இஸ்லாமிய ஷரீஆவில் விபச்சாரிகளை கல்லெறிந்து கொல்வதற்கான காரணம் என்ன?
முஹம்மது நியாஸ்
[ தண்டனையை கண்டு பயப்படுகின்றபோதுதான் ஒரு மனிதன் குற்றச்செயல்களில ஈடுபதை தவிர்ப்பதற்கு முயற்சிப்பான். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாவிட்டால் ஐநூறு ரூபா அபராதம் விதிக்கப்படுவது ஒரு ஏழைத்தொழிலாளிக்கு தாங்க முடியாத சுமையாகும்.
ஆனால் அந்த ஐநூறு ரூபாவை இழக்கவேண்டியேற்படும் என்ற பயத்தினால் மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது தலைகவசம் அணிவதில் கவனமாக இருக்கிறான். இதுவே ஐம்பது ரூபாய் அபராதமாக இருந்தால் யாரவது அந்த சட்டத்தை மதிப்பார்களா என்றால் ஒருபோதும் அது நடக்காது.
அதேபோன்றுதான் ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்தால் பதிலுக்கு அக்கொலையாளி அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவான் என்ற சட்டம் எந்தவித வளைவு, நெளிவுகளும் இன்றி நாட்டில் அமுல்ப்படுத்தப்படுமானால் எந்தவொரு கொலைச்சம்பவமும் இந்த நாட்டில் நடைபெறாமல் நிச்சயமாக தடுக்கமுடியும்.
ஆனால் ஒரு நாட்டின் குடிமகனை கொலை செய்த கொலையாளிக்கு சிறைச்சாலை என்ற பெயரில் அரச செலவிலும் கொலை செய்யப்பட்டவனுடைய குடும்பத்தாரின் வரிப்பணத்திலும் இருப்பதற்கு இடம், உண்பதற்கு உணவு, உடுப்பதற்கு உடை என்பனை உத்தரவாதமாக வழங்கப்படுகின்றபோது எவ்வாறு நாம் இந்நாட்டில் குற்றச்செயல்களை தடுக்கமுடியும், குறைக்கமுடியும்?
விபச்சாரத்திற்கான சட்டவுரிமை வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடாத்தக்கூடிய சூழலில், அந்த விபச்சாரத்தை குற்றச்செயல் என்றே உணரமுடியாத மக்கள் மத்தியில் அதற்கான தண்டனையை பற்றிப்பேசுவது சவால் மிகுந்த ஒன்றுதான்.]
இஸ்லாமிய ஷரீஆவில் விபச்சாரிகளை கல்லெறிந்து கொல்வதற்கான காரணம் என்ன?
இப்போது கற்களால் எறிந்து கொல்லுதல் என்னும் ஒருவகையான “துன்புறுத்திக்கொலை” செய்யும் தண்டனை ஏன் விபச்சாரிகளுக்கு வழங்கப்படுகின்றது என்பதை ஆராய்வோம்.
இந்த சட்டத்தை மாத்திரமல்ல இஸ்லாமிய ஷரீஆவின் எந்தவொரு சட்டமுறைமையையும் அமுல்ப்படுத்துவதற்கும் முதலில் ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருப்பது அவசியமானது. இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அமுலில் இல்லாத ஒரு நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் யாரும் இவ்வாறான தண்டனைகளை தாங்களாகவே சட்டத்தை கையில் ஏந்திக்கொண்டு நடைமுறைப்படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
திருமணமாகாத இருவர் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு தண்டனையாக நூறு கசையடி அடிப்பதுடன் ஒரு ஆண்டுகாலம் நாடு கடத்தும்படியும் அதேபோன்று திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களை கற்களால் எறிந்து கொல்லும்படியும் இஸ்லாமிய ஷரீஆ உத்தரவிடுகிறது.
இருவர் விபச்சாரம் செய்கின்றபோது அதனை கண்களால் நேரடியாகப்பார்த்தவர்கள் நான்குபேர் சாட்சி கூறினால் அந்த விபச்சாரிகளுக்கான தண்டனை உறுதியாகிவிடுகிறது. மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட நபர்களே இஸ்லாமிய அரசிடம் வந்து தாங்கள் விபச்சாரத்தில் ஈடு பட்டதாக சுய வாக்கு மூலம் அளித்தாலும் அவர்களுக்கு மேற்படி தண்டனைகளை வழங்கமுடியும். நபிகளாருடைய ஆட்சிக்காலத்தில் இரண்டு முறைகளிலும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நான்கு சாட்சியாளர்களும் சமூகத்தில் இதற்கு முன்னால் பொய் சாட்சி கூறாதவர்களாக இருக்கவேண்டும் என்பது உபரியான ஒரு நிபந்தனையாகும்.
இந்த விசாரணைகள் மற்றும் விசாரணையின் இறுதியில் தீர்ப்பளிக்கப்படுகின்ற தண்டனைகள் அனைத்துமே ஒரு இஸ்லாமிய நாட்டிலுள்ள ஷரீஆ நீதிமன்றத்துடன் இணைந்த சட்டத்துறையின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும். சாட்சியாளர்களை தவிர தனிநபர்கள் யாருமே இதில் சுயமாக தொடர்புபடமாட்டார்கள்.
மேலும் குற்றவாளிகளை கல்லெறிந்து கொலை செய்கின்ற நடைமுறையை பொறுத்தவரைக்கும் அது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாத்திரம் உரியதொரு சட்டமுறைமையல்ல. மாறாக கிறிஸ்த்தவ வேத நூலாகிய பைபிள் கூட பல இடங்களில் இந்த கல்லெறிந்து கொல்லுகின்ற தண்டனை பற்றி கூறுகிறது. உதாரணத்திற்காக இங்கே இரண்டு வசனங்களை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.
பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்பட வேண்டும்,; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும். (லேவியராகமம் 20 :2 )
கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும், சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும், பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும். (லேவியராகமம் 24 :16 )
மேற்படி வேதாகம வசனங்களின்படி விபச்சாரம் செய்பவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் இறைவனுடைய பெயரை கொச்சைப்படுத்துபவர்களையும் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்பது பைபிளின் உத்தரவாகும். மட்டுமன்றி அவர்கள் உள்நாட்டவர்களானாலும் வெளிநாட்டவர்களானாலும் அவர்களை கல்லெறிந்து கொல்லும்படியும் பைபிள் கூறுகிறது. இது மாத்திரமல்ல இன்னும் பல வசனங்கள் பைபிளில் ஆங்காங்கே விபச்சாரத்திற்கும் இன்னபிற சிறிய, பெரிய பாவச்செயல்களுக்கும் கல்லெறிந்து கொலை செய்கின்ற நடைமுறையை வலியுறுத்துவதை நாம் காணமுடியும். ஆனால் பரிதாபம், இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமே இவ்விடயத்தில் விமர்சனத்தை எதிர்கொள்கிறது என்பது தனியாக ஆராயப்படவேண்டிய விடயமாகும்.
அடுத்ததாக இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரைக்கும் அது ஏனைய சமயங்களை போன்று வணக்க, வழிபாட்டுக்கிரியைகளையும் சுலோகங்கள் மற்றும் மந்திரங்களை, ஆசார முறைமைகளை மாத்திரம் மக்களுக்கு போதிக்கின்ற ஒரு சித்தாந்தம் அல்ல. மாறாக இஸ்லாம் என்பது ஒரு சம்பூரணமான வாழ்க்கைத்திட்டம். ஒரு மனிதன் தாயின் கருவறையில் சிசுவாக உருவெடுத்ததில் இருந்து மரணித்து மண்ணறைக்குள் போகின்றவரைக்கும் அவனுடைய வாழ்கையில் மேற்கொள்ளப்படுகின்ற அத்தனை செயற்பாடுகளுக்கும் இஸ்லாமிய மார்க்கமானது தெளிவான, தீர்க்கமான பல வழிகாட்டல்களை சீராக, செப்பனிட்டு வழங்கியுள்ளது.
“தன்னுடைய அயலவன் பசித்திருக்க தான் மாத்திரம் புசிப்பவன் உண்மையான இஸ்லாமியன் அல்ல” என்று ஒரு வாழ்வியல் நெறியாக இருந்து மனித நேயத்தை வலியுறுத்துகின்ற இஸ்லாமிய மார்க்கம்தான் ஒரு நாட்டின் ஆட்சியாளர் பொதுமக்கள் விடயத்தில் சட்டரீதியாக எவ்வாறானதொரு நடைமுறையினை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொறுப்புடன் வழிகாட்டுகிறது. ஆட்சியாளர் என்று வருகின்றபோது ஒரு நாட்டை ஆள்கின்ற சட்டத்துறைதான் அதில் பாரிய வகிபாகத்தை செலுத்துகிறது. ஒரு நாட்டில் சட்டத்துறை சீர்கெட்டுப்போகின்றபோது அந்நாட்டில் மக்களுடைய இருப்புக்கள், அன்றாட நடவடிக்கைகள் கேள்விக்குறியாகிவிடுகின்றன. சமூகங்களின் கலாச்சாரம் சீர்கெட்டுப்போய் விடுகிறது. கல்வி பொருளாதாரம் என ஒரு நாட்டின் முதுகெலும்பாகவுள்ள அனைத்து விவகாரங்களுமே இந்த சட்டத்துறை என்னும் சக்கரத்தில்தான் சுழன்று கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
இன்று நாம் வாழ்கின்ற சுற்றுச்சூழலை பார்க்கலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் டெல்லியில் ஓடுகின்ற பேரூந்திலேயே வைத்து கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியுடைய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வழங்கப்பட்டதா என்று பார்த்தால் இன்றுவரை கிடையாது. போதாகுறைக்கு அந்த குற்றச்செயலில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒரு காமக்கொடூரனை பதினெட்டு வயது பூர்த்தியாகவில்லை என்று விடுதலை செய்த கேவலமும் நடந்தேதான் உள்ளது.
அதேபோன்று அண்மையில் இலங்கை நாட்டில் புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான கூட்டுப்பாலியல் வல்லுறவின் பின்னரான கொடூரக்கொலையாகட்டும், நான்கு வயது பச்சிளம் குழந்தையான செயா சவத்மி மீதான கற்பழிப்பின் பின்னரான மிருகத்தனமான படுகொலையாகட்டும், காத்தான்குடியில் இடம்பெற்ற ஆறுவயது சிறுமி சீமாவின் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையாக இருக்கட்டும் இந்த சம்பவங்களில் தொடர்புபட்ட நபர்கள் இதுவரைக்கும் முறையாக அடையாளம் காணப்பட்டார்களா, அல்லது அடையாளம் காணப்பட்ட அந்த குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களுடைய உள்ளங்கள் அமைதியடைகின்ற அளவுக்கு இந்நாட்டு சட்டத்துறையால் தண்டனையளிக்க முடிந்ததா என்றால் நாமெல்லோருமே வெட்கித்தலை குனியவேண்டும்.
மாத்திரமல்லாது கடந்த மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக்காலத்தின்போது மூடிமறைக்கப்பட்ட பிரபல ரக்பி வீரர் வசீம் தாசுதீனுடைய படுகொலைச்சம்பவம். இது ஒரு திட்டமிடப்பட்ட கொலைதான் என்பதை தெரிந்துகொள்வதற்கே காவல்த்துறைக்கும் நீதித்துறைக்கும் நாட்டில் ஒரு ஆட்சிமாற்றமும் கூடவே நான்குவருட கால அவகாசமும் தேவைப்பட்டுள்ளதென்றால் இந்நாட்டினுடைய சட்டத்துறையின் இலட்சணம் எந்த நிலையில் இருக்கின்றதென்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
அவ்வாறு கொலைதான் என்று தெரிந்தும் கூட அது தொடர்பில் சட்டரீதியாக ஏதேனும் முன்னெடுப்புக்கள் நடைபெற்றுள்ளதா என்றுபார்த்தால் அவையனைத்துமே ஒரு கண்துடைப்பாகத்தான் இருந்துவருகின்றன.
இவை மாத்திரமல்ல, தேர்தல் காலங்களிலும் இன்னபிற சந்தர்ப்பங்களிலும் இந்நாட்டில் நடைபெற்ற எத்தனையோ அரசியல் படுகொலைகள், கொள்ளையடிப்புக்கள், பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்ப்பிரயோகங்கள் மற்றும் இன்னபிற குற்றச்செயல்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் இந்நாட்டிலுள்ள சட்டத்துறையில் காணப்படுகின்ற ஓட்டைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தண்டனைகளில் இருந்தும் இலாவகமாக தப்பித்துக்கொள்வதை நாம் காண்கிறோம்.
இதற்கெல்லாம் அடிப்படைக்காரணமாக இருப்பது நமது இலங்கை நாட்டிலும் இலங்கை நாட்டை ஒத்த சட்டத்துறை உள்ள இந்தியா போன்ற சகல நாடுகளிலும் அமுலில் இருந்துவருகின்ற சட்டத்துறையிலுள்ள சீர்கேடுகளும் நழுவல் போக்குகளுமேயாகும்.
ஏனெனில் ஷரீஆ சட்டமுறைமை தவிர்ந்த ஏனைய அரசியல் சட்டமூலங்கள் எதை நாம் எடுத்துக்கொண்டாலும் அவையனைத்துமே அந்தந்த நாடுகளிலுள்ள கல்வியாளர்கள் மற்றும் தலைவர்கள் எனப்படுகின்ற மனிதர்களால் அவர்களுடைய அறிவுக்கும் உணர்வுகளுக்கும் உட்பட்ட வகையில் ஏற்படுத்தப்பட்ட, வரையப்பட்ட சட்ட வரைபுகளேயாகும். அதனால்தான் அந்த சட்டமுறைமைகள் அனைத்துமே காலத்திற்கு காலம் புதுப்புது மாற்றங்களையும் திருத்தங்களையும் வேண்டி நிற்பதை நாம் காண்கிறோம்.
ஆனால் ஷரீஆ சட்டமுறைமை என்பது அவ்வாறானதல்ல. அது இந்த பிரபஞ்சத்தையே படைத்து, பரிபாலிக்கின்ற வல்ல இறைவன் அழ்ழாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட சட்ட வரைபாகும். அது முக்காலமும் பொருந்தக்கூடியது. எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு காலத்திலும் செயற்படுத்தக்கூடியது. உலக மக்கள் அனைவருக்கும் பயனுள்ளது.
மேலும் தண்டனைகள் கடுமையாக இருகின்றபோதுதான் குற்றச்செயல்கள் குறையும் என்பது நாமெல்லோரும் ஏற்றுகொண்ட ஒரு நியதியாகும். ஷரீஆ தண்டனை முறைமையினை கொடூரமானதென்று விமர்சித்தவர்கள் கூட வித்தியாவின் படுகொலை சம்பவத்தை கேள்விப்பட்டதும் குற்றவாளிகளை கொலை செய்வதே இதற்கான ஒரேதீர்வென்று கோரஷாக கோஷமிட்டது எதனை படம்பிடித்துக்காட்டுகிறது?
தண்டனையை கண்டு பயப்படுகின்றபோதுதான் ஒரு மனிதன் குற்றச்செயல்களில ஈடுபதை தவிர்ப்பதற்கு முயற்சிப்பான். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாவிட்டால் ஐநூறு ரூபா அபராதம் விதிக்கப்படுவது ஒரு ஏழைத்தொழிலாளிக்கு தாங்க முடியாத சுமையாகும். ஆனால் அந்த ஐநூறு ரூபாவை இழக்கவேண்டியேற்படும் என்ற பயத்தினால் மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது தலைகவசம் அணிவதில் கவனமாக இருக்கிறான். இதுவே ஐம்பது ரூபாய் அபராதமாக இருந்தால் யாரவது அந்த சட்டத்தை மதிப்பார்களா என்றால் ஒருபோதும் அது நடக்காது.
அதேபோன்றுதான் ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்தால் பதிலுக்கு அக்கொலையாளி அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவான் என்ற சட்டம் எதுவித வளைவு, நெளிவுகளும் இன்றி நாட்டில் அமுல்ப்படுத்தப்படுமானால் எந்தவொரு கொலைச்சம்பவமும் இந்த நாட்டில் நடைபெறாமல் நிச்சயமாக தடுக்கமுடியும். ஆனால் ஒரு நாட்டின் குடிமகனை கொலை செய்த கொலையாளிக்கு சிறைச்சாலை என்ற பெயரில் அரச செலவிலும் கொலை செய்யப்பட்டவனுடைய குடும்பத்தாரின் வரிப்பணத்திலும் இருப்பதற்கு இடம், உண்பதற்கு உணவு, உடுப்பதற்கு உடை என்பனை உத்தரவாதமாக வழங்கப்படுகின்றபோது எவ்வாறு நாம் இந்நாட்டில் குற்றச்செயல்களை தடுக்கமுடியும், குறைக்கமுடியும்?
ஆகவேதான் குற்றச்செயல்கள் சிறியதா, பெரியதா என்பவற்றை அதனால் பாதிக்கப்பட்ட மனிதனுடைய, சமூகத்தினுடைய நிலையில் இருந்து நோக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளின் தரப்பில் இருந்தோ அல்லது சம்பந்தமே இல்லாத நபரோ ஒரு குற்றச்செயலின் அளவை, அதன் பாரதூரத்தை அளவீடு செய்யக்கூடாது.
எனவேதான் விபச்சாரம் என்னும் அசிங்கமான காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் ஆணும் பெண்ணும் கௌரவமாக வாழ்வதற்கான பல வழிகாட்டல்களையும் சலுகைகளையும் இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தருகிறது. போதிக்கிறது.
விபச்சாரம் என்ற குற்றத்தை அதன் மூலம் துரோகமிழைக்கப்பட்ட, அநீதியிழைக்கப்பட்ட அவ்விபச்சாரியுடைய கணவனுடைய அல்லது மனைவியுடைய மனோநிலை, விபச்சாரத்தில் ஈடுபட்டு சட்டவிரோத கருக்கலைப்பின் மூலம் இந்த உலகை பார்க்கும் முன்னரே கருவிலேயே ஒரு சிசுவை கொலை செய்து அதற்கு சமாதி கட்டிய கொடூரமான அரக்கத்தனம், விபச்சாரத்தின் மூலம் பெற்றுக்கொண்ட ஒரு குழந்தையை சமூகத்தின் இழிபார்வைக்குப் பயந்து குப்பைத்தொட்டியில் வீசிஎறிந்துவிட்டு ஓடிய கொடூரத்தனம், தன்னுடைய கள்ளத்தனமான உறவின் காரணமாக குடும்பங்களுக்கிடையில் விரிசல்களை தோற்றுவித்து கொலை மற்றும் அசிட் வீச்சு போன்ற வேண்டத்தகாத பிரச்சனைகளையும் அவமானங்களையும் பழி தீர்ப்புக்களையும் ஏற்படுத்திய மோசமான செயற்பாடு, தனக்கு கிடைத்த வெறும் ஓரிரு மணிநேர சுகத்திற்காக தன்னுடைய வாழ்க்கைத்துணையை வாழ்நாள் பூராகவும் கண்ணீர்விட்டு அழவைத்த, விரக்தியான மனோநிலைக்கு தள்ளிவிட்ட கல்நெஞ்சத்தனம், தான் விபச்சாரம் மூலம் சம்பாதித்த பால்வினை நோயால் தனக்கு பிறந்த ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தையை பரிதாபமாகக்கொலை செய்த கொடூரச்செயல் மற்றும் அவ்வுயிர்கொல்லி நோயால் சமூகத்தில் பலருடைய வாழ்க்கையையும் துவம்சம் செய்த படுபாதகமான குற்றச்செயல் என சங்கிலித்தொடராக நிகழ்ந்தேறிய பல குற்றச்செயல்களையும், அவற்றின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர்களுடைய, சமூகத்தினுடைய சேத விபரங்களையும் கருத்தில்கொண்டுதான் இந்த விபச்சாரம் என்னும் சமுதாய சீர்கேட்டிற்கு இஸ்லாமிய ஷரீஆ கல்லெறிந்து கொல்லும்படி கட்டளையிடுகிறது. அதை பார்க்கின்ற ஏனையவர்கள் எச்சரிக்கையும் படிப்பினையும் பெறவேண்டும் என்பதற்காகவே பொதுமக்கள் மத்தியில் வைத்து பகிரங்கமாக நிறைவேற்றும்படியும் வலியுறுத்துகிறது.
விபச்சாரிகளை கல்லெறிந்து கொலை செய்து நாட்டில் சனத்தொகையை கட்டுப்படுத்து இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கமல்ல. மோட்டார் சைக்கிள் செல்லும்போது தலைக்கவசம் அணியாதுவிட்டால் ஐநூறு ரூபாய் அபராதம் விதிப்பதை பார்த்து அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது என்று யாரும் வாதிடுவதில்லை. மாறாக நாட்டில் சட்டத்தை பொதுமக்கள் அமுல்ப்படுத்தவேண்டும் என்பதற்காக அரசாங்கம் இட்டதொரு மாற்றீடு என்று அதனை ஏற்றுக்கொள்கிறோம்.
அதேபோன்றுதான் இவ்வாறான ஒரு கடுமையான தண்டனை நாட்டில் அமுலில் இருந்தால் அதன் மூலம் விபச்சாரம் மற்றும் அதன் வாயிலாக அரங்கேறுகின்ற அத்தனை சீரழிவுகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் குடும்பங்கள், சமூகங்களுக்கிடையிலான ஒரு சீரான கட்டமைப்பை ஏற்படுத்துவதுமே இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கமென்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
ஆனாலும் இந்த தண்டனையானது கடுமையானது என்றும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் வாதிடுவதற்குரிய காரணத்தை நாம் எடுத்துநோக்கினால் விபச்சாரம் என்னும் பாவத்தை பற்றிய சரியான புரிதல் நம்மத்தியில் இல்லையென்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.
இன்றைய சமகால சூழலில் விபச்சாரம் என்பது ஒரு சாதாரணமான விடயம் என்றளவுக்கு அதன் பரவலாக்கம் மலிந்துவிடதன் காரணமாக அதற்கான தண்டனை ஒரு பாரிய விமர்சனப்பொருளாக உருவெடுத்துள்ளது.
விபச்சாரத்திற்கான சட்டவுரிமை வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடாத்தக்கூடிய சூழலில், அந்த விபச்சாரத்தை குற்றச்செயல் என்றே உணரமுடியாத மக்கள் மத்தியில் அதற்கான தண்டனையை பற்றிப்பேசுவது சவால் மிகுந்த ஒன்றுதான்.
எனவே இஸ்லாமிய ஷரீஆ வலியுறுத்துகின்ற கல்லெறி தண்டனையை விமர்சிப்பதற்கு முன்னால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய எதிர்ப்பாலினத்தேவையினை முறையாகப்பூர்த்தி செய்வதற்கு இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள சட்டங்கள், சலுகைகள் என்பன முறைப்படி ஆய்வு செய்யவேண்டும். விபச்சாரத்தின் பக்கம் நெருங்காமல் இருபதற்காக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள அரண்களையும் அழகான வழிகாட்டல்களையும் திறந்த உள்ளத்துடன் சீர்தூக்கிப்பார்க்கவேண்டும்.
அதேபோன்று விபச்சாரத்தின் பாரதூரம் சரியாகப்புரியப்படவேண்டும். அதன்மூலம் மனித குலத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சிந்திக்கப்படவேண்டும். விபச்சாரிகளின் மூலம் பரப்பப்படுகின்ற பால்வினை நோய்களும் அதன்மூலம் சமுதாயங்களில் ஏற்படுகின்ற இழப்புக்களும் ஆராயப்படவேண்டும். சட்டவிரோத கருக்கலைப்புக்கள், விபச்சாரத்தின் மூலம் உருவாகின்ற தாய், தந்தை இல்லாத அநாதைச்சிறுவர்களின் எதிர்காலங்கள், அவர்களுடைய வாழ்க்கை முறைகள் ஆய்வு செய்யப்படவேண்டும்.
அந்த வகையில் விபச்சாரத்தின் மூலம் ஏற்படக்கூடிய இவ்வாறான சமுதாய சீர்கேடுகளை, பாதிப்புக்களை, பின்விளைவுகளை தவிர்ப்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ ஷரீஆ சட்டத்தை விமர்சிக்கின்ற யாரேனும் முற்போக்கு(?)வாதிகள் ஒரு நிரந்தரமான மாற்றுத்தீர்வை(?) முன்வைத்தால் கல்லெறிந்து கொலை செய்கின்ற கொடூரமான(?) தண்டனை தொடர்பாக ஒரு மீளாய்வை(?) நடாத்துமாறு இஸ்லாமிய உலகத்திற்கு நாம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
source: https://srilankanmuslim.wordpress.com/