பெருந்தொடக்கு ஏற்பட்டவர் குளிக்கும் முறை
நாம் குளிப்பது என்பது சாதரரண விடயம் தான். ஆனால் குளிப்பு கடமையானால் அதற்கு என்று சில வழிமுறைகளை நபியவர்கள் நமக்கு காட்டித்தருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்வோம்.
“ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) கழுவுவார்கள். பிறகு வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றிப் பிறவி உறுப்பைக் கழுவுவார்கள்.
பின்னர் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள்.
அதன் பின்னர் தண்ணீரை அள்ளி மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழை(த்துத் தலையைத் தேய்)ப்பார்கள்.
தலைமுடி முழுவதும் நனைந்துவிட்டதாகத் தெரிந்ததும் இரு கைகளிலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளி தலையில் ஊற்றுவார்கள்.
பிறகு மேனி முழுவதிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் கால்களைக் கழுவுவார்கள். (நூல்: முஸ்லிம் 526)
மேலும் “ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிப்பார்களானால் பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, ஒரு கையால் தண்ணீர் அள்ளி முதலில் தமது தலையின் வலப் பக்கத்திலும் பிறகு இடப் பக்கத்திலும் ஊற்றுவார்கள். பின்னர் இரு கைகளால் தண்ணீரை அள்ளித் தமது தலையின் மீது ஊற்றுவார்கள். (நூல்: முஸ்லிம் 530)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிப்பார்களானால் பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, ஒரு கையால் தண்ணீர் அள்ளி முதலில் தமது தலையின் வலப் பக்கத்திலும் பிறகு இடப் பக்கத்திலும் ஊற்றுவார்கள். பின்னர் இரு கைகளால் தண்ணீரை அள்ளித் தமது தலையின் மீது ஊற்றுவார்கள். (நூல்கள்: முஸ்லிம் 530, புகாரி 258)
பெருந்தொடக்கு ஏற்பட்டால் குளிக்கும் முன் துாங்குவது:
குளிப்பு கடமையானவர்கள் சற்று தாமதித்து குளிக்கலாம், அல்லது மீண்டு்ம் துாங்கி எழுந்து குளிக்கலாம் என்று நினைத்தால்,என்ன செய்ய வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படுத்துவதை காணலாம்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும் நிலையில் உறங்க விரும்பினால் உறங்கப் போவதற்கு முன் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள். (நூல்: முஸ்லிம் 512)
மேலும் “ இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டுவிடுவது பற்றிக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளுங்கள்; பிறவி உறுப்பைக் கழுவிக் கொள்ளுங்கள். பிறகு உறங்குங்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம் 516)
மேலும் “ முஆவியா பின் சாலிஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீகைஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வித்ர் தொழுகை பற்றிக் கேட்டேன் என்று கூறி விட்டு அது தொடர்பான ஹதீஸை அறிவித்தார்கள். (மேலும் அவர்கள் கூறினார்கள்:)
நான் (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம்), பெருந்துடக்கு விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி நடந்துகொண்டர்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா? அல்லது குளித்துவிட்டு உறங்குவார்களா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், இரண்டு முறைகளையும் கையாண்டுவந்தார்கள். சில நேரங்களில் குளித்துவிட்டுப் பின்னர் உறங்கினார்கள். சில நேரங்களில் (குளிக்காமல்) அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு உறங்கினார்கள் என்று பதிலளித்தார்கள். நான், (மார்க்க) விஷயங்களில் தாராளத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினேன். (நூல்: முஸ்லிம் 517)
மேலும் “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளட்டும். (நூல்: முஸ்லிம் 518)
source: http://srilankamoors.com