அகீகா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு
அகீகா என்பது பெற்றோர்கள் தமது குழந்தையின் பிறப்பினை முன்னிட்டு “அல்லாஹ்வுக்காக அருத்துப் பலி கொடுப்பதாகும்” என்று இஸ்லாம் சொல்லித் தருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “எவர் தமக்கு கிடைத்த குழந்தைக்காக அருத்துப்பலியிட விரும்புகிறாரோ! அவர் ஆன் பிள்ளைக்கு இரண்டு ஆடுகளையும் பெண் பிள்ளைக்கு ஒரு ஆட்டையும் அருத்துப்பலியிடட்டும்.” (நூல்கள்: அபூதாஊத்/ நஸயி)
ஆன் பிள்ளைக்கு இரண்டு ஆடுகளும், பெண் பிள்ளைக்கு ஒரு ஆடும் அறுத்துக் கொடுக்கப்படுவது சுன்னத்தாகும் என்பதை மேற்படி ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
“ஒவ்வொரு குழந்தையின் அடைமானமான அகீகா எழாவது நாளன்று அறுக்கப்பட்டும், இன்னும் (அக்குழந்தைக்கு) முடியை இறக்கி அந்நாளில் பெயர் சூட்டிக் கொள்ளட்டும்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் (நூல்: இப்னு மாஜா)
ஒரு குழந்தை பிறந்து ஏழாவது நாளில் செய்யப்பட வேண்டிய விடயங்கள் :
1. அகீகா கொடுக்கப்பட வேண்டும்,
2. முடி களையப்பட வேண்டும்,
3. பெயர் சூட்டப்பட வேண்டும்.
என்பதை மேற்படி ஹதீஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸின் அடிப்படையில் அகீகா சுன்னத்தான் விடயமாகும் என்பதை அறிந்து கொண்டோம் எனவே அதனை ஏழாவது நாளில் செய்தே ஆக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அகீகா பற்றி அறிவிக்கும் நீண்ட ஹதீஸில்,
” … அது (அகீகா) ஏழாவது நாளன்று இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாது போனால் 14 வது நாளில் இருக்க வேண்டும் அதற்கும் முடியாது போனால் 21 நாளில் இருக்க வேண்டும்..” என்று குறிப்பிடுகிறார்கள். (நூல்: முஸ்தத்ரக் அல் ஹாகிம்)
மேற்படி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் செய்தி, “ஏழாவது நாள் அன்றே அகீகா கொடுக்கப்பட வேண்டும் அவ்வாறு கொடுக்காத போது அது அகீகாவாக இருக்காது என்ற தவறான புரிதலில் இருந்து நம்மை நேரான பாதைக்கு கொண்டு வருகிறது. இதனை இன்னும் உருதி செய்வதாக பின்வரும் காரணங்கள் உள்ளன.
1. அகீகா சுன்னத்தான வழிகாட்டலாகும் சுன்னத் என்பது தனக்கு முடியுமானதை முடியுமான போது செய்து கொள்வதையே குறிக்கும்.
2. வாஜிபான விடயங்கள் கூட தகுந்த காரணங்களுக்காக பிற்படுத்தப்படலாம் என்ற அனுமதி பெற்றிருக்கும் போது சுன்னத்தான செயலுக்கு கூடுதல் சலுகை இருக்காதா?
3. அகீகா என்பது அறுத்துப் பலியிடப்படுவதே அன்றி குறித்த நாளையோ நேரத்தையோ அடிப்படையாக கொண்டதல்ல.
எனவே! ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸ் மற்றும் தகுந்த காரணங்கள் யாவும் ஏழாவது நாளில் அகீகா கொடுக்க முடியாத போது 14 வது நாளில் அல்லது 21 வது நாளில் அல்லது ஏனைய எந்த நாட்களிலாவது தனது வசதிக்கேற்றது போல கொடுத்துக் கொள்ளலாம் அதில் குற்றம் இலலை என்பதே சரியான தீர்வாகும்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்