உன் வெற்றி, உன் முடிவில்!
மனித வாழ்வில் ஏற்படுகிற வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பது அவன் தன் வாழ்வில் சந்திக்கிற மிக முக்கியமான சூழ்நிலைகளில், தருணங்களில் மேற்கொள்கிற முடிவுகளே!
அவன் மேற்கொள்கிற முடிவும், அதைக் கையாள்கிற விதமும் தான் அவனை வெற்றிப்பாதையின் இறுதி வரை அழைத்துச் செல்கிறது.
பொன்னான வாழ்வு மலர வழி வகுக்கின்றது, வாழும்போதே வானைத்தொடும் அதிசயத்தைப் பெற்றுத் தருகின்றது.
இஸ்லாமிய வரலாறுகளை அற்புதங்களால் அலங்கரித்து, சுடர்வீசிடும் ஒளியாய் இலங்கிக் கொண்டிருக்கும் மாமனிதர்களின் வாழ்க்கைப் பாதையை வாசித்துக் கடக்கும் போது, அவர்களின் வாழ்வில் அவர்கள் அடைந்த அசாத்தியமான பல வெற்றிக்குப் பின்னால் “அவர்கள் மேற்கொண்ட முடிவும், அதை அவர்கள் கையாண்ட விதமும் தான்” உறுதுணையாய் இருந்தது என்பதை உணரும் போது உண்மையில் நாம் மெய் சிலிர்த்துப் போகிறோம்.
அல்லாஹ் கூறுகின்றான்: “{நபியே! ஏதாவது ஒரு விஷயத்தில்} நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருப்பீராக! (அல்குர்ஆன் 3:159)
இங்கே அல்லாஹ் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதலில் உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்றும், பின்பு தான் அது குறித்து அல்லாஹ்விடம் தவக்குல் – பொறுப்புச் சாட்ட வேண்டும் என்றும் மாநபி {ஸல்} அவர்களுக்கு வழி காட்டுகின்றான்.
1. துல்லியமான முடிவு (Accurate)
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்த துரோகத்திற்காக நாடு கடத்தப்பட்ட பனூ நளீர் குலத்தார்களின் தலைவனான ஹுயய் இப்னு அக்தப் என்பவன் குறைஷித் தலைவர்களைச் சந்தித்து, மாநபி {ஸல்} அவர்களின் மீதும், முஸ்லிம்களின் மீதும் படையெடுக்குமாறு தூண்டினான்.
அப்படி படையெடுத்தால் தங்களின் குலம் முழு ஒத்துழைப்பு தரும் என வாக்கும் தந்தான்.
பனூ நளீர் குலத்தின் இன்னொரு தலைவனான கினானா இப்னு ரபீஉ என்பவன், பனூ ஃகத்ஃபான் குலத்தாரை மாநபி {ஸல்} அவர்களுக்கெதிராக படை எடுக்குமாறு தூண்டிவிட்டான்.
பனூ ஃகத்ஃபான் குலத்தார் தங்களின் நட்பு குலத்தாரான பனூ அஸத் குலத்தாரிடம் இது விஷயத்தில் தங்களுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்டனர்.
இதற்கிடையில், குறைஷிகள் பனூ சுலைம் கோத்திரத்தார்களை அழைத்துக் கொண்டு மர்ருள் ளஹ்ரான் எனும் இடத்தில் ஒன்று கூடினர்.
பனூ நளீர், பனூ குரைளா, பனூ ஃகத்ஃபான், பனூ அஸத், பனூ சுலைம், குறைஷிகள் என 10,000 பேர் ஒரு பெரும் படையாகத் திரண்டு மதீனாவைத் தாக்கிட திட்ட மிட்டனர்.
ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் இது நடைபெறுகின்றது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மதீனாவைச் சுற்றிலும் பெரும்அகழி தோண்டியதால் அகழ்யுத்தம் என்றும், பல அணிகளாக பிரிந்திருந்த எதிரிகள் ஓரணியில் ஒன்றிணைந்ததால் இது அல் அஹ்ஸாப் – பல அணியினர் என்றும் அழைக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 20 அல்லது 15 நாட்கள் முற்றுகை நீடித்தது. எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகம், ஆயுதங்களும் அதிகம். ஆனால், முஸ்லிம்களின் எண்ணிக்கையும், ஆயுதபலமும் மிகவும் குறைவாகத் தான் இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.
முற்றுகையில் ஈடுபட்டிருந்த ஓர் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “யா அல்லாஹ் நீ வாக்களித்திருக்கின்றாயே அந்த வெற்றியை உன்னிடம் கேட்கின்றேன்” என மன்றாடிக்கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
எதிரிகளின் புறத்திலிருந்து ஓர் உருவம் முஸ்லிம்களின் பகுதிக்கு வந்து கொண்டிருந்ததை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்துவிட்டார்கள்.
யார்? என ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதும், நான் தான் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிருல் அஷ்ஜயீ என்று பதில் வந்தது.
ஓ! நுஅய்ம் இப்னு மஸ்வூதா? என்ன இந்த நேரத்தில் அதுவும் இங்கே? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள்.
அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், இது என் குடும்பத்தார் களுக்கும், என் குலத்தார்களுக்கும் தெரியாது என்று கூறிவிட்டு, சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ நீரோ ஃகத்ஃபான் குலத்தார்களில் இருந்தும் இஸ்லாமான தனியொரு நபராக இருக்கின்றீர்.
உம்மால் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால் தந்திரத்தைக் கையாண்டு இந்த யுத்தத்தின் போக்கை மாற்றிவிடும்!
கைகோர்த்து நிற்கிற இவர்களின் இதயங்களில் உமது தந்திரத்தால் பிரிவினையை ஏற்படுத்தி விடும்! உமக்கு சக்தி இருந்தால் இப்படிச் செய்து விடும்! அது போதும்! போர் என்றாலே தந்திரம் தானே!” என்று கூறினார்கள்.
நுஅய்ம் இப்னு மஸ்வூத் அவர்கள் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்தவர்கள். மதீனாவிற்கு கிழக்கே இருந்த நஜ்த் தேசத்தில் தான் ஃகத்ஃபான் குலத்தார்கள் வசித்து வந்தனர். வியாபார ரீதியாக பனூ குரைளாக்களோடு மிக அதிகமான நெருக்கம் இருந்த்து நுஅய்ம் அவர்களுக்கு.
அதையும் தாண்டி ஒரு நெருக்கம் அவர்களோடு இருந்த்தென்றால் அது இது தான் நுஅய்ம் ஓர் உல்லாசப் பிரியராக இருந்தார்.
மது, சூது, மாது என உல்லாசத்தில் மூழ்கிக் கிடந்தார். அதற்காக காசு பணங்களை கொண்டு வந்து பனூ குரைளாக்களிடம் கொட்டுவார். அவர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.
ஆனாலும், நுஅய்ம் மதிநுட்பம் நிறைந்தவர், எந்தக் காரியத்தையும் மிக அற்புதமாக திட்டம் தீட்டி சாதிப்பதில் வல்லவர்.
இவையனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்ததால் நுஅய்ம் அவர்களிடம் தமது முடிவைக் கூறினார்கள்.
நுஅய்ம் நேராக பனூ குரைளாக்களிடம் வந்தார். ”எனக்கு உங்கள் மீது இருக்கிற அன்பு உங்களுக்கு தெரியும் தானே? குறிப்பாக உங்களுக்கும் எனக்கும் இடையே இருக்கிற நட்பு உண்மையானது தானே?” என்றார்.
அதற்கு, அவர்கள் அதில் அணுவளவேனும் சந்தேகம் இல்லை. நீர் உண்மையைத் தான் சொல்கின்றீர்!
அப்படியென்றால், ”என் மனதை உறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லட்டுமா? என்று கேட்டார்” நுஅய்ம்.
”ம்ம்ம், சொல்லும்” என்றார்கள்.
ஃகத்ஃபான் குலத்தார்களும், குறைஷிகளும் உங்களைப் போன்று கிடையாது. அவர்களின் சொத்துக்களும், மனைவி மக்களும், ஊரில் பத்திரமாக இருக்கின்றார்கள்.
சுய நலத்தைத் தவிர வேறொன்றும் அவர்களை முஹம்மதுக்கு {ஸல்} எதிராக போரிட அழைத்து வரவில்லை.
இந்தப் போரில் வெற்றி கிடைத்தாலும் போரில் கிடைத்த பொருட்களில் எந்த ஒன்றையும் அவர்கள் உங்களுக்கு தரப்போவதில்லை.
சரி, வெற்றி கிடைத்தால் பரவாயில்லை. ஒரு சமயம் போரில் தோற்றுவிட்டால் உங்களை அம்போ என விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது உங்களின் சொந்த பூமி, உங்களின் சொந்த ஊர், உங்களின் சொத்துக்களெல்லாம் இங்கேதான் இருக்கின்றன.
உங்களின் மனைவி, மக்கள் என அத்துனை பேர்களும் உங்களுடன் இங்கே தான் இருக்கின்றார்கள்.
நீங்கள் வேறு அவசரப்பட்டு, முஸ்லிம்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை நொடிப்பொழுதில் அவர்கள் போருக்கு வா என்றதும் தூக்கி எறிந்து விட்டீர்கள்.
முஸ்லிம்களின் கோபத்திற்கும், வேகத்திற்கும் உங்களால் ஈடுகொடுக்க இயலாது. ஏனெனில், அவர்களின் கோபம் முழுக்க உங்களின் மீது தான் இருக்கும். இப்ப கூட ஒன்றும் நடந்து விட வில்லை பார்த்து, யோசித்து நல்ல முடிவாக எடுங்கள்.
இதை உங்கள் மீது நான் கொண்டிருக்கின்ற தனிப்பட்ட அன்பின் வெளிப்பாட்டில் தான் சொல்கின்றேன்” என்றார் நுஅய்ம்.
நினைத்துப் பார்க்கவே பனூ குரைளா குலத்தாருக்கு திகிலூட்டியது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதையும் நீரே சொல்லிவிடும்!” என்றார்கள் பதற்றத்தோடு.
என்னுடைய தீர்க்கமான ஆலோசனை இது தான்! “அதாவது உங்கள் கூட்டணிப் படையினரில் சில முக்கியஸ்தர்களை நீங்கள் பிணையாக கேட்க வேண்டும். அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை போர் செய்யப் போவதில்லை என உறுதியாய் நின்று விடுங்கள்.
அப்படி பிணையாளியாய் சிலரை தந்தார்கள் என்றால் நம்பி போரிடுங்கள். அப்போது தான் அது உங்கள் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்தும். நீங்கள் பாதுகாக்கப்பட அடித்தளமாய் அமையும்.” என்றார் நுஅய்ம்.
இதைக்கேட்ட பனூ குரைளாவினர் தக்க சமயத்தில் அழகானதொரு தீர்வை சொன்னீர்! உண்மையில் நீர் ஒரு சிறந்த சிந்தனையாளர் தான்! என மகிழ்ச்சியோடு கூறினர்.
முதல் தந்திரம் படுவேகமாக வேலை செய்ய ஆரம்பித்ததும், அடுத்து தன் தந்திரவலையில் சிக்க வைக்க படையை வழி நடத்தி வந்த குறைஷித் தலைவர் அபூ சுஃப்யானை நோக்கி நகர்ந்தார்கள் நுஅய்ம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நேராக குறைஷிகளின் கூடாரம் நோக்கி நடந்தார்கள். அங்கே அபூ சுஃப்யானும், இன்னும் சில தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.
அடுத்த வலையை கொஞ்சம் பெரிதாகவே வீசினார் நுஅய்ம். குறைஷித் தலைவர்களை நோக்கி “உங்கள் மீது நான் கொண்டிருக்கிற அளவு கடந்த நேசத்தையும், முஹம்மது மீது நான் கொண்டிருக்கிற அளவு கடந்த வெறுப்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.”
நான் ஒரு விஷயத்தைக் கேள்விபட்டேன். அதை உங்களிடம் கூறுவது என் மீதுள்ள தார்மீகக் கடமையாக கருதுகின்றேன். ஆனால், நான் தான் உங்களிடம் கூறியதாக நீங்கள் யாரும் என்னைக் காட்டிக் கொடுத்து விடக் கூடாது. இதற்கு ஒத்துக் கொண்டீர்களென்றால் நான் அதைக் கூறுகின்றேன்” என்றார்.
குறைஷித்தலைவர்கள் ”சரி நாங்கள் உம்மை காட்டிக் கொடுக்க மாட்டோம்” என்றார்கள்.
பனூ குரைளாவினர் முஹம்மதிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து விட்டு, உங்களோடு கை கோர்த்த்தை நினைத்து வருத்தப்பட்டு பயப்பட ஆரம்பித்து விட்டனர்.
நீங்கள் கைவிட்டு விடுவீர்களோ என கவலை கொண்டு அச்சப்பட ஆரம்பித்து விட்டனர். ஆகவே, அவர்கள் தரப்பிலிருந்து சிலரை முஹம்மதிடம் தூது அனுப்பியுள்ளனர்.
”நாங்கள் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டோம்! அதற்காக நாங்கள் இப்போது வருந்துகிறோம். எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்.
நாங்கள் செய்த தவறுக்குப் பரிகாரத்தையும் நாங்களே செய்கிறோம். அது இது தான் “குறைஷ் மற்றும் ஃகத்ஃபான் குலத்தார்களின் முக்கியஸ்தர்கள் சிலரை பிணையாக பிடித்துத் தருகிறோம் நீங்கள் திருப்தியடைவீர்களா? அதன் பின்னர் உங்களோடு இணைந்து அவர்களை கடுமையாக தாக்குகிறோம்.” என்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். என்றார் நுஅய்ம்.
மேலும், பனூ குரைளாவினர் உங்களிடம் பிணையாளிகள் வேண்டும் என கோரிக்கை வைத்தால் ஒருத்தரைக் கூட அனுப்பி வைத்துவிடாதீர்கள்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நுஅய்ம்.
அடுத்து தன்னுடைய குலமான ஃகத்ஃபான் குலத்தின் தலைவர்களிடம் வந்து குறைஷிகளிடம் சொன்னது போலவே சொன்னார்.
அவர்களின் தந்திரம் மூன்று புறத்திலும் வேலை செய்ய ஆரம்பித்தது.
அன்றொரு நாள் இரவு விடிந்தால் சனிக்கிழமை, அபூ சுஃப்யான் தமது மகன் இக்ரிமாவையும், ஃகத்ஃபான் குலத்தார்கள் சிலரையும் பனூ குரைளாவினரிடம் தூது அனுப்பினார்கள்.
இக்ரிமா பேசினார் “ நாம் இங்கு எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அது இன்னும் நிறை வேறியதாகத் தெரியவில்லை. முற்றுகையும் நீடித்துக் கொண்டே செல்கிறது.
வீர்ர்களும் சோர்வடைந்து விட்டனர். என் தந்தை நாளை யுத்த்த்தை தொடங்கலாம் என்று கூறிவிட்டார், நீங்கள் தயாராய் இருங்கள். நாளை நடக்கும் யுத்தத்தில் நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டுமென என் தந்தை உங்களிடம் சொல்லச் சொன்னார்”.என்று பேசி முடித்தார் இக்ரிமா.
“நாளை சனிக்கிழமை நாங்கள் அந்த நாளில் எதையுமே செய்யமாட்டோம் என்று உங்கள் தந்தைக்கு தெரியாதா?”
அது போக, நாங்கள் உங்களோடு இணைந்து போரிட வேண்டுமானால் உங்களில் சில முக்கியஸ்தர்களை எங்களிடம் பிணையாக தரவேண்டும்.
அப்படி தந்தால் தான் நாங்கள் உங்களோடு இணைந்து போரிடுவோம். இல்லையென்றால் நாங்கள் பின் வாங்கி விடுவோம்” என்றார்கள்.
இந்தச் செய்தியை கேட்டு விட்டு, நேராகச் சென்று அபூ சுஃப்யான் அவர்களிடம் இக்ரிமா அவர்கள் கூறினார்கள்.
அதைக்கேட்ட அபூ சுஃப்யான் “உண்மையில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் சத்தியத்தையே நம்மிடம் கூறியுள்ளார். பனூ குரைளாவினரிடம் ஆளனுப்பிக் கூறி விடுங்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு ஆளைக்கூட நாங்கள் அனுப்ப மாட்டோம். இஷ்டம் இருந்தால் சேர்ந்து போரிடட்டும். இல்லையென்றால், ஊரைப் பார்த்து போகட்டும்!” என்று.
இதைக் கேட்டதும் பனூ குரைளாவினர் ”நமது நண்பர் நுஅய்ம் உண்மையையே கூறினார். குறைஷ், மற்றும் ஃகத்ஃபான் குலத்தார்களின் சுயரூபம் இப்போது நமக்கு புரிந்து விட்டது. நாம் போரில் கலந்து கொள்ள வேண்டாம்.” என்று கூறினர்.
(நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:8, பக்கம்:17,18. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:173,174,175.)
இக்கட்டான சூழ்நிலையில், நான் என்ன செய்ய வேண்டுமென வேண்டி நின்ற நுஅய்ம் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்ட “துல்லியமான முடிவும், அதைக் கையாண்ட விதமும்” பல அணியினராய் இறுமாப்போடு வந்த எதிரிகள் பிரிந்து, கத்தியின்றி இரத்தமின்றி அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு மா பெரும் வெற்றியை பெற்றது.
அல் அஹ்ஸாப் யுத்தம் படிப்பினை பலவற்றின் புதையலாகும்.
2. துணிவான முடிவு (Risk)
ஸுஹைப் இப்னு ஸினான் ரோமபுரியைச் சார்ந்தவர் சிறுவயதிலேயே மக்காவிற்கு வந்தவர். பின் நாளில் மக்காவில் அறியப்படுகிற பெரும் தனவந்தராக விளங்கியவர்.
ஆபரணங்களை அழகிய முறையில் வடிவமைக்கும் நுட்பம் நிறைந்த ஆசாரி. தொழில் ரீதியாக மிகவும் நேர்மையும், கைதேர்ந்த விற்பன்னராகவும் இருந்ததால் மிக விரைவிலேயே பெரும் புகழுக்கும், செல்வாக்கிற்கும் சொந்தக்காரராகி விட்டிருந்தார்.
இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலே தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை துவக்கியிருந்த ஆரம்ப காலகட்டம் அது.
அல்லாஹ் அவரின் இதயத்திலும் ஏகத்துவ விருட்சத்தை வேர்விட வைத்தான். ஆம், 31 – வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முந்தைய மேன்மக்களின் பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டார்கள்.
அதே நாளில் தான் அம்மார் இப்னு யாஸிர் அவர்களும் 32 – வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, தம்மையும் அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டார்கள்.
வழக்கம் போல ஆரம்ப கால நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும், துன்பங்களும் இவர்களுக்கு ஏற்பட்டது. என்றாலும் மக்கா குறைஷிகளுக்கு நிகரான செல்வந்தராக இருந்ததால் பாதிப்பு கொஞ்சம் குறைவு.
அல்லாஹ் ஹிஜ்ரத்தைக் கடமையாக்கியிருந்த தருணம் அது. தம்மோடு இருந்த எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஹிஜ்ரத் செய்து, மதீனா சென்று மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.
ஒருவாராக ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமாகி, புறப்பட்டு மதீனாவிற்கு பயணமானார்கள்.
இந்த செய்தி பக்கா கேடிகளான மக்கா தலைவர்களுக்கு பேரிடியாய் இருந்தது.
ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை வழி மறித்தனர். தொடர்ந்து செல்லவிடாமல் முன்னும் பின்னுமாக சுற்றிவளைத்தனர்.
மறித்து நின்ற மக்கா தலைவர்களை நோக்கி “என்னையும், நான் எப்படிப்பட்ட அம்பு எறியும் வீரன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
என்னிடத்தில் ஒரு அம்பு மீதமிருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.
அப்படியே என் அம்புகள் முழுவதும் தீர்ந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், என்னிடம் வாள் இருக்கிறது. நான் எப்படிப்பட்ட வாள் வீரன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
என் வாள் ஒடிந்து போகும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.
அப்படியே வாள் ஒடிந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் மல்யுத்தம் புரிவதில் வல்லவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்” என்று ஆவேசமாக அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியாகக் கூறினார்கள்.
இதைக் கேட்ட மக்கா தலைவர்கள் ”அதுவல்ல விஷயம், நீர் ரோமைச் சார்ந்தவர். இங்கு வந்து பெரும் செல்வந்தராக மாறிவிட்டீர். உம்மிடம் இருக்கும் அவ்வளவு சொத்துக்களும் எங்கள் ஊரில் நீர் சம்பாதித்தது.
ஆனால், எங்களுக்கு எதிராக செயல்படும் முஹம்மதிற்கும், அவர்களின் தோழர்களுக்கும் அது பயன் படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.
அவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “ஓ! அப்படியா? என் செல்வத்தையும், என் பொற்குவியல்களை பாதுகாத்து வைத்திருக்கின்ற கருவூலத்தையும், நான் அது எங்கிருக்கின்றது என்று அறிவித்து கொடுத்து விட்டேன் என்றால், என் உயிரை விட மேலாக மதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்காக நான் மேற்கொண்டிருக்கின்ற இந்த பயணத்தை தடுக்க மாட்டீர்களல்லவா? என்று கேட்டார்கள்.
உடனே மக்கா தலைவர்கள் “அது போதும் எங்களுக்கு, அதை நீர் சொல்லி விட்டீர் என்றால் தடை விலகும். உமது பயணம் இனிதே தொடரும்” என்றார்கள்.
உடனடியாக, சத்தியம் வாங்கி விட்டு அவர்களின் சொத்து எங்கெல்லாம் இருக்கின்றது என்றும், அவர்களின் கருவூலத்தின் சாவி எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
பின்பு, மதீனா சென்று மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்க விளைந்த போது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகமலர்ச்சியோடு “ரபிஹல் பைஅ அபா யஹ்யா – அபூ யஹ்யா செய்து விட்டு வந்திருக்கின்ற வியாபாரம் மிகவும் லாபகரமானது” என்று கூறி வரவேற்றார்கள்.
அல்லாஹ்வும் தன் பங்கிற்கு “மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்; அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி, தன் வாழ்வையே அர்ப்பணித்து விடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகவும் பரிவுடையோனாய் இருக்கின்றான்” (அல்குர்ஆன் 2:207) ஓர் இறைவசனத்தை இறக்கி வைத்து ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தோஷப்படுத்தினான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரிதோர் சந்தர்ப்பத்தில் “அல்லாஹ்வைக் கொண்டும் மறுமை நாளைக் கொண்டும் இறை நம்பிக்கை கொண்டிருப்போர், எப்படி ஒரு தந்தை தம் பிள்ளையை நேசிப்பாரோ அது போன்று ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நேசிக்கட்டும்!” என்று கூறினார்கள்.
(நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:393 – 396. தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:323,324. ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:130,131.)
முக்கியமான தருணத்தில் ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கொண்ட துணிவான முடிவும், அதனை அவர்கள் கையாண்ட விதமும் அவர்களை அல்லாஹ்வும், அவன் தூதரும் பாராட்டிச் சொல்கிற நிலைக்கும், வாழ்வின் இறுதிவரை பல்வேறு சிறப்புக்களுக்கு உரியவராகவும் அழைத்துச் சென்றது.
3. வேகமான முடிவு (Speed)
ரோமப் பேரரசர் சீஸர் “முஸ்லிம்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அந்தப் பாடத்தை முஸ்லிம்களின் சந்ததியினர் எவரும் எளிதில் மறந்து விடக்கூடாது. எனும் சூளுரையோடு தகுதியும் ஆற்றலும் நிறைந்த பல தளபதிகளின் தலைமையில் சுமார் 4 லட்சம் போர் வீரர்களை அனுப்பி வைக்கிறார்.
o கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம், கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய மண்ணில் இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கின்றது.
ரோமை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பி, ரோமர்களுக்கு சத்தியதீனின் அறிவை எத்திவைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானித்து, அதற்கான ஆயத்தப்பணிகளில் கலீஃபா அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
ரோமை நோக்கி முஸ்லிம்கள் படையெடுத்து வரப்போகிறார்கள் எனும் செய்தியை அறிந்து கொண்ட சீஸர் தன் முக்கிய மந்திரிப் பிரதாணிகளிடம் ஆலோசனைக் கேட்டபோது தான், மேலே சொன்ன சூளுரையை அத்துணை மந்திரிகளும் முன் மொழிந்தனர்.
அதற்கு இசைந்த சீஸர் இப்போது 4 லட்சம் வீரர்களுடன் பெரும்படையை அனுப்பி வைத்தார். படை புறப்பட்டு யர்மூக் எனும் நதிக்கரையின் ஒரு பக்கத்திலே முகாமிட்டு இருந்தனர்.
o கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இந்த விஷயம் எத்திவைக்கப் பட்டது. உடனடியாக சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார்.
ஈராக் மற்றும் சிரியா போன்ற பகுதிகளை வெற்றி கொண்டு திரும்பி மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த அபூ உபைதா அல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, முஆவியா இப்னு அபீ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு, யஸீத் இப்னு அபீ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு, அம்ர் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் தலைமையிலான படைப்பிரிவுக்கு கடிதம் மூலம் உடனடியாக ரோம் நோக்கிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
ஈரானிற்கும் இராக்கிற்கும் இடையே உள்ள கைரா எனும் இடத்தில் தமது சக உதவித் தளபதிகளான தரார் இப்னு அஸ்வர் ரளியல்லாஹு அன்ஹு, கஃகாஃ இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரை அருகிலிருக்கும் ஓர் பகுதிக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களின் வருகைக்காக காத்து இருந்த தலைமைத் தளபதி காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஆட்சித்தலைவர் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கடிதம் மூலம் ரோமப்படைகளை எதிர் கொள்ள இஸ்லாமியப் படையுடன் தங்களின் படையையும் இணைத்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
இறுதியாக யர்மூக் நதியின் இன்னொரு பக்கத்தில் ஒட்டு மொத்த இஸ்லாமியப் படையினரும் முகாமிட்டிருந்தனர்.
எதிரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் முஸ்லிம்படை வலுவானதாக இருக்கவில்லை.
நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. ஆம்! மொத்தப்படையையும் சேர்த்து 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
அத்துணை தளபதிகளும் உடனடியாக ஆலோசனை மன்றத்திற்குள் ஆஜராகுமாறு கட்டளையிட்டார் ”ஸைஃபுல்லாஹ்” காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஆலோசனை மன்றம் இயங்க ஆரம்பித்ததும் ஒருவர் பின் ஒருவராக தங்களது ஆலோசனைகளை கூறினார்கள். ரொம்பக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் காலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
தங்களுடைய ஆலோசனையின் முறைவரும் போது காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “தோழர்களே! உங்களின் ஒவ்வொருவரின் கருத்துக்களும் மிகவும் பின்பற்றப்பட வேண்டியதே! ஆனால், நாம் இன்னும் மிக வேகமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய முக்கியமானச் சூழ்நிலையில் தள்ளப் பட்டிருக்கின்றோம்.
நமக்கு அவர்களை எதிர் கொள்ள எண்ணிக்கை ஒன்றும் பெரிய விஷயமல்ல. வலிமையுடன் கூடிய நல்ல செயல்திட்டங்கள் தான் இப்போது நமக்குத் தேவை.
நம்மில் ஒவ்வொரு தளபதியும் வெவ்வேறு வகையில் ஆற்றல் மிக்கவர்கள். ஆதலால் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு தளபதியின் கீழ் போரிடுவோம். அத்துணை தளபதிகளுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன் களத்தில் போராடுகிற போது, மிக விரைவில் எதிரிகளிடம் இருந்து வெற்றியை நம் வசமாக்கி விடலாம்.” என்று கூறினார்.
அத்துணை தளபதிகளும் காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முடிவை ஆமோதித்தனர். இறுதியாக முதல் நாள் போரை காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையிலேயே எதிர் கொள்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
முதல் நாள் போர் துவங்க சில மணித்துளிகளே இருந்த போது படை வீரர்கள் முன் தோன்றிய காலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் என்னருமைத் தோழர்களே! இந்த நாள் அல்லாஹ் நம் வாழ்வில் வழங்கிய சிறப்புமிக்க நாள்!
இன்றைய தினத்தில் நம் முரட்டுத்தனம், பாரம்பரிய குலப்பெருமைகள் ஆகியவகளுக்கு துளியளவு கூட இடமில்லை.
என்னருமைத்தோழர்களே! அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை முழு மூச்சாகக் கொண்டு போரிடுங்கள்!
இன்று நம் படைக்கு மிகப்பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றுள்ளனர். ஒருவர்பின் ஒருவராக உங்களை வழி நடத்த உள்ளனர். அவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.
உங்கள் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க நீங்களும், நானும் உதவிடவும் நம்மை பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன். என்று வீர உரை நிகழ்த்தினார்கள்.
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். பக்கம்: 294,295,296.)
பின்னர் யர்மூக் யுத்தத்தின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் மாறிப்போனதை, முஸ்லிம்கள் அடைந்த இமாலய வெற்றியாய் பதிவு செய்யப்பட்டதை வரலாறு சான்றுரைத்துக் கொண்டிருக்கின்றது.
அவசியமான நேரத்தில் காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எடுத்த வேகமான முடிவும், அதனைக் கையாண்ட விதமும் 4 லட்சம் போர் வீரர்களைக் கொண்ட வல்லரசு ரோம் ஆட்டம் கண்டது. யுத்த களத்தில் ரோமபுரி வீரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
வெறும் 46 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறுபடை பென்னம் பெரும் படையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதாக வரலாற்றில் தனக்கான வலுவான இடத்தையும், முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சக்திகள் என உலகிற்கும் உணர்த்தியது.
4. பாகுபாடற்ற முடிவு (Impartial)
ஹுனைன் யுத்தம் மக்கா வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் புளுங்கிக்கொண்டிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் முன்னிலை வகிக்க இன்னும் சிலரால் தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.
இறுதியில், நபிகளாரின் தலைமையில் சென்ற முஸ்லிம்கள் மாபெரும் வெற்றிவாகை சூடினார்கள்.
ஸகீஃப் கோத்திரத்தார்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். ஹவாஸின் கோத்திரத்தார்களில் பெருமளவு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
ஹவாஸின் கோத்திரத்தார்களின் மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் ஃகனீமத்தாக கிடைத்தன.
இந்நிலையில், ஜுஹைர் இப்னு ஸுர்த் என்பவரின் தலைமையில் 14 நபர்கள் அடங்கிய ஹவாஸின் குழு ஒன்று இஸ்லாமை ஏற்று நபி {ஸல்} அவர்கள் ஜிஇர்ரானா எனும் இடத்தில் இருக்கும் போது வந்தனர்.
அந்தக் குழுவில் நபி {ஸல்} நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார்.
நபிகளாரிடம் அவர்கள் பைஅத் செய்த பின்னர் “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்களில் எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர்.
அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமேயானால் அது எங்களின் சமுதாயத்திற்கே ஏற்பட்ட கேவலமாகும்.
ஆகவே, எங்களின் போர்க் கைதிகளையும், செல்வங்களையும் எங்களிடம் திருப்பித் தந்து விடுங்கள்” என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சுற்றியிருந்த நபித்தோழர்களை சுட்டிக்காட்டி என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர்.
எனவே, நான் என் தனிப்பட்ட முடிவை அறிவிக்க முடியாது. ஆகவே, ழுஹர் தொழுகைக்குப் பின்னர் எங்களிடம் வாருங்கள். வந்து, சபையில் எழுந்து நின்று “நாங்கள் அல்லாஹ்வின் தூதருடைய பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வின் தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகின்றோம்” என்று கூறுங்கள்” என கூறி அனுப்பி வைத்தார்கள்.
ஹவாஸின் குழுவினர் ழுஹர் தொழுகைக்குப் பின்னர் வந்து நபிகளார் கூறிய படியே சபையில் எழுந்து கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு, “அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகின்றேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர்.
இவர்களில் (நம்மிடம்) போர்க்கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் சிறந்த்தாகக் கருதுகின்றேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றார்களோ அவர் திருப்பித் தந்து விடட்டும்.
அல்லாஹ் எதிர் காலத்தில் முதலாவதாக தரவிருக்கின்ற (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவர்களைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
பின்பு, ”எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் அவர்களிடமே திருப்பித் தந்து விடுகின்றேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதனைக் கேட்ட அன்ஸாரிகளும், முஹாஜிர்களும் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கும் சொந்தமானது தான்! நாங்களும் இதற்கு உடன் படுகிறோம்” என்றார்கள்.
ஆனால், கூட்டத்திலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நானும், பனூதமீம் கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நானும் ஃபஸாரா கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள்.
இது போன்றே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நானும் பனூ ஸுலைம் கிளையாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். அப்போது, பனூ ஸுலைம் கிளையார்கள் இடைமறித்து “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரியதை தந்து விடுகிறோம்” என்றனர்.
மீண்டும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று “இவர்கள் இஸ்லாத்தை ஏற்று நம்மிடம் வந்திருக்கின்றார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் கனீமா பங்கீட்டை தாமதம் செய்தேன்.
நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? அல்லது கைதிகள் வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் “எங்களின் குடும்பம் தான் வேண்டும்” என்று கூறி விட்டனர். அதற்கு நிகராக அவர்கள் எதையும் கருதவில்லை.
எனவே, யார் கைதிகளை எவ்வித பகரமும் இன்றி விடுவிக்கின்றார்களோ அவர் இனிதே செய்திடட்டும். அல்லது பகரம் பெற விரும்பினால், அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய பங்கிற்கு பகரமாக ஆறு பங்குகள் வழங்கப்படும்” என்று கூறினார்கள்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக “அல்லாஹ்வின் தூதரே! எந்தப்பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை விடுவித்திட முன் வருகின்றோம்” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களில் முழுமையான திருப்தியுடன் செய்பவர் யார்? திருப்தியின்றி செய்பவர் யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் சென்று ஆலோசித்து உங்கள் தலைவர்களிடம் உங்கள் முடிவை தெரிவித்து விடுங்கள்.
உங்களின் தலைவர்கள் வந்து என்னிடம் உங்களின் முடிவை தெரிவிக்கட்டும்!” என்று கூறி அமர்ந்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தலைவர்கள் வந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.
(நூல்: புகாரி, பாடம், பாபு கவ்லில்லாஹி “வயவ்ம ஹுனைனின்.. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:241,242. ரஹீக் அரபி, பாடம், குதூமு ஹவாஸின்…)
கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் தங்களின் முடிவைக் கூட ஒரு அபிப்பிராயமாகக் கூறிய அண்ணலார், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என திணிக்கவில்லை.
மேலும், சிலர் மாற்றுக் கருத்து கூறிய போதும் ஆத்திரப்படாமல் நிலைமைகளை விளக்கிக் கூறினார்கள். இதன் பிறகு அந்தக் கருத்துக்கு மக்கள் இசைந்து கைதிகளை விடுவிக்க முன் வந்த போது இது தான் தருணம் உடனடியாக செயல் படுத்தி விடுவோம் என்று கருதாமல் “நீங்கள் திரும்பிச் சென்று உங்களின் கருத்துக்களை உங்களின் தலைவர்களிடம் தெரிவியுங்கள்” என்று கூறியது தான் நபிகளாரின் பன்முகப் பார்வையை பறைசாற்றுகிறது.
தாம் எடுக்கிற எந்த ஒரு முடிவும் யாரையும் பாதித்து, பாகுபடுத்திவிடக்கூடாது என்பதை மனதினிற் கொண்டு அந்த பாகுபாடற்ற முடிவை நபிகளார் மேற்கொண்டார்கள்.
இறுதியில், அது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலுப்படுத்துவதாய் அமைந்ததை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது.
ஆக எந்த ஒரு காரியமானாலும் அதன் துவக்கம் எப்படி பிரமாதமாகப் பேசப்படுகிறதோ, அது போன்றே எந்த ஒரு பிரச்சனையானாலும், சூழ்நிலைகளானாலும் அதில் மேற்கொள்ளப்படுகிற முடிவுகள் பிரமாதமாய் அமையும் போதும், அதை அழகாய் பயன்படுத்தும் போதும், வாழ்க்கை உண்மையில் வெற்றி மட்டுமே நிறைந்ததாய் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேற்கூறிய வரலாற்றுச் சான்றுகளும் அந்த முடிவுக்குத்தான் நம்மையும் அழைத்துச் செல்கின்றது.
அல்லாஹ் முடிவுகளை தடுமாற்றமின்றி எடுக்கும் வல்லமையைத் தருவானாக!
எடுக்கும் முடிவுகளை திறம்பட கையாளும் ஆற்றலைத் தருவானாக!
அந்த முடிவுகளோடு அல்லாஹ்வைச் சார்ந்து வாழும் நல்ல நஸீபைத் தந்தருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!
source: http://vellimedaiplus.blogspot.in/2014/03/blog-post.html