திருக்குர்ஆனை பரிசளித்து மகிழ்வோம்
பெங்களூர் நகரில் ஆட்டோ ஓட்டி வரும் சில இஸ்லாமிய ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோக்களில் இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இஸ்லாமிய புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வைத்துள்ளனர். அவர்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது.
தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன.
“நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்” என்கிறார்.
இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் “குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை” அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார்.
இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா.
அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா? என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.
அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா.
புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, “இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்”.
பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா…
”என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான்.
உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்”.
வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான்.
முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், “எனக்கு ‘இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்’ என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்” என்று காரணத்தை கூறினார்.
மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது.
இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எப்படியிருக்கும்?
வல்ல அல்லாஹ் இவர்களது இறை பணியை பொருந்திக்கொள்வானாக.
– Alaudeen Tntj