மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
19.5.2016அன்று தமிழக வரலாற்றில் முக்கிய சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கும்போது ஒரு சுவாரிசமான செய்தியினை இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. அது..
சீனாவில் ஒரு கிராமத்தில் ஒரு இளம் வயது பெண் திருமணமாகாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாளாம்.
அவளது ஆவி அந்தக் கிராமத்தினை ஆட்கொள்வதாக மக்கள் நினைத்தார்களாம்.
அதே கிராமத்தில் சென்ற வாரம் ஒரு இளைஞன் திருமணமாகாமல் இறந்து விட்டானாம்.
ஆகவே அந்த கிராமத்தினர் அந்தப் பெண் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்து புத்தாடை உடுத்தி அழகு படுத்தி, இறந்த இளைஞனுடன் திருமணம் செய்து வைத்து, அந்தப் பெண் புதை குழியின் அருகிலேயே புதைத்து மகிழ்ந்தார்களாம்.
இதனை படிக்கும் போது தான் சமூதாய இயக்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் ‘சிர்க்’ ஒழிப்பு மகாநாடு என்று ஒரு விளம்பரத்தினை சுவர்களில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அதன் விளைவாகத் தான் இந்தக் கட்டுரையினை எழுத முயன்றேன். சில முக்கிய மூட நம்பிக்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்:
1) தஸ்பிஹ் மணியினை எண்ணிக் கொண்டிருக்கும்போதோ அல்லது தாலிச் செயின் அதன் நூல்கள் இத்துப் போனதால் அறுந்து விழும்போது அது ஒரு அபசகுனமாக கருதுகிறோமே அது ஏன்?
2) வீட்டினை விட்டு வெளியே போகும்போது நிலைப்படி இடித்தால், அது நாம் நிலைப்படியின் உயரத்தினைக் கவனிக்காது சென்றது தவறு என்று கருதாமல் கெட்ட நேரமாகக் கருதி வெளியே போகமால், சிறிது நேரம் கழித்துப் போவது.
3) கடைகளில் காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றினை போட்டு வெளியே தீ கொளுத்துவது. மிளகாயினை தீ வைத்தால் அதனில் உள்ள விதை மற்றும் அதனுடன் உப்பு வெடித்துத் தான் சிதறும். அதனையே கண்ணேறு ஓடி விட்டது என்பது.
4) இரு சக்கர வண்டி மற்றும் கார் வாங்கினாலும், அல்லது வெளி ஊருக்கு காரில் கிளம்பினாலும் டயர் கீழே இலும்பிச்சை பழம் வைத்து அதன் மேல் டயர் நசுங்கி வெளியே புறப்படுவது.
5) அதே போன்று வெளியே புறப்படும் போது பூனை குறுக்கே வந்தால் அது கெட்ட சகுனம் என்பது. கிராமத்தில் வெளி ஊருக்குப் புறப்படும்போது எதிரே வண்ணான் அல்லது முடி திருத்துவன் வந்தாலும் அப சகுனம் என்பது.
6) அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் கூட இது ராசியான பேனா என்று பல்வேறு வண்ணத்தில் எழுகுகோள்கள் வைத்துக் கொள்வது. சில நிகழ்ச்சிகளுக்கு ராசியான ஆடை உடுத்துவது.
7) வேலை இண்டர்வியுக்குச் செல்லும்போது தனது திறமையினை நம்பாது குறிப்பிட்ட தாயத்து, ஆபரணங்கள், அல்லது உடைகள் அணிந்து சென்றால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று நம்புவது.
8) குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் குழந்தை பிறப்பதுதான் நல்லது என்று கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலி ஏற்பட்டால் பிரவசத்தைத் தள்ளிப் போடுவது , அல்லது வலி ஏற்படாவிட்டாலும் குழந்தைக்கோ அல்லது கர்ப்பிணி தாயிக்கோ ஆபத்தான அறுவை சிகிச்சை செய்வது போன்ற காரியங்கள் மருத்துவமனைகளில் நடந்து கொண்டு இருக்கின்றன என்று டெல்லியினைச் சார்ந்த சிறந்த மகப்பேறு நிபுணர் புனீத் பேடி கூறுகிறார்.
9) இளம்பிள்ளை வாதத்திற்கு வைத்தியம் பார்க்காது, அல்லது மன பேதமைகளுக்கு மனோ தத்துவ, நரம்பு மருத்துவ நிபுணர் ஆகியவர்களை நாடாது நாட்டு வைத்தியர், மாந்திரீகர் ஆகியவர்களை நாடுவது.
10) கட்டிடம் கட்டும்போது திறமையான கட்டிட வல்லுனர்கள், தரமான கட்டிட பொருள்களை தேர்ந்தெடுக்காது, பூஜைகள், களிப்புகள் கழிப்பது. போன்ற மூட நம்பிக்கைகளை இன்னும் ஜாதி, மதம், படித்தவர், படிக்காதவர் போன்ற வேறுபாடு இன்றி கடைபிடிப்பது எதனைக் காட்டுகிறது என்றால் அறியாத காலத்தின் இருட்டு உலகம் நம்மிடையே இன்னும் உலவிக் கொண்டுதான் இருக்கின்றது என்ற அர்த்தம் ஆகாதா?
மும்பையினைச் சார்ந்த சமூகவியல் வல்லுநர் டாக்டர் கமலா கணேஷ் அவர்கள், ‘இது போன்ற மூடப் பழக்கங்கள் ஆபத்து இல்லாமல் இருந்தாலும், பழமைகாலம் சமூதாயத்தில் உலாவி வருவதுதான் துரசிஷ்டம்’ என்கிறார்.
புது டெல்லி குர்கன் மனோதத்துவ நிபுணர் டாக்டர் சுமந்த் கண்ணா என்பவர், ‘மூட பழக்கங்கள் பழங்குடியினர் பழக்க வழக்கங்கள் ஆகும். அவைகள் சில ஆபத்து இல்லையென்றாலும், இன்னும் நாம் பழங்குடியினர் பழக்கத்தினையே தான் 21ஆம் நூற்றாண்டிலும் கடைப்பிடித்து வருகிறோம் என்பதினைக் காட்டுகிறது’ என்கிறார்.
ராஜஸ்தானைச் சார்ந்த ஒரு பெண் மருத்துவர், தனது படித்த பத்திரிக்கையாளர் மகள் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டு இருக்கும்போது தனது மருத்துவ திறமைக்கு மதிப்பளிக்காது, ‘தன் மகளிடம் காய்ந்த மிளகாயினை தீயில் கருக்கி வெளியே வீசச் சொன்னாராம்’. சில காலம் கழித்து நோய் குணமானாலும் மிளகாய் சடங்கால் தான் நோய் போய் விட்டது என்று தாய் டாக்டர் சொன்னது அந்த பத்திரிக்கைப் பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்ததாம்.
மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் 13 நம்பர் அறைகளை விரும்பமாட்டார்களாம். சில சமயம் வீடு விலைக்கு வாங்குபவர் 8 நம்பர் வீட்டினை வாங்கமாட்டார்கள், அத்துடன் ரோட்டின் முட்டு வீட்டினையும் வாங்க மாட்டார்கள் என்று பலருக்குத் தெரியும். அதற்கு அவர்கள் விளக்கமும் சொல்லுவதில்லையே அது ஏன்!
‘இந்தியாவில் 70 சதவீத மாணவர்கள் பரீட்சை எழுத போகுமுன்னும், போன பின்பும் மூட நம்பிக்கைமீது நரம்பு தளர்ச்சியால் பிடிப்புடன் இருக்கின்றார்கள் என்றும், அது அவர்கள் மனப்பிரமையினையே காட்டுகின்றது என்றும்’, டாக்டர் எல்லேன் லாங்கர் கூறுகிறார்.
அகில உலக பகுத்தறிவாளி சங்கத்தின் தலைவர் சனால் எட்முருக்கி , ‘மூட நம்பிக்கையினால் சில ஆபத்தான காரியங்களில் மக்கள் ஈடுபட்டு, மனித உரிமை மீறலும், வன்முறையும், நர பலிகளும் ஏற்படுகின்றன’ என்று எடுத்துக் காட்டுகிறார்.
தேசிய குற்ற ஆய்வக அலுவலுகம்(என் சி.ஆர்.பி) 2014 ஆம் ஆண்டு அறிக்கையில் மூட நம்பிக்கையால் ஏற்படும் கொலை பாதகங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் இடத்திலும், ஓடிஸா, மத்யபிரதேஸ், சட்டிஸ்கர் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதற்கு அடுத்த படியாக நடக்கின்றன என்கிறது.
பல போலி மந்தரவாதிகளின் கைகாரியங்கள் கிராமபுரங்களில் அதிகமாகி, அதற்கு சிறார்கள் பலியாகுகிறார்கள், சில சமயங்களில் போலி மந்திரவாதிகளும் கொல்லப் படுகிறார்கள். சில சமயங்களில் கிராமங்களுக்கு பிச்சை கேட்டு வரும் பராரிகளும் தவறாக கிராம மக்களால் கொல்லப் படுகிறார்கள் என்றும் கூறுகிறது.
குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் உச்ச்சமன்றத்திலும், சில உயர் நீதி மன்றங்களிலும் நிலுவைகளில் இருப்பதினை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்படி காணாமல் போகும் சிறார்கள் கடத்தப்பட்டு அதன் உடல் உறுப்புகள் போலி மருத்துவமனைகளில் திருடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேற்கூறிய மூட நம்பிக்கைகளினை சுட்டிக் காட்டிய குற்றத்திற்காக சில வலதுசாரி கும்பல்களால் பகுத்தறிவு செம்மலும் பகுத்தறிவாளர் சங்க தலைவருமான எட்முறுக் நண்பருமான பூனேயினைசார்ந்த டாக்டர் நரேந்திர டபோல்கர் பட்டப்பகலில் 2013 ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது வரை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை என்பதும், அதேபோன்று 2015 ஆகஸ்ட் மாதம் கன்னட பகுத்தறிவு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொல்லப்பட்டார். அவரை கொன்ற குற்றவாளிகளையும் இதுவரை கைது செய்யப் படவில்லை என்பது காலத்தின் கோலமாகாதா?
ஏன் தனது உயிருக்குப் பயந்து எடமுர்கி கூட பின்லாந்து நாட்டில் ஹெலேன்சிகியில் நாடோடி போல மறைந்த பிரபல ஓவியர் எப்.எம்.ஹுசைன் லண்டனில் வாழ்ந்தது போல வாழ்கிறார் என்பது பரிதாபமாக இருக்கின்றதல்லவா? ஆனால் மகாராஷ்டிரா டோபோல்கர் இறப்பு மகாராஷ்டிரா அரசு மனித பலி, தீய மூட நம்பிக்கை மந்திரங்கள் செயல்களை தடுக்கும் சட்டம் 2013 அமல் படுத்த வழி வகுத்தது.
அதே மாதிரி பெரிய எதிர்ப்புக்கிடையே கர்நாடகா மூட நம்பிக்கை தடுப்பு சட்டம் கல்புர்கி கொலைக்குப் பின்பு செயல் படுத்தப் பட்டது ஒரு நல்ல காரியம் என்றால் மறுக்கமுடியாது. எப்படி ஒரு மரம் அழிந்து அதன் காய்களின் விதைகளில் இருந்து மற்றொரு மரம் முளைக்கின்றதோ அதேபோன்று அவர்கள் மரணம் மூட நம்பிக்கைக்கு அரசே சட்டங்கள் இயற்ற வழிவகுத்து விட்டது.
இதுபோன்ற மூட நம்பிக்கை கொண்ட ஒரு நபர் என் கிளெர்க்காக நான் கோவை நகரில் 1978 ஆம் ஆண்டு டி.எஸ்.பி.யாக இருந்தபோது சந்திக்க நேர்ந்தது. என்னுடைய கிளர்கிற்கு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு பின்பு அவர் நடத்தையில் சில மாறுதல் கண்டேன். நான் விசாரித்தபோது தனது மனைவி சேலை கொடியில் போட்டிருக்கும் போது தீ எரிவதாகவும், சாப்பாட்டுத் தட்டில் மலம் கிடப்பதாகவும் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதற்கு அவர் சொன்ன காரணம் தனக்கு யாரோ செய்வினை செய்கிறார்கள் என்று சொன்னார். நான் ஒரு அதிகாரியினை அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். அவர் விசாரித்து விட்டு சொன்னார், அந்த கிளார்க் திருமணமான பிறகு மனைவியிடம் கூட ஒதுங்கி இருப்பதாக சொன்னார். உடனே அவரை அங்குள்ள மனோதத்துவ நிபுணரிடம் அனுப்பினேன். அவர் கிளார்க்கினை சோதனை செய்து விட்டு அவர் தன்னம்பிக்கை இழந்துள்ளார் என்று வைத்தியம் செய்து அதன் பின்பு அவர் சராசரி மனிதரானார்.
அதனையே தான் தாங்கள் சுத்தமாக இல்லையென்று சிலர் அடிக்கடி முகம், கை, கால்களை சோப்புப் போட்டு கழுவிக்கொண்டே இருப்பதினை பார்க்கலாம். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும், படபடப்பு கொண்டவர்களாகவும், நிம்மதி இழந்தவர்களாகவும் இருப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் பி.ஜே.ஜெப் மற்றும் எம்.சி. மூர் ஆகியோர் சொல்கிறார்கள்.
மனோதத்துவ நிபுணர் இர்விங் லோர்ஜே, ‘ஒரு மனிதன் எவ்வளவு சீக்கிரம் அறிவு சார்ந்து இருக்கின்றானோ அவன் எந்த மூட நம்பிக்கைக்கும் ஆளாக மாட்டான்’என்று கூறுகிறார்.
தன்னம்பிக்கை இழந்தவன் தான் தாயத்துக் கட்டுவான் என்று சுருக்கமாக சொல்கிறார். ஆகவே தான் மூட நம்பிக்கைக்கு அறிவு சான்ற வழிகளை நாமும் இந்த நவீன உலகம் காண அனைவரும் முயலுவோமா சகோதர, சகோதரிகளே!
source: www.mdaliips.blogspot.com