பரிபூரண அழகிய முன்மாதிரி
நாகூர் ரூமி
மனிதர்களுக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக எத்தனையோ பெரிய மனிதர்கள், மகான்கள் இருந்திருக்கிறார்கள். எப்படி வாழவேண்டும் என்று தம் சொல்லாலும் செயலாலும் கற்றுக்கொடுத்துள்ளார்கள். அவர்கள் அத்தனை பேருமே போற்றுதலுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
சாக்ரடீஸை எடுத்துக்கொள்வோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி. அவரைப் பொய்யாகக் குற்றம் சாட்டி, சிறையிலடைத்து, விஷம் குடித்து உயிர் துறக்க வேண்டும் என்று தண்டனையும் அளித்தது அக்காலத்து அரசு. சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் சிறைக்காவலர்களுக்கு அவருடைய சீடர்கள் லஞ்சம் கொடுத்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து அவர் தப்பிக்கவும் அவர் வழிசெய்தனர்.
ஆனால் சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மரணத்தைப் பற்றிய பயம் எனக்கில்லை என்று சொல்லிவிட்டார். அதுமட்டுமா? விஷத்தை அவரே எந்தவித அச்சமும் இன்றி அருந்தினார். அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துக்கொண்டே வந்தது. கீழிருந்து மேலாக. கால்கள் முழுமையாக மரத்தவுடன் உட்கார வைக்கப்பட்டார்.
கவலையுடன் அவருடைய சீடர்கள், “ஐயா, தாங்கள் இறந்த பிறகு உங்கள் உடலை என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “என்ன வேண்டுமனாலும் செய்யுங்கள். ஆனால் அது நான் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்” என்று பதில் கூறினார்!
ஆஹா, என்ன அற்புதமான பதில்! நாம் என்பது உடல் அல்ல என்ற உண்மையை இறுதிக்கணத்தில்கூட மறக்காமல் மக்களுக்கு எடுத்துரைத்த பெரிய ஞானி அவர். அதோடு அவர் அருகிலிருந்த க்ரிட்டோ என்பவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். “க்ரிட்டோ, அஸ்க்ளிபியஸுக்கு நாம் ஒரு சேவலை பலி கொடுக்கவேண்டும். இன்னும் கொடுக்கவில்லை. அந்தக் கடனைத் திருப்பிகொடுத்துவிடு, மறந்துவிடாதே” என்றும் சொன்னார்!
எனக்கு இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஞாபகம் வந்தது. இந்த உலகைப் பிரிந்து செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு பள்ளிவாசலுக்கு வந்த பெருமானார், யாருக்காவது தான் ஏதாவது கடன் பட்டிருக்கிறேனா, ஏதாவது கொடுக்க வேண்டியுள்ளதா என்று கேட்டார்கள். ஆமாம் என்று சொன்னவரின் கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்தார்கள்!
கொலை செய்ய வந்த எதிரிகளிடமிருந்து தப்பிக்க, நபிகள் நாயகமும் அபூபக்கரும் தவ்ர் என்ற குகையில் ஒளிந்து கொண்டிருந்தபோது, “நாம் இரண்டு பேர்தானே இருக்கிறோம்?” என்று அபூபக்கர் பயந்து கேட்க, “லா தஹ்ஸன், இன்னல்லாஹ மஅனா” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். “பயப்படவேண்டாம், அபூபக்கரே! நாம் இருவரல்ல, (மூவர் இருக்கிறோம்.) நம்மோடு இறைவன் இருக்கிறான்” என்பது அதன் பொருள்.
இறைவன் நம்மோடு எப்போதும் எங்கும் இருக்கிறான் என்பதை வெறும் அழகான, கவர்ச்சிகரமான வாக்கியமாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த உண்மையை அவர்கள் கணம் தோறும் தரிசித்தார்கள். (திருமறையிலும் சூரா 57:04-ன் வசனம் ”வஹுவ ம’அகும் அய்னமா குன்தும்” என்ற வசனமும் அதையே குறிக்கிறது). அதையே அடுத்தவருக்கும் எடுத்துரைத்தார்கள். அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கையை இறைவன் சாதாரண முன்மாதிரி இல்லை, ”அழகிய முன்மாதிரி” (உஸ்வத்துன் ஹஸனா) என்று கூறினான் (33:21).
இறைவனின் திருப்பெயர்களை திக்ர் எனும் உச்சாடனம் செய்யும் முறைகளில் “அல்லாஹு ஹாளிர்”, “அல்லாஹு நாளிர்”என்று ஒரு திக்ர் உள்ளது. “இறைவன் [நம் அருகிலேயே] இருக்கிறான்”. “இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்” என்று அதற்குப் பொருள். இந்த உணர்வு உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு இருக்குமானால் அவனால் தவறு செய்ய முடியுமா? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறைகள் இருக்குமா?
இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனை ஒவ்வொரு கணமும் வாழ்வில் உணர்ந்தவர்களாகவே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களது வழிகாட்டுதலும் அவ்விதமே அமைந்துள்ளது.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மற்ற பெரியவர்களுக்கும் ஒரு வித்தியாசமுள்ளது. மற்றவர்களால் சிலருக்கோ, சில சமுதாயத்தவருக்கோ, சில குழுக்களுக்கோ மட்டும்தான் வழிகாட்டமுடிந்திருக்கிறது. ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் அவர்களால் வழிகாட்ட முடியாது. அத்தகைய பரிபூரண முன்மாதிரி அவர்களிடம் இல்லை.
உதாரணமாக இயேசு கிறிஸ்து எனப்படும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் திருமணம் செய்வது எப்படி, மனைவியிடம், பெற்ற குழந்தைகளிடம் எப்படி ஒரு மனிதன் நடந்துகொள்ளவேண்டும், போர் என்று வந்துவிட்டால் அதன் தர்மங்கள் என்ன என்றெல்லாம் ஒரு மனிதர் இயேசுவிடம் வழிகாட்டுதல் பெற முடியாது. ஏனெனில் இயேசு திருமணமும் செய்துகொள்ளவில்லை, போர் நடத்தியதும் இல்லை. எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை. அவருடைய மனம் அந்தப்பக்கமெல்லாம் போகவில்லை. அவர்ருடைய வாழ்நாள் விரைவாக முடிந்தும் போனது. இம்மாதிரியான விஷயங்களுக்கு அவரிடம் வழிகாட்டுதல் இல்லை.
புத்தர் பெரிய மகான். ஆனாலும் அவராலும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் வழிகாட்டுதல் இயலாது. அவர் திருமணம் செய்துகொண்டார். குழந்தை பெற்றுகொண்டார். ஆனாலும் குடும்பத்தை விட்டுவிட்டு உண்மையைத் தேடி காட்டுக்குப் போனார். அந்த உதாரணத்தை குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் எடுத்துக்கொள்ள முடியாது.
இப்படிப் பார்ப்போமேயானால் இறுதித்தூதர் அவர்களிடம் இருந்த சிறப்பு வாழ்க்கையின் எல்லா தரப்புக்கும் வழிகாட்டக்கூடிய பரிபூரணத்தன்மையாகும். எல்லாத் துறைகளிலும் ஒரு மனிதனுக்கு வழிகாட்டக்கூடிய வேறு எந்த மகானும் இந்த உலகில் தோன்றியதாக எனக்குத் தெரியவில்லை.
ஒரு முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில் வைத்துவிட்டார். உடனே தன் பேரரை நோக்கி, “சீ! சீ! அதைத் துப்பிவிடு” என்று கூறிவிட்டு, “தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டு பொதுச் சொத்தை தம் குடும்பத்தினர் சாப்பிடுவதைத் தடை செய்தார்கள் அண்ணலார்.
தாயிப் நகர மக்கள் கல்லால் அடித்து ரத்தம் வரும் அளவுக்குத் துன்புறுத்தியபோதும், “இம்மக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நேர் வழி பெறாவிட்டாலும் இவர்களின் சந்ததிகள் நேர்வழி பெறக் கூடும்” என எண்ணி அம்மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள்.
ஒரு யூதரின் பிணம் கொண்டுபோகப்பட்டபோது பெருமானார் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். அது ஒரு யூதரின் பிணம் என்று தோழர்கள் சொன்னப்போதும், “ அதனுள்ளும் இறைவன் கொடுத்த உயிர் இருந்ததல்லவா?” என்றுதான் பதில் சொன்னார்கள்.
தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த யூதப்பெண்ணை மன்னித்தார்கள். போரில் பிடிபட்ட கைதிகளையெல்லாம் கொன்றுவிடலாம் என்று யோசனை வந்தபோதெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், மன்னித்துவிடலாம் என்று சொன்னார்கள். ஒரு துளி ரத்தம்கூடச் சிந்தாமல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது உலகவரலாற்றிலேயே ஒரு புதுமையான சாதனையாகும். ஒவ்வொரு முறை எதிரிகளோடு தற்காப்பு யுத்தம் செய்ய நேரிட்டபோதெல்லாம், “பெண்கள், குழந்தைகள், வயதானவர்களைக் கொல்லவேண்டாம்” என்றும், “மரங்களை வெட்டவேண்டாம்” என்றும் உத்தரவு கொடுக்க மறந்ததில்லை.
‘பூனையின் தந்தை'(அபூ ஹுரைரா), ‘அறியாமையின் தந்தை'(அபூ ஜஹ்ல்) என மக்களுக்குப் பட்டப்பெயர்கள் கொடுத்து மகிழ்ந்த அரபிகள், பெருமானாருக்கும் ஒரு பட்டம் கொடுத்திருந்தார்கள். அதுதான் ”அல்அமீன்” என்பது. அதற்கு ‘நம்பிக்கைக்குரியவர்’ என்று அர்த்தம். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொய்சொல்ல மாட்டார்கள், அவர்கள் சொல்வது எப்போதும் உண்மையாகத்தான் இருக்கும் என்பதற்கு பெருமானாரின் எதிரிகளே சான்று பகர்ந்தார்கள்.
க’அபாவைப் புதுப்பிப்பதற்காக கற்களைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தவர்களோடு பெருமானாரும் இருந்தார்கள். அப்போது அவர்களின் இடுப்புக்குக் கீழே இருந்த ஆடையை அவிழ்த்துவிடும்படி அல்அப்பாஸ் என்ற அவர்களுடைய மாமா ஒருவர் சொன்னவுடன், வேறு வழியின்றி பெருமானாரும் அப்படிச் செய்ய நேர்ந்தது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? ஆடையைக் களைந்து கொண்டிருந்தபோதே, நிர்வாணமாகப் போகிறோம் என்ற உணர்வு வந்தவுடனேயே, பெருமானார் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சி புகாரியிலும் ஜபீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு என்ற தோழர் அறிவிப்பதாகப் பதிவாகியுள்ளது. பின்னாளில், ’ஹயா’ என்று அறியப்படும் வெட்க உணர்வு, முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டிய ஈமான் எனப்படும் நம்பிக்கையின் பிரிக்கமுடியாத பகுதி என்று ஹதீது ஒன்றில் குறிப்பிடுகின்ற அளவுக்கு அது முக்கியமான உணர்வாகிவிட்டது.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவையெல்லாம் பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய குணங்கள் என்று நமது தமிழ்க் கலாசாரம் கூறுகிறது. ஆனால் வெட்கங் கெட்டவன் என்று பெயரெடுப்பது ஆண்களுக்கும் அழகல்ல என்று பெருமானாரின் வாழ்வு காட்டுகிறது.
பெருமானார் தங்கள் வாழ்நாளில் ஒரு குழந்தையைக்கூட அடித்ததில்லை. ஒரு அடிமையை ஒரு நாளைக்கு எத்தனைமுறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டபோது, “எழுபது முறை” என்று சொன்னார்கள். அதாவது மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். தனக்கு உணவில் விஷம் வைத்த யூதப் பெண்ணைக்கூட அவர்கள் மன்னித்தார்கள்.
பெருமானார் தன் வாழ்நாளில் ஒரேயொரு கெட்ட வார்த்தையைக்கூட சொன்னதில்லை. ரொம்ப கோபமாக இருந்தால், “உன் நெற்றி அழுக்கால் கறுப்பாகட்டும்” என்றுதான் சொல்வார்களாம். இதுதான் அவர்கள் வாழ்நாளில் சொன்ன மிகக் கடுமையான வார்த்தை!
உணர்ச்சிகளை அவர்களைப் போல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் ரொம்ப அரிது. எண்ணற்ற மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் வைத்துக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தில் வந்த அவர்கள், முதலில் தன்னைவிட 20வயது மூத்த விதவை கதீஜாவை மணந்து, அந்த ஒரே மனைவியுடன் மட்டுமே, அவர் தனது 65ஆவது வயதில் இறக்கும்வரை, வாழ்ந்தார்கள். இப்படி வாழ்ந்த மனிதர் அரேபிய வரலாற்றிலேயே பெருமானார் ஒருவர்தான். இது ஒரு வரலாறு காணாத பெரும் புரட்சி என்றே சொல்லவேண்டும். காரணம், அந்தக் காலத்திலும் சரி, அதற்கு முந்தைய காலத்திலும் சரி, பெண்கள் போகப்பொருளாகத்தான் பார்க்கப்பட்டார்கள். அவர்களை மனுஷியாகப் பார்த்த முதல் மனிதர் பெருமானார்தான்.
பெருமானாருக்கு முந்திய இறைத்தூதர்கள் அனைவருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர்தான். நபி தாவூதுக்கு (டேவிட்) ஆறு மனைவிகளும் ஏகப்பட்ட வைப்பாட்டிகளும் இருந்தனராம் (II சாமுவேல், 5:13). நபி சுலைமானுக்கு (சாலமன்) 700 மனைவிகளும் 300 வைப்பாட்டிகளும் இருந்தனராம்: “அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்” (I இராஜாக்கள், 11:3). சுலைமானுடைய மகன் ரெஹொபோமுக்கு 18 மனைவிகளும் 60 வைப்பாட்டிகளும் இருந்தார்கள் (II நாளாகமம், 11:21) என்றெல்லாம் பரிசுத்த வேதாகமம் பகர்கிறது.
உயிர் பிரிந்துகொண்டிருந்த தருணத்தில்கூட தன் மனைவி ஆயிஷாவிடம் சொல்லி தனக்கு பல் துலக்கிவிடச் சொன்னார்கள் நபிகள் நாயகம்!
பல மதங்கள் தர்மம் செய்வதை வலியுறுத்துகின்றன. ஆனால் இஸ்லாம் தர்மம் செய்வதை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாக்கியுள்ளது. ஒருவருடைய வருமானத்தில் எவ்வளவு குறைந்த பட்சம் தர்மம் செய்யவேண்டும் என்றும் வரையறை செய்துகொடுத்துள்ளது.
எல்லாவற்றையும் எப்படிச் செய்யவேண்டும், எத்தனை நாளைக்குச் செய்யவேண்டும், எப்படிச் செய்யக்கூடாது, எது கூடும், எது கூடாது என்று சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மிகத்தெளிவாக வரையறை செய்து கொடுத்துள்ளது இஸ்லாம்.
சாதனை செய்த எந்த மனிதரின் வாழ்க்கையையும் ஆராய்ந்து பாருங்கள். ஒரு உண்மை புரியும். அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு, ஒரு கட்டமைப்பு, ஒரு வரையறை இருந்திருக்கிறது. எத்தனை மணிக்கு விழிக்க வேண்டும், என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு திட்டமும், அதற்கான செயல்முறையும், ஒரு கட்டுப்பாடும் இருந்துள்ளது. இப்படி இல்லாத ஒரு சாதனையாளன்கூட உலகில் கிடையாது. சாதனை செய்ய விரும்பும், வாழ்க்கையில் பெருவெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் இம்முறையையே பயன் படுத்தவேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு முறைப்படுத்தப்பட்ட, வரையறை செய்யப்பட்ட வாழ்க்கையை இஸ்லாம் ஒரு மனிதனுக்கு அளிக்கிறது. அதற்கான அழகிய முன்மாதிரியாக இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.
வாழ்க்கையில் நாம் வெற்றிபெற, சுயமுன்னேற்றம் பெற முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லிலும் செயலிலும் இல்லாத பரிபூரண வழிகாட்டுதல் வேறு எங்காவது உள்ளதா காட்டுங்களேன்!
-நாகூர் ரூமி
[ எஸ்.ஏ.கே.கல்விக் குழுமம் இந்த மாதம் வெளியிட்ட மீலாது மலரில் (ஜனவரி 26, ஞாயிறு 2014) வெளியான கட்டுரை இது.]
கட்டுரையாசிரியரைப்பற்றி….
நாகூர் ரூமி
இயற்பெயர் முஹம்மது ரபி. புனைபெயர்: நாகூர் ரூமி. கல்வித்தகுதி: எம்.ஏ., பிஎச்.டி., கம்பன் – மில்டன் காவியங்களில் ஒப்பாய்வுக்காக, சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்டம்.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், சுயமுன்னேற்றம், மதம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, தமிழாக்கம் என 43 நூல்கள் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய ‘இஸ்லாம் – ஓர் எளிய அறிமுகம்’ நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும், ஹோமரின் ‘இலியட்’ காவிய மொழிபெயர்ப்புக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசையெட்டும் மொழியாக்க விருதும் கிடைத்தது.
கணையாழி தொடங்கி கல்கி, விகடன், குமுதம் என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். இணையத்திலும் எழுதுகிறார்.
www.nagorerumi.com என்ற இவரது வலைத்தளத்திலும் இவரது ஆக்கங்களைப் படிக்கலாம்.
ஆம்பூர், மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் இவர், சென்னையில் பல ஆண்டுகளாக ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறியுள்ளார்.
source” https://nagoorumi.wordpress.com/