வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை!
ஒரு வீட்டின் உரிமையாளரிடம் சென்று ஒருவர் தமக்கு வாடகைக்கு வீடு வேண்டுமென்று அந்த வீட்டில் தாம் குடியிருக்கப்போவதாகவும் கேட்டுக் கொண்டார். அவ்வீட்டின் உரிமையாளர் அவர் கேட்டுக் கொண்டபடி ஒரு வீட்டை வாடகைக்காக கொடுத்து அவ்வீட்டிலேயே குடியிருக்கும்படி ஏற்பாடு செய்து கொடுத்து அவரிடம் சொன்னார்…
”இந்த வீடு வாடகை வீடுதான். இந்த வீட்டிலிருந்து என்றோ ஒரு நாள் வெளியேறும்படி வரும். ஆனால் எந்த முன் அறிவிப்பும் கொடுக்கப்படாமல் திடீரென்று வெளியேற்றப்படும். அதற்குத் தகுந்தபடி உன்னுடைய வாழ்க்கையை அமைத்துகொள், மறந்துவிடாதே! இந்த வீடு வாடகை வீடுதான் தற்காலிகமாகத் தங்குவதற்காக வேண்டிதான் தரப்பட்டிருக்கின்றது” என்று அறிவிப்புச் செய்து அவ்வீட்டை ஒப்புக்கொடுத்தார்.
அம்மனிதரும் அவ்வீட்டில் குடியிருந்து வந்தார். ஆனால் நாளாக, நாளாக அந்த வீடு வாடகை வீடு என்பதை மறந்து தமக்கு வரக்கூடிய வருமானம் அனைத்தையும் அவ்வீட்டை அலங்கரிப்பதிலேயே செலவ செய்து வந்தார். அவருக்கு சொந்த வீடு ஒன்று இருந்தது. ஆனால் அந்த சொந்த வீட்டைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.
அந்த வீட்டின் முன்னேற்றம் குறித்து கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை . அவ்வீட்டின் உரிமையாளர் முன்பு அறிவிப்பு செய்தது போல் திடீரென்று ஒருநாள் அந்த வீட்டிலிருந்து அவரை வெளியேற்றி அவருடைய சொந்த வீட்டில் கொண்டுபோய் போட்டு விட்டு வந்து விட்டார்.
ஆனால் அவருடைய சொந்த வீட்டைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படாமல் அப்படியே போட்டு வைத்ததினால் அந்த வீடு பாழடைந்து கிடந்தது. அந்த வீட்டினுள் பாம்புகளும், தேள்களும் நெளிந்து கொண்டிருந்தன. சுவர் எல்லாம் இடிந்தும் சிதைந்தும் காணப்பட்டன. அந்த வீட்டைப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. அந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்வதற்கு யாருமில்லை. அவருக்கு வயதும் ஆகிவிட்டப்படியினால் உழைப்பதற்கு உடலிலே சக்தியுமில்லை. வீடு முழுவதும் தேள்களும் பாம்புகளும் மற்றும் புழுப் பூச்சிகளும் நிறைந்து காணப்பட்டன.
இந்நிலையில் என்ன செய்வதென்றே புரியாமல் தேம்பித் தேம்பி அழுகின்றார். அவருடைய சொந்த வீட்டைப்பற்றி சிறிதும் நினைத்துப் பார்க்காமலும் அதற்காக வேண்டி எந்த ஏற்பாட்டையும் செய்யாதது குறித்தும் எண்ணி எண்ணி வருந்தினார். இப்போது கவலைப்பட்டு என்ன பயன்? சென்று போன வயதும் செலவழிந்து போன பணமும் திரும்ப வரப்போகிறதா?
பாம்புகளும், தேள்களும் அவரைக் கடிக்க ஆரம்பித்தன. வேதனையால் துடி துடிக்கின்றார். அந்த இடத்தில் அவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை. இதைப் போலவே மனிதர்களாகிய நாம் இவ்வுலகத்திலே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இந்த உலகமானது வாடகை வீட்டைப் போன்றது. மறுமையின் தரப்படும் வீடுதான் நமது சொந்த வீடு. மறுமையின் வீடுகள் ஆரம்பமாகத் தங்கக்கூடிய வீடு கப்ராக உள்ளது.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி அவர் வாடகை வீட்டை அலங்கரிப்பதிலேயே கவனம் செலுத்தியது போல் நாம் மறுமை (நமது சொந்த) வீட்டைப்பற்றி சிறிதும் கவலைப் படாமலிருக்கின்றோம் . நம்முடைய நேரங்களையும் பொருள்களையும், இவ்வுலகத்தை அலங்கரிப்பதிலேயே செலவு செய்து வருகின்றோம்.
நம்மை ஒருநாள் எல்லோரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் கப்ரிலே வைத்து மண்ணைப் போட்டு மூடிவிடுவார்கள். அந்த சமயம் நமக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நாம் இவ்வுலகிலிருக்கும்போதே நாம் நம்முடைய சொந்த வீட்டிற்காக வேண்டி [கப்ருடைய வாழ்வுக்காக வேண்டி] முயற்சிகள் செய்ய வேண்டும். நாம் அவ்வாறு முயற்சிகள் செய்ய விட்டால் மாபெரும் நஷ்டவாளியாக ஆகிவிடுவோம்.
அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! (ஆமீன்)
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
-சத்திய பாதை இஸ்லாம் Haja Jahabardeen
source: http://islam-bdmhaja.blogspot.com/2016/05/real-house-life.html