கர்ப்பிணி மனைவியை தனியாக விட்டு, தப்லீகில் போன பேர்வழி!
உண்மைச் சம்பவம்
புதிதாக மாறிய வீட்டில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். திடீரென கதவு தட்டப்படும் ஓசை, அப்போதுதான் கூடி வந்து கொண்டிருந்த தூக்கத்தை கலைத்துவிட காதுகளைக் கூர்மையாக்கி மறு தட்டுதலுக்காகக் காத்திருந்தேன். மீண்டும் கதவுகள் தட்டப்பட்டன. தட்டப்பட்டது எனது வீட்டுக் கதவுதான் என்பதை உறுதி செய்த பின், இந்த நள்ளிரவு ஒரு மணிக்கு யாராக இருக்கும் என்ற கேள்வியோடு கதவை நோக்கி நடந்தேன்.
பலப் பல யோசனைகள் மனதுக்குள், என் வீட்டைச் சுற்றி மூன்று வீடுகள் சிங்களவர்களுடையது. மனதின் மூலையில் இனந்தெரியாத ஒரு பீதியும் தொத்திக் கொண்டது. தட்டுதல் சத்தம் என் குழந்தைகளையும், நோயாளி மனைவியையும் எழுப்பிவிடுவதற்கு முன்னால் யாரென்று பார்த்து விட அவசரமாக கதவை நோக்கி விரைந்தேன். என் கால் சத்தம் கேட்டதும் தட்டும் சத்தம் நின்றுவிட்டது.
கதவுத்துவாரத்தினூடாக நோக்கினேன். யாரையும் காணவில்லை. பீதி அதிகமானது. அடுத்த தட்டுதலுக்காக அமைதியாய் காத்திருந்தேன். “அங்கிள்” “அங்கிள்” ஒரு சிறுவனின் குரல் கேட்டது. அவசரமாக கதவைத் திறந்தேன். 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் நின்றிருந்தான். வீடு மாறி வந்த நாளிலிருந்து அவனை அடிக்கடி வெளியே பைசிக்கிளில் கண்ட ஞாபகம். இந்த நள்ளிரவில் எதற்காக வந்திருப்பான் என்ற என் மனதில் எழுந்த கேள்வியை அச்சிறுவன் ஊகித்திருக்க வேண்டும்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அங்கிள், உம்மாவுக்கு வருத்தம், உதவி செய்ய முடியுமா அங்கிள்? என்று கேட்டான். வாப்பா எங்கே என்று கேட்டேன். வாப்பா வெளியூர் போயிருக்கிறார் அங்கிள்” என்று சொன்னான். பெண் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அவசரமாக மனைவியை எழுப்பிக்கொண்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றோம்.
அங்கே அந்தச் சிறுவனுடைய தாய் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவசரமாகச் சென்று காரை எடுத்துக்கொண்டு வந்தேன். எனது மனைவி மற்றும் அங்கு நின்ற அந்தச் சிறுவனின் மூத்த சகோதரியின் உதவியுடன் அந்தப் பெண்மணியைக் காரில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலையில் அனுமதித்தோம். தாமதமாகி வந்ததனாலும் நீர்ப்பை உடைந்து அதிக நேரம் கடந்து விட்டதனாலும் மிகவும் இக்கட்டான நிலமையில் பலத்த போராட்டத்தின் பிறகே அந்தத் தாய் குழந்தையை பிரசவித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
அழகான ஒரு ஆண் குழந்தை. ”வாப்பாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க” என்றேன்.
”சொல்லியாச்சு அங்கிள், காலையில வாப்பா வந்திடுவாங்க” என்றான் அந்தச் சிறுவன்.
வைத்தியசாலை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு வீடு வந்து சேர அதிகாலை 6 மணிக்கு மேலாகிவிட்டது. தேவையான நேரத்தில் ஒருவருக்கு உதவக் கிடைத்த மன நிறைவிலும் சந்தோசத்திலும் படுத்தவுடனே தூக்கம் போய்விட்டது.
பின்னேரம் அஸர் தொழுகையின் பின் வராந்தாவிலே உட்கார்ந்து தேநீர் அருந்திக்கொண்டு பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த என் கவனத்தை அந்த “அஸ்ஸலாமு அலைக்கும்” கலைத்துவிட நிமிர்ந்து பார்த்தேன். ஒரு வெள்ளை ஜுப்பா, பெரிய தாடி, நெற்றியிலே தொழுவதால் உண்டான அடையாளம், ஒரு மனிதர் நின்றிருந்தார், அவரின் பக்கத்தில் அந்தச்சிறுவனைக் கண்டதும் இவர்தான் அந்தப்பையனின் தந்தை என்பதை ஊகித்துக்கொண்டேன்.
”வலைக்குமுஸ்ஸலாம், வாங்க, வந்து உட்காருங்கள்” என்றதும் முன்னால் அமர்ந்து கொண்ட அவர் “ஜஸாகல்லாஹுஹைர்” என்று கூறினார். “பாறகல்லாஹ்” என்று கூறி அதனை ஏற்றுக்கொண்டு, ”நாங்கள் வந்து 20 நாட்களுக்கு மேலாகிறது, ஒரு தரமேனும் நான் உங்களைக் காணவில்லையே” என்று கேட்டேன்.
அதற்கு அவர், ”நான் அல்லாஹ்வுடைய பாதையில் நாற்பது நாள் சில்லா ஒன்று போயிருந்தேன்” என்றதும் மனதில் ஒரு சங்கடம், சிறிதாக கோபம் வந்துவிட்டது, அத்துடன் நிற்கவில்லை அவர், ”பாருங்கள் அல்லாஹ்வின் ஹொதரத்தை. சுபஹானல்லாஹ், நான் நாப்பது நாள் ஜமாத் போகும் போது என் மனைவியை அல்லாஹ்வின் பொறுப்பிலேயே விட்டுச்சென்றேன், சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிங்களவர்கள், ஆனால் அல்லாஹ்தான் உங்களை இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றான்” என்றதும் கோபம் தலைக்கேறிவிட்டது.
வீட்டுக்கு வந்த விருந்தாளி என்று கூடப் பார்க்காமல், ”அறிவருக்குதாய்யா உனக்கு?, மூளை கெட்ட ஜென்மங்களா, நிறை மாதப் புள்ளத்தாச்சிப் பொம்புளய எந்த வித முன்னேற்பாடுமின்றி தன்னத்தனியா விட்டுப்போக உங்களுக்கெல்லாம் எப்படிடா மனசு வருகுது?”
”இன்னும் கொஞ்சம் பிந்திப் போயிருந்தாப் பொண்டாட்டியும் இல்ல புள்ளயும் இல்லை, மையத்துக்குத்தான் வந்திரிக்கோணும், புள்ளை குடுத்தா மட்டும் போதாது, குடும்பத்த பாதுகாக்கவும் தெரிஞ்சிருக்கணும், என்னமோ ஜிஹாத் போன மாதிரி பீத்திக்கிறீங்க, நல்லா வயிறு முட்டத் திண்டிட்டு தூங்கத்தானே போன, வீட்டில வயசான பெற்றோர் இருந்தா ஜிஹாத்துக்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க அனுமதி குடுக்கல்ல, அதெல்லாம் எங்கே தெரியப் போகுது, குர்ஆன் ஹதீஸ் வாசிச்சாத்தானே. இதை நாளைக்கிக் கொண்டு போய் பெரியார் கதையாக்கி மக்களை முட்டாளாக்கிர வேணாம்”, திடீரென என் மனைவியின் கை என்னில் பட அமைதியாகிக் கொண்டேன், பாவம் வீட்டிற்கு வந்த மனிஷன் தலையைக் குனிந்து கொண்டே வெளியேறினார்.
-Rila Marzook முகநூலில் இருந்து