உடல் பொய் சொல்வதே இல்லை
உடல் பொய் சொல்வதே இல்லை. ஆம்! நமது உடல் பொய் சொல்வதே இல்லை. ஏனென்றால் அதற்குப் பொய் சொல்லத்தெரியாது!
சத்தியத்தின் இன்னொரு வடிவம்தான் நம் உடல்! அது நம்மோடு இருபத்து நான்கு மணி நேரமும் பேசிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நாம்தான் கேட்பதே இல்லை!
நம் உடலின் நுட்பமான பேச்சுக்கு உதாரணமாக பசி, தாகம் இவற்றைச் சொல்லலாம். ஒருவருக்கு பசி அல்லது தாகம் எடுத்துவிட்டதென்றால் அவரால் அதை நிச்சயம் உணர்ந்துகொள்ள முடியும்.
உடலின் இந்த அறிவிப்பை மட்டும் நாம் ரொம்ப கவனமாக, மிகுந்த மரியாதையோடு கேட்கிறோம்! இன்னும் சொல்லப்போனால் இந்தப் பேச்சை, இந்த உள் குரலைக் கேட்கவும் அதற்கு உடனே மரியாதை செய்யவும் நாம் தயங்குவதே இல்லை!
உதாரணமாக என்னையே நான் சொல்லுவேன். வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் முதள் தளத்தில் இருப்பார்கள். நான் தரைத்தளத்தில் இருப்பேன். சாப்பிடுவதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள். அப்போது எனக்கு பசியாக இருந்தால் – எப்போதுமே இருக்கும் – அவர்கள் கீழே இறங்கி வருவதற்குள் நான் சாப்பிட ஆரம்பித்துவிடுவேன். ஒரு மரியாதைக்காகக்கூட விருந்தினர்கள் வரட்டும் என்று காத்திருக்கமாட்டேன்! விருந்தோம்பலைவிட வயிறோம்பல்தான் எனக்கு முக்கியம்! நாட்டில் உள்ள பத்து பேரில் ஒன்பது பேர் என் கட்சிதான், எனக்குத் தெரியும்!
இந்த நல்ல பழக்கத்தை நான் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன்! என் மனைவிக்கு இதில் ரொம்ப வருத்தமுண்டு. விருந்தினர்களை எப்படியும் கவனிக்கத்தான் போகிறோம். அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்கப்போவதில்லை. அதே சமயம் உடலின் குரலுக்கு மரியாதை தரவேண்டாமா? நான் அதைத்தான் செய்கிறேன்! ஆனால் பசி, தாகம் என்ற இரண்டு விதிவிலக்குகளைத்தவிர, எப்போதெல்லாம் நாம் உடலின் பேச்சை உதாசீனப்படுத்துகிறோம்?
நாள் முழுவதும். மாதம் முழுவதும். வருஷம் முழுவதும்!
எப்படி என்கிறீர்களா? சாப்பிடும்போதே இதை நாம் செய்கிறோம். எப்படி?
பேசிக்கொண்டே சாப்பிடுவது
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது
போதும் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகும் கொட்டிக்கொள்வது – இப்படி!
இந்த மாதிரியான ஒவ்வொரு தவறான பழக்கத்தின் விளைவுகளைப் பற்றியும் புத்தகமே எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. சரியான தருணத்தில் இதுபற்றி விரிவாகப் பேசலாம்.
வயிறு முட்ட உண்ட பிறகு வயிறு அடைத்துக்கொண்ட மாதிரி உணர்விருக்கும். போதும் இதற்குமேல் வேண்டாம் என்று தோன்றும். அந்த உணர்வும் உடலின் நுட்பமான அறிவுறுத்தல்தான். ஆனால் அதை நாம் மதிக்கிறோமா? சாப்பாடு ’வேஸ்ட்’ ஆயிடும் என்று ஒரு ’வசதியான’, ‘பாரம்பரிய’ காரணத்தை நாமே சொல்லி, தட்டைக் காலி செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறோம்!
ஒருமுறை எங்களூர் அண்ணன் ஒருவர் கல்யாண வீட்டில் சாப்பிட்டு முடித்த பிறகு தட்டில் நிறைய சோறு மீதி இருந்தது. அவர் எழ முயன்றார். ’அண்ணே, நிறைய சாப்பாடு மீதியிருக்கு. சாப்பிடலேன்னா வேஸ்ட்டாயிடும்’ என்று வீட்டார் உபசரித்தினர். ஆனால் அவர் சொன்னார், ‘எனக்கு வயிறு நிறைந்துவிட்டது. இதற்கு மேல் சாப்பிட்டால் என் வயிறு வேஸ்ட்டாகிவிடும். மீது சோறு இருந்தால் நாய்க்கோ பூனைக்கோ போடுங்கள். அப்ப எப்படி வேஸ்ட்டாகும்?’ என்றார்! மிகச்சரியான, நியாயமான கேள்வி. நம்மில் எத்தனை பேர் இவ்விதம் சிந்திக்கிறோம்?
காலத்தைப் போக்கவா காலமாகவா?
ஒருமுறை நான் வேலூருக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். வழியில் பச்சைகுப்பம் என்ற இடத்தில் லெவல் க்ராஸிங் இருந்தது (இப்போது மேம்பாலம் வந்துவிட்டது). ’கேட்’ போட்டுவிட்டதால் ரயில் போகும்வரை பஸ் நிறுத்தப்பட்டது. உடனே தட்டுக்களைத் தூக்கிக்கொண்டு சிலர் அருகில் வந்தார்கள். நிலக்கடலை, பழங்கள், பூ போன்றவற்றை விற்பதற்கு!
அதிலொன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் நிலக்கடலையைப் பொட்டலம் கட்டி விற்றவர் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு மிகுந்த ஆச்சரியமூட்டின. ‘நிலக்கடலை, நிலக்கடலை’ என்று சொல்லியோ எங்க ஊரில் சொல்வது மாதிரி ‘மல்லா கொட்டெ’ என்று சொல்லியோ அவர் விற்கவில்லை. மாறாக, ‘டைம் பாஸ், டைம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டே வந்தார்! பலரும் அவரிடம் பொட்டலங்களை வாங்கிப் பிரித்தெடுத்து வாயில் போட்டு மென்று ‘டைம் பாஸ்’ பண்ண ஆரம்பித்தனர்!
அப்போதுதான் எனக்கு அது புரிந்தது. ஆஹா, மனிதர்கள் பசிக்காக சாப்பிடும் காலம் போய், நேரத்தைச் செலவு செய்வதற்காகவும் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்! ’நேரா நேரத்துக்குச்’ சாப்பிடுவது என்பதும் இயற்கைக்கு மாறான, தவறான ஒரு பழக்கம்தான். அதென்ன நேரான நேரம், கோணலான நேரம்? பசிக்கின்ற நேரம்தான் நேரான நேரம். அலுவலகம் செல்ல வேண்டும், ஸ்கூல் வேன் வந்துவிட்டது, கல்லூரிகளுக்குச் செல்லவேண்டும் – இப்படி நாமாக ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கை முறைக்காக, பசிக்காத போதும் வயிற்றில் எதையாவது போட்டு அடைப்பது நமக்கு வழக்கமாகிவிட்டது.
அன்போடு வீட்டில் செய்யப்பட்ட உணவாக இருந்தாலும், பசி என்ற ஒன்று வராமல் உட்கொள்ளப்படும் உணவால் பயனில்லை என்பது மட்டுமல்ல, உடல்நலக் கேடும் நிச்சயம் ஏற்படும். அப்படியானால் நம்மை நிச்சயமான நோயாளிகளாக மாற்றுகின்ற வாழ்க்கை முறையைத்தான் நாம் விரும்பித் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டுள்ளோம்.
சைவ உணவுதானே,’டீப் ஃப்ரை’ பண்ணப்படவில்லையே, உப்பு அதிகமாகவே இல்லையே, கொழுப்பில்லாத உணவாயிற்றே – இப்படி நாம் எத்தனை அக்கறை பொதிந்த கேள்விகள் கேட்டாலும் பசி எடுக்காமலே சாப்பிடும் பழக்கத்து மனிதன் அடிமையானால் விளைவு என்னாகும்? நம் காலம் முடிவதற்கு முன்பே நாம் காலமாகும் வாய்ப்பு ஏற்படும்!
ரொம்பப் பழைய ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது. ஆனால் அது நம்முடைய தவறான பழக்கத்தை அழகாகச் சொல்லும் ஜோக். அதனால் திரும்ப நினைவுபடுத்துகிறேன். காலை, பகல், இரவு மூன்று வேளையும் இரண்டிரண்டு சப்பாத்திகள் மட்டும் சாப்பிடச் சொல்லி டாக்டர் சொல்கிறார். நோயாளி சந்தேகம் கேட்கிறார்: ‘டாக்டர், இரண்டு சப்பாத்திகள் என்று சொன்னீர்களே, அது சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா?’! நம்மில் பெரும்பாலோருடைய வாழ்க்கை முறையைத்தான் இந்த ஜோக் எடுத்துக்கூறுகிறது!
பசிக்கும்போது சாப்பிடாமல் இருந்தாலும் தப்பு, பசிக்காதபோது சாப்பிட்டாலும் தப்பு. பசிக்காதபோது ஒரு நாய்கூட சாப்பிடுவதில்லை. பசியடங்கிப் படுத்திருக்கும் ஒரு நாயிடம் அதற்குப் பிடித்த மட்டன் துண்டுகளைப் போட்டுப் பாருங்கள் தெரியும். மோந்து பார்த்துவிட்டு மீண்டும் அது படுத்துக்கொள்ளும்! ஒரு நாயைவிடக் கேவலமாகவா நாம் போய்க்கொண்டிருக்கிறோம்? இதெல்லாம் தெரிந்துதான் ரொம்ப காலத்துக்கு முன்பே நம் திருவள்ளுவர் அழகாகச் சொன்னார்:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
(யப்பா ராசாக்களா, உங்களை நோய் பீடித்து அதற்காக உங்கள் உடம்புக்கு மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், ஏற்கனவே உண்ட உணவு செரித்துவிட்டதா என்று நிச்சயமாகத் தெரிந்துகொண்டு அதன் பிறகு அடுத்த வேளை உணவை உண்ணுங்கள் –
– நாகூர் ரூமி
source: https://nagoorumi.wordpress.com/