மரம்போல் இருங்கள்..!
மனிதன் கேட்டு மரம் நிழல் தரவில்லை
கணவன் பொருளீட்டாது ஊர் சுற்றி வர குடும்பப் பாரத்தை தான் தாங்க பணிக்குச் செல்லும் மனைவியர்!
கணவனுடைய வருமானம் போதாமையால், வீட்டையே தொழில் கூடமாக மாற்றும் பெண்கள்!
உடன் பிறந்தவனின் தினப்படி குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்யாததால் பணிக்குக் கிளம்பும் திருமணம் ஆகாத உடன் பிறந்த சகோதரிகள்.
பெற்ற மகன் சோறு தராததால், தமது தேவைகளுக்குரிய செலவுகளுக்கு வழியில்லாமையால் வாட்ச்மேன் வேலைகள், விடுகளில் பாத்திரம் கழுவி, துணி துவைக்கும் பணிகளுக்குச் செல்லும் முதுமையடைந்த தாய், தந்தை!
இன்னும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு கையேந்தவும் தயங்காத சிலர். தன்னைப் பயன்படுத்திக்கொள்ள தன்னையே வருத்திக் கொள்வது போல ஒரு ஆண் மகன், தன்னை வருத்தி பலருக்கு உதவியளிக்க வேண்டும், உபயோகமாக இருக்க வேண்டும். ஏணியாகவும், நிழல் தரும் மரமாகவும் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண் மகன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று கூறியிருக்கிறார்கள்.
o அபூஅம்ர் அஷ்சைபானீ என்பவர், தான் கேட்டுத் தெரிந்து கொண்ட நபிய வர்கள் மொழிதலைப் பதிவு செய்து ‘புகாரி’ தொகுப்பில் பதிவாகியிருக்கிறது.
இறைவனுக்கு மிகவும் விருப்பமான கண்ணியம், மகத்துவம் மிக்கச் செயல் எது? கேட்கப்பட்டது.
“இறைவணக்கத்தை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது, தாய், தந்தையருக்கு நன்மை செய்வது”.
பெற்றோருக்கு நன்மை செய்பவரின் வேண்டுதல் இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்றும் நபி கூறியிருக்கிறார்கள்.
o கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவதுவதும் பெரும்பாவம். (புகாரி 5977)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கிறார்கள்; கணவனை இழந்த கைம் பெண்களுக்காகப் பாடுபடுபவரும், அநாதையை வளர்ப்பவரும் தம்முடன் சொர்க்கத்தில் இருப்பார்களெனவும் கூறியுள்ளார்கள். மேலும் உறவினரான உங்களது அண்டை பக்கத்து வீட்டார்களுக்கும், உறவினராக அல்லாத பக்கத்து வீட்டார்க்கும், நண்பர்களாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், பணியாளர்களுக்கும் நன்மை செய்யுங்கள் என்று நபி கூறியிருக்கிறார்கள் (புகாரி 6013)
தமது சகோதரரிடம் ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் பேசா திருக்கக்கூடாது.
இறைவனையும், இறுதி நாளையும் நம்புபவர் தம்மிடம் வரும் விருந்தினரைக் கண்ணியப் படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் உபசரித்தல் ஒரு பகல் ஒரு இரவு! விருந்து உபசாரம் மூன்று தினங்கள்! அதற்கு மேல் உபசரிப்பது விருந்து தந்தவருக்கு தர்மமாக அமையும்!
விருந்திடுபவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு விருந்தாளி அவரிடம் தங்குவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல!
இந்த இடத்தில் “விருந்தும் மருந்தும் மூன்று நாள்” தமிழ்ப் பழமொழியை நினைவில் கொள்ளலாம்!
-அமீர்கான்
முஸ்லிம் முரசு, பிப்ரவரி 2016
source: http://jahangeer.in/Feb_2016.pdf