இறை நம்பிக்கையே இஸ்லாத்தின் வெற்றி!
உ. காஜா மைதீன்
ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொட்டு இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை மேற்கொண்ட இறைபணி அனைத்திலும் கொண்ட முழு வெற்றிக்குக் காரணம் அவர்களின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையே.
நெருப்புக் குண்டத்தில் வீழ்த்தாட்டிய போதும், அருமை மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறை கட்டளைப்படி குர்பானி கொடுக்க கொடு வாளை எடுத்த போதும் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உள்ளத்தில் இருந்த அசைக்க முடியாத இறை நம்பிக்கையால் இறைவனால் பாதுகாக்கப்பட்டும், உலகம் உள்ளமட்டும் அவர்வழி நமக்குப் பேம் வழி நடைமுறையாக ஆக்கி வைத்தும் கலீல் தோழரே என்று பெருமையுடன் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பாராட்டினான்.
உயிர் பிழைக்க தன்னுடன் வந்த அடியார்களுடன் கடல் எல்லை வரை சென்று இனி என்ன செய்வது? யா அல்லாஹ் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்று என இறை நம்பிக்கையுடன் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைஞ்சி நின்றபோது, வல்லரஹ்மான் எதிர்நின்ற கடலைப் பிளந்து மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடியார்களுடன் உயிர் பிழைக்கவும் வைத்தான்.
எதிரிகளை அதே கடலில் மூழ்கடித்து, சாகடித்து உலகம் உள்ள மட்டும் மக்கள் இறை நம்பிக்கையை உணர வேண்டுமென எதிரிகளின் தலைவன் பிர்அவ்னின் இறந்த உடலை இன்றளவும், வல்லரஹ்மான் பாதுகாத்தும் வருகிறான்.
ஒருநாளல்ல, இரு நாளல்ல, 13 வருடங்கள் மக்கா மக்களிடம் தீனை எடுத்துக்கூறிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பட்டதுயர் கொஞ்ச நஞ்சமா? ஆனாலும் இறை நம்பிக்கையுடன் “இறைவா, இம்மக்களை தீன்வழிக்கு வரச்செய்” என இரவும் பகலும் அழுதழுது துவா செய்ததின் பலன் மதீனத்து மக்களை அனுப்பி முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீனுடைய மிகப்பெரிய வெற்றிக்கு வழி அமைத்து பதுர்போர் வெற்றியாலும், அடுத்தடுத்து வெற்றிகளாலும் அரபு உலகமே அவர்களின் காலடியில் என்ற நிலையில், எந்த மக்கத்து மக்கள் தம்மை ஈ இரக்கமின்றி கொல்லத் துணிந்தார்களோ, அதே மக்காவை கொலை இல்லாமல், இரத்தம் சிந்தாமல் இறை உதவியுடன் முழு வெற்றி கண்டு அனைத்து மக்கத்து மக்களிடமும் தீனை நிலை நிறுத்தினார்கள். அவர்களின் இறை நம்பிக்கையைப் போற்றி உலகம் உள்ளமட்டும் “யாரசூலுல்லாஹ்” என்று ஸலவாத் ஓதி நாம் நபிகளார் புகழ் பாடவில்லையா?
ஆனால் கேவலம் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு, மாலை மரியாதை பெருமைக்கும் எச்சில் இலை போல் தூக்கி வீசப்படும் ஒன்றிரெண்டு எம்.எல்.ஏ. சீட்டுக்கு நாயா, பேயா அலைந்து திரிந்து எந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஒற்றுமையை பற்றிப் பிடியுங்கள்” என்று கூறினார்களோ அதைத் துச்சமாகத் தூக்கி எறிந்து விட்டு அலையும் இஸ்லாமிய மாபெரும் தலைவர்களே தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள்.
இறை நம்பிக்கையும், கண்ணியமிக்க அரசியல் கலாச்சாரமும் எங்கே? கேவலம் அதே தாடி தொப்பியுடன் இஸ்லாத்தை பிளவுபடுத்தி, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள வைத்து அரசியல் குளிர்காய்கிறீர்களே, உங்களுக்கு அல்லாஹ்வுடைய பயமில்லையா? இறை நம்பிக்கை இல்லையா?
இஸ்லாமியர்களை ஒருமுகப்படுத்தி இணைத்து கைகோர்த்து இறை நம்பிக்கையுடன் ஒற்றுமையை பற்றிப் பிடித்து சமூக நலன் காக்க முனையுங்கள்.
நமது வழிகாட்டி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இஸ்லாத்தை எதிர்த்து வந்த எவ்வளவு பெரிய படையாக இருப்பினும் அருமை தோழர்களிடம் ஆலோசித்து முதலில் அனைவரையும் ஒற்றுமையுடன் ஒருமுகப்படுத்துவார்கள். அதுபோல அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்று கூடி ஆலோசித்து ஒரு அணியில் நின்று இறை நம்பிக்கையுடன் இயங்க வேண்டுமென்பதே எனதுவிருப்பம்.
– முஸ்லிம் முரசு நவம்பர் 2015