தேர்தலில் முஸ்லிம்களின் கடமை என்ன?
தேர்தல் பற்றிய முஸ்லிம்களின் கடமை என்ன? குர்ஆன் என்ன கூறுகிறது? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து செயல்படக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
மனிதகுலத்திற்கென்று மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் கொடுத்தது இறையாட்சி தான். அதாவது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் (முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல) இறுதியாக இறக்கியருளிய முழுமைப் பெற்ற வாழ்க்கை நெறிநூல் குர்ஆனில் ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி நடப்பதுதான் இறையாட்சியாகும்.
அந்த ஆட்சியை அல்லாஹ் கொடுப்பதாக இருந்தால், மக்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை குர்ஆன் 24:55 இறைவாக்குத் தெளிவாகப் பறைசாற்றுகிறது. அது வருமாறு:
உங்களில் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும், அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்காக நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றிவிடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். “அவர்கள் என்னோடு (எதையும் எவரையும்) இணை வைக்காது, அவர்கள் எனக்கே அடிபணிவார்கள். இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள்தான் பாவிகள்.” (அல்குர்ஆன் 24:55)
இந்த 24:55 குர்ஆன் வசனத்தை மீண்டும் மீண்டும் படித்து அதன் சத்தையும், சாரத்தையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இதில் கூறப்படும் உயரிய குணங்கள் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படுகின்றனவா?
அல்குர்ஆன் 2:186, 7:3, 18:102-106, 33:36 இறைக்கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து மனிதர்களில் மவ்லவிகள், தலைவர்கள் என எவரையும் நம்பாமல், அல்லாஹ்வை மட்டுமே நம்பி, குர்ஆனை நேரடியாகப் படித்து இறுதி இறைத்தூதரின் நடைமுறைகளை விளங்கிச் செயல்படுகிறவர்கள் அதாவது நற் செயல்கள் புரிகிறவர்கள் எத்தனை பேர்?
அல்குர்ஆன் 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான்-இறை நம்பிக்கை நுழைந்தவர்கள் எத்தனை பேர்? உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்கள் எத்தனை பேர்? உள்ளத்தில் ஈமான் நுழைந்தவர்கள் ஐங்காலத் தொழுகைகளைத் தொழாமல் இருக்க முடியுமா? அவர்களிலும் ஐங்காலத் தொழுகைகளை அதனதன் நேரத்தில் பேணித் தொழுபவர்கள் எத்தனை பேர்? அதாவது தொழுகையை நிலைநாட்டுபவர்கள் எத்தனை பேர்?
நற்செயல்களிலேயே மிகமிக உயர்ந்த செயல்களான ஈமான், தொழுகை இவற்றிலேயே கோட்டை விடுபவர்கள் வேறு எந்த நற்செயல்க ளைச் செய்யப் போகிறார்கள். தொழுகையை நிலை நாட்டாதவன் இணை வைப்போரில் ஆகிவிடுகிறான். (அல்குர்ஆன் 30:31)
ஆக 24:55 இறைவாக்குக் கூறும் நற்செயல்கள் இன்றைய முஸ்லிம்களில் 99.9% முஸ்லிம்களிடம் இல்லை என்பதை மறுப்பவர் யார்? இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் இன்றைய முஸ்லிம் மக்களுக்குக் கொடுப்பானா? குதிரைக் கொம்பு தான்! இன்று ஒரு சிலர் இறையாட்சியை ஏற்படுத்தப் போகிறோம். கிலாஃபத்தை நிலைநாட்டப் போகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள்.
முதலில் ஒன்றை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது கிலாஃபத்தை இவர்கள் ஜிஹாத் செய்து அடைய முடியவே முடியாது. 24:55ல் அல்லாஹ் கூறுகிறபடி நற்செயல்கள் செய்யும் ஒரு கணிசமான மக்கள் சேர்ந்தால் அல்லாஹ் கொடுப்பதே கிலாஃபத்-இறையாட்சி. கிலாஃபத்திற்காகப் போராடும் சகோதரர்களிடம் மனிதர்களை நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி (2:186) அவனுக்கு மட்டுமே அடிபணியும் உயர் நற்செயல் இருக்கிறதா?
ஐங்காலத் தொழுகைகளை விடாமல் ஜமாஅத்துடன் பேணித் தொழும் உயர் நற்செயல் இருக்கிறதா? அனைத்துக் காரியங்களிலும் குர்ஆன், ஹதீஃதுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உயர் குணம் இருக்கிறதா?
இவற்றில் தங்களைப் பக்குவப்படுத்தாமல், கிலாஃபத், கிலாஃபத் எனக் கூப்பாடு போடுவது வெற்றுக் கூச்சலே. சுயநலக் கூச்சலே என்பதை மக்கள் புரிய வேண்டும்.
முஸ்லிம்களில் அல்லாஹ் நாடும் ஒரு கணிசமான தொகையினர் 22:78, 41:33, 3:102 இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் (மினல் முஸ்லிமீன்) என்ற நிலையில் அல்குர்ஆன் 3:103 இறைக்கட்டளைக்கு அடி பணிந்து பிரியாமல் ஒரே ஜமாஅத்தாக ஒரே தலைமையில் குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடி வழிகாட்டல்படி நடக்கும் ஒரு சமுதாயம் உருவாகாதவரை முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் இல்லை.
இவ்வுலகிலும் வேதனைகளும், சோதனைகளும் அவர்களைக் கடுமையாக வாட்டத்தான் செய்யும். இந்த வேதனைக்குரிய, பரிதாப நிலையை விளங்கி ஒவ்வொரு முஸ்லிமும் மவ்லவிக ளையோ, தலைவர்களையோ நம்பாமல், அல் லாஹ்வை மட்டுமே நம்பி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வர வேண்டும். அந்த அற்புத நிலை உருவாகும்வரை முஸ்லிம்கள் இத்தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
இந்த ஜனநாயக ஆட்சி முறை குர்ஆனுக்கு முர ணானது. முஸ்லிம்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். வாக்களிப்பது ஹராம் என்பது ஒரு பிரிவினரின் வாதம். இன்று நடைமுறையிலிருக்கும் ஜனநாயக ஆட்சி முறை 2:145, 6:116 இறை வாக்குகள் இன்னும் பெரும்பான்மையினர் வழி கேட்டில் தான் இருப்பார்கள் என்ற எண்ணற்ற வசனங்களின்படி தவறான, குர்ஆனுக்கு முரண் பட்ட நடைமுறைதான். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் மன்னராட்சியை விட, சர்வாதிகார ஆட்சியை விட, மக்களுக்குக் குறிப்பாக ஏழைகளுக்குப் பெருந் தீங்கிழைக்கும் ஓர் ஆட்சி முறைதான் ஜனநாயக ஆட்சி முறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் கள் ஒரு நிர்பந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். எந்த ஒரு ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி நாம் சோதிப்பதில்லை என்று எண்ணற்ற வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க : அல்குர்ஆன் 2:233,286, 6:152, 7:42, 23:62) மேலும் உள்ளத்தில் ஈமானின் உறுதியுடன் நிர்பந்த நிலையில் வாயினால் அதற்கு மாற்றமாக ஒருவர் கூறினால் அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார் எனறு அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 5:3, 16:106)
இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் முஸ்லிம்களை இந்த நாட்டிலிருந்து துடைத்தெறியக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறவர்கள். அவர்களை ஆட்சியில் அமர்த்த ரோடு போட்டுக் கொடுத்தவர்கள் 3:186, 13:22, 23:96, 41:34 இறைவாக்குகளை நிராகரித்து, ஹுதைபியா உடன்படிக்கை முன் மாதிரியையும் கண்டு கொள்ளாமல், பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் செயல்பட்ட முஸ்லிம் மத வியாபாரிகளும், அரசியல் வியாபாரிகளுமே என்பதை நினைவில் வையுங்கள். அவர்களே முஸ்லிம் விரோதிகளுக்குத் துணை போய்க் கொண்டு அந்தப் பழியை 4:112 இறைவாக்குக் கூறுவது போல் எம்மைப் போன்றவர்கள் மீது போடும் அசகாயசூரர்கள். எனவே அப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் ஏற்புடையதல்ல.
எனவே தேர்தலைப் புறக்கணிப்பது, வாக்க ளிப்பது ஹராம் என்று கூறி வாக்களிக்காமல் இருப்பது முஸ்லிம்களுக்கு மேலும் ஆபத்தையே ஏற்படுத்தும். முஸ்லிம்களை நாட்டை விட்டே விரட்டத் திட்டமிட்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பையே கொடுக்கும். முஸ்லிம்கள் தான் தேர்தலைப் புறக்கணிக்கிறார்களே, வாக்காளர் பட்டியலில் ஏன் அவர்களின் பெயர்கள் இருக்க வேண்டும் என்று கூறி முஸ்லிம்களின் பெயர்களை நீக்க முற்படுவார்கள். இது பலவிதமான இடையூறுகளை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும். முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட அது வழிவகுக்கும். எனவே முஸ்லிம்கள் தேர்தலைப் புறக்கணிக்கவோ, வாக்களிக்காமல் இருக்கவோ ஒரு போதும் முற்படக் கூடாது. அது பெரும் நஷ்டத்தையே ஏற்படுத்தும்.
எனவே நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதே சமயம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வேட்பாளர்களிடமிருந்து லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது. அவர்கள் ஒரு வாக்குக்கு ரூபாய் 5000/- லஞ்சமாகக் கொடுத்தாலும் 5X365=1865; 5000 ஐ 1865 ஆல் வகுத்தால் 2.68. ஆக ஒரு நாளைக்கு ஒரு நேர டீக்குக் கூட உதவாது. இந்த அற்பக் காசுக்காக நமது பொன்னான வாக்குகளைத் தாரை வார்க்கலாமா? சிந்தியுங்கள்!
இன்று பெரும்பாலும் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருகிறவர்கள் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து அதில் ஒரு சிறு பகுதியை மக்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கும் அயோக்கியர்களும், அராஜகப் பேர்வழிகளும்தான். எனவே அப்படிப்பட்டவர்களுக்கு ஒருபோதும் நமது வாக்கை அளிக்கக் கூடாது.
வெற்றி பெறுகிறவர்களுக்குத்தான் நாமும் வாக் கிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் இப்படிப் பட்டவர்களுக்கு வாக்களித்துப் பதவியில் அமர்த்தினால் அவர்கள் செய்யும் அட்டூழியங்கள், அராஜகங்கள் அனைத்திலும் நமக்கும் பங்கு உண்டு என்பதை நினைவில் வையுங்கள். எனவே வெற்றி பெறுகிறவர் களுக்குத்தான் நமது வாக்கை அளிக்க வேண்டும் என்ற எண்ணமே கேடான எண்ணமாகும்.
வேட்பாளர்களில் நல்லவர்கள் இருந்தால், அவர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தா லும் அவர்களுக்கு நமது வாக்கை அளித்து நமது கடமையை நிறைவேற்றலாம். அப்படியும் யாரும் வேட்பாளர்களில் இல்லை என்றால் நமது வாக்கை நோட்டாவில் பதிவு செய்து விட்டு மன திருப்தியோடு வீடு திரும்பலாம். நமது வாக்கைப் போடாமல் விட்டால், அதிலும் தில்லுமுல்லுகள் செய்து நமது வாக்குத் தகுதியற்றவருக்குப் போய்ச் சேர்ந்து அதன் மூலமும் நமது பாவச் சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே ஒருபோதும் மறந்தும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்.
இப்போது முஸ்லிம் வேட்பாளர்களைப் பற்றிப் பார்ப்போம். அவர்களும் அரசியல் வியாபாரிகள் தான். அவர்களும் அவர்களின் சுயநலம் காரணமாக, அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைய அரசியலில் ஈடுபட்டுள்ளார்களே அல்லாமல், மக்கள் நலன்களுக்காக மக்களுக்கு உண்மையில் சேவை செய்யும் உயர் நோக்கோடு அவர்களில் யாரும் இன்றைய அரசியல் களத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை. உண்மையிலேயே அவர்களுக்கு மக்கள் நல னில் அக்கறை இருந்தால், இப்படி 20 கட்சிகளுக்கு மேல் இருக்கும் வாய்ப்பு இருக்குமா? பெரும்பான் மையினராயுள்ள இந்து மக்களில் கூட இந்தளவு பிளவுபட்டக் கட்சியில் இருக்குமா என்பது சந்தேகமே! பிரியாமல் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டிருங்கள் என்ற 3:103 இறைவாக்குக்கு முற்றிலும் அடி பணிந்து கட்டுப்பட்டவர்களாக இருந்தால், அற்பமான பட்டம் பதவி, காசு பணம், பேர், புகழ் இவற்றிற்கு ஆசைப்பட்டு இத்தனைக் கட்சிகளாக உருவாகி இருக்க முடியுமா?
இதிலும் பொய்யன் பீ.ஜையே முதல் குற்றவாளி. 1986களில் இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கில்லை என்பதை ஒப்புக் கொண்டு வாக்களித்து, அந்நஜாத்தில் எழுதியும் விட்டு, 7:175-179, 45:23, 47:25 குர்ஆன் வசனங்கள் சொல்வது போல் நேர்வழியை-சத்தியத்தை நன்கு அறிந்த பின், மனோ இச்சைக்கும் உலகியல் ஆதாயங்களுக்கும் ஆசைப்பட்டு ஆக்கு, ஜாக்கு, தமுமுக, ததஜ என கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல், பல பிரிவினைகளுக்கு வழிவகுத்ததால் இன்று 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோன்றக் கார ணமாயிற்று. இந்தப் பிரிவுகளின் அனைத்துப் பாவச் சுமைகளையும் 16:25 குர்ஆன் வசனம் கூறுவது போல் நாளை அவரே சுமக்க இருக்கிறார்.
அவரது வார்ப்பில் வளர்ந்தவர்கள்தான் இந்த 20 கட்சிப் பிரிவினரும். உலகியல் ஆசைகள், தலைவர் பதவி இவை அவர்களை 3:103 இறைக் கட்டளைப் படி ஒரே தலைமையில் ஒன்றுபட ஒருபோதும் இடம் தராது. இதிலிருந்தே இவர்கள் மக்கள் நலன் கருதி இன்றைய அரசியலில் ஈடுபடவில்லை. தங்க ளின் சுயநலன்களுக்கும், சுய ஆதாயங்களுக்கும் மட்டுமே அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகவில்லையா? நாம் கூறுவது பொய், அவர்கள் மக்கள் நலனுக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் இந்தத் தேர்தல் விஷயத்திலாவது ஒரே தலைமையில் ஒன்றுபட்டுக் காட்டட்டுமே பார்க்கலாம். அப்படி ஒரே தலைமையில் ஒன்றுபட்டுவிட்டால், இன்றைய இக்கட்டான நிலையிலும் அது முஸ்லிம் சமுதாயத்திற்குப் பெருத்த லாபத்தைப் பெற்றுத் தரும். கணிசமான எண்ணிக்கையினர் எம்.எல்.ஏ.வாகி சட்ட சபையிலும் நுழைந்து பொதுமக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் குரல் கொடுக்கும் வாய்ப்புப் பெரிதும் கிடைக்கும்! முஸ்லிம்களை நாயிலும் கேடாகப் பழிக்கும் மற்றவர்களும் முஸ்லிம்களை மதித்துப் போற்ற முன் வந்து விடுவார்கள் என்பதில் சந்தேகமுண்டா?
எனவே முஸ்லிம் பெருமாக்களே!
இந்த முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபடாமல் பிரிந்த நிலையிலேயே உங்களிடம் வந்தால் அவர்களைச் சல்லிக் காசுக்கும் நீங்கள் மதிக்காதீர்கள். அவர்களை உங்கள் வாசல்படி ஏறவிடாதீர்கள்.
இத்தேர்தலில் மட்டுமாவாது நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரே ஜமாஅத் தாக வாருங்கள். அப்படியானால் தான் உங்களை மதித்து வரவேற்போம். இல்லை என்றால் எங்கள் வாக்குகளை நோட்டாவில் பதிவு செய்தாலும் உங்க ளுக்குத் தரமாட்டோம் என முகத்தில் அடித்தால் போல் துணிந்து கூறிவிடுங்கள். அப்போதாவது அவர்களுக்குப் புத்தி வருகிறதா? என்று பார்ப்போம்!
அவர்கள் உங்கள் நலனுக்காக உங்களிடம் வரவில்லை. அவர்களின் அற்ப உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு உங்களை நாடி வருகிறார்கள். எனவே அவர்களை நம்பி மோசம் போகாதீர்கள். இப்படிப் பிளவுபட்டக் கட்சிகளால் உங்களுக்கோ, சமுதாயத்திற்கோ அணுவளவும் பலன் ஏற்படப்போவதில்லை. மேலும் மேலும் கேட்டைத்தான் சந்திப்பீர்கள். எச்சரிக்கை! அல்லாஹ் பாதுகாப்பானாக!
– K.M.H அபூ அப்தில்லாஹ்