தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்…
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
மனிதன் மறதியாளனாக படைக்கப்பட்டுள்ளான். மார்க்க விடயமாக இருக்கலாம். அல்லது உலக விவகாரங்களாக இருக்கலாம். தன்னை அறியாமல் மறந்து விட்டு, பிறகு அதை நினைத்து வருத்தமடைவான். இந்த வரிசையில் அல்லாஹ்வுடைய கடமையான தொழுகையின் போதும் மறதி என்ற அடிப்படையில் தொழுகைக்குள் உள்ள ரக்அத்களோ, அல்லது அத்தஹிய்யாத்தில் உட்காராமல் எழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை நாம் தெளிவு பெற வேண்டும்.
தொழகையைப் பொறுத்தவரை அதற்கு முன்னோடியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறார்கள்.
‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்’ என்று கூறக்கூடிய ஹதீஸின் மூலம் தொழுகைக்கு வழிகாட்டி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்று பள்ளிகளில் இமாம்கள் தொழுவிக்கும்போது சில நேரங்களில் இரண்டாவது ரக்அத்திற்கு உட்காராமல் மறந்து மூன்றாவது ரக்அத்திற்கு எழுந்து விடலாம். அல்லது நான்காவது ரக்அத் என்று நினைத்து மறதியால் மூன்றாவது ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம் கொடுத்து விடலாம். அல்லது நான்காவது ரக்அத்தில் உட்காருவதற்குப் பகரமாக ஐந்தாவது ரக்அத்திற்கு எழுந்து, பிறகு உட்கார்ந்து ஸலாம் கொடுப்பார்.
இப்போது அவருக்கும், பின்னால் தொழுத மக்களுக்கும் பிரச்சினை என்ன செய்வது? இப்போது ஆளுக்கு ஆள் ஒவ்வொரு பத்வாக்களை கொடுக்க ஆரம்பிப்பார்கள். சில பள்ளிகளில் ஒரு ரக்அத் குறைத்தோ அல்லது ஒரு ரக்அத் அதிகமாகவோ தொழுவித்து விட்டால், ஸலாம் கொடுத்த பிறகு மீண்டும் ஆரம்பத்திலிருந்து அந்த நான்கு ரக்அத்களையும் தொழுவிக்கக்கூடிய நிலையை நாம் காண்கிறோம்.
சிலர் பிழை இப்படித்தான் தொழுவிக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டும்போது இமாமுக்கு தெரியாத சட்டமா, உங்களுக்குத் தெரியும்? என்று கூறக்கூடிய நிலை? சிலர் பரவாயில்லை மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழுதால் நன்மைதானே என்று பேசக்கூடிய நிலையையும் காணலாம்.
இங்கு ஹதீஸின் அடிப்படையில் பள்ளி இமாமுக்கும் சட்டம் தெரியவில்லை. பின்னால் தொழக்கூடிய மக்களுக்கும் சட்டம் தெரியவில்லை என்பதை இப்படியான நிகழ்வுகள் மூலம் அறியலாம். குறிப்பாக தொழுவிக்கக்கூடிய பள்ளி இமாம் தொழுகை பற்றிய செய்திகளை ஹதீஸ்களில் தேடிப்படித்துத் தெரிந்துகொள்வது கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ் பின்வருமாறு மக்களைப் பார்த்து பேசுகிறான்: ”ஈமான் கொண்ட விசுவாசிகளே அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். அல்லாஹ்வுடைய தூதருக்கும் வழிப்படுங்கள். உங்களில் அதிகாரமிக்க அறிவுடையோருக்கும் வழிப்படுங்கள். ஏதாவது ஒரு விடயத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டால், அதை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் திருப்புங்கள் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 4:59)
இந்த அடிப்படையில் விடுபட்ட ரக்அத்தை மட்டும் தொழுவதா? அல்லது மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழுவதா? என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம்.
”ளுஹர் தொழுகையை தொழுவித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்து விட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தா செய்தார்கள். அதன் பின் ஸலாம் கொடுத்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு புஹைனா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி: 1225-1230)
மற்றொரு ஹதீஸை அவதானியுங்கள்:
”மாலை தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரண்டு ரக்அத்திலே ஸலாம் கொடுத்து விட்டார்கள். பின்பு எழுத்து பள்ளிவாசலின் முற்பகுதியில் இருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று தன் கையை அதன் மேல் ஊன்றிக் கொண்டிருந்தார்கள். அங்கே இருந்தவர்களில் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து வெளியேறிய மக்கள் தொழுகை சுருக்கப்பட்டு விட்டதோ எனப் பேசிக் கொண்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? எனக் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் மறக்கவும் இல்லை (தொழுகை) சுருக்கப்படவுமில்லை என்றவுடன், இல்லை நிச்சயமாக நீங்கள் மறந்து விட்டீர்கள் என அவர் கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து பின் ஸலாம் கொடுத்தார்கள்.
பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதை விட நீண்டதாகவோ ஸஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்து தக்பீர் கூறினார்கள். தமது வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ, அல்லது அதைவிட நீண்ட ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதை விட நீண்டதாகவோ ஸஜ்தா செய்து, பின்பு தம் தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 1229)
அப்துல்லாஹ் இப்னு புஹைனா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸில் ளுஹர் தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் உட்காராததினால் இறுதியான ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள் என்பதைக் காணலாம்.
எனவே தொழுகைக்குள் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதியின் காரணமாக இப்படி நடந்தால் ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தா செய்துகொண்டால் அது அந்த மறதிக்கு பரிகரமாகவும் மற்றும் தொழுகை பூரணமாக்கப்படுகிறது என்பதை நாம் தெளிவடைந்து கொள்ள வேண்டும். இரண்டாவது அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நான்கு ரக்அத்களை கொண்ட தொழுகையை மறதியின் காரணமாக இரண்டு ரக்அத்துடன் ஸலாம் கொடுத்தபின் பிறகு நினைவுபடுத்தியபோது விடுபட்ட இரண்டு ரக்அத்களை மட்டும் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்தபின் இரண்டு ஸஜ்தாக்கள் மட்டும் செய்தார்கள் என்பதை கண்டு கொண்டோம். இங்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழவில்லை என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து வரும் ஹதீஸை கவனியுங்கள்.
”ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ளுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். உடனே தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதோ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு என்ன விஷயம் என்று கேட்டார்கள். நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள் என ஒருவர் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலாம் கொடுத்ததற்கு பிறகு இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 1226)
இந்த ஹதீஸில் ஒரு ரக்அத் அதிகமாக தொழுது ஸலாம் கொடுத்தபின் நினைவூட்டப்பட்டவுடன், மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழவில்லை. இரண்டு ஸஜ்தாக்கள் மட்டும் செய்தார்கள் என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் ‘உங்களில் ஒருவர் தொழத் தயாரானால், அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாத அளவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே ஸஜ்தா செய்யட்டும். (ஆதாரம்: புகாரி 1232)
எனவே தொழுகையின் போது மறதியால் ஏற்படும் இப்படியான விடயங்களுக்கு உடனுக்குடன் அழகான பரிகாரத்தை இஸ்லாம் நமக்கு வழிகாட்டியுள்ளது. ஒவ்வொரு ஆணும். ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சட்டங்களாகும். ஜமாஅத்துடன் தொழும்போது இமாம் பிழை விடும்போது பின்னால் தொழும் ஆண்கள் தஸ்பீஹ் மூலம் (சுப்ஹானல்லாஹ்) என்று கூறுவதன் மூலமும், பெண்கள் (இலேசாக) கையில் தட்டுவதன் மூலமும் இமாமிற்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
”ஆண்களுக்கு தஸ்பீஹும் பெண்களுக்கு தட்டுவதுமாகும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ 337)
அதேபோல் இந்த ஸஜ்தா ஸஹ்வின் போது விசேடமான துஆக்கள் கிடையாது. வழமையாக ஸஜ்தாவில் ஓதக்கூடிய துஆக்களை ஓதிக்கொள்ள வேண்டும்.
source: http://srilankamoors.com