ஒழுக்கத்தை இழந்தவனே அநாதை
அ. செய்யது அலி மஸ்லஹி ஃபாஜில்
அநாதை என்பதற்கு தமிழ் அகராதியில் வரும் பொருள். திக்கற்றவன், ஆதரவற்றவன் ஆகும்.
‘ஆதரிப்பார் அற்றவன் அநாதை’ ‘ஆதரிக்கும் பெற்றோரை இழப்பவன் அனாதை ஆவான்’ என இஸ்லாம் கூறுகிறது.
ஒரு குழந்தை தன் பெற்றோரின் அரவணைப்பிலும், ஆதரவிலும், அன்பிலும், அக்கறையிலும், பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வளர்கிறது. பெற்றோரில் இருவரோ, அல்லது ஒருவரோ தவறிவிட்டால், இருவரையோ, அல்லது ஒருவரையோ இழந்துவிட்ட குழந்தை ‘அனாதை குழந்தை’ என்ற அடைமொழியுடன் இரக்கமாக அழைக்கப்படுகிறது.
அநாதைகளை ஆதரிப்பதற்கு அநாதை இல்லங்கள் ஊர் தோறும் தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன.
“முதல் அனாதை இல்லத்தை” தோற்றுவித்தவன் இறைவன் ஆவான். அவன் அன்பாளன், கிருபையாளன். எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில் அநாதைகளின் பாதுகாப்பு, மறுவாழ்வு, பராமரிப்பு, உரிமை, பொருளாதாரம், வாழ்வாதாரம், இல்லறம் போன்ற அடிப்படையான உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தமாக இருபத்திரண்டு இடங்களில் பேசிவருகிறான்.
இந்தளவு இறைவனே வலியுறுத்தி சொல்லுவது அநாதைகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
“(நபியே) அவன் உம்மை அநாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா? உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான். உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.” (அல்குர்ஆன் 93: 6,7,8)
அநாதைகளின் முக்கியமான மூன்று அம்சங்களை பற்றி மேற்கூறப்பட்ட திருக்குர்ஆனின் வசனம் கோடிட்டு காட்டுகிறது.
1. அனாதைகளின் அரவணைப்பு,
2. அனாதைகளின் அறியாமையை போக்கி அவர்களை அறிவு சார்ந்த சமூகமாக மாற்றிக் காட்டுவது.
3. அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக ஏற்றம் காணச்செய்வது. இவை அடிப்படையான அம்சங்கள்.
பாதுகாப்பு கல்வி, பொருளாதாரம் தான் ஒரு அனாதையை சமூகத்தில் அந்தஸ்து உடையவனாக மாற்றிக் காட்டுகிறது.
பெற்றோரை இழந்த குழந்தை பருவ வயதை அடையும்வரை தான் அனாதை. பருவ வயதை அடைந்து விட்ட எவரும் இஸ்லாத்தில் அனாதை இல்லை. பருவ வயதை அடையும்வரை அனாதை குழந்தைகளுக்கு பொறுப் பேற்றுக் கொள்வது நன்மை தரும் செயலாக உள்ளது.
“நானும், அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும், மற்றொரு விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட விரல்) சைகை செய்தார்கள்.” (அறிவிப்பாளர் ஸஹ்ல்பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)
அனாதை என்பது நிரந்தரமான ஒரு அடையாளம் அல்ல. பெற்றோரை இழந்த குழந்தை பருவ வயதை அடையும் வரை தான் அனாதை. இது தற்காலிகமானது.
“பருவ வயதை அடைந்த ஒருவர் அனாதையாக இருக்கமுடியாது, மேலும் மாதவிடாய் ஏற்பட்ட ஒருத்தியும் அனாதையாக இருக்கமுடியாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்”. (நபி மொழி)
சரி உண்மையான அனாதை யார் தெரியுமா? இதோ அறிவுக்கருவூலம் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சிந்தனையை கவனிப்போம்.
“பெற்றோரை இழந்துவிட்டவன் உண்மையான அனாதை இல்லை. உண்மையான அனாதை கல்வியையும், ஒழுக்கத்தையும் இழந்தவன்தான்” (அலி ரளியல்லாஹு அன்ஹு)
கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையும் இழந்தவன் நிரந்தரமான அனாதை ஆவான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அனாதைதான். அவர்கள் பருவ வயதை அடையும் இந்த அடையாளம் தற்காலிகமாக இருந்தது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வியையும், ஒழுக்கத்தையும் இழந்த நிரந்தரமான அநாதை அல்ல.
நபித்தோழர்களில் அபூஹ§ரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஜீபைர் பின் அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் அநாதைகளே. எனினும் இவர்கள் இழந்தது பெற்றோரைத்தான். . கல்வியையும், ஒழுக்கத்தையும் இழந்தவர்கள் அல்லர்.
குடும்பத்தில் அனாதை, கல்வியில் சாதனை . இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அபூஹ§ரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள்.
அநாதையிலும், கடும் வறுமையிலும் வாழ்ந்த அவர் ‘ 5374 ’ மொழிகளை அறிவித்திருக்கிறார். அநாதையாக பிறந்தாலும் கல்விக்காக வாழ்ந்தவர் அவர். இவ்வாறே எத்தனையோ அறிஞர்கள் பெற்றோரை இழந்த அனாதைகளானாலும், கல்வியையும், ஒழுக்கத்தையும் ஒரு போதும் இழக்கவில்லை.
இந்த பட்டியலில் இமாம் புகாரி, இமாம் ஷாஃபி, இமாம் அஹ்மது பின் ஹன்பல், இமாம் இப்னு ஜவ்ஸி, இமாம் அவ்ஜாயி, இமாம் சுயூதி, மாமேதை இப்னுஹஜர், இமாம் ஃதவ்ரி ஆகியோர் அநாதைகளே…. என்றாலும் கல்வியையும், ஒழுக்கத்தையும் ஒருபோதும் இழக்கவில்லை.
அவர்கள் அநாதைகள் எனும் அடையாளத்தைவிட, இஸ்லாமிய மார்க்க மேதைகள் எனும் பட்டத்துடன் பேரும், புகழும் பெற்று இன்று வரைக்கும் உலகம் அழியும் வரைக்கும் அழியா புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை வாழ வைத்தது கல்வியும், ஒழுக்கமுமே!
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2016