விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் தனித்த அடையாளம்
(Unique Identification Data)
அல்லாஹ் படைத்த மனித மிருக தாவர வர்க்கங்கள் அனைத்தும் பிரத்தியேக தனித்தனி அங்க அடையாளங்களுடனேயே சிருஷ்டித்துள்ளான் நமது பார்வைக்கு ஒன்றுபோல் இவை தெரிந்தாலும் ஒவ்வொரு ஜீவனும் தனித்த அடையாளங்களுடனே படைக்கப்பட்டுள்ளன. இந்த அடையாளங்கள் இருப்பதால்தான் பறவைகள் விலங்குகள் தங்கள் இணைகளை அறிந்து ஒரு கூட்டமாக சமுதாயமாக வாழுகின்றன
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி வேறில்லை; இன்னும் அவையாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும். (அல்குர்ஆன் 6:38)
அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான் (அல்குர்ஆன் 59:24)
மனிதர்களும் பல்வேறு உருவ அளவிலும் பல நிறங்களிலும் முகத்தோற்றத்திலும் தங்களுக்கிடையில் அடையாளம் காண்பதற்காகவே இப்படி வித்தியாசமாகப் அல்லாஹ் படைத்திருக்கின்றான் குறிப்பாக முக அடையாளமே நடைமுறையில் பெரிதும் பயன்படுகிறது ஆனால் போர் விபத்து மற்றும் கலவர சண்டையில் உடல் உறுப்புகளை இழப்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் உஹதுப் போரில் பங்குகொண்ட நபித்தோழர், அனஸ் இப்னு நள்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கடுமையாக போரிட்டு ஷஹீதானர். அவர் (உடல் முழுவதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலையில் கொல்லப்பட்டார். அவரின் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்ப்பட்ட காயங்கள் இருந்தன. அவரை அவரின் சகோதரி மச்சத்தை வைத்தோ அல்லது கைவிரல் வைத்தோ கண்டறிந்தனர். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4048)
1400 ஆண்டுகளுக்கு முன்பு கைவிரல் நுனி வடிவ அமைப்பை வைத்து மனிதர்களை அடையாளம் காண முடிந்தது. இந்த விரல் நுனியே இருபதாம் நுற்றாண்டிலும், இனி வரும் இறுதிநாள் வரையிலும், அனைத்து மனிதருக்குமான தனித்துவமான (Unique Identification Data) அடையாளமாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். பொதுவாக மனிதர்களின் கைகளிலும், விரல்களிலும் ரேகைகள் உள்ளன. உள்ளங்கை ரேகையால் உலக ஆதாய பயன் பெறுபவர்கள் கைரேகை ஜோசியர்கள் மட்டுமே. விரல் நுனி ரேகையே தடய அறிவியல் மற்றும் அனைத்து துறைகளுக்கும் பயனளிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இஸ்லாத்தை போதித்து, மரணத்திற்குப்பின் மனிதனை எழுப்பி அவனின் சுவன, நரக நிலைகளை விளக்கினார்கள். அப்பொழுது ஒரு மனிதர்,ஒரு உக்கி, மக்கிப்போன எலும்பை கையிலெடுத்து, அதை தூளாக நொறுக்கி, இந்த எலும்புக்கும் அல்லாஹ் உயிர் கொடுப்பானா? என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (அல்குர்ஆன். 75:3,4)
மனித உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் இவ்வசனத்தில் குறிப்பாக அல்லாஹ் விரலைக் கூட முன்பிருந்தவாறே செய்வையாக்க ஆற்றலுடையவன் என்று கூறுவதன் மூலம் விரலும் அந்த விரல்களிலுள்ள ரேகைகளும் அப்படியே மீண்டும் உருவாகும் என்கின்றான். உலக அழிவிற்க்குப் பிறகு, இறுதித்தீர்ப்பு நாளில் அனைத்து ஜீவராசிகளும் தனித்தனி அடையாளத்துடன் முன்பிருந்தவாறே மீண்டும் உயிர்ப்பிப்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி ஆற்றல், வல்லமையாகும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும், கத்னா செய்யப்படாதவராகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, “ நாம் முதன் முதலாகப் படைத்ததைப்போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்.” (அல்குர்ஆன் 21:104) என்னும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3349)
விரல் ரேகையைப் பற்றி நவீன அறிவியல் என்ன கூறுகிறது?
விரல் ரேகையானது குழந்தை கர்ப்பத்திலிருக்கும் நான்காம் மாதத்தில் உருவாகிவிடும். பின்பு மனிதன் இறக்கும்வரை அதில் எந்த மாற்றமும் ஏற்ப்படுவதில்லை.இன்று உலகில் 600 கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால், இந்த கைவிரல் ரேகை ஒரு மனிதருக்கு உள்ளது போல் மற்றொரு மனிதருக்கு இருக்காது.ஒட்டு மொத்த மனிதர்களின் 6000 கோடி விரல்களும் ஒன்று போல் மற்றொன்று இருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரத்தியேக, தனித்தனி அடையாளங்களை (Unique Identification Data) அமைத்துள்ளான்.
நமது தோற்றம் நாளுக்கு நாள் மாறக்கூடியது.பத்து வயதில் இருப்பது போல் இருபது வயதில் இருப்பதில்லை.நாற்பது வயதில், அறுபது வயதில் அல்லது என்பது வயதில் நமது உடல் உறுப்பு, முக அடையாளங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இரண்டு வயது குழந்தையின் விரல் ரேகைதான், அந்தக் குழந்தை என்பது வயதான முதியவராக மாறிய போதும் அதே ரேகைதான் இருக்கும். விரல் நுனி ரேகை அமைப்பு கொஞ்சம் கூட மாறுவதில்லை. எனவேதான் தடய அறிவியல் துறை விரல் ரேகை நிபுணர்கள், இதை “ கடவுள் கொடுத்த முத்திரை “ என்று ( A Seal given by God ) வர்ணிக்கிறார்கள். இது அல்லாஹ் அடியானுக்கு வைத்த முத்திரை.
தாயின் கர்ப்பத்தில் 10 வது வாரத்தில் வளரும் விரல்களில் 17 வது வாரத்திற்குள் விரல் ரேகைகள் பதியப்பட்டு முடிந்து விடும்.பிறகு அதன் ஆயுள் வரை மாறுவதில்லை. இதிலும் ஆச்சரியம், ஒத்த உருவமுள்ள இரட்டைக் குழந்தைகள் விரல் ரேகைகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியில் உருவான குளோனிங் முறையில் அச்சு அசலாக தாயைப்போல சேய் பிறந்தாலும் பிறக்கும் குழந்தையின் விரல் ரேகை ஒன்று போல் இருக்காது. காரணம் விரல் ரேகையை டிஎன்ஏ என்னும் மரபணு ஜீன்களால் உருவாவதில்லை. தாயின் கர்பத்தில்தான் ரேகைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத்துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, ‘இறைவா! இவன் நற்பேறற்றவனா? அல்லது நற்பேறு பெற்றவனா? என்று கேட்கிறார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அது குறித்து எழுதப்படுகிறது. அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டு விடுகின்றன. பிறகு அதில் கூட்டப்படுவதுமில்லை; குறைக்கப்படுவதுமில்லை. (அறிவிப்பவர்: ஹுதைபா பின் அசீத் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள். நூல்: முஸ்லிம்.5146)
பொதுவாக விரல் நுனி ரேகை மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்க்குத்தான் தடய அறிவியல் துறையினர் முதலில் இம்முறையைப் பயன்படுத்தினர் ஆனால் தற்கால கணினி அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பாஸ்போர்ட் மற்றும் அனைத்து அரசுத் துறை சேவைகளைப் பயன்படுத்த ஆதார் எனப்படும் தனித்துவ அடையாளத்திற்கு விரல் நுனி ரேகைகளே பெரிதும் பயன்படுகிறது தற்போது வெளிவரும் புதிய ஸ்மார்ட்போன்களை கையாள விரல்நுனி ரேகை அடையாளம் தேவைப்படுகிறது.
போலியான விரல் ரேகைகளை ஜெல்லடின் போன்ற பொருள்களால் உருவாக்கி அதை விரலில் அணிந்து கொண்டு ஏமாற்றும் நிகழ்வுகளும் நவீன தொழிற்நுட்ப உலகில் நடக்கத்தான் செய்கிறது அல்லாஹ் அமைத்த அடையாளத்தை மனிதனால் ஏமாற்ற முடியுமா? நிச்சயம் முடியாது ஏனெனில் விரல் நுனி ரேகைகள் கை விரலின் மேற்புறத்தில் பார்வைக்குத் தெரிந்தாலும் அதன் வேர் தோலின் அடிப்புரத்திலிருந்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் தற்போது கூறுகின்றன.
விரல் நுனியின் மேற்புற தோலிருந்து அரை மில்லி மீட்டர் (0 5 mm) ஆழத்தில் அசலான உள் ரேகைகள் (Internal Finger prints) பதிந்துள்ளன
பொதுவாக கை விரல் ரேகைகள் வயோதிகத்தினாலும் அல்லது கடினமான உடல் உழைப்பினாலும் தேய்ந்து தெளிவில்லாமல் போக வாய்ப்புள்ளது ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் தோலின் அடியில் உள்ள அசலான ரேகைகளை இனம் கண்டு ஆட்களை அடையாளப்படுத்துகிறது மேலும் விரலின் மேற்தோலிருக்கு கீழே உள்ள ரேகையானது எல்லா மனிதர்களுக்கும் ஒரே ஆழத்தில் இருப்பதில்லை ஒவ்வொரு மனிதரின் அசல் ரேகை ஆழம் வேறுபடுகிறது இந்த ஆழ வித்தியாசத்தை 2 D காமிரா மூலம் அளந்து மனிதர்களை அடையாளம் காணலாம்.
இதல்லாமல் விரல் ரேகையில் உள்ள வியர்வை சுரப்பிகளில் இருந்து படியும் அமினோ அமிலங்களின் அளவை அளந்து சம்பந்தப்பட்ட நபர் ஆணா அல்லது பெண்ணா என்பதையும் எந்த இணத்தை (Race) என்பதைக்கூட அறிய முடியும் காரணம் இந்த அமினோ அமிலங்கள் ஆணைவிட பெண்ணிற்கு இரு மடங்கு சுரக்கும்.
அல்லாஹ்வின் ஆதார் அடையாளமானது இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்களுக்கும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் இனி இறுதி நாள் வரை வரப்போகின்ற மனிதர்களுக்கும் தனித்தனி பிரத்யேக அடையாளத்தை பதிந்து வைத்துள்ளான் அனைத்து மனிதர்களின் அமல்களும் அல்லாஹ்வின் ஆதார் அடையாளம் மூலம் பதியப்பட்டுள்ளது. இப்பதிவே சொர்க்க நரகத்தை தீர்மானிக்க உதவும் அல்லாஹ் ஞானமுள்ளவன்; பேரறிவாளன் வல்ல அல்லாஹ் நம்மை நரகத்தை விட்டும் பாதுகாப்பானாக!
“இது உங்கள் செயலைப்பற்றிய நம்முடைய பதிவுப்புத்தகம் இது உங்களைப்பற்றிய உண்மையையே கூறும் நிச்சயமாக நாம் நீங்கள் செய்தவற்றை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றோம்” (அல்குர்ஆன் 45:2)
– Mujahid Ibnu Razeen