முஸ்லிம் இளைஞர்கள் பொது நீரோட்டத்துக்கு வர வேண்டும்
[ முஸ்லிம்களின் மத உணர்வை வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தி அவர்களின் முக்கியமான வாழ்வியல் பிரச்சினைகளை அரசியல் கட்சிகள் கைவிட்டுவிட்டன. இன்று இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என்று எந்த அடிப்படைத் தேவையிலும் முன்னேறவே இல்லை.
ஆனால், முஸ்லிம்களின் நலனுக்காக என்று சொல்லிக்கொண்டு நூற்றுக்கணக்கான முஸ்லிம் கட்சிகள் தோன்றி அதன் தலைவர்கள் வளமான வாழ்க்கை நடத்துகிறார்கள். இத்தனை இயக்கங்கள் இருந்தும் முஸ்லிம்களுக்கான அடிப்படைத் தேவைகள் ஏன் வென்றெடுக்கப்படவில்லை?
காரணம், அந்தக் கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களை முஸ்லிம்களாகப் பார்க்கின்றனவே தவிர, மனிதர்களாகப் பார்க்க முன்வரவில்லை.
மதம் தொடர்பான ஏதாவது ஒரு விஷயத்தைப் பெரிதாக்கி, ‘முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்திவிட்டார்கள்’ என்று உணர்ச்சியின் மேல் நின்று அரசியல் செய்யும் இந்த முஸ்லிம் இயக்கங்களிடம் முஸ்லிம்களுக்கான தனி நபர் வருமானத்தை உயர்த்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லை.]
தேவை மதம் கடந்த அரசியல்
புதுமடம் ஜாபர் அலி
திமுக, அதிமுக போன்ற தமிழகத்தின் பெரிய கட்சிகளிலும் சரி, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளிலும் சரி முஸ்லிம்களுக்குப் பொதுவான பதவிகள் கிடையாது. சிறுபான்மைப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவார்கள். அதில் முஸ்லிம்களுக்குப் பொறுப்புகள் தருவார்கள். பாரதிய ஜனதா கட்சியைப் போலவே! ஒரு முஸ்லிம் பிரதான கட்சி ஒன்றின் நேரடிப் பொறுப்புகளுக்கு வரக் கூடாதா?
முஸ்லிம்கள் ஒன்றும் சிறுபான்மைப் பகுதி என்று வரையறுக்கப்பட்ட தனியான பகுதிகளில் வாழவில்லை. அவர்களுக்குச் சிறுபான்மையினர் ரேஷன் கடை என்று எதுவுமில்லை. சிறுபான்மையினருக்கான பேருந்துகள், ரயில்கள் என்று எதுவும் தனியாக ஓடவில்லை. எல்லாருக்குமான பொது வாழ்க்கையைத்தான் முஸ்லிம்களும் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அரசியலில் மட்டும் சிறுபான்மையினர் முத்திரை குத்தப்பட்டு தனித்துக் காட்டப்படுகின்றனர்.
முஸ்லிம்களைப் பொதுத் தளத்துக்கு வர விடாமல் சிறுபான்மை என்ற வட்டத்துக்குள்ளேயே வைத்து, அவர்களைப் பொன்முட்டையிடும் வாத்துகளாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. இந்தச் சூழலை மாற்றியமைப்போம் என்று சொல்லி, சில முஸ்லிம் கட்சிகள் கிளம்பின. அவை அதே அரசியல் கட்சிகளிடம் சரணடைந்தன. அதே கட்சிகளின் சிறுபான்மைப் பிரிவாகவே மாறிவிட்டன. சிறுபான்மையோர் அடர்த்தியாக இருக்கும் தொகுதிகளில் ஒரு சீட், இரண்டு சீட் என்று கேட்டு வாங்குகிறார்களே தவிர, முஸ்லிம்களுக்கான முன்னேற்றத்துக்காக இந்த முஸ்லிம் கட்சிகள் எதுவும் செய்யவில்லை.
முஸ்லிம் லீக் சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட கட்சி. சுதந்திரத்துக்குப் பின் இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயரில் இயங்கியது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு இணையாகச் செயல்பட்ட பழமையான பெரிய கட்சி. ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் கட்சியைத் தேடிப் பார்க்க வேண்டியுள்ளது.
ஏன் இந்த நிலை?
ஏனென்றால், முஸ்லிம்களின் மத உணர்வை வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தி அவர்களின் முக்கியமான வாழ்வியல் பிரச்சினைகளை அரசியல் கட்சிகள் கைவிட்டுவிட்டன. இன்று இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என்று எந்த அடிப்படைத் தேவையிலும் முன்னேறவே இல்லை. ஆனால், முஸ்லிம்களின் நலனுக்காக என்று சொல்லிக்கொண்டு நூற்றுக்கணக்கான முஸ்லிம் கட்சிகள் தோன்றி அதன் தலைவர்கள் வளமான வாழ்க்கை நடத்துகிறார்கள். இத்தனை இயக்கங்கள் இருந்தும் முஸ்லிம்களுக்கான அடிப்படைத் தேவைகள் ஏன் வென்றெடுக்கப்படவில்லை?
காரணம், அந்தக் கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களை முஸ்லிம்களாகப் பார்க்கின்றனவே தவிர, மனிதர்களாகப் பார்க்க முன்வரவில்லை.
மதம் தொடர்பான ஏதாவது ஒரு விஷயத்தைப் பெரிதாக்கி, ‘முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்திவிட்டார்கள்’ என்று உணர்ச்சியின் மேல் நின்று அரசியல் செய்யும் இந்த முஸ்லிம் இயக்கங்களிடம் முஸ்லிம்களுக்கான தனி நபர் வருமானத்தை உயர்த்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லை.
இத்தகைய மதரீதியான அரசியல், அப்பாவி முஸ்லிம்களுக்குத் தவறான திசையைக் காட்டுகிறது. சில முஸ்லிம் இயக்கங்களின் நல்வாழ்வுக்கே வழிவகுக்கிறது. மாறாக, முஸ்லிம் மக்களின் அடிப்படையான பிரச்சினைகள் மேல் இப்போதைய முஸ்லிம் கட்சிகள் கவனம் செலுத்துவதே இல்லை. காரணம், அதனால் அவர்களுக்கு லாபம் இல்லை. சிறுபான்மையினர் என்ற பதற்றத்திலேயே இவர்களை வைத்திருப்பதுதான் அந்தக் கட்சிகளின் நோக்கம். முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சிறுபான்மை என்ற பெயரிலான மதவாத அரசியல், பெரும்பான்மை மதவாத அரசியலுக்குத் துணை நின்று பெரும்பான்மை மதவாத அரசியலின் கொடுமைகளுக்கு வலு சேர்க்கும் என்பதே கசப்பான உண்மை.
இவற்றைத் தவிர்க்க…
முஸ்லிம் இளைஞர்கள் பொது நீரோட்டத்துக்கு வர வேண்டும். சிறுபான்மையினர் என்று தங்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் மாய வலைப்பின்னலை அறுத்தெறிய வேண்டும். பொதுப் பிரச்சினைகளால் தாங்களும் பாதிக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞை ஏற்பட்டு தங்களையும் பொதுவானவர்களாக உணர வேண்டும். விலைவாசி உயர்வைப் பொதுப் பிரச்சினையாகப் பார்க்கும் அரசியல் கட்சிகள், முஸ்லிம் பகுதிகளுக்கு வரும்போது, பாபர் மசூதி இடிப்பு பற்றியும், மத உணர்வுகள் பற்றியும் பேசுகிறார்கள். ஏன், முஸ்லிம்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படவில்லையா? மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படவில்லையா?
இந்தோனேசியா நாட்டுக்கு அடுத்தபடியாக அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ளனர். வளைகுடா நாடுகளை விடவும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ளனர். இந்திய மக்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருப்பது உண்மைதான். ஆனாலும் சிறுபான்மை என்ற உணர்வோடு மட்டுமே அரசியலை அணுகுவது சரியாகாது. அந்த மாயவலையை உடைத்து, மதம் கடந்த அரசியலை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே இந்தியாவில் அடித்தட்டு முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை வென்றெடுக்க முடியும். பெரிய அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம்களை மதம் கடந்து மனிதர்களாகப் பார்க்க வேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கு இன்றைய உடனடித் தேவை மதம் கடந்த அரசியலே!