அதிமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு!
தேர்தல் அறிக்கையில் கவனிக்கத்தக்க அம்சங்கள்
* இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும்.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
* விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
* டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது.
* விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது.
* மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க 50% மானியம் வழங்கப்படும்.
* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
* 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணமில்லை.
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன் வழங்கப்படும்.
* தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.
* விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது.
* உலமா ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
* மசூதிகள் பழுது பார்க்கத் தேவையான நிதி உதவி வழங்கும் வகையில், வக்ஃபு வாரியத்தில் தனியே நிதியம் ஏற்படுத்த நிதி உதவி வழங்கப்படும்.
* மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி அமைத்துத் தரப்படும்]
அதிமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். முதல் பிரதியை தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்துக்காக தனித் தனியாக தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
அதன் முழு விவரங்கள் வருமாறு
1. விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலன்
* கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
* 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 40,000 கோடி அளவிற்கு பயிர்க் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
* உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் 20,787 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க் கடன் 9,164 கோடி ரூபாய் தான்.
* விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* தரமான விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
* பண்ணை மகளிர் குழுக்கள் விரிவாக்கப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படும்.
* வேளாண் எந்திரமயமாக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* பயறு உற்பத்தியில் தன்னிறைவு எய்தப்படும்.
* பண்ணை எந்திரங்கள் வாங்க மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
* நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மானாவாரி விவசாயிகளின் வருமானம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.
* மானாவாரி பயிர் சாகுபடியில் கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும்.
* தரிசு நிலங்கள் சீர்திருத்தப்பட்டு, நீராதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயிர் செய்ய வழிவகை காணப்படும்.
* நீடித்த, நிலையான, கரும்பு உற்பத்தித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர் சாகுபடிக்கு தரமான இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
தரமான இடுபொருட்கள் கிடைக்க வழி செய்யும் வகையில் சிறப்பு நோக்க அமைப்பு (Special Purpose Vehicle) ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சுழல் நிதி அதிகரிக்கப்பட்டு இதன் சேவை விரிவாக்கப்படும்.
* தோட்டக்கலை விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
அச்சு மற்றும் ஆரம் மாதிரி (hub and spoke model) தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறைகள் மூலம் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 10 சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் விரிவாக்கப்படும்.
* வாழை, இளநீர், மாம்பழம், திராட்சை மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிற்கென சிறப்பு வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.
* சூரிய சக்தியால் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீத மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 10 HP வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும்.
* விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிடங்குகள் மற்றும் குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் 3,492 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 8,120 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள 92 குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மேலும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படும்.
* விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயறு வகைகள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளும், நுகர்வோரும் பயன் பெறுவர்.
* பருத்தி உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும்.
* தென்னை விவசாயிகளின் வருவாய் பெருக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
517 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன; 50 தென்னை உற்பத்தியாளர் இணையம் பதிவு செய்யப்பட்டுள்ளன; மேலும் 13 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் நல்ல விலை பெற வழிவகை செய்யப்படும்.
* தரமான தென்னை கன்றுகள் விநியோகம் மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் தென்னை உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு உற்பத்திக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
* வயதான மற்றும் பூச்சி நோய் தாக்குதலுக்கு இலக்கான தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்யும் வகையில் ஒரு புதிய சிறப்பு திட்டம் 800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
* இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும்.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
* விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
* டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது.
* விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது.
* மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் வகையில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு ஏலமுறை (e-Tender) இணையதள வசதிகள் ஏற்படுத்தப்படும். விளைபொருட்களின் சந்தை விலை நிலவரம் குறித்த ‘குறுஞ்செய்தி’ சேவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
* அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்து, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், நுகர்வோரின் தேவையின் அடிப்படையில் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள உரிய முன் பின் இணைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்காக எளிதில் வீணாகும் தன்மை கொண்ட காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குளிர்சாதன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும். எ கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.
* சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எ கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2. நதிநீர் மற்றும் நீர் ஆதாரம்
* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய அரசின் அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டது. காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு இன்னமும் எடுக்கவில்லை. இவை அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு பெற்று காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட எத்தனிக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும். எ தமிழகத்திற்கு கிடைத்திடும் நீரை குறைக்கும் வகையில் கேரள அரசால் அணைகள் கட்டப்படுவது தடுக்கப்படும்.
* அதே போன்று தமிழகத்திற்கு கிடைக்கப் பெறும் நீரை குறைக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் மூலமும், உச்ச நீதிமன்றத்தின் மூலமும் தடுக்கப்படும்.
* தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* பம்பா-அச்சன்கோயில்-வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், வாய்க்கால் புனரமைப்புத் திட்டங்கள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள் மற்றும் படுகை அணைகள் கட்டும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள 5,695 ஏரிகளில் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல், நீரியல் கட்டுமானங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் 2,870 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு அவை புனரமைக்கப்பட்டுள்ளன. 198 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 213 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 47 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இது போன்ற பணிகள் செயல்படுத்தப்படும்.
காவேரி டெல்டா பகுதிகளில் வெள்ள நீரை தேக்கி வைக்கவும், உப்பு நீர் உட்புகுதலை தடுக்கவும், மதகுகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கவும், 1,560 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிக்கப்படும்.
கொள்ளிடம் ஆற்றில் கீழ் அணைக்குக் கீழ்ப்புறம் ஒரு கதவணை அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது நிறைவேற்றப்படும்.
திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணை நீர்ப்பரப்புப் பகுதியில் தூர் வாரும் பணிகள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படும்.
திருநெல்வேலி மாவட்டம், ராம நதி அணையின் உபரி நீரை ஜம்பு நதி பாசனப் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படும்.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவை நிறைவேற்றப்படும்.
திருநெல்வேலி நகரில் திருநெல்வேலி வாய்க்கால் படுகையை லைனிங் செய்தல், மதகுகள் சீரமைத்தல், தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவை முடிக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டம், செவலப்புரை அணைக்கட்டு மற்றும் அதன் வழங்கு வாய்க்கால் புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவை முடிக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றின் குறுக்கே நீர்த் தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி மற்றும் விரிவான ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த் தேக்கம் கட்டி முடிக்கப்படும்.
வேலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள் புனரமைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி வடபாதி கிராமத்தின் அருகே அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆறுகள், ஏரிகள், குளங்கள் தூர்வாருதல் மற்றும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* நீர் வள, நில வளத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டப் பணிகள் 2,950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த உலக வங்கி கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
3. கால்நடை மற்றும் மீன்வளம், மீனவர் நலன்
* புதிய கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
* புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.
* பெரிய பால்பண்ணைகள், பால் குளிர்விப்பான்கள் ஆகியவை அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 4 ஆடுகள் விலையின்றி வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தீவன அபிவிருத்தித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* கறிக்கோழி பண்ணைகள் மற்றும் நாட்டுக் கோழி பண்ணைகள் ஏற்படுத்த மானியம் வழங்கப்படும்.
* மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் 35 மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 14 இடங்களில் மீன்பிடி இறங்கு தளங்களும், 3 மீன்பிடி துறைமுகங்களும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* உள் நாட்டு மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்ப நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
* மீனவர் நிவாரண உதவித் தொகை திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணத் திட்டம் மற்றும் மீன்பிடி குறைந்த காலத்திற்கான நிவாரணத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகைகள் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
* மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* மீனவர் பாதுகாப்பு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
75 சதவீத மானியத்தில் 25 வாட் ஏழகு ரேடியோ கருவிகள் விசைப் படகு மீனவர்களுக்கும் மற்றும் 100 சதவீத மானியத்தில் 5 வாட் ரேடியோ கருவிகள் பாரம்பரிய மீனவர்களுக்கு வழங்கும் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. கருவிகளுக்கான உரிமம் பெற்றிட மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. கருவிகள் வாங்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
* எந்திர மீன்பிடிப் படகுகள் வாங்க தேவையான மானியம் வழங்கப்படும்.
படகுகளில் எந்திரம் பொருத்துவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும், 580 மீனவர்கள் பயன் பெறும் வகையில் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு 171 படகுகளுக்கு 50 சதவீத மானியம் (30 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மீன் பதனப் பூங்காக்கள் அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
* கச்சத்தீவை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
* கடல் அரிப்பு உள்ள இடங்களில் தூண்டில் வளைவு அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
4. உழவர் பாதுகாப்புத் திட்டம்
* வாழ்நாள் முழுவதும் பயனளிக்கக் கூடிய உழவர் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
5. பேரிடர் இன்னல் குறைப்பு திட்டம்
* கடலோர மாவட்டங்களில் புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்பு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
பேரிடரிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வீடுகள் கட்டுதல், பாதுகாப்பு மையங்கள் அமைத்தல், பாதுகாப்பு மையங்களுக்கான வழித்தடங்கள் அமைத்தல், முன்னெச்சரிக்கை அறிவிப்பு கருவிகள் நிறுவுதல், மீன் வளத் துறையின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், தந்தியில்லா தொலை தொடர்பு வசதி ஏற்படுத்துதல், நாகப்பட்டினம் கடலூர் மற்றும் வேளாங்கண்ணி நகரங்களில் மின் வழித் தடங்களை பூமிக்கடியில் நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. 691 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 790 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் 2018-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
6. வருவாய் துறை திட்டங்கள்
* வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தேவைக்கேற்ப புதிய வட்டங்கள் மற்றும் வருவாய் கோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
* மக்களைத் தேடி அரசு என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா திட்டம் மற்றும் அம்மா சேவை மையம் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
7. விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாப்பு
* அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படா வண்ணம் பாதுகாக்கப்படுவர்.
நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி விலை ஏதுமின்றி வழங்கப்படுகின்றது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு பண்டக சாலை மற்றும் அமுதம் சிறப்பு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படுகிறது.
பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறிக் கடைகள் மூலம் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
106 அம்மா மருந்தகங்கள் மூலம் 15 சதவீத அளவிற்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்மா சிமெண்ட் மூட்டை ஒன்றிற்கு 190 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.
மினரல் வாட்டர் எனப்படும் ”அம்மா குடிநீர்” லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.
முதற்கட்டமாக சென்னையில் ”அம்மா குடிநீர்” திட்டத்தின் கீழ் மினரல் வாட்டர் எனப்படும் குடிநீர் விலையின்றி வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக சென்னையில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 530 அம்மா உணவகங்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன.
குறைந்த விலையில் அம்மா உப்பு விற்கப்படுகிறது.
இத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதுடன், மேலும் செம்மைப்படுத்தப்படும்.
8. பள்ளிக் கல்வி மேம்பாடு
* 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* இந்த மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்.
* பள்ளி மாணாக்கர்களுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையதளம் வாயிலான ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பள்ளிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் பயில வழங்கப்படும் ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
9. உயர்கல்வி மேம்பாடு
* புதிய கல்லூரிகள் தேவைக்கேற்ப துவங்கப்படுவதுடன், அனைத்து கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
* கல்லூரிகளில் கல்வித் தரம் உயர்த்தப்படும்.
* பல்கலைக்கழகங்கள் மேக கணினியம் (Cloud Computing) மூலம் இணைக்கப்பட்டு, மாணாக்கர்கள் கல்வித் திறன் உயர வழிவகை செய்யப்படும்.
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் விடுமுறை காலங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
10. அனைவருக்கும் உடல் நலம்
* புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் தேவைக்கேற்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.
* 24 மணி நேரமும் செயல்படும் 42 தாய் சேய் நல மையங்கள் அமைக்கப்படும்.
* அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.
* பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்; அம்மா மகப்பேறு சஞ்சீவி; சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்; அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வு முறை தொடர்ந்து எதிர்க்கப்படும்.
* முதியோர்களுக்கு அனைத்து மருத்துவக் கல்லூரி மருவத்துவமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மூப்பியல் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
* கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்படும்.
* நல்வாழ்வுக் குறியீடுகளில் மேலும் மேன்மையடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* சிறுவர், சிறுமியர்களுக்கு அங்கன்வாடி மற்றும் பள்ளிகள் மூலமாக வைட்டமின் ‘ஊ’ மாத்திரை வழங்கப்படும்.
11. மின்சாரத்தில் தன்னிறைவு
* தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையங்கள் மூலம் 13,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்படும்.
* புனல் மின் திட்டங்கள் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.
* 3,000 மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படும்.
* சீரான மின்சாரம் விநியோகிக்கும் வகையில் மின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
12. கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம்
* மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அனைவரும் பயனடைவதுடன் தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.
13. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
* வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு சலவை இயந்திரங்கள் வழங்கப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்கப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு நீராவி இட்லி குக்கர் வழங்கப்படும்.
* தேவைக்கேற்ப புதிய விடுதிகள் துவங்கப்படும்.
* விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கான மாத உணவுப்படி உயர்த்தப்படும்.
* சுயநிதி கல்லூரி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்கள், கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டாய கல்விக் கட்டணங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
* சுய தொழில் முனைவோருக்கு தாட்கோ மூலம் 30 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தாட்கோ மூலம் பொருளாதாரக் கடன் உதவி வழங்கப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தொழிற்சார்ந்த மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்க மாவட்டந்தோறும் தொழில் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்.
* சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் வழங்கும் தொழில் மனைகளில் 20 சதவீதம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென ஒதுக்கப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டிற்கென தனியே பயிற்சிகள் வழங்கப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு முயற்சி மூலதனத்திற்கான (Venture Capital) நிதி வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கென பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
* டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகள் மற்றும் கருத்துகளை பரப்பிடும் வகையில் 5 கோடி ரூபாய் செலவில் Dr. B.R. Ambedkar Foundation நிறுவப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும்.
* மதம் மாறிய ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.
14. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன்
* வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்கப்படும்.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளுக்கு நீராவி இட்லி குக்கர் வழங்கப்படும்.
* தேவைக்கேற்ப புதிய விடுதிகள் துவங்கப்படும்.
* விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கான மாத உணவுப்படி உயர்த்தப்படும்.
* பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகியோர் சிறு தொழில்கள் மற்றும் வணிகம் ஆகியவை துவங்க குறைந்த வட்டியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்படும்.
15. சிறுபான்மையினர் நலன்
* சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தேவைக்கேற்ப சிறுபான்மையினருக்கான விடுதிகள் துவங்கப்படும்.
* சிறுபான்மையினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதுடன், உபகரணங்களும் வழங்கப்படும்.
* மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் வசூல் செய்யும் நன்கொடைத் தொகைக்கு தற்போது 1:2 என்ற விகிதாச்சாரத்தில் மானியம் உயர்த்தி வழங்கப்படுவது போல் தொடர்ந்து வழங்கப்படும்.
* பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கென வழங்கப்படும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை பெறப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும்.
* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன் உதவி தொடர்ந்து வழங்கப்படும்.
* வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
* உலமா ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
* கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கென அரசின் மானிய உதவி வழங்கப்படும்.
* மசூதிகள் பழுது பார்க்கத் தேவையான நிதி உதவி வழங்கும் வகையில், வக்ஃபு வாரியத்தில் தனியே நிதியம் ஏற்படுத்த நிதி உதவி வழங்கப்படும்.
16. வன வளம்
* வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வன விலங்குகளால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
* வன வளத்தினை அதிகரித்து உயிர் பன்மையினைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
17. நெசவாளர் நலன்
* பொங்கல் திருநாளுக்கு 500 ரூபாய் மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறி துணிகள் வாங்கிக் கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்க்கான வெகுமதி கூப்பன் (Gift Coupon) வழங்கப்படும்.
* கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்பட்டு அனைத்தும் லாபத்தில் இயங்க வழி காணப்படும்.
* புதிய ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.
* பட்டு ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.
* கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
* விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
* கைத்தறி நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* சிறிய மற்றும் நடுத்தர சாயத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்பட்டு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் 3 ஒருங்கிணைந்த பதனிடும் குழுமங்களுக்கு மத்திய அரசின் மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கு 25 சதவீதம் மாநில அரசின் மானியம் வழங்கி இவை நிறுவப்படும். இதே போன்று நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பதனிடும் குழுமம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் இவை செயல்படுத்தப்படும்.
* நெசவாளர் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் வருவாய் பெருக நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
* விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* பட்டு வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
18. மண்பாண்ட தொழிலாளர் நலன்
* மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* மண்பாண்டங்கள் செய்வதற்கான தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும்.
* அரசு நிலங்களில் இருந்து தேவையான களிமண் எடுத்துக் கொள்ள சிறப்புச் சலுகை அளிக்கப்படும்.
* மண்பாண்டங்கள் தயாரிக்க ‘சீலா வீல்’ மின் சக்கரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
19. உப்பளத் தொழிலாளர் நலன்
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாய் வழங்கப்படும்.
20. மாற்றுத் திறனாளிகள் நலன்
மாற்று திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து தொழில் துவங்க பெறப்படும் கடனுக்கான வட்டியை அரசே செலுத்துகிறது. மாநில ஆதார வள மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன. கல்வி உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை போன்ற உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசின் வீட்டுத் திட்டங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய வேலை உறுதித் திட்டத்தில் 50 சதவீதம் அல்லது 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 3 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 5,633 மாற்றுத் திறனாளிகள் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 3,200 பேர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்காக வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலம் 1,340 மாற்றுத் திறனாளிகள் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
21. வணிகர் நலன்
* தமிழ் நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது.
* வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
* வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் உள்ளாகாமல் வியாபாரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
22. பத்திரப் பதிவு எளிமைப்படுத்துதல்
* சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு எளிமைப்படுத்தப்படும்.
* வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும்.
23. சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல்
புதிய சாலைகளை அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், புறவழிச் சாலைகளை அமைத்தல், ரயில்வே மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மீனம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் (Elevated Highway) அமைக்கப்படும்.
* கோயம்புத்தூர்-உப்பிலிப்பாளையம்-அவினாசி சாலை முதல் சின்னியம்பாளையம்-காளப்பட்டி, விமான நிலையம் வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.
* இது போன்ற உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.
* கடலூர் துறைமுகம், ஆழ்கடல் துறைமுகமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
24. குடியிருப்பு வசதிகள
பெருநகரங்களில் குடிசைகளில் வாழும் குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். குடிசைப் பகுதிகள் அற்ற நகரங்களாக இவை மாற்றப்படும்.
* முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம், தொகுப்பு வீடுகள் திட்டம் மற்றும் இதர திட்டங்கள் மூலம் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
* பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பழுதடைந்திருக்கும் தொகுப்பு வீடுகள் பழுதுபார்க்கப்படும்.
* பெருநகரங்களை ஒட்டி துணைக் கோள் நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
* அனைத்து வீட்டுமனை மற்றும் கட்டட வரைபட ஒப்புதல்கள் 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.
25. போக்குவரத்து மேம்பாடு
* போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் வாங்கப்படும். புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.
* சிற்றுந்து வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும்.
* மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி விரிவுபடுத்தப்படும்.
* சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
26. தமிழ்மொழி மேம்பாடு
* தமிழ் மொழிக்கு தொண்டாற்றுபவர்களுக்கு, தமிழ் வளர்த்த சான்றோர் பெயர்களில் புதிய விருதுகள் ஏற்படுத்தப்படும்.
* பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்.
* நாட்டு விடுதலைக்குப் போராடிய தியாகிகள் மற்றும் பெரியோர்களுக்கு நினைவு மண்டபங்கள், சிலைகள் நிறுவப்படும்.
* தமிழை இந்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்.
* தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பழமையான பாரம்பரிய சிற்ப கலை, கிராமியக் கலை ஆகியவைகள் பாதுகாக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
27. சுற்றுலாவில் முதலிடம்
* தமிழ் நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் வந்து செல்லும் இடமாக தமிழகம் தொடர்ந்து நிலைத்திருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
28. திருக்கோயில்களில் ஆன்மீகப் பணிகள்
* திருக்கோயில்களில் ஆன்மீகப் பணிகள் செம்மையாக நடைபெற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
* கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் ஆகியவற்றின் திருப்பணிக்கு 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி நிதி உதவி தற்போது வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
29. விளையாட்டு மேம்பாடுத் திட்டம்
* தமிழ்நாட்டை விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* கடல் நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
30. தகவல் தொழில்நுட்ப சேவைகள்
* அனைத்து அரசுத் துறை சேவைகளும் இணையதளம் மற்றும் கைபேசி மூலம் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின் மாவட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 57 அரசு சேவைகள் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும். மேலும் தற்போது சில அரசு சேவைகள் கைபேசி வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து அரசு சேவைகளுக்கும் செயல்படுத்தப்படும்.
* அரசு இ-சேவை மையங்கள் மூலம் அனைத்து அரசு சேவைகள் மற்றும் இதர சேவைகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கிராமப்புற ஏழ்மை குறைப்புக் குழுக்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் மூலம் 10,034 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 57 அரசு சேவைகள் இம்மையங்களின் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1.25 கோடி பேர் இதனை பயன்படுத்தியுள்ளனர். அனைத்து அரசு சேவைகளும் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும்.
* மேக கணினிய (Cloud Computing) செயல்பாடு மேம்படுத்தப்படும்.
* மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கான மேக கணினி சார்ந்த சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
* இல்லந்தோறும் இணையம் என்னும் சேவை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு செம்மைப்படுத்தப்படும்.
* தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
* அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு ‘Set-top Box’ விலையின்றி வழங்கப்படும்.
* அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை தொடர்ந்து வழங்கப்படும்.
தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 70 லட்சத்திற்கும் மேலான சந்தாதாரர்களுக்கு மாதம் 70 ரூபாய் என்ற குறைந்த விலையில் கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று டிஜிட்டல் ஒளிபரப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், Wi-Fi என்னும் கம்பியில்லா இணைய தள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
* மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா இணைய தள வசதி செய்து தரப்படும்.
31. விலையில்லா கைப்பேசி வழங்கும் திட்டம்
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி (Cellphone) விலையின்றி வழங்கப்படும்.
32. சமூக நலத் திட்டங்கள்
தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்
* மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் A வைட்டமின் D மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட (Fortified) ஆவின் பால் 1 லிட்டர் 25 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கப்படும். இதனால் ஆவினுக்கு ஏற்படும் இழப்பு அரசால் வழங்கப்படும்.
* திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயுடன் 4 கிராம் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50,000 ரூபாய் உடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* அங்கன்வாடி மையங்கள் அனைத்துக்கும் எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு, பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்படும்.
* புதிய உணவு வகைகள் வழங்கும் சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* நகர்ப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும்.
* முதியோர் உதவித் தொகை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* திருநங்கையர் மற்றும் திருநம்பியர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
33. ஊரக வளர்ச்சி திட்டங்கள்
அனைத்து குக்கிராமங்களிலும் எல்லா வசதிகளும் அளிக்க வகை செய்யும் ‘தாய்’ திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* அனைத்து கிராமங்களுக்கும் தரமான சாலைகள் அமைக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* ‘தனி நபர் இல்ல கழிப்பறை’ இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை எய்தப்படும்.
* அனைத்து கிராமங்களும் முழு தூய்மை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* புதிய சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும்.
* மகளிருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆட்டோக்கள் வாங்க மானியம் அளிக்கப்படும்
* கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் சமுதாய முதலீட்டு நிதி தொடர்ந்து வழங்கப்படும்.
* இரண்டு அல்லது மூன்று ஊராட்சிகளை ஒருங்கிணைத்து அந்தந்த இடங்களுக்கேற்ப வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஊரக மகளிர் கூடுதல் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படும்.
34. நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள்
* மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒரு லட்சம் ஊரகக் குடியிருப்புகளில், 91,000 குடியிருப்புகளுக்கு உலக சுகாதார அமைப்பின் அளவுகோலின்படி தூய்மையான குடி தண்ணீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 9,000 குடியிருப்புகளில், பகுதி அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, சென்னை நீங்கலாக உள்ள 11 மாநகராட்சிகளில், 5 மாநகராட்சிகளில் உலக சுகாதார அமைப்பின் அளவுகோலின்படி, நாளொன்றுக்கு, நபர் ஒருவருக்கு 110 லிட்டர் என்ற அளவிலும், 6 மாநகராட்சிகளில் 70 லிட்டருக்கு மேல் வழங்கப்படுகிறது. அதே போல் 124 நகராட்சிகளில் 53 நகராட்சிகளில், 90 லிட்டருக்கு மேலும், 70 நகராட்சிகளில் 40 லிட்டருக்கு மேலும் வழங்கப்படுகிறது. 528 பேரூராட்சிகளில், 526 பேரூராட்சிகளில் 70 லிட்டருக்கு மேல் வழங்கப்படுகிறது. எஞ்சிய இடங்களுக்கும் வரையறுக்கப்பட்ட அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
* பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் தேவையான மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
* நகராட்சிகளில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
15 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சிகளில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயுக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. 4 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சிகளில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. படிப்படியாக இதர நகராட்சிகளிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
* ஏழை எளிய மக்களும் மினரல் வாட்டர் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறும் வகையிலான அம்மா குடிநீர்த் திட்டம் சென்னை மாநகரத்தில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
35. தொழில் வளர்ச்சி
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கப் பெற்று தொழில் நிறுவனங்கள் அமைந்திட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தூத்துக்குடி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொழில் துறை உற்பத்தி மண்டலங்கள் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனரக இயந்திர உற்பத்தி மையம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மையம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் அமைக்கும் திட்டத்திற்கான கொள்கை அளவிலான ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு உற்பத்தி மண்டலம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் பகுதியில் சூரிய மின் உற்பத்தியுடன் கூடிய கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்திற்கு நிதி அளிக்க ஜெர்மன் வளர்ச்சி வங்கி இசைவு தெரிவித்துள்ளது. இதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானூர்தி உற்பத்தி நிறுவனங்களுக்கான கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சென்னை – பெங்களுர் தொழில் வளாக திட்டத்தில் பொன்னேரி தொழில் முனையம் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தி, தமிழக தொழில் துறையில் முதலீடுகள் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.
* கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நவீனப்படுத்தப்படும்.
* சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். இதனால் சர்க்கரை ஆலைகள் லாபம் ஈட்டி கரும்பு உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர்.
* சர்க்கரை தொழிற்சாலைகள் லாபத்தில் இயங்கவும், அதில் உரிய பங்கு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
36. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி
* சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
*முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் துவங்க மானியம் வழங்கப்படும்.
* 5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கும் இளைஞர்களுக்கு 25 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
* நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள இடங்களில் அடுக்குமாடி தொழில் வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.
* தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள் புதிய தொழில் நிறுவனங்களுக்கென தொழிற்குழுமம் மற்றும் தொழிற்பேட்டை அமைத்தால் 10 கோடி ரூபாய் அளவிற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.
* சிட்கோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் தொழிற்பேட்டைகளை நிறுவினால் 10 விழுக்காடு வரை மூலதனம் வழங்கப்படும்.
* அம்மா ஈடு உத்தரவாத நிதியம் (Amma Collateral Guarantee
Fund) 100 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடு எதுவுமின்றி கடன் பெற இதன் மூலம் வழி வகை செய்யப்படும்.
* முதல் தலைமுறை மற்றும் இதர சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுத்தும் புதுமை முயற்சிகளுக்கு 500 கோடி ரூபாய் அளவிலான அம்மா முயற்சி மூலதன நிதியம் (Amma Venture
Capital Fund) ஏற்படுத்தப்படும்.
* அரசு மற்றும் அரசு துறைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் 20 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஊரகப் பகுதிகளில் குறு தொழில் முனைவோருக்கு முதலீட்டுக்கான கடன் உதவி வழங்கப்படும். குறைந்த வட்டியில் கடன் வழங்க ஒரு நிதியம் ஏற்படுத்தப்படும். குறு தொழில் முனைவோருக்கென தொழிற்கூடங்கள் விலை ஏதுமின்றி வழங்கப்படும்.
* தேயிலை விலை வீழ்ச்சி அடையும் போது, சிறு தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
37. அமைதிப் பூங்காவான தமிழகம்
* தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு யாருடைய தலையீடும் இன்றி சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பதால் தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது. எவ்வித அச்ச உணர்வு இல்லாமலும் தங்களது சொத்துக்களை பிறர் அபகரித்து விடுவார்களோ என்னும் பயம் இல்லாமல் வாழ்வதற்கேற்ற சூழல் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
* குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து குறைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
38. சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் புதிய வழித் தடங்கள் அமைக்கப்படும்.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரை மற்றும் சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இந்த ஆண்டு துவக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் எஞ்சியுள்ள வழித் தடங்களில் பயணிகள் சேவை படிப்படியாக 2017- ஆம் ஆண்டு முதல் துவக்கப்படும்.
வண்ணாரப் பேட்டையிலிருந்து திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான நீட்டிப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பழைய மகாபலிபுரம் சாலை வழியாக மாதவரம் முதல் சிறுசேரி வரை, நெற்குன்றம் முதல் கலங்கரை விளக்கம் வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள 88 கி.மீ. நீள மூன்று வழித் தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
39. தொலைநோக்கு திட்டம் – 2023
* தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் – 2023ன் கீழ் கண்டறியப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விரைந்த பொருளாதார வளர்ச்சி எய்தப்படும்.
40. இலங்கை தமிழர்கள்
* இலங்கை தமிழர் இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கை தமிழர்கள் முழு சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதன் பயனாக அவர்கள் தங்கு தடையின்றி வேலைவாய்ப்பு பெற இயலும்.
41. மது விலக்கு கொள்கை
மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.
42. லோக் ஆயுக்தா அமைப்பு
* ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்.
லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ள திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.
43. ஊரகப் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள்
ஊரகப் பொருளாதாரம் மேம்பாடு அடைய புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் தொழில், நெசவுத் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் ஊரக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், புதிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
சானிடரி நாப்கின் மற்றும் அம்மா குழந்தை நலப் பெட்டகத்திற்கான பொருட்கள் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து பெறப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் வாங்கும் பினாயில் போன்ற சுகாதாரப் பொருட்கள் தயார் செய்ய சுய உதவிக் குழுக்கள் ஊக்குவிக்கப்பட்டு அவர்களிடமிருந்து இவைகள் வாங்கப்படும்.
44. புதிய கிரானைட் கொள்கை
* புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்.
கள்ளத்தனமாக கிரானைட் கற்கள் வெட்டியெடுத்தது தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுக்கு ஏற்பட்ட இழப்பு வசூலிக்கப்படும். புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்.
45. தாது மணல் கொள்கை
தாது மணல் எடுப்பது தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, அரசே தாது மணல் எடுத்து விற்பனை செய்யும் பணியை மேற்கொள்ளும்.
46. அரசு ஊழியர் நலன்
* மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
* மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த பேறு கால விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அது 9 மாதங்களாக உயர்த்தப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன் பணம் 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது 40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
47. தொழிலாளர் நலன்
* தொழிலாளர் நல வாரியம் மற்றும் 17 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நிதி உதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.
* கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில் 50 நடமாடும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவை அதிகரிக்கப்படும்.
* கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் 50 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 3 இடங்களில் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
48. வழக்கறிஞர் நலன்
* வழக்கறிஞர் சேம நல நிதி 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
49. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு
கடந்த 5 ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,28,058 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அரசு மற்றும் அரசுத் துறைகளில் 3,03,111 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் பதிவுகளின்படி 1 கோடியே 8 லட்சத்து 29 ஆயிரத்து 997 பேர் புதிதாக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
* இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதன் மூலம் வேலை பெறுவதற்கும், சுய தொழில் புரியவும் வழிவகை காணப்படும். ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகர்ப் பகுதிகளில் இதற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
* கல்லூரிகள் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
* வேலை வாய்ப்பு பெறுவதற்கான இணைய வழி பயிற்சி மற்றும் பாடங்கள் கற்பிக்க வகை செய்யப்படும்.
* போட்டித் தேர்வுகளில் ஏழை எளிய மாணாக்கர்களும் திறம்பட தேர்ச்சி பெறும் வகையில் கட்டணமில்லா வகுப்புகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும்.
* 15 லட்சம் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். அதன் மூலம் அவர்களது பொருள் ஈட்டும் திறன் மேம்படும்.
* அரசு துறைகளால் மேற்கொள்ளப்படும் சிறிய வேலைகளுக்கான பணி ஒப்பந்தங்கள் இவ்வாறான சான்றிதழ் பெற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தொழிற்சாலைகள் மூலம் 10 லட்சம் பேர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அந்த நிறுவனங்களிலேயே அவர்கள் வேலை பெற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பயிற்சிக்கான செலவை அரசே ஏற்கும்.
* அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ‘அம்மா இரு சக்கர வாகன பழுதுபார்க்கும் பயிற்சி மையம்’ ஏற்படுத்தப்பட்டு குறுகிய கால பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு சுய தொழில் துவங்க உதவிகள் வழங்கப்படும்.
* வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 300 ரூபாய் எனவும், 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 400 ரூபாய் எனவும், பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் எனவும் உயர்த்தப்படும்.
* வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
* மகளிர் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் (Moped/Scooter) வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
50. அம்மா பேங்கிங் கார்டு
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் Amma Banking Card வழங்கப்படும். வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நிதிச் சேவையை உறுதிபடுத்தும் வகையிலும், அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்தும் வகையிலும், 1,000 ரூபாய் வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். வாரம் 10 ரூபாய் என்ற அளவிற்கு திருப்பிச் செலுத்தக்கூடிய அளவில் இந்தக் கடன் அமையும். இந்த Amma Banking Card-ஐ பயன்படுத்தி அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளை செய்வதோடு, அனைத்து கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பயன்படுத்தும் விதமாக இந்த Amma Banking Card சேவை வழங்கப்படும்.
-முற்றும்