இன்னும் பிறக்காத எம் அடுத்த தலைமுறைக்கு ஒரு மன்னிப்பு கடிதம்
இன்னும் பிறக்காத எம் தலைமுறைக்கு கனத்த இதயத்துடன் இதனை எழுதுகிறேன். சுட்டெரிக்கும் வெயிலின் வியர்வை வாசம், எழுத்தின் அனைத்து புள்ளிகளிலும் படரவிட்டு எழுதுகிறேன்.
நீங்கள் படிக்க இந்த பூமி மிச்சம் இருக்குமா என்ற அச்சத்துடன் இதை தொடங்குகிறேன். தொடர்ந்து கடிதம் எழுதுவது கிண்டலுக்கு உள்ளாக கூடும் என்று தெரிந்தும் இதை எழுதுகிறேன். மனதின் அடியாழத்திலிருந்து இதனை எழுதுகிறேன்.
இது மன்னிப்பு கடிதம். நிறைய பாவங்களை நாங்கள் செய்துவிட்டோம். அதனால், யாருக்கும் தெரியாமல் கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் ஒருவர் செவிகளில் மட்டும் செய்த பாவங்களை சொல்லி, மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. எங்கள் பாவங்கள் எப்படி பகிரங்கமானவையோ, அது போல் எங்கள் மன்னிப்பும் பகிரங்கமானதாக இருக்க வேண்டும். அதனால் கண்ணீருடன் இந்த மன்னிப்பு கடிதத்தை எழுதுகிறேன்.
ஆம் கண்ணீருடன்தான். தெரிந்தே செய்யப்பட்ட எங்கள் பாவங்களை இந்த கண்ணீர் என்றும் கழுவாது என்று விழித்திருக்கும் எம் தலைமுறைக்கு நன்கு தெரியும். அது தெரிந்ததால் வரும் மன அழுத்தம் வற்றாத கண்ணீரை பெருக்கடுக்க செய்கிறது. அந்த கண்ணீருடம் இதை எழுதுகிறேன்.
நாங்கள் செய்த தவறுகளை எங்கள் முந்தைய தலைமுறை தடுக்க தவறியது, வேடிக்கை பார்த்தது. அதனால், அவர்களுக்காக சேர்த்தும் உங்களிடம் மன்னிப்பு கேட்டு இந்த கடிதத்தை எழுத துவங்குகிறேன்.
வேடிக்கை மனிதர்கள் நாங்கள்:
வெயில் சுட்டெரிக்கிறது. இது கோடை காலம் அதனால் தான் இந்தளவிற்கு வெயில் என்று எங்களுக்கு நாங்களே பொய் சமாதானம் சொல்லிக் கொண்டு, கடக்க விரும்பவில்லை. இந்த வெயிலுக்கு நாங்களும் ஒரு வகையில் காரணம். ஆம். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மட்டுமல்ல, பெரு மழைக்கும் ஒரு வகையில் மட்டுமல்ல அனைத்து வகையிலும் நாங்களே, நாங்கள் மட்டுமே காரணம்.
கணக்கு வழக்கில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்த போது, வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். மனதில் கரைப்படிந்த கரை வேட்டிகளின் துணையுடன் சில தனி நபர்கள் காடுகளையும், மலைகளையும் சுரண்டிக் கொண்டிருந்த போதும் எங்களுக்குள் நாங்கள் சண்டையிட்டு கொண்டோமே தவிர அவர்களை எதிர்த்து சண்டையிடும் துணிச்சலற்று இருந்தோம். நாங்கள் கோழைகள் என்றறிந்த ஒரு கூட்டம், தைரியமாக தாயின் பால் சுரக்கும் மார்பையே அறுக்க துணிந்தது. ஆம் ஆற்றில் கை வைத்தது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு குவியல் குவியலாக மணலை சுரண்டியது. அதை தடுக்க நெஞ்சுரமற்று நின்றதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மலைகள், காடுகள், ஆறுகள் எங்களால் உருவாக்கப்பட்டதில்லை. ஆனால், இதை சுரண்டும் அனைத்தும் எங்களின் கண்டுபிடிப்புகள். சிகப்பிந்திய பழங்குடி தலைவன் துவாமிஷ் சொன்னான், “பூமி மனிதனுடையது அல்ல. மனிதம் பூமியினுடையவன் என்பதை.
ஒரு குடும்பத்தை ஒன்றாக்கும் ரத்தத்தைப் போல எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. பூமிக்கு நடப்பதெல்லாம், பூமியின் பிள்ளைகளுக்கும் நடக்கும். உயிரின் வலையை நெய்தது மனிதன் அல்ல. அவன் அதில் ஓர் இழை மட்டும் தான். அந்த வலைக்கு அவன் செய்வதெல்லாம் அவன் தனக்குத் தானே செய்துகொள்வது தான்…” என்று. இது எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால், இதை பழங்குடியின் பாமர சொற்கள் என்று பரிகாசம் செய்தோம்.
இயற்கை கண்ணியில் நாங்களும் ஒரு அங்கம் என்று மறந்து போனோம். நாகரீகத்தின் பெயரால், வளர்ச்சியின் பெயரால் சுரண்டினோம்… சுரண்டினோம்… மேலும் மேலும் சுரண்டினோம், துவாமிஷ் சொன்னதை ஒரு நாள் உணர்ந்தோம் நாங்கள் பூமிக்கு செய்த அக்கிரமங்கள் அனைத்தும் எங்களுக்கு நாங்களே செய்து கொண்டவை என்று. ஆனால், அப்போது எல்லாம் கை மீறிப்போய்விட்டது.
ஆனால், அப்போதும் இயற்கை எங்களை மன்னிக்க தயராக இருந்தது. நீங்கள் செல்லும் பாதை தவறு, திருத்திக் கொள்ளுங்கள் என வாய்ப்பை பல முறை வழங்கியது. ஆனால், எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. வாய்ப்புகள் சுலபமாக கிடைக்கும் போது, அதை உதாசீனம் செய்வோம்.அதை தான் செய்தோம். மீண்டும் தீமையின் பாதையிலேயே பயணித்தோம். இந்த பூமி, அதன் செல்வங்கள் அனைத்தும் எங்களுக்காக, எங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்று இருமாப்பில் அனைத்தையும் போட்டு உடைத்தோம்.
உங்களுக்கென எதையும் மிச்சம் வைக்காமல், அனைத்தையும் அபகரித்து கொண்டுவிட்டோம். அதனால், உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை, எங்கள் தலைமுறையை மன்னித்துவிடுங்கள்.
பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது:
என் தாத்தா என் அப்பாவிடம் அழகிய புவியை ஒப்படைத்து சென்றார். அவரிடம் செல்வம் குவிந்திருந்த போதும் மண் வீட்டில் தான் வாழ்ந்தார். பெரும்பாலும், மானாவாரி உணவுவகைகளையே உண்டு வாழ்ந்தார். ஏன் குடிசையில் வாழ்கிறோம், ஏன் மானாவாரி நிலத்தில் விளைந்த உணவு வகைகளை உண்கிறோம் என்று தெரிந்து செய்தார். ஆனால், என் அப்பா படித்த கல்வி இதையெல்லாம் அநாகரீகம் என்றது. வானுயர்ந்த கோபுரங்கள், பெரிய கட்டமைப்புகள்தான் வளர்ச்சி என்றது. என் அப்பா அதை அரை மனதனுடன் ஏற்றுக் கொண்டார். இயன்ற வரை இயற்கையை சுரண்டாமலும் இருந்தார்.
ஆனால், நாங்கள் வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கத்திற்குள் நுழைந்தோம். வளர்ச்சி என்ற பெயரால் எங்களுக்கு எதுவெல்லாம் காட்டப்பட்டதோ. அது அனைத்தையும் நம்பினோம். பொருள் வாங்கி குவிப்பதுதான் கௌரவம் என்று சொல்லப்பட்டது. அதனால், அனைத்தையும் வாங்கி குவித்தோம். வாழ்வதற்காக அல்லாமல் வாங்குவதற்காக உழைத்தோம். ஒருவருக்கு இரண்டு கைபேசிகள், நான்கு காலணிகள், நாற்பது சட்டை பேண்ட்கள் என வாங்கி குவித்தோம்.
ஒரு நாள் நாங்கள் வாங்கி குவித்த பொருட்கள் தான், இந்த புவிக்காக எமன் என்று புரிந்தது. எந்த அறிவியல் எங்களை அதிகம் நுகர சொல்லி தூண்டியதோ, அதே அறிவியல் இப்போது சொல்கிறது, ஒரு ஜீன்ஸ் தயாரிக்க ஒன்பதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும், ஒரு ஜோடி காலணி தயாரிக்க இருபதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும்.
ஆனால், இது எங்களுக்கு தெரிய வந்த போது நிலைமை படு மோசமாகிவிட்டது. ஒரு சொட்டு தண்ணீருக்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக சாவுகள் விழத் துவங்கிவிட்டது. சொல்லப்போனால், எம் தலைமுறைக்கே இயற்கையான தண்ணீரின் சுவை எப்படி இருக்கும் என்றே தெரியாது. எங்கள் டி. என். ஏவில் படிந்து இருப்பதெல்லாம் செயற்கை நீரின் சுவை மட்டுமே. பாட்டில் நீரின் சுவை அது.
சொந்தப் படுக்கையை மலினமாக்கினால் ஓர் இரவு சொந்தக் கழிவில் மூச்சு முட்டி இறக்க நேரிடும் என்று துவாமிஷ் சொன்ன வார்த்தைகளுக்கான முழு அர்த்தம் இப்போது தான் புரிய துவங்கி இருக்கிறது.
இப்போது உணர்கிறோம், ஏசி வாங்கலாம், ஆனால் இயற்கையான காற்றின் புத்துணர்ச்சியை வாங்க முடியாது என்று, அழகான மின் விளக்குகள் வாங்கலாம் ஆனால் ஒரு காலமும் இயற்கையான ஒளி தரும் ஆனந்தத்தை வாங்க முடியாது என்று, குளிர் பானங்கள் வாங்கலாம், ஆனால் எப்போதும் நீரின் சுவையை வாங்க முடியாது என்று. உணர்ந்து மட்டும் இப்போது என்ன செய்ய முடியும்…?
நிச்சயம் இயற்கை மிக கருணையுடையது. நாங்கள் செய்த தவறுக்காக உங்களை தண்டிக்காது என்று நம்புகிறேன். தண்டித்து விடக் கூடாது என்று விரும்புகிறேன். உங்களுக்கு விட்டு செல்ல எங்களிடம் எதுவும் இல்லை, நல்ல அனுபவம் உட்பட. நாங்கள் பட்டாம்பூச்சிக்கு பின்னால் ஓடவில்லை, தும்பியை அமர்ந்து ரசிக்கவில்லை, பறவைகளின் கீச்சு இசையில் இன்பத்தை காணாமல் தீம் பார்க்கில் சந்தோஷத்தை கண்டடைந்தவர்கள் நாங்கள்.
எங்கள் மீது கோபம் கொண்டு தும்பியும், பட்டாம்பூச்சியும், பறவையும் இந்த புவியைவிட்டு செல்லாமல் இருந்தால், நீங்கள் அவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். என்னைவிட அவர்களுக்கு தான் உங்களுக்கு சொல்லி தர அதிக விஷயம் இருக்கிறது.
மீண்டும் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு…
– மு. நியாஸ் அகமது
source: http://www.vikatan.com/news/coverstory/63102-an-open-letter-to-unborn-generations.art