இஸ்லாம் வெறுக்கும் தீண்டாமை
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்” (அல்குர்ஆன் 49:13)
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் உள்ள கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.
நீ இந்த பிரிவை சேர்ந்தவன் நீ பள்ளி உள்ள வந்தா தீட்டு… அதனால நீ வெளிய நின்னுதான் தொழணும்ன்னு சொல்லி படைத்தவன் முன்னாடி கூட அவன ஒதுக்கி வைக்கிற கேவலமான செயல நாங்க ஒருக்காலும் செய்யவே மாட்டோம். இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் (தீண்டத்தகாதவர்கள் என்று நம் சமூகத்தால் கொடுமைப்படுதப்படும்) தலித்களுக்கும் சேர்த்துதான்.
நாட்டையே ஆளும் அரசரா இருந்தா கூட அவருக்குன்னு ராஜ மரியாதை எல்லாம் கெடையாது அவருக்குனு தொழுக தனி இட ஒதுக்கீடு எல்லாம் கெடையாது.
அரசனும் ஆண்டியும் அருகருகே தோளோடு தோளாக நின்று எந்த பாரபட்சமும் இல்லாமல் இறைவனை வணங்கும் சமத்துவம் இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்தில் உள்ளது?
இதுல ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை பார்த்த உடனே சட்டையை கழட்டி கக்கத்துல வச்சு கும்பிடு போட்டு தங்கள் மரியாதையை(!!!) காட்ட வேண்டிய அவசியம் இல்ல.
தண்ணி கேட்டா தூரமா நின்னுக்கிட்டு ஊத்திவிடுறது இல்லை!
சபைல தான் இருக்கையிலும் தாழ்த்தப்பட்டவன் கோணிப்பை விரித்து மூலையிலும் உக்கார்ரது இல்ல!
சாக்கடை அள்ளுவது மட்டும் தான் உன் தொழில், துணி துவைக்கிறது மட்டும் தான் உன் தொழிலா இருக்கணும்னு யாரும் வற்புறுத்துவதில்ல.
ஊருக்குள்ள நீ செருப்பு போட்டு நடக்க கூடாதுன்னு சொல்ற காட்டு மிராண்டித்தனம் இஸ்லாத்தில இல்ல.
சமதர்மமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பிரிவினை பார்ப்பதில்ல!
நாங்கள் உண்ணும் பருகும் அதே பாத்திரத்தில் உண்ணவோ பருகவோ அவர்களுக்கு எந்த பிரிவினருக்கும் எந்த தடையும் இல்லை. நீ தாழ்ந்தவன் அதனால கொட்டங்கச்சில தான் குடிக்கணும்ன்னு சொல்லி மிருகத்த விட கேவலமா ஒரு மனுசன நடத்துற காட்டுமிராண்டித்தனம் இஸ்லாத்துல இல்ல.
எல்லாத்துக்கும் மேல ஒரு மனுஷன் வாழும் போதுதான் சாதி பார்த்து ஏற்றத்தாழ்வு உண்டாக்குறாங்கன்னு பார்த்தா அவன் செத்த அப்பறம் புதைக்க கூட விடாம சாதிய காரணம் காட்டி ஆதிக்க சாதியினர் புதைக்கும் இடத்தில தலித் சமூகத்தாரை புதைக்க விடாமல் கலவரம் பண்ணிய அவலமும் தமிழ் நாட்டில் சில இடங்களில் நடந்துள்ளது.
ஆனால் ஒரு முஸ்லிம் இறந்தால் அவருக்கு நான் இறுதி தொழுகை வைக்க மாட்டேன் என்று எந்த இமாமும் சொல்வதில்லை..!!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனியுங்கள்…
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர்அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.
எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.
இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர்
உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (நூல்கள்: அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (நூல்கள்: ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)
இப்புடி சொல்லி சமூகப் பிளவுக்கும், நிற வெறிக்கும், சாதி பாகுபாடுகளுக்கும் அன்றே முடிவு தந்து விட்டு சென்றார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச்சென்ற இந்த வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு!
நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.
யாரு இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது.