினார்கள்.
”எவர் மாற்று சமூகத்தினருக்கு ஒப்பாக நடகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.” (நூல்: ஸுனன் அபூதாவுத்: 3512)
குத்துவிளக்கேற்றுவது ஒரு போதும் இஸ்லாமிய சமூகத்தின் நடைமுறையாக இருந்ததில்லை. நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள் மற்றும் ஏனைய இஸ்லாமிய இறை நம்பிக்கைக்கு முரண்பட்ட நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இறைநிராகரிப்பாளர்களின் சமயம் சார்ந்த, அவர்களது இறைநம்பிக்கையை ஒட்டிய ஒரு நடைமுறையாகவே இந்த குத்துவிளக்கேற்றும் வழிமுறை இருந்து வருகிறது. மேலுள்ள நபிமொழியில் நின்றும் பார்த்தோமானால் முஸ்லிம்கள் குத்துவிளக்கேற்றுவது பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடிய ஒன்று என்பதும் அவ்வாறு குத்துவிளக்கேற்றுபவர் வஹீயின் பார்வையில் பிறசமயத்தை சேர்ந்தவராகவே கணிக்கப்படுகிறார் என்பதும் திண்ணமாகிறது.
ஆகமொத்தத்தில் குத்துவிளக்கேற்றுவது தொடர்பாக இந்து சமயத்தின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து அந்த சமயத்தின் சட்ட மூலாதாரங்கள், நம்பிக்கையடிப்படையின் வாயிலாகவே மிகவும் தெளிவாகவே விளக்கியுள்ளேன். அந்த வகையில் அது இந்து சமயத்தினுடைய இறையியல் கோட்பாட்டையும் இந்துசமய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆராதனையாகவே அரங்கேற்றபடுகிறது. அவ்வாறானதொரு பிறசமய ஆராதனைகளில் முஸ்லிம்கள் எவ்வகையிலும் பங்கேற்ககூடாதென்பதையும் மேலே முன்வைத்துள்ள அல் குர்ஆன் மற்றும் அண்ணல் நபியுடைய பொன்மொழிகள் வாயிலாக அறிந்துகொள்ளமுடிகிறது.
இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தால் அதனை ஏற்று நடப்பதும் அதேபோன்று ஒரு காரியம் தடுக்கப்பட்டது என தெளிவாக தெரியவருகின்றபோது அதனை முற்றாக தவிர்ந்து நடப்பதுமே ஒரு முஸ்லிமுடைய கடமையாகும். மாறாக அழ்ழாஹ்வும் அவனுடைய தூதரும் கட்டளையிட்ட ஒருவிடயத்தில் தன்னுடைய சுயவிருப்பத்தின் பிரகாரம் மாற்றுக்கருத்துக்கொண்டு முரண்பட்டு நடப்பது அல்லாஹ்வின் சாபத்தையே ஈட்டித்தரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எல்லாம்வல்ல அல்லாஹ் தன்னுடைய அருள்மறையில் கூறுகின்றபோது
மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தை கட்டளையிட்டுவிட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் மாற்றுக்கருத்துக்கொள்வதற்கு இறை நம்பிக்கை கொண்ட எந்தவொரு ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அழ்ழாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்க வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)
ஆகவே அழ்ழாஹுத்தஆலாவும் அவனுடைய தூதரும் மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்த ஒரு பாவகாரியம்தான் மாற்றுமத மக்களுக்கு ஒப்பாக நடப்பதும் அவர்களுடைய திருநாட்கள், சமய அனுஸ்டானங்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதுமாகும். இப்பாவகாரியத்திலிருந்து இஸ்லாமியர்களாகிய நாங்கள் அனைவரும் தவிர்ந்து வாழ்வற்கு எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியவேண்டும்.
இது மத நல்லிணக்கத்தை பாதிக்குமா?
இன்று அதிகமான இஸ்லாமிய சகோதரர்களை நாம் எடுத்துநோக்கினால் அவர்களில் அதிகமானோர் குத்துவிளக்கேற்றுவது மாற்றுமதக் கலாச்சாரம்தான் அது இஸ்லாமிய மார்க்கத்தின் இறைநம்பிக்கைக்கு முரணானதுதான் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பங்கேற்கின்ற பிறசமய நிகழ்வுகளில் பிறசமய மக்களை, தங்களுடைய பிறசமய நண்பர்களை, மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவதற்காக இந்த ஆராதனையை உயிர்ப்பிக்க முனைகிறார்கள். பலரும் கூடி நிற்கின்ற ஒருசபையில் வைத்து குத்துவிளக்கு ஏற்றமாட்டேன் என்று கூறிவிட்டால் அந்த இடத்தில் தன்னையொரு வித்தியாசமான பார்வையால் அனைவரும் பார்ப்பார்களே, இதனால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படுவிடுமே என்றும் பயப்படுகிறார்கள்.
பொதுவான ஒருவிடயத்தை நாம் எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரைக்கும் அது ஒருபோதும் மத நல்லிணக்கத்திற்கோ மாற்று மதத்தவர்களுடனான நட்புறவிற்கோ பாதகத்தை ஏற்படுத்துகின்ற ஒரு மார்க்கமல்ல. மாறாக தன்னைவிடவும் தன்னுடைய அயல் வீட்டார்களை பற்றியே அதிகம் கவனம் செலுத்தும்படி ஏவல் விடுக்கின்ற ஒரேயொரு சமயமாகவே இஸ்லாம் இருந்துவருகிறது.
தன்னுடைய அயல்வீட்டார்கள் (முஸ்லிமோ, முஸ்லிம் அல்லாதவர்களோ) பசியோடிருக்க தான் மட்டும் பசியாற உண்டு மகிழ்பவன் உண்மையான முஸ்லிமே அல்ல என்கிறது இஸ்லாத்தின் அடிப்படை மனித நேயக்கொட்பாடு. உலகிலேயே இந்தளவிற்கு அடுத்தவர்களுடைய நலன்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்தக்கூடிய ஒரு சமயம் ஒன்று இருக்குமாக இருந்தால் அது நிச்சயமாக இஸ்லாமிய சமயம் ஒன்றாக மாத்திரமே இருக்கமுடியும். இதை நாம் இப்போது நேரடியாகவே கண்டு வருகிறோம்.
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் நிவாரணப்பணிகளிலும், மீட்புப்பணிகளிலும் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்களை இதற்கு ஆதாரமாகக் காட்டமுடியும். எந்தவொரு அரச, வெளிநாட்டு உதவிகளையும் தன்னகத்தே கொண்டிராத, தங்களுடைய பொருளாதாரங்களையே செலவு செய்து, உயிரைக்கூட பணயம் வைத்து, இராணுவமும் அரச மீட்புப்பணியாளர்களும் கூட ஊடறுக்க முடியாத இடத்தில் மிகச்சாதாரணமாக சென்று தங்களுடைய உயர்ந்த பட்சமான அர்ப்பணிப்பை சாதி, மத பேதமின்றி பாதிக்கப்பட் மக்களுக்கு வழங்கிவருவதில் இன்று முன்னணியில் இருப்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தவர்களே.
கோயில்களில் கூட உயர் குலம், தாழ் குலம் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் அடைக்கலம் வழன்குகின்றபோதும் கூட தங்களுடைய பள்ளிவாயில்களை பாதிக்கப்பட்ட பிறசமய மக்களுக்கு அடைக்கலமாக வழங்கிவிட்டு கடமையான தொழுகைகளை கூட தெருவோரங்களில் நிறைவேற்றிவருகிறது இஸ்லாமிய சமூகம். இந்தளவுக்கு உலகில் எந்தவொரு சமூகமும் பிறசமூக மக்களிடத்தில் ஆதரவு காட்டிய வரலாறுகள் இதுகாலவரை கிடையாது.
இத்தனைக்கும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர்தான் இஸ்லாமிய சகோதரர் ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டுக்காக இந்துசமய மக்களால் உத்திரபிரதேச மாநிலத்தில் வைத்து அநியாயமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் இந்திய நாட்டில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு மதரீதியாக பல வன்முறைகளுக்கும் முகங்கொடுப்பவர்கள் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கின்றார்கள். அப்படியிருந்தும் கூட இஸ்லாமியர்களோ தங்களுடைய மனிதநேயத்தை இனமத, நிற, குல, வேறுபாடின்றி இந்த அகாலவேளைகளில் அனைவருக்கும் மிகக்கணிசமாகவே அள்ளி வழங்கிக்கொண்டிருகிறார்கள். இதுதான் இஸ்லாம் காட்டிய மனித நேயம்.
ஏனைய சமயங்களும் சித்தாந்தங்களும் வெறும் வாயளவிலும் ஏட்டளவிலும் எழுத்தளவிலும் பிரயோகித்து வருகின்ற மனிதநேயக்கோட்பாட்டிற்கு இஸ்லாம் மாத்திரமே மகத்தான அளவில் முழுமையான செயல்ரூபம் அளிக்கிறது. இன்று அதனை சென்னை வாழ் மாற்றுமத மக்கள் மிகவும் நிதர்சனமாகவே கண்டுகொண்டார்கள். இவ்வாறு மனிதநேயம் என்றால் என்னவென்பதற்கு வரைவிலக்கணம் கொடுத்ததே இஸ்லாமிய மார்க்கம்தான் என்றால் அது மிகையாகாது.
ஆனால்
மனிதநேயம் என்பது வேறு, இறைநம்பிக்கை என்பது வேறு.
இறைவனை நம்பிக்கை கொள்கின்ற விடயத்தில் இஸ்லாமிய மார்க்கம் மிகவும் கடுமையான நடைமுறையையே கடைபிடிக்கிறது. அதில் யாருடைய திருப்திகளுக்காகவும், விருப்பு, வெறுப்புகளுக்காகவும் வளைந்துகொடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தன்னுடைய மனைவி அயல் வீட்டிலுள்ளவர்களுக்கு உதவி செய்வதை ஒரு கணவன் ஊக்குவிப்பான். ஆனால் அதே மனைவியில் தனக்கு மாத்திரமே சொந்தமான உரிமையை இன்னொரு ஆடவனுக்கு அவள் பகிர்ந்தளிப்பதை எந்தவொரு கணவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். ஒரு சாதாரண மனிதனுடைய ரோஷ உணர்வே இந்தளவுக்கென்றால் இந்த அகிலத்தையே படைத்துப்பரிபாலிக்கின்ற வல்ல அல்லாஹ்வுடைய ரோஷ உணர்வு எந்தளவுக்கு இருக்கவேண்டும்?
மேலும் சமய நல்லிணக்கம், மத சகிப்புத்தன்மை, மத ரீதியான சுதந்திரம் என்பனவெல்லாம் அவரவர்களுடைய சமயங்களை அவரவர்கள் மாத்திரம் பின்பற்றுவதில்தான் தங்கியிருக்கிறதே தவிர ஒருவருடைய சமயத்தை இன்னொருவர் நடைமுறைப்படுத்துவதில் அல்லவென்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
தன்னுடைய சமய நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்துத்தான் இன்னொரு சமயத்தினரோடு நட்புறவை, சமய நல்லிணகத்தை பேணவேண்டுமாக இருந்தால் அவ்வாறானதொரு சமய நல்லிணக்கம் எந்தவொரு சமயத்தவர்களுக்கும் தேவையில்லை. சமய நல்லிணக்கம் என்பது அடுத்தவர்களுடைய சமயக்கோட்பாடுகளை தான் சகித்துக்கொள்வதே தவிர தன்னுடைய சமயத்தை அடுத்தவர்களுக்கு திணிப்பதோ அல்லது அடுத்தவர்களுடைய சமய சித்தாந்தங்களை தான் நடைமுறைப்படுத்துவதோ இல்லை.
அதேபோன்று எம்மதமும் சம்மதம் என்றால் உதாரணமாக ஒரு இந்து சமயத்தை பின்பற்றுபவர், சைவக்கோயிலுக்கும் செல்வது, பன்சலைக்கும் சென்று வழிபடுவது, கிறிஸ்தவ தேவாலயத்திலும் சென்று ஜெபிப்பது மற்றும் இஸ்லாமிய இறையில்லங்களிலும் வழிபடுவதென்று அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது.
மாறாக நான் ஒரு முஸ்லிமாக இருக்கின்ற அதேநேரத்தில் என்னுடைய அயல் வீட்டுக்காரர் இந்துவாக இருப்பதை நான் சம்மதிக்கிறேன். எனக்குக்கீழே வேலை செய்பவர் ஒரு கிறிஸ்த்தவராக இருப்பதை நான் சம்மதிக்கிறேன். என்னுடைய பின் வீட்டுக்காரர் ஒரு பௌத்தராக இருப்பதில் எனக்கு எதுவிட ஆட்சேபனைகளும் கிடையாது. இவ்வாறு தான் ஒரு சமயத்தை முழுமையாகவும் அதனை விளங்கியுணர்ந்தும் பின்பற்றுகின்ற ஒருவராக இருந்துகொண்டு தனைச்சுற்றி வாழ்கின்ற பிறசமய மக்களையும் அவர்களுடைய சமயங்களையும் அவர் மதித்து வாழ்ந்தால் அதுவே எம்மதமும் சம்மதம் என்ற வாக்கியத்தின் மிகச்சரியான பொருளும் விளக்கமுமாகும்.
அதைவிடுத்து நான் எல்லா சமயங்களையும் பின்பற்றி நடப்பேன் என்று கூறுவது ஏனைய மதங்களை மதிப்பதற்கு பதிலாக அவமதிப்பதாகவே அமையும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சமய நல்லிணக்கம் என்பதற்காக ஒரு சைவ சமய பூசகர் இஸ்லாமியர்களுடைய பெருநாள் தினத்தில் சமைக்கப்படுகின்ற மாட்டிறைச்சியை உட்கொள்வாரா என்றால் ஒருபோதும் அவர் அதற்கு உடன்படமாட்டார். மத நல்லிணக்கம் என்ற பெயரால் அவருக்கு அவ்வுணவை வழங்குவதும் ஒரு இஸ்லாமியனுக்கு உகந்த செயலல்ல. அப்படியிருக்கும்போது இஸ்லாத்தில் முற்றுமுழுவதுமாக தடைசெய்யப்பட்ட ஒரு பிறசமய ஆராதனை ஒன்றை மத நல்லிணக்கம் என்பதற்காக ஒரு முஸ்லிம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாத்திரம் எவ்வாறு எதிர்பார்ப்பது?
இதைத்தான் அல் குர்ஆனும் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.
”அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” (அல்குர்ஆன் 109:1-3)
எனவே சமயங்களுகிடையிலான சமாதானத்தை, சகவாழ்வை உறுதிப்படுத்துவதற்காக சமகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்ற அமைப்புக்களை பொறுத்தவரைக்கும் அவையனைத்துமே அவரவர்களுடைய சமய அனுஸ்டானங்களை அந்தந்த சமயத்தவர்களுடன் மட்டுப்படுத்திக்கொள்ளவேண்டுமே தவிர தங்களுடைய சமய நம்பிக்கை சார்ந்த ஆராதனை ஒன்றை ஏனைய சமயத்தவர் ஒருவரிடத்தில் அன்பாகவோ, அதட்டலாகவோ திணிக்கின்ற நடைமுறையினை தவிர்ந்துகொள்ளவேண்டும்.
அவ்வாறு திணிக்கப்படுகின்ற ஆராதனையானது சமய நல்லிணக்கம் என்ற அந்த அத்திவாரத்தை விட்டும் விலகி மதத்திணிப்பு என்ற பாதைக்கு திசைமாறிச்சென்றுவிடும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
சமய நல்லிணக்கம் என்பது கலந்து, மகிழ்ந்து வாழ்வதே தவிர கரைந்து காணாமல் போவதல்ல.