தியாகம் – சிறுகதை
நூ. அப்துல் ஹாதி பாகவி
அந்த ஊரின் பெரிய பள்ளிவாசலில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான தொழுகைக்கூடத்திற்கு வெள்ளிக்கிழமை பயான் கேட்பதற்காக புஷ்ரா புறப்பட்டுச் சென்றாள்.
வழியில், எதேச்சையாக ருஷ்தாவைச் சந்தித்தாள். புஷ்ரா வீட்டில்தான் ருஷ்தா நீண்டகாலமாகக் குடி இருந்தாள். பிறகு அங்கிருந்து மாறி, பக்கத்து ஊருக்குக் குடிபோய்விட்டாள்.
காலம் உருண்டோடி பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. நீண்ட காலத்திற்குப்பின் இப்போதுதான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.
புஷ்ராவின் வீட்டில் ருஷ்தா குடியிருந்தபோது இருவரும் தோழிகளைப் போலப் பழகி வந்தனர். பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
அந்தரங்க விஷயங்களைக்கூட அலசுவார்கள். ஆனால் வரம்பு மீறமாட்டார்கள். புஷ்ராவைவிட ருஷ்தா வயதில் மூத்தவள். எனவே அவள் ருஷ்தாவை “அக்கா’ என்றுதான் அழைப்பாள்.
“என்னக்கா சுகமா? பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படிக்கா இருக்கீங்க?” – விசாரித்தாள் புஷ்ரா. “அல்ஹம்து லில்லாஹ். நல்லவிதமா இருக்கேன். ஒரு கவலையும் இல்லை” – ருஷ்தா பதிலளித்தாள்.
“என்னக்கா இந்தப் பக்கம்? எங்கெ வந்திருக்கீங்க?”
“பக்கத்துத் தெருவுல உள்ள எங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்கேன். நீ எப்டி இருக்கே?”
“ம். நான் அல்லாஹ்வின் கிருபையாலே நல்லா இருக்கேன்.”
“புஷ்ரா உனக்கு எத்தனை பிள்ளைங்க?”
“ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுதான் ருஷ்தாக்கா”
“என்னம்மா சொல்றே. கல்யாணமாயி எத்தனையோ வருஷமாச்சு. ஒரே ஒரு குழந்தைதானா? அதுக்குப் பிறகு ஒன்னுமே இல்லையா?” – ருஷ்தா ஆச்சரியமாகக் கேட்டாள்.
“அந்த ஒன்னுக்கே நான் என் கணவனோட படாதபாடு பட்டுட்டேன். அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்தெல்லாம் கொடுத்து, பாதாம், பிஸ்தா, அக்ரோட் என வகை வகையாய்க் கொடுத்தேன். அதுக்குப் பிறகுதானே அல்லாஹ்வுடைய கிருபையாலெ ஒரு குழந்தை என்னோட வயித்துல உருவாச்சு.” – புஷ்ரா கூறினாள்.
“ஏம்மா இப்டிச் சொல்றே? அவருக்கு என்ன கொற?” – ஆர்வமாகக் கேட்டாள்.
“அவருக்கு ஆரம்பத்திலிருந்து உடலில் தெம்பு இல்லை, மனசுல தைரியம் இல்லை, மனைவியப் பார்த்தா காதல் இல்லை. மொத்தத்தில், “மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன்’ என்பது அவருக்குத்தான் சரியாப் பொருந்தும்” என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தாள் புஷ்ரா.
“கேக்குறதுக்கே ரொம்ப வருத்தமாயிருக்கு புஷ்ரா. நீயாச்சும் ஏதாவது முயற்சி செய்யக்கூடாதா?” என்று கரிசனத்தோடு கேட்டாள்.
“நானும் எத்தனை தடவைதான் முயற்சி செய்யிறது? ஊர் ஒலகத்துல சேவல்தான் கோழியைத் தொறத்திட்டு ஓடுறதப் பார்த்திருக்கோம். இங்க எல்லாம் தலைகீழாவுல இருக்கு? நானே எத்தனை தடவதான் சேவலா மாறுறது? இந்த நிலையில நான் எப்டி இன்னொரு குழந்தைக்கு முயற்சி செய்ய முடியும்? எனக்கு ஒரு குழந்தையாவது கொடுத்து “மலடி’ங்கிற பேரெ நீக்கி வச்சானே அந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” – புஷ்ரா ஆதங்கத்தோடு சொல்லி முடித்தாள்.
உன் கணவனைப் பத்தி ஆரம்பத்துலயே இதுவெல்லாம் உனக்குத் தெரியாதா? இதையெல்லாம் உன் அப்பா, அம்மாவிடம் சொல்லி, ஒரு முடிவு செய்திருக்கலாமே? ஷரீஅத்படி மற்றொரு நிகாஹ் செய்திருக்கலாமே? – ருஷ்தா கேட்டாள்.
தெரியும்க்கா, அம்மாவிடம் சொன்னேன். “முதல் பந்தம்தான் இறுதி வரை தொடரணும். முறிச்சு முறிச்சு நிகாஹ் செய்யக்கூடாது. இத முறிச்சிட்டு இன்னொரு திருமணம் முடிச்சாலும், அவன் எப்டி இருப்பானோ யாருக்குத் தெரியும்? எல்லாம் சரியாயிடும். பொறுமையா இரு”ன்னு சொல்லிட்டாங்க. நானும் அவருக்கு எதையெதையோ கொடுத்துப் பாத்தேன். ஒன்னும் தேரல. அதனால அந்த முயற்சியெல்லாம் கைவிட்டுட்டேன். இதையெல்லாம் அம்மாவிடம் போய் அடிக்கடி சொல்லிட்டு இருக்க முடியுமா? – சோகத்துடன் சொன்னாள் புஷ்ரா.
உன்னோட உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது புஷ்ரா. ஆனா, நான் புரிஞ்சுகிட்டு உனக்கென்ன இலாபம்? ஏன், உன்னோட அம்மாவுக்கு இதெல்லாம் புரியாதா? முதல் பந்தம் எப்டி இருந்தாலும் முறிக்கக் கூடாதா? நல்லா இருந்தா வேண்டுமென்றே முறிக்கக் கூடாதுதான். சரியா இல்லைன்னா முறிக்கலாம்தானே? பிறகு ஏன் உன்னோட உணர்வுகளை அவங்களாலெ புரிஞ்சுக்க முடியல? – ஆதங்கப்பட்டாள் ருஷ்தா.
விடுங்கக்கா. இதையெல்லாம் அம்மாவிடம் போய் அடிக்கடி சொல்ல முடியுமா? “பொறுமையா இரு’ன்னு சொல்லிட்டாங்க. நானும் பொறுமையாத்தான் இருக்கேன். அவ்வப்போது நோன்பு வைக்கிறேன். அப்படியே ஓடுது வாழ்க்கை! – மனதைத் தேற்றிக்கொண்டாள் புஷ்ரா.
ருஷ்தா ஆரம்பித்தாள்… இந்தக் காலத்துல யாரைப் பார்த்தாலும் இதே பிரச்சனைதான். என்னோட பக்கத்து வீட்ல ஷப்னம்ன்னு ஒரு பொண்ணு இருக்கா. அவ கணவருக்குச் சர்க்கரை நோய் இருக்காம். அதனால அவங்க ரெண்டு பேருக்கும் இப்படித்தான் உறவு சரியில்லையாம். இருந்தாலும் பரவாயில்லைன்னு பொறுமையா இருக்கா. என்ன செய்யிறது? அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்.
நெறைய ஆம்பளைங்க தம்மோட உடல் நிலைய நல்லா வச்சுக்குறதே இல்லை. பான்பராக், குட்கா, ஹான்ஸ், பீடி, சிகரெட், போதைப் பொருள்கள்ன்னு ஏகப்பட்ட கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாயிடுறாங்க. அதனால ஏற்படுற விளைவுகளையெல்லாம் யோசிக்கிறதேயில்ல. அவங்க உடலுக்குக் கேடு ஒரு பக்கம். நம்பி வந்தவ வாழ்க்கையக் கெடுக்குறது மறு பக்கம். அதே நேரத்துல நாம பீடி, சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சா இந்த ஆம்பளைங்க சும்மா விட்டுடுவாங்களா? ஊரக் கூட்டிப் பஞ்சாயத்து வச்சு, உண்டு இல்லைன்னு செஞ்சுறமாட்டாங்க? – விரிவாகப் பேசினாள் ருஷ்தா.
அது மட்டும் இல்லக்கா. அளவுக்கு மீறிச் சாப்பிடுறதும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணம்தான். வயிறு முட்டச் சாப்பிடுவது உடலுக்குப் பெருங்கேடு. மூச்சே விட முடியாம, ஒழுங்கா செரிக்காம படாதபாடு படுது வயிறு. “மூச்சு முட்டச் சாப்பிடாதே. பின்னெ, நோய்கள் வந்து அவஸ்தைப் படணும்”ன்னு என்னோட தம்பிக்கு நான் சொல்வதுண்டு. “அதெல்லாம் வந்தாப் பாத்துக்குவோம்”ன்னு ஏளனமாச் சொன்னான். இப்ப அவனுக்குச் சர்க்கரை நோய் வந்துடுச்சு. திருமணம் செய்து வச்சாங்க. நாலே மாசத்துல அவ அம்மா வீட்டுக்கு ஓடிப்போயிட்டா. என்ன செய்யிறது? எல்லாரும் என்னெ மாதிரி பொறுமையா இருப்பாங்களா? – அனுபவப்பூர்வமாகப் பேசினாள் புஷ்ரா.
புஷ்ரா தொடர்ந்தாள்… பாருங்க, நான் என்னெப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கேன். உங்களைப் பத்திச் சொல்லுங்கக்கா. உங்களுக்கு எத்தனை புள்ளைங்க? – சுயநினைவோடு விசாரித்தாள்.
எனக்கு நீண்ட காலத்துக்குப் பிறகுதான் குழந்தை பிறந்துச்சு. இப்போது எனக்கு ரெண்டு பிள்ளைங்க – சுருக்கமாகக் கூறினாள்.
ஏன் நீண்ட காலமாச்சு? – ஆர்வத்தோடு விசாரித்தாள் புஷ்ரா.
அவரு என்னோட இருந்தாத்தானே? திருமணமாகி ஒரு மாசத்துல மலேசியா போயிட்டாரு. அவரு ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ ஒரு மாத லீவுல வருவாரு. அக்கா வீடு, தங்கச்சி வீடு, நண்பர்கள் வீடுன்னு போயிப் போயி சுத்திட்டு, அப்டி இப்டி கொஞ்ச நாள் என்னோட தங்குவாரு. ஆக, இந்த இருபது வருஷத்துல அவரோட வாழ்ந்த காலம் ஏழெட்டு மாதம்தான் இருக்கும். என்ன செய்யிறது. இப்படித்தான் என்னோட வாழ்க்கை ஓடுது.
இங்கேயே வந்து, உள்ளூர்ல ஒரு தொழிலப் பாக்க வேண்டியதுதானே? – யோசனை கூறினாள்.
ம்… நானும் எத்தனையோ தடவ சொல்லிப்புட்டேன். அங்கேயே இருந்து பழகிப்போச்சாம். இங்கெ வந்து வேலை செய்ய முடியாதாம். இங்கெ எதுவுமே சரியில்லையாம். ரோடுகூடச் சரியில்லையாம். ஆனாலும் இந்தத் தடவ நான் அவரிடம் கறாராச் சொல்லிப்புட்டேன்.
“என்னங்க நம்ம ஊருக்கே திரும்பி வந்துடுங்க.
நேரடியா உங்க முகத்தப் பாத்துக்கிட்டே நிம்மதியா கண்ண மூடிடுறேன்.
எத்தனை காலத்துக்குத்தான் வாட்ஸ் அப்லயும், ஸ்கைப்லயும் உங்க முகத்தப் பாக்குறது.
நேரடியா எப்பத்தான் உங்களோட சேர்ந்து வாழுறது?
இந்த ஒடம்பு உங்களுக்காகத்தானே இருக்கு. இதுக்கு நீங்க உரிமைகொண்டாடம வேறு யாரு உரிமை கொண்டாட முடியும்?”ன்னு கேட்டுப்புட்டேன்.
அதான், அவருக்கும் கொஞ்சம் இரக்கம் வந்து, “உள்ளூர்லயே ஏதாவது செய்யிறேன். நான் இந்தத் தடவை கண்டிப்பா முடிச்சுக்கிட்டு வந்துடுறேன்”னு சொல்லிட்டாரு – மகிழ்ச்சி பொங்கக் கூறினாள்.
சரி, இளமையெல்லாம் முடிஞ்சு போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து இப்ப என்ன செய்யப் போறீங்க?- கிண்டலாகக் கேட்டாள்.
“நீ சொல்றது உண்மைதான். குளிருக்கும் மழைக்கும் ஒரு போர்வையா எடுத்துப் போர்த்திக்கொள்ளலாமே? அதுக்காகவாவது அவரு என் பக்கத்துல இருக்க வேண்டாமா? அவரு முகத்தப் பாத்துப் பாத்தாவது நான் தெம்பா இருப்பேன்ல” – ருஷ்தா தீர்க்கமாகச் சொன்னாள்.
அக்கா, ரொம்ப நேரம் பேசியாச்சு. தொழுகைக்கு நேரமாச்சு. நான் வாரேன்க்கா என்று விடைபெற்றாள் புஷ்ரா. விடைபெற்றபோது, “இவங்க பெரிய தியாகிதான்”னு மனதில் நினைத்துக்கொண்டாள்.
“சேதாரமான கணவனை ஆதாரமா வச்சுக்கிட்டு, உணர்வுகள அடக்கிக்கொண்டு, மெல்லவும் முடியாம சொல்லவும் முடியாம, அல்லாஹ்வுக்காகப் பொறுமையா வாழுற இவதான் மிகப் பெரிய தியாகி”ன்னு நினைத்துக்கொண்டே சென்றாள் ருஷ்தா.
source: http://hadi-baquavi.blogspot.in/